‘ டேய், ஒழுங்கா சொல்லிடு ராத்திர வேலையிலே ஏன்

'குளக்கரை பக்கமா வந்தே.....?'

‘தோட்டத்துலே பேசிக்கிட்டிருந்து, திரும்ப நேரமாய்டுச்சா”

‘ராஸ்கல்...யானையை யார்டா சுட்டா?.....தந்தம் எங்கேடா?”

‘சத்தியமா, சாமி தெரியாதுங்க”

‘இப்படிக் கேட்டா சொல்லமாட்டே ஒங்கிட்டே வாங்கிற விதமா வாங்கறேன். கான்ஸ்டபிள் இவனை திருப்பி லாக்-அப்லே தள்ளு” ‘வெட்டியானை குளக்கரைக்கு வரச்சொல்லு” வார்த்தையை மடமடவென கொட்டிய அதே வேகத்தில் தலையில் காக்கிதொப்பியை சொருகியபடி, மோட்டார் பைக்கில் ஏறிப்பறந்தார் இன்ஸ்பெக்டர். எந்தவித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டாவது நாளாக லாக்-அப்பில் அடைக்கப்பட்டான் பொம்மன். படிப்பு வாசனையில்லாத அந்த ஆதிவாசியின் தலை அவன் வாழ்க்கையைப் போல வரண்டிருந்தது.

சுற்றிலும் மூங்கில்காடு, அருகருகே புதர்கள் ‘பச்சையாக’ நடுவே சிறிய குளம். வறண்ட குளத்தின் கரையில், மல்லாக்காக ஒரு யானை, கேட்பாரற்று செத்துக்கிடந்தது. டவுனிலிருந்து வந்த ஒரு மிருக டாக்டர் யானையை சோதித்தார். இன்ஸ்பெக்டர் டயரியில்; ஏதோ குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார்.

யானையின் வயிற்றுப் பகுதியில் டாக்டர் வரைந்த சாயப்கோட்டைச் சுற்றி சரியாக கோடாரியால் வெட்டியான் யானையைப் பிளந்தான். பிளக்கும்போது வெட்டியானின் நெற்றி வேர்வை யானையின் காலில் விழுந்து கரைந்து காணாமல் போனது.

யானையின் வாய்ப்பகுதியில் கூர்மையான கத்தி விளையாடியிருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் தந்தங்களைக் காணவில்லை. டாக்டர் கையைக் கழுவி விட்டு, கைத்துணியால் கையைத் துடைத்தபடியே இன்ஸ்பெக்டர் பக்கம் போய் நின்று கொண்டு, மீண்டும் ஒருமுறை யானையைப் பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் ஆரம்பித்தார்.

இன்ஸ்பெக்டர் சார், எல்லாம் முடிஞ்சாச்சு, நாளைக்கு நான் உங்களுக்கு ரிப்போர்ட் கொடுத்தனுப்புறேன். இந்த நாலு குண்டுகளாலே தான் சுட்டிருக்காங்க..... தந்தத்தை எடுக்க பெரிய கத்தி மாதிரி எதையோ ஒன்று பயன்படுத்தியிருக்காங்க.... சரி நான் கிளம்பறேன்”.

‘சார்...... ரிப்போர்ட்” வந்திடுச்சு, குண்டு பத்தி அதுலேயிருக்கு....... அதான் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.....”

‘இன்ஸ்பெக்டர் , நீங்க புதுசு, அதான் இப்படி பேசறீங்க கவலைப்படாதீங்க, நா கவனிச்சுக்கிறேன்.”

‘......... சரி சார்” என்று தலையசைத்துவிட்டு பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்தார் இன்ஸ்பெக்டர்.”

‘நான் போயிட்டு வறேன். போய் கலெக்டரைப் பார்த்து ஆக வேண்டியதை கவனிக்கிறேன், நான் வரட்டுமா?”

வனத்துறை அதிகாரி வெளியே போனதும், இன்ஸ்பெக்டருக்கு புதிதாக இப்போதே ஸ்கூட்டர் வாங்கிவிட்டது போலிருந்தது, சந்தோஷத்தால் அவர் விரல்கள் மேசையின் மீது தாவின. அதே மேசையில் யானையின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட நான்கு குண்டுகளும் சிதறியிருந்தன. காட்டு இலாகா அதிகாரிகளுக்கு மட்டுமே அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் தனிவகைக் குண்டுகள் !

மாலைநேரம். அந்தக் குளக்கரையில் வனத்துறை ரேஞ்சரும், வெட்டியானும் மட்டும் இருந்தார்கள். காற்று சற்று அதிகமாகவே அடித்தது. ரேஞ்சர் கரையோரம் உட்கார்ந்து ‘பில்டர்’ சிகரெட் ஒன்றை பற்ற வைத்து, புகையை மெதுவாக, நெஞ்சுவரை இழுத்து, சில வினாடிகள் உள்ளேயே வைத்து பின் மங்கலாக வெளியே கக்கிக் கொண்டிருந்தார். வெட்டியான், செத்த யானையின்மீது ஒரு டின் கெரோசினை ஊற்றி, தீக்குச்சியால், பத்தவைத்து விட்டு, பத்துப் பதினைந்தடி தள்ளி குளிர் காய்ந்து கொண்டிருந்தான். அரைமணி நேரம் கழித்து ரேஞ்சர் எழுந்து வந்து வெட்டியானைக் கூப்பிட்டு ஒரு இருபது ரூபா நோட்டை கொடுத்துப் போகச் சொல்லிவிட்டு, அவரும் பின்னாலேயே கிளம்பினார். ‘சலாம்’ போட்டு ரேஞ்சர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ‘குடுகுடு’ என்று காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி கடைத்தெரு பக்கம் போனான். வெட்டியானுக்கு ஒரே குஷி! தனக்கு இன்று நல்ல ‘சுளி’ என்று நினைத்து கொண்டே மளிகைக் கடையினுள் நுழைந்தான்.

வெட்டியானுக்கு மட்டும் ‘சுளி’ யில்லை, அவன் பெண்சாதி, குழந்தைங்க..... மொத்தத்துலே அந்த சின்ன மலைவாசி குடும்பத்துக்கே இன்னிக்கி ‘சுளி’ தான். எல்லாரும் அரிசி கஞ்சி குடிச்சாங்க.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள யானைத் தந்தங்களை சுமந்து சென்ற வனத்துறை ஜீப், கடைசிப் போஸ்ட்டை தாண்டியது. புழுதியை கிளப்பிச் சென்ற இந்த ஜீப் வழிவிட்டு சரணாலய பகுதியில் நுழைந்தது. நகரத்திலிருந்து காலை தினசரிகளை சுமந்து வரும் பஸ். இன்று அது சுமந்துவந்ததில் மூன்றாவது பக்கதில் ஒரு ஓரத்தில் ஒரு துண்டுச் செய்தி....

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு யானை பிளேக் நோய் தாக்கப்பட்டு இறந்தது. நேற்று அது அடக்கம் செய்யப்பட்டது. மேலும் பிளேக் நோய் பரவும் அபாயம் இருப்பதால், சரணாலய பகுதியைச் சார்ந்த ஆதிவாசிகளும், கிராமப்புறமக்களும் காட்டுப்பகுதியினுள் நுழைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்” மாவட்ட ஆட்சியாளர் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

Pin It