2019ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் புதியதொரு கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதோடு இக்கல்வி முறை சமுகத்தில் ஏற்றத்தாழ்வுகளை புகுத்தவே உதவும் எனவும், இது கற்கால முறைக்கு மாணவர்களை இழுத்துச் செல்லும் எனவும் கல்வியாளர்கள், சமுகவியலாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்கள் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் அரசுகள் இதை செயல்படுத்துவதில் மிகத் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கான தொடக்க விதை யார் போட்டது தெரியுமா? அதைக் கொஞ்சம் வரலாற்றுப் பூர்வமாக அறிந்து கொள்வதே இவ்விடத்தில் சிறப்பாக இருக்கும்.

ராஜாஜி குலக்கல்வி திட்டம்

1950 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய இந்திய அரசியல் சாசனப்படி அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படைக் கல்வி தருவது மத்திய, மாநில அரசுகளின் கட்டாயக் கடமையாக்கப்பட்டிருந்தது. சென்னை மாநில அரசின் கல்வித் துறை அதற்காக 1950 ஆம் ஆண்டு பத்தாண்டு திட்டம் ஒன்றைத் தீட்டியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஐந்து லட்சம் மாணவர்களைச் சேர்ப்பதோடு ஒரு கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் 1950-51 நிதியாண்டில் வெறும் ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் பள்ளியிலிருந்து பாதியிலேயே விலகும் மாணவர்களின் விகிதம் கூடுதலாக இருந்து வந்த நிலையில், புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ராஜாஜி அதிக செலவில்லாமல் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி அளிக்க புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

nehru and rajajiபள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாக மாற்றப்பட்டு, முதல் நேரமுறையில் மாணவர்கள் பள்ளியில் ஆசிரியரிடம் பாடம் கற்பர். இரண்டாவது நேர முறையில் வீட்டில் தந்தையிடமிருந்து அவர்களுடைய தொழிலைக் கற்பர். மாணவிகள் தாயாரிடமிருந்து சமையலையும், வீட்டு வேலைகளையும் கற்பர். இத்தகு தொழில்கள் இல்லாத பெற்றோரை உடைய மாணவர்கள் வேறொரு தொழில் செய்பவர்களுடன் சேர்ந்து தொழில் கற்பர். இதுதவிர அந்த நேர முறையில் ஊர் பொதுப் பணிகள் சார்ந்த சாலைகளைச் சீரமைத்தல், துய்மைப்படுத்துதல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியரிடம் பாடம் கற்பிக்கவரும் நேர முறைக்கு மட்டுமே வருகைப் பதிவு உண்டு என்ற அம்சங்களோடு இருந்த அத்திட்டம் 1953-54 கல்வியாண்டில் முதல் கட்டமாகக் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது.

இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு பொதுக் கல்வித் துறை இயக்குநரிடம் ராஜாஜி கூறி, அவர் அப்போது தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்து நெ.து.சுந்தரவடிவேலுக்கு அந்தக் கோப்பை அனுப்பி வைத்தார். "இது தேவையில்லாத ஒன்று. இத்திட்டம் கிராம, நகர மக்களுக்கிடையே பாகுபாட்டை உருவாக்குவதோடு கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சியையும் தடுத்து விடும்" என்று குறிப்பெழுதி கோப்பை திருப்பி அனுப்பினார். அதனால் பொதுக் கல்வி இயக்குநர் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயங்கினார்.

இதையறிந்த ராஜாஜி இத்திட்டத்திற்கென ஒரு தனி அலுவலரை நியமித்து செயல்படுத்த முடிவெடுக்க, வேறு வழியில்லாமல் பொதுக் கல்வி இயக்குநரே இத்திட்டத்தை அமல்படுத்தினார். திட்டம் துரிதமாக நடைமுறைக்கு வர வேண்டும் என்ற நோக்கில் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், அனைத்துக் கல்வி அலுவலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தகவல் அனுப்பப்பட்டது. பத்திரிகைகள் வாயிலாகவும் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி பள்ளிகள் வேலை நேரம் ஐந்து மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மறுநாள் பத்திரிகைகளில் இச்செய்தி வெளிவந்ததும் திராவிடக் கழகங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. இத்திட்டத்தை சாதி அமைப்பைப் பலப்படுத்தும் குலக்கல்வித் திட்டமென வர்ணித்த கட்சிகள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பலப்படுத்தவே ராஜாஜி இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டின. 1953 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராக அடுத்த இரண்டு மாதங்களில் பலவிதப் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தின. பெரியாரும் அண்ணாவும் இதில் தீவிரமாகச் செயல்பட்டனர். அவ்வாண்டு ஜுலை மாதம் சட்டமன்றம் கூடியபோது சென்னையில் கண்டன ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி எதிர்க் கட்சியினர் கைதாகி சிறை சென்றனர்.

சட்டமன்றத்தில் இத்திட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்த தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தாற்காலிகமாக இத்திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு அதை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கொண்டு வந்த இன்னொரு தீர்மானம் அதே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி பருலேக்கர் என்ற கல்வியாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இத்திட்டம் முறையானதுதான் என்று அறிக்கை வெளியிட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ராஜாஜி தன் திட்டத்துக்கு ஆதரவாக வானொலியிலும், பத்திரிகைகளிலும் பிரச்சாரம் செய்தார்.

எதிர்க் கட்சிகள் தவிர்த்து, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இத்திட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் அதற்கு ஆதரவு தரவில்லை. பைத்தியக்காரத் தனமான திட்டம் என காமராஜர் வர்ணித்தார். தம்முடைய மந்திரி சபையிலிருந்த கல்வி அமைச்சரை கலந்தாலோசிக்காமலும், சட்டசபை காங்கிரஸ் கட்சியின் கருத்தைக் கேட்டறியாமலும் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தால் கட்சிக்குள் இருந்தும், வெளியிலிருந்தும் வந்த எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் யோசிக்காத ராஜாஜி, "சங்கரரரும், ராமானுஜரும் தங்கள் கொள்கைகளை வெளியிடும் முன் மற்றவர்களிடம் கலந்து கொண்டா செய்தார்கள்?" எனக் கேட்டு எதிர்வாதம் செய்து கொண்டிருந்தார்.

சிரைக்கிறவன் மகன் சிரைக்கவும், வெளுக்கிறவன் மகன் வெளுக்கவும் தான் கற்றுக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் பார்ப்பன வீட்டுப் பிள்ளைகள் எந்தத் தொழில் செய்வார்கள்? பள்ளியில் படிக்கும் போதே வக்கீல் தொழிலையும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே டாக்டர் தொழிலையும் செய்வார்களா? என்று வலிமையாக எதிர்க்குரல்கள் கிளம்பின. "பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும். அக்கிரகாரத்துக்கு தீ வைக்க நாள் குறிக்கும் வரை காத்திருங்கள்" என உணர்வுப்பூர்வமாகப் பேசி ராஜாஜியின் கல்வித் திட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டினார் பெரியார்.

அதே சமயம், "ராஜாஜியின் திட்டமானது கல்வி அறிவோடு தொழிலறிவையும் கொடுக்க வல்லது. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் வகையில் அமைந்த இத்திட்டத்தால் தொழில் உற்பத்தியும், பொருளாதர வளர்ச்சியும் பெருகும். அரசாங்க நிதியைக் கல்விக்காக பெருமளவு செலவிட முடியாத நிலையில் இத்திட்டம் மூலம் இருக்கின்ற பள்ளிகளையும், ஆசிரியர்களையும் வைத்தே அனைவருக்கும் கல்வி வழங்க முடியும்" என 'கல்கி' இதழ் ஆதரவு தெரிவித்து எழுதியது.

சட்டசபை உறுப்பினர்கள் ராஜாஜியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தனர். ஆனால் ராஜாஜியின் மீதும், அவர் ஆட்சி மீதும் எப்போதும் அபார நம்பிக்கை கொண்டிருந்த காமராஜர் இந்தப் பிரச்சனையால் ராஜாஜி பதவிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என நினைத்தார்.

எல்லாப் பக்கங்களிலிருந்தும் ராஜாஜிக்கு எதிர்ப்பு வர, காமராஜரையும், ராஜாஜியையும் டெல்லிக்கு அழைத்து நேரு பேசினார். அதன்பின் ராஜாஜியே முதல்வராக இருக்க வேண்டும் என நேரு விரும்பி, அதை அறிக்கையாக வெளியிட்ட பின்னரும் நிலைமை சீராகவில்லை. தன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரப் போவது உறுதியாகி விட்டது என்பதை அறிந்த ராஜாஜி மற்றவர்கள் இறக்கி விடுவதற்குள் தானே இறங்கிக் கொள்வதுதான் கௌரவம் என நினைத்தார். "நான் கொண்டு வந்த கல்வித் திட்டத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தி என்னை அவமானப்படுத்த வேண்டாம். நானே விலகிக் கொள்கிறேன்" எனக் கூறியவர் 1954 மார்ச் 25 அன்று உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் காட்டி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தன் பதவியை இழக்கச் செய்த குலக் கல்வி திட்டத்தைப் பற்றி அப்போதும் ராஜாஜி பெருமையாகப் பேசிக் கொண்டுதான் இருந்தார். இந்த நிகழ்வுக்குப் பின் பல ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் ஆட்சி என்பது தமிழகத்தில் கனவாகி நிற்கும் நிலையிலும் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை சரியானது என்று இன்றும் சிலர் ஆதரித்து வருகின்றனர். "ராஜாஜியின் தொழிற்கல்வி திட்டத்தை குலக் கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாக இருந்தது அவ்வளவுதான்" எனக் கல்கி இதழ் 1980 ஆம் ஆண்டு எழுதியது.

பத்திரிகையாளர் சோ.ராமசாமி தன்னுடைய துக்ளக் இதழில், "ராஜாஜி கொண்டு வந்தது அருமையான திட்டம். அதனை திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர்" என 1988ல் எழுதினார். தினமலர் தன்னுடைய இணைப்பு இதழான வாரமலரில், "ராஜாஜியின் திட்டத்தை குலக் கல்வித் திட்டம் எனத் தவறான பெயர் கொடுத்து கெடுத்து விட்டனர்" என 2013ல் எழுதியது.

குடியரசு பத்திரிகையை சில காலம் நடத்தியவரும், காந்தியவாதியுமான கோவை அய்யாமுத்து தன்னுடைய 'ராஜாஜி எனது தந்தை' என்ற நூலில் ராஜாஜியின் கல்வித் திட்டத்திற்கு குலக் கல்வித் திட்டம் எனப் பெயரிட்டதே பெரியார்தான் என்றும், உண்மையில் அத்திட்டம் பள்ளிக்கு நீண்ட நேரம் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்களை சில மணி நேரமாவது அனுப்பி வைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதேயொழிய சாதி அடிப்படையில் பாகுபடுத்த இல்லை என்றும் வாதிடுகிறார். (ஆதாரம்: காமராஜர் வாழ்வும் அரசியலும், மு.கோபி சரபோஜி, 2014, கிழக்குப் பதிப்பகம், சென்னை)

               பார்ப்பனிய மனோபாவத்தோடு கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் தமிழகம் முன்னின்று எதிர்த்திருக்கிறது என்பதற்கு மேற்கண்ட குறிப்புகளே சாட்சி. இன்று மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை இது குலக் கல்வித் திட்டம் என்று அலசி ஆராய்ந்து சொல்வதற்கு பெரியார் அன்றே முன்னோடியாக விளங்கினார் என்றால் இது மிகையல்ல.

கல்விக் கொள்கையின் பின்னணி 

இந்தியாவில் பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடுவதற்கு முன்பு கடந்த காலங்களில் ஓரிரு முறை காங்கிரஸ் ஆட்சியின் போதும் வெளியிட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கல்வியை மேம்படுத்த பல்கலைக் கழகக் கல்வி ஆணையம் மற்றும் மேல்நிலை கல்வி ஆணையம் உள்பட பல்வேறு ஆணையங்களை மத்திய அரசு அமைத்தது.

               அதேபோல, தேசிய கல்விக் கொள்கையை வகுக்க தௌலத் சிங் கோத்தாரி தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை 1968ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார்;.

               1968 ஆம் ஆண்டில் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி வெளியிட்டார். கல்வி வாய்ப்புகளிலுள்ள பாராபட்சங்களை நீக்கி, அனைவருக்கும் சமவாய்ப்புள்ள கல்வி கிடைக்கச் செய்வதை இந்தக் கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டிருந்தது.

               இதற்குப் பின் நரசிம்மராவ் பிரதமரான போது, 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிறகு 2005 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஒரு கல்விக் கொள்கையை முன்வைத்தது.

               இந்நிலையில் 2014 ஆம் ஆண்டில் பதவியேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக அரசு புதியதொரு கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் நோக்கோடு முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஆனால் அப்போதைய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கும், செயலருக்குமான முரண்பாட்டால் 2016ல் இவ்வரைவு கண்டு கொள்ளப்படவில்லை. இதற்குப் பிறகு கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017 ஆம் ஆண்டில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு தனது பரிந்துரையை வெளியிட்டதும் தான் பெரும் சர்ச்சை கிளம்பியது. (ஆதாரம்: தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?, முரளிதரன் காசி விஸ்வநாதன், ஜுலை 2019, பிபிசி தமிழ் - கட்டுரை)

               கஸ்தூரி ரங்கன் குழு வெளியிட்ட அறிக்கையின் மீதான கருத்துகளை 2019 ஜுன் 30 க்குள் தெரிவிக்கலாம் என்று கூறியதோடு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வியாளர்கள், சமூக இயக்கங்கள், முற்போக்கு சக்திகள் எனப் பலரும் தேசிய கல்விக் கொள்கை வரைவில் இருக்கும் ஆபத்துகளைச் சுட்டிக் காட்டி கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்கள், கருத்துச் சேகரிப்புகள், கையெழுத்துப் பிரச்சாரங்கள், விழிப்புணர்வு பதாகைகள், துண்டறிக்கைகள் எனப் பல கட்டங்களாக தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கத் தயங்கவில்லை. அதோடு மக்கள், அறிஞர் பெருமக்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து சேகரித்த கருத்துகளை மத்திய அரசு அறிவித்த இணையதளம் வழியாக உரிய அலுவலக முகவரிக்கு அனுப்பினர்.

               தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இவ்வளவு போர்க் கொடி தூக்க என்ன தான் காரணம் என்றால், 68 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் முதலமைச்சாராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தின் மறுவடிவமே இது என்பதை உணரத் தொடங்கியது தான். அதற்கான கிளர்ச்சி விதையை பெரியார் அன்றே விதைத்திருந்தார் என்பதை இங்கே மறுக்க இயலாது.

கல்வி கார்ப்பரேட்களின் கையில்!   

சர்வதேச சந்தைக்கு கல்வியைத் திறந்து விடுவதற்கான ஓர் ஒப்புதல் ஆவணம் தான் தேசிய கல்விக் கொள்கை என்றும், இந்த கல்விக் கொள்கைக்கான தரவுகள் எதுவுமே கல்வியாளர்களிடமிருந்து பெறப்பட்டவை அல்ல, கார்ப்பரேட்டுகள் நடத்திய கல்வி மாநாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன எனவும் பரவலான குற்றச்சாட்டு கல்வியாளார்களால் சொல்லப்படுகின்றன.

               "இதை தேசிய கல்விக் கொள்கை என்று சொல்வதே தவறு. கல்வி வர்த்தக அல்லது சந்தைக் கொள்கை என்று குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். 1994 ஆம் ஆண்டு இந்தியா கையொப்பமிட்ட காட்ஸ் ஒப்பந்தத்தின் நீட்சியே இந்த தேசிய கல்விக் கொள்கை. அரசு வழங்குகிற சேவைகளில் தடையற்ற பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான், காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படை. அந்த வரிசையில் கல்வியை சர்வதேச சந்தைக்கு திறந்து விடுவதற்கான ஓர் ஒப்புதல் ஆவணம்தான் இது. பள்ளி மற்றும் உயர் கல்வியை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தையாக திறந்து விடுவதற்கான ஏற்பாடுதான் இது" என்கிறார் பேராசிரியர். வினோத்குமார்.

               கல்வியில் தனியார் மயம் - தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய 1990-களிலிருந்து கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதற்குப் பதில், பணம் கொடுத்து வாங்கும் சரக்காக மாற்றப்பட்டு விட்டது. படிப்படியாக ஏழைகளை உயர்கல்வியிலிருந்தும், பள்ளிக் கல்வியிலிருந்தும் அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள்.

               கடந்த 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசால் அமைக்கப்பட்ட பிர்லா - அம்பானி குழு, உயர்கல்வித் துறைக்கு பல்கலைக்கழக மானியக்குழு மூலமாக வழங்கப்படும் நிதியை படிப்படியாக நிறுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. கடந்த 2015 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானிய குழுவைக் கலைக்க வேண்டும் என மோடி அரசு பகிரங்கமாகவே அறிவித்தது. யூஜிசிக்குப் பதிலாக கொண்டு வரப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், தமது வருமானத்தை உயர்த்தி தமது செலவீனங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, இனி அரசுத் தரப்பில் இருந்து உயர்கல்விக்கான மானியம் எதுவும் கிடையாது. பணம் இருந்தால் மட்டும் கல்லுரியை நினைத்துப் பார் என்கிற பாணியில் சொல்லி விட்டது மத்திய அரசு.

               இதனை நடைமுறைப்படுத்தும் விதமாகத்தான் தேசிய கல்விக் கொள்கை என்ற புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதன் வழியாக காசு உள்ளவர்கள் மட்டுமே பள்ளிக்கூடங்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிற கருத்தை மக்கள் மத்தியில் மறைமுகமாக திணிக்க முயல்கிறது மத்திய அரசு.

மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலின் பிடியில் கல்வி

               "தற்போது வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும் ஒற்றை நாடு, ஒற்றைக் கல்வி முறையை நோக்கி இந்தியாவைத் திருப்புவதாகவும் கூறி தமிழகத்திலுள்ள கல்வி ஆர்வலர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பள்ளிக் கல்வி என்பது மத்திய - மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் போது, மாநில நலன்களுக்கு எதிரான அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த வரைவு இருக்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

1976 ஆம் ஆண்டு வரை பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்போது தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வியை அனைவருக்கும் அளித்த பெருமையைப் பெற்றது. 1964 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முழுமையும் கட்டணமில்லாமல் ஆக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் பெரிதாக மத்திய அரசின் தலையீடு இருந்ததில்லை. ஆனால் இப்போது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் பள்ளிக் கல்வியை மத்திய பட்டியலிலுள்ள ஒரு அம்சத்தைப் போலவே மத்திய அரசு கருதி வருகிறது. இந்த அம்சத்திற்கு வலுவூட்டும் வகையில்தான் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு அமைந்திருக்கிறது என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

தேசிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சைகள்

               குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி மூன்று வயது முதல் 7 வயது வரை என ஐந்து ஆண்டுகள் இருக்கும் என இந்த வரைவு சொல்கிறது. பல வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் ஆரம்பக் கல்வியை 5 வயதில் துவங்கும் போது மூன்று வயதில் ஆரம்பக் கல்வியைத் துவங்குவது தேவையில்லாதது எனவும், வெளிநாடுகளில் கூட 3 வயதில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பது உண்மைதான்; ஆனால்; அவர்களுக்கு விளையாட்டு வகுப்புகள்தான் இருக்கும், பாடம் இருக்காது. இந்த வயதில் பொம்மைகள் மிக முக்கியமானவை. அதுபற்றி ஏதாவது இந்த வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறதா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் கல்வி ஆர்வலர்கள்.

               பழைய கல்வி முறைகளான குருகுலம், மதரசா, பாடசாலை முறை போன்ற புரதான கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதை இந்த வரைவு முன் வைக்கிறது. ஆனால், ஜாதி அடிப்படையிலான, மத அடிப்படையிலான கல்வியை வலியுறுத்துவதாக இந்த முறை அமைந்துவிடும் என்றும், இது கல்வி முறையை பின்னோக்கிச் செலுத்தும் எனவும் கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

               பிரதமரின் தலைமையில் தேசிய அளவிலான கல்வி அமைப்பாக ராஷ்ட்ரிய சிஷ் ஆயோக் உருவாக்கப்படும் என்கிறது இந்த வரைவு. இந்தியாவிற்கு இது மிகப் பெரும் அபாயம். இது சர்வதிகார அமைப்பாக இருக்கப் போகிறது எனவும் எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள். இம்முறையை அனுமதித்தால் எந்தக் கல்வி நிறுவனமும் புதியதொரு பாடத் திட்டத்தை தொடங்க விரும்பினால் அவர்கள் மத்திய அரசின் இந்தக் குழுவை சந்தித்து அனுமதி வாங்க வேண்டும். மாறி வரும் புதிய நடைமுறைகளுக்கு ஏற்ப புதிய பாடங்களைத் தொடங்க அனுமதி அளிக்காமல் முட்டுக்கட்டை போடும் அபாயத்திற்கு இது தள்ளும் எனவும் கல்வியாளர்கள் கருத்து சொல்கிறார்கள்.

இந்தி மொழி திணிப்பு

               தேசிய கல்விக் கொள்கை வரைவில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கவே பாஜக அரசு விரும்புகிறது என்ற குற்றச்சாட்டு பலமாக எழுப்பப்படுகிறது. இதன் தொடக்கமாகத்தான் ஆங்கில மொழிப் பயன்பாட்டை துரதிஷ்டவசமான போக்கு எனக் குறிப்பிட்டுள்ளதாக கேள்வி எழுப்புகின்றனர். அப்படியென்றால் தமிழ் மொழி உள்ளிட்ட பிராந்திய மொழிகளை வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் இல்லை அவர்களுக்கு. ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இந்தி மொழியைக் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

               ஏற்கனவே தமிழ் மொழி, மத்திய அரசு உள்ளிட்ட அரசுப் பணிகளில் போட்டித் தேர்வின் போது புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை செய்ய தமிழ்மொழி தெரியாத இந்தி மொழி பேசும் நபர்களை திட்டமிட்டே அரசு பணியில் அமர்த்தி வருகிறது மத்திய பாஜக அரசு. இதெல்லாம் பார்க்கும் போது இந்தி மொழியை மறைமுகமாகத் திணிக்க முயலுவதோடு தமிழ் படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்காது என்கிற நேரடியாக அச்சுறுத்தும் வேலையையும் மத்திய அரசு சமீப காலமாக செய்து வருகிறது. இது இந்தி மொழிக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கும் முயற்சியாகும். இப்படிப்பட்ட நிகழ்வுகளை எதிர்கொள்ளும் தமிழ் பேசும் மக்கள் இந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கத்தானே செய்வார்கள்.

தேர்வு எனும் வன்முறை

               கல்வியின் தரம் என்கிற பெயரில் குழந்தைகள் மீது வன்முறை திணிக்கப்படுகிறது என்று இந்த தேர்வு முறைகளை குறிப்பிடுகின்றனர். 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொது தேர்வு என்பது அவ்வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் எவ்வளவு சுமை என்பதை உற்று நோக்கினால் தான் தெரியும். இது ஏழைகள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வோரின் குழந்தைகளை மேலும் பின்னடைவுக்குத் தள்ளும் என்பதே உண்மை.

               அதன்பின்பு போகக்கூடிய ஒவ்வொரு உயர்கல்விக்கும் தேசிய அளவில் தனி நுழைவுத் தேர்வு வைத்து அதன் பின்னரே அவர்கள் மேற்படிப்பிற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்பது அவர்களின் மீது மேலும் சுமையை ஏற்றும் செயல்தானே?

               ஸ்டேட் சென்சஸ் எக்ஸாம் என 3, 5, 8 ஆம் வகுப்புகளில் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சொல்லும் நேரத்தில் அதில் தோல்வியடையும் மாணவர்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது பெரும் கேள்வியை எழுப்புகிறது. இது மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தின் மீது ஏன் இவ்வளவு அவசரம் என நமக்குள் கேள்விக் கணைகளை எழுப்புகிறது.

ஆசிரியர்களின் நிலை

               மாணவர்களின் கற்றல் குறைபாட்டில் ஆசிரியர்களுக்கே முழுப் பொறுப்பு என்கிற நோக்கோடு இந்த வரைவு தயாரிக்கப் பட்டிருப்பதாக பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆசிரியர்களைக் கண்காணித்து அவர்களைத் தரமதிப்பீடு செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளை இதில் கூறியுள்ளனர். இது ஆசிரியர்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்ற செயல் எனவும், ஆசிரியர்களை ஓர் அச்ச உணர்விலேயே வைத்திருக்க முயல்வது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல எனவும், மேலும் ஆசிரியர்கள் நியமனங்களும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலேயே இனி மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருப்பது ஆசிரியர்களின் தரத்தினை மட்டப்படுத்துவதாக இருக்கிறது. பள்ளிகளில் ஏற்கனவே அதிகளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிற சூழலில் மத்திய அரசின் இந்த அணுகுமுறை மேலும் மோசமான சூழலுக்குள் தள்ளும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்

காசு கொடுத்தால் கல்வி கிடைக்கும்!

               சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி. காசில்லாதவனுக்கு கல்வி இல்லை என்பது தான் இன்றைய தேசிய கல்விக் கொள்கையின் சாரம்சம். அரசுப் பள்ளிகளை படிப்படியாக மூடிவிட்டு நாளடைவில் தனியார் பள்ளிகளையும், மாலை நேரங்களில் செல்லும் டியூசன் சென்டர்களையும் அதிகப்படுத்தவே இப்படியொரு திட்டம் என்று பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது.

               தனியார் கோச்சிங் சென்டர்களில் காசு இருப்பவர்களின் பிள்ளைகள் படிப்பார்கள். சாதாரண கூலித் தொழிலாளர்கள், ஏழைகளின் குழந்தைகள் எப்படி படிப்பார்கள்? அவர்களின் குழந்தைகள் படிக்க காசில்லாமல் மீண்டும் அவர்களின் பெற்றோர்கள் செய்யும் வேலையை நோக்கித் தள்ளும் அவலம்தான் இதில் நிறைந்திருக்கிறது.

               ஏற்கனவே கல்வி என்பது பெரும் வணிகமாகிவிட்ட சூழலில் இந்த கல்விக் கொள்கை மேலும் அதை வலுப்படுத்தவே முயல்கிறது. கல்வி சேவைப் பட்டியலில் இருந்து நழுவி வணிகப் பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பதை விட ஒரே அடியாக சேர்த்து விடலாம் என நினைத்து விட்டார்கள் போலும்!

நுழைவுத் தேர்வு எனும் மோசடி

               மருத்துவ கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்து காசு உள்ளவர்கள் மட்டும் கோச்சிங் சென்டர்களில் பணத்தை வரி இறைத்து மருத்துவத்திற்குப் படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்ட நிலையில் இனி உயர்கல்விக்குப் படிக்கப் போகும் ஒவ்வொருவரும் இனி காசு கொடுத்து மணிக்கணக்கில் கோச்சிங் சென்டர்களில் படித்தால் மட்டுமே நுழைவுத் தேர்வுகளை எழுதி மேற்படிப்பிற்குப் போக முடியும் என்ற நிலைக்கு தேசிய கல்விக் கொள்கை வழிவகை செய்திருக்கிறது. இதற்கான வெள்ளோட்டமாகத்தான் நீட் திணிப்பு.

               ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களின் கல்வித் திறன் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது என 68 வருடங்களுக்கு முன்னால் ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்திற்கு நம்மை பின்நோக்கி வலுக்கட்டாயமாகத் தள்ளுகிறது பாஜக அரசு.

இறுதியாக...

               மக்கள் நலன் விரும்பும் அரசு மக்களைப் பாகுபடுத்தாமல் அனைவரையும் ஒன்றாகக் கருதுவதுதானே நியாயம். ஆனால், இங்கு காசு இருப்பவனுக்கு ஒரு மாதிரியும் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியும் பாராபட்சம் அரசே காட்டுகிறது என்றால் இது யாருக்கான அரசு? யாருக்கான ஆட்சி? என்றே கேள்வி எழுகிறது. அதுவும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஏழைகள், அன்றாடம் காய்ச்சிகளாக உழைக்கும் மக்களின் குழந்தைகளை ஓரம் கட்டும் போக்கு எத்தகையது?

               கல்வி கற்க முடியாத குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் செய்யும் தொழிலைச் செய்ய ஊக்குவிக்கப் படுவார்கள் என்றால் அதற்கு பள்ளிக்கூடம் என்ற ஒன்று எதற்கு? அவர்களின் பெற்றோர்கள் வீட்டிலிருந்தே அதை சொல்லிக் கொடுத்துவிட மாட்டார்களா?

               கல்வி என்பது அனைவருக்கும் சமம். அதைக் கற்று சுயமாக சிந்திக்கவும், தனக்கான எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளும் திறனை மாணவர்கள் பெறவும், அதன் பின்பு அவர்கள் விரும்புகிற தொழிலை மேற்கொள்ளவும் வழிவகை செய்து கொடுப்பதுதானே? அதை விடுத்து அவர்களை அறியாப் பருவத்தில் இதைச் செய், அதைச் செய் எனத் தவறான வழிகாட்டுவது எதிர்கால சந்ததியினரை சிதைக்கும் செயல் அல்லவா? இது எவ்வளவு பெரிய மோசடி!

               இப்போதுகூட 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இருக்கிறதா? இல்லையா? என மாணவர்கள் ஒரு பக்கமும், அவர்களின் பெற்றோர்கள் ஒரு பக்கமும் பரிதவிக்கும் சூழலில் மாணவர்கள் முதலில் பொதுத் தேர்வு எழுதும் அளவிற்கு அவர்களின் மனநிலை இருக்குமா என ஏன் ஆய்வு செய்ய அரசுகள் முன்வரவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட போவது எல்லாம் சமுகத்திலும் பொருளாதரத்திலும் பின்தங்கியுள்ள, அன்றாடங் காய்ச்சிகளின் குழந்தைகள்தானே என்கிற மெத்தனப் போக்குதானே ஒழிய வேறென்னே?

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It