கீற்றில் தேட...

2014-இல் இந்திய ஒன்றிய ஆட்சியைப் பிடித்து 2019-லும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்திய ஒன்றியத்தை வலதுசாரி கார்ப்பரேட் இந்துத்துவா சார்பு சீரழிவு ஆட்சி நடத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பரம்பரை மரபு- சாதிவழி தொழில்கள் செய்து வருபவர்களுக்கு கடன் உதவிகள் மானியம் வழங்குவதற்காக விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் குலத்தொழில் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். 2023---2024 இந்த நிதியாண்டில் இதனை செயல்படுத்துவதற்காக 13,000/-= கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வர்ண சாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்று வர்ண சாதிகள் அடிப்படையில் இந்தியாவை இந்து இராஷ்ட்டிரமாக மாற்றும் நோக்கத்துடன் வெளிப்படையாக அடிக்கல் (கால்கோள்) நாட்டியுள்ளார் மோடி.

விஸ்வ கர்மாத் திட்டம் நடைமுறைப்படுத்தும் விதம்

இத்திட்டத்தின்படி பரம்பரையாக குலத் தொழில்கள் செய்யும் கொல்லர், பொற்கொல்லர், தச்சர், மண்பாண்டம் செய்பவர், படகு செய்பவர், முடி திருத்துபவர், சலவைத் தொழிலாளி, தையல் தொழிலாளி, மீன்பிடி வலை செய்பவர், பூமாலை கட்டுபவர், பொம்மை செய்பவர், கூடை முடைபவர், சிற்பி, பூட்டு தயாரிப்பவர், கல் உடைப்பவர், சுத்தியல் மற்றும் இரும்பு வேலை செய்பவர், செருப்பு தைப்பவர், பரம்பரை ஆயுதம் தயாரிப்பவர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதரத் தொழில்கள் பின்னர் இணைக்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர் (V.A.O.), அரசு வருவாய் ஆய்வாளர் (R.I) ஆகியவர்களிடம் விஸ்வ கர்மாத் திட்டத்தில் கடன் - மானியம் கோரி பதிவு செய்ய வேண்டும். இந்த அரசு அலுவலர்கள் இவர்கள் பரம்பரை சாதித் தொழில்கள் செய்வதை உறுதி செய்து சான்றிதழை வழங்குவார்கள். இந்த சான்றிதழ் பெற்ற பின் கைவினைஞர்கள் விஸ்வ கர்மா யோஜனா திட்டத்தின் கீழ் இந்திய ஒன்றிய அரசு அளிக்கும் 5 நாட்கள் அடிப்படை பயிற்சியில் (Basic 5 days
training) பெற வேண்டும்.

இந்த 5 நாட்கள் பயிற்சியிலும் கலந்து கொள்பவர்களுக்கு தினமும் ஒன்றிய அரசு ரூ.500/- உதவித்தொகை வழங்கும். இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு முதல் தவணையாக ரூ.1,00,000/- வரை கடன்களை இந்திய ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகள் மூலம் 13 விழுக்காடு ஆண்டு வட்டியில் வழங்கும். முறையாக கடனை மாதம் தவறாது கட்டுபவர்களுக்கு 8 விழுக்காடு வட்டியை இந்திய ஒன்றிய அரசே செலுத்தும். மீதி 5 விழுக்காடு வட்டியை மட்டும் மாதந்தோறும் கடன் பெற்ற கைவினைஞர்கள் செலுத்தினால் போதும்.    

இந்த விஸ்வ கர்மாத் திட்டத்தின் மூலம் கடன் உதவி பெறுபவர்களிடம் கடன் தரும் வங்கிகள் எந்த சொத்து பிணை - அடமானமும் கேட்காது. இப்படி ஒரு இலட்சம் ரூபாய் கடன் பெறுபவர்கள் 18 மாதங்களில், அதாவது ஒரு ஆண்டுகளில் கடனை முழுவதும் கட்டிவிட்டால் பின்னர் இந்திய ஒன்றிய அரசின் இரண்டாம் கட்ட 15 நாட்கள் பயிற்சி சான்றிதழ்கள் பெற வேண்டும். இதற்கு முன்னேறிய பயிற்சி (Development training) என்று பெயர். இந்த இரண்டாம் கட்ட பயிற்சியை முடித்தவர்களுக்கு இன்னொரு இரண்டு இலட்சம் ரூபாய் கடனாகக் கிடைக்கும். இந்த திட்டத்தை டெல்லியில் குரு சீட பரம்பரை பொருட்காட்சி வளாகத்தில் மோடி திறந்து வைத்தார்.    

இந்த திட்டத்தை ஊக்குவிக்க அரசே கண்காட்சி அரங்குகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தி இத்திட்டத்தில் தயாரிக்கப்டும் பொருட்களை அரசே சந்தைப்படுத்தும் பணிகளைப் பார்க்கும் என அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தில் மரபு சாதி வழி கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை தனியார் கார்பரேட் நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள அரசே ஒருங்கிணைப்பு ஏற்பாடு பணிகளைப் பார்க்கும்.

1980-,1995ஆம் ஆண்டுகளில் சுதேதி பொருளாதாரம், காந்திய சோசலிசம் பேசிய ஆர்எஸ்எஸ், பிஜேபி யினர் 1998 -2004இல் வாஜ்பாய் கால ஆட்சியாகட்டும், 2014--2022 கால மோடியின் ஆட்சியாகட்டும் நேர் எதிராக தனியார் கார்பரேட் சுரண்டல் பொருளாதாரத்தையும் இந்து மதவெறி அரசியலையும் அமுல்படுத்துகின்றனர்.    

இன்றைய புதிய காலத்தில் 1991ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டு வரும் உலகமயமாக்கல், புதிய தாராள, தனியார்மயமாக்கல் பொருளாதார கொள்கைக்கேற்ப வர்ண சாதிகளை மறு கட்டமைப்பு செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ், பிஜேபி-யினர் பேசிய சுதேசி பொருளாதாரத்தை வாஜ்பாய் ஆட்சி காலத்திலும், மோடி ஆட்சி காலத்திலும் செயல்படுத்தாமல் தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல் கொள்கைகளையே அமுல்படுத்தி பெரும் கருப்பு பண நன்கொடைகளை ஆர்எஸ்எஸ், பிஜேபி கட்சிகளுக்குப் பெற்றுக் கொள்கின்றனர். இதன் விளைவாக இந்தியா முழுவதும் சுமார் ஒரு இலட்சம் சிறு, குறுந்தொழில்கள் மூடி கிடக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு மூலப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பது இல்லை. உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடிவதில்லை. மின்சாரத்திற்கு பணம் கட்ட இயலவில்லை.

நடைமுறை மூலதனம் எல்லாம் பெருமுதலாளிய தாராளமய ஆதரவு கொள்கையால் சிறு நடுத்தர ஆலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ன. சிறு தொழில்களுக்கு கடனுதவி வழங்க இவர்கள் செயல்படுத்தி வரும் முந்ரா ரோஜக் யோஜனா பெரிய அளவு பயனளிக்கவில்லை என்பது நடைமுறை தெளிவு. இவர்கள் சிறு தொழில்களை பாதுகாத்து வளர்த்து இருந்தால் இவர்கள் எதிரியாகக் கருதும் சீனா நாட்டிலிருந்து இவ்வளவு குடிசைத் தொழில் பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகாது. இந்தியாவில் ஒரு இலட்சம் சிறு, குறு தொழில்கள் அழிந்து இருக்காது. இப்படி சிறு, குறு தொழில்களை அழித்துக் கொண்டு நேரு, இந்திரா காந்தி கால பொதுத்துறைகளை அழித்துக் கொண்டு தாராளமய, தனியார் மய, உலகமயக் கொள்கைகளை அமுல்படுத்திவரும் மோடி ஆட்சியின் அடுத்த சீரழிவுத் திட்டம் தான் பிரதம மந்தரி விசுவ கர்மா யோஜனா திட்டம்.

இத்திட்டம் மரபுவழி குலத்தொழில் புரியும் கைவினைஞர்களுக்கு தொழில் கடன்கள், கைக்கருவிகள் வழங்குவதால் சமூகத்தில் உளவியல் ரீதியாக கீழ்கண்ட சீரழிவுகளை ஏற்படுத்தும். ஒன்று. ஏழை எளிய கிராமப்புற மரபுவழி குலத்தொழில் செய்யும் கைவினைஞர்கள் தாங்கள் சாதி அடிப்படையிலான தொழிலுக்குள் கட்டுண்டு கிடப்பதை இது தொடர்ந்து உறுதி செய்யும். இரண்டு. இவர்களது பிள்ளைகள்- அடுத்த இளைய தலைமுறையினர் - மரபுவழி குலத்தொழில்களில் இருந்து விலகி புதிய கல்வி அரசு வேலை, மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் ஆவதைத் தடுத்து மரபு வழி குலத்தொழில்களிலேயே அவர்களை முடக்கிப்போடும். மரபுவழி சாதிய குலத்தொழில்களை ஊக்கப்படுத்தும். மோடி அரசு புதிய தொழில் நுட்ப கல்வி கற்று சாதி கடந்து கைவினைதொழில்கள் புரிந்து வருபவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக. மின்சார கருவிகள் பழுது நீக்குகிறவர், வீட்டு மின்சார வேலைகள், குழாய் பணி பார்பவர், தொலைக்காட்சி பழுது நீக்குபவர், கைபேசி பழுது நீக்குபவர், மோட்டார் காயில் ரீவைண்டிங் செய்பவர், இருசக்கர, நான்கு சக்கர வாகன பழுது நீக்குபவர் எல்லாம் ஐ.டி.ஐ. டிப்ளோமோ படித்துவிட்டு புதிய கல்வி கற்றுவிட்டு உள்ளூர் சூழலிலேயே புதிய முறையில் கைத்தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை ஏழ்மை நிலையிலேயே உள்ளது. சாதி முறைகளைக் கடந்து புதிய தொழில் நுட்ப உள்ளூர் கைவிளைஞர்களுக்கு எந்த உதவியும் செய்யாத மோடி அரசு, பரம்பரை குலத்தொழிலை ஊக்கப்படுத்தி குலத்தொழில் செய்யும் உள்ளூர் கைவினைஞர்களுக்கு விஸ்வகர்மா யோஜனாத் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதன் மூலம் நிலவுடமை சாயதாய அமைப்பின் சாதிய முறைகளை புதிய கால சூழலுக்கு எற்ப தகவமைக்கிறது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தி வரும் புதிய கல்வி கொள்கைக்கு மிகவும் நெருக்கமானது விஸ்வகர்மா யோஜனாத் திட்டம். இந்துக்களின் பெயரால் அப்பாவி மக்களிடம் இந்து மத வெறியூட்டி ஆட்சி செய்யும் மோடியின் விஸ்வ-கர்மா யோஜனாத் திட்டம் படிநிலை சாதியமைப்பில் பிராமணிய மேலாண்மையை நிறுவும் நோக்கம் கொண்டதாகும்.

- மு.வேதரத்தினம்