அழிக்கும் கடவுளான சிவபெருமான் பொது தர்மத்திற்குத்தான் தன்னோட அழிவு சக்தியை பயன்படுத்தலாமே தவிர சொந்த காரண காரியங்களுக்கு பயன்படுத்தினால் அது கொலை வழக்ககாத்தான் கருதப்படும்ங்கிறது கைலேங்கிரி பீனல்கோடிலுள்ள ஷரத்து. 

அப்படியொரு கொலை வழக்கு விஷயமா கைலேங்கிரி ஹைகோர்ட் போயிட்டு அலுப்பா மலைக்கு வந்து சேர்ந்த புருசனை பார்வதியம்மா எதிர்கொண்டு என்னங்க. என்னாச்சுன்னு கேட்ட மட்டுல அவர் கையிலிருந்த திரிசூலத்தை வாங்கி மூலையில சாத்தி வச்சு கழுத்தில கிடந்த பாம்பை எடுத்து அசையில தொங்கவிட்டு ஆசுவாசப்படுத்துனா. 

"உஸ்.... சும்மாயிரு. பையன்க காதுல விழுகப்போகுது அப்படீன்னார்." மூத்தவன் இல்லே இளையவன் முருகந்தான் இருக்கான் சும்மா சொல்லுங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே முருகன் விறுவிறுன்னு பக்கத்திலே வந்து "என்னப்பா ஆச்சு வாய்தா. அப்படி. என்ன கேசு ஒம்மேலே' அப்படீன்னான். 

சரி பய பெரிய பிள்ளையாயிட்டான். என்னைக்கிருந்தாலும் தெரியத்தான் போகுது. நானே சொல்லிர்றேன் அப்படீன்னு ஆரம்பிச்சா பார்வதி. 

"அது வந்துப்பா முருகா! முன்னாடி ஒருநா நான் குளிக்கணும்னு கொல்லைப்பக்கமா போனேன். அந்நேரம் உங்கப்பா வெளியே போயிட்டாரு. குளிக்கும் போது காவலுக்கு யாருமில்லேயேன்னு ரோசனை பண்ணுனேன்." 

"காவலுக்கா அதுசரி கைலேங்கிரியிலேயே எட்டிப் பாத்துர்றானா பொம்பளை குளிக்கிறதை, அதுவும் பரமசிவர் பெண்ஜாதி குளிக்கிறதை. உலகம் விளங்கிப்போகும். சரி பிறகு?" 

"பிறகென்ன உடம்புல இருக்கிற அழுக்கை திரட்டி ஒரு உருவம் செஞ்சேன்." 

"க்கும் அதென்ன அவ்வளவு அழுக்கு, இங்கே உனக்கு என்ன வேலை. என்னம்மா கரிசக் காட்டுல களையெடுக்கிற பொம்பளை மாதிரி. வெடி ஆபீஸிலெ தீப்பெட்டி கம்பெனியில வேலை செய்திட்டு குளிக்கிறதுக்கே தீரலைங்கிற மாதிரி அலைஞ்சிருக்கே! அப்பவும் அழுக்கு ஒரு உருவம். செய்யுற அளவுக்கா? பாம்பு சட்டை உரிச்ச மாதிரி." 

"சொல்றதை கேளுப்பா" 

"இல்லே இல்லே அதுதான் உனக்கு சக்தின்னு இங்கே. எவனோ உங்கிட்டே புளுகி இருக்கான். குளிச்சா பலம் போயிரும்ன்னு பயமுறுத்திருப்பான்". 

"சும்மாயிரு அம்மாவை கேலிபண்ண இதுவா நேரம். கொறக்கதையை கேளு. அப்படி அந்த உருவத்தை வாசலுக்கு வெளியே காவல் வச்சிட்டு உள்ளே குளிக்கப்போனேன்." 

"யாரை? அந்த அழுக்குருண்டையை காவல் வச்சிட்டு!" 

"ஆமாமா உள்ளே குளிச்சிட்டு இருந்தனா..." 

இப்பொ பரமசிவனாகிய சிவபெருமாள் கதையை தொடங்குனார். 

"அப்பொ நான் லாத்தலா வெளியே போயிட்டு உள்ளே நொழஞ்சேன். திடீர்ன்னு கைய ரெண்டையும் விரிச்சி மறிச்சி உள்ளே போகக் கூடாது. அப்படீன்னு குறுக்கே நின்னான்". 

"யாரு? அந்த அழுக்குருண்டையா!" 

"ஆமா... டேய் நீ யார்ரா அதச்சொல்ல நா யார்ன்னு தெரியுமா அப்படீன்னு நாக்கை துருத்தி முறுக்கிக்கிட்டு போடா போன்னுட்டு ஒரு எட்டு எடுத்து வச்சேன்". 

"நீ யாரா இருந்தா எனகென்ன போயா அந்தப் பக்கம் எங்க அம்மா குளிச்சிட்டு இருக்குங்கிறேன். அப்படீன்னு என்ன நெட்டி தள்ளிவிட்டான். அவ்வளதான் எனக்குக் கோபம் அண்டகடாரம் முட்டிப்போச்சி. இடுப்பிலிருந்த வாளை எடுத்து தலையை ஒரே சீவு!" 

முருகன் அப்பனைப் பார்த்து இகழ்ச்சியா கையை நீட்டி நீயெல்லாம்  ஒரு மனுசன்ங்கிற மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு சொன்னான். 

"இங்கெ பாருப்பா ஒரு பொம்பளை குளிச்சிட்டு வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆயிரும். அதுவரைக்கு பொறுக்கலையா. ஒரு படுகொலையை பண்ணிட்டு போற அளவுக்கு அங்கே என்ன இருக்கு. இல்லே இதுக்கு முன்னாடி பாராததை பாக்கப்போறியா". 

சிவபெருமாள் தலைய கவிழ்ந்த மட்டுல இருந்தார். அன்றைக்கிருந்த சோகம் போலவே இப்பொ இருந்து கொண்டு பார்வதி தொடர்ந்து சொன்னாள். 

"வெளியே வந்து பாக்குறேன். எம்பிள்ளை தலைவேற முண்டம் வேறயா கிடக்கான். அடப்பாவி மனுசா நீ விளங்குவியா துலங்குவியான்னு அழுதேன். நான் அழுகிறதை பார்க்கப் பொறாத இந்த மனுசன் சரி சரி நடந்தது நடந்து போச்சி. இதுக்கு வேற ஏற்பாடு பண்ணுதேம்முன்னு அந்தப் பக்கமா ஒரு யானை போயிட்டு இருந்தது. அதோட தலையை வெட்டி இந்த உடம்புல பொருத்தி உங்க அண்ணன் பிள்ளையார் பொறந்தான்." 

"நல்ல வேளை அந்த நேரம் யானை தட்டுப்பட்டது. நாய்நரி வராம. இந்த லட்சணத்துல என்னைப் பாத்து நீ அம்மா வயித்துலயா பெறந்தே அப்படீன்னு கேக்கான். நான் அப்பா நெத்திக்கண்ணுல பொறந்ததை தெரிஞ்சுக்கிட்டு இவன் பிறவிக் கூறு தெரியாம. மடையன். எனக்கு முன்னாடியே சந்தேகம். இவன் எப்படி அம்மா வயித்துல பிறந்திருக்க முடியும். அப்படியே பிறந்திருந்தாலும் என்ன லட்சணத்திலே பால் குடிச்சிருப்பான்." 

"சரி சரி அண்ணன்கிட்டெ அது இதெச்சொல்லி பழையபடி சண்டையைப் போடாதீங்க. விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்". 

"அது கிடக்கட்டும் இப்பொ கோர்ட்டுல ஒம்மேல கொலைக்கேஸ்தானே நடக்கு". 

"ரெட்டைக்கொலை. வாட்ச்மேனை கொன்னேன்னு ஒரு கேஸ். யானையை கொன்னேன்னு வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி ஒரு கேஸ்." 

"அதான் ஒரு உசிரை உண்டாக்கி விட்டாச்சுல்லே. பிள்ளையாருங்கிற பேர்ல!" 

"கொன்னது வாஸ்தவமா இல்லையா. ஆமா இல்லை ரெண்டுல ஒரு பதில் சொல்லுங்கிறான். சர்க்கார் வக்கீல். உற்பத்தி பண்ணுறது உன் வேலை இல்லைனுட்டான்." 

"அடுத்த வாய்தா எப்பவாம்?". 

"இன்னும் ஜட்ஜ்மெண்ட்தான். கலியுகத்திலே." 

"அதென்ன வருசம் மாசம் கணக்கு இல்லாம யுகக்கணக்கு." 

அடேய் இந்த மனுசர்களுக்கு நூறு வருசம்ன்னா நமக்கு ஒரு மணி நேரம்தான் கணக்கு. மனுசப்பதர்களுக்கு உண்டான கால அளவு நம்ம மாதிரி தேவாதி தேவர்களுக்கு கிடையாது. அதாவது இப்படிச் சொல்றேன் தெரிஞ்சுக்கோ. 

"பிரம்மாவுடைய பேரன் ராவணன். பிரம்மா ஒருநாள் காலையில 'வெளிக்கி' கிளம்பிப் போனாராம். அப்பொ இடையில ஒரு ஆள் வந்து உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான் அப்படீன்டிருக்கார். சந்தோசம் சந்தோசம்ன்னு சிரிச்சுக்கிட்டே போயிட்டாராம். 

திரும்ப வந்து கால் கழுவ செம்புல தண்ணி மொண்டாராம். உங்க பேரன் ராவணன் செத்துப்போனான்னு தகவல் வந்திருக்குன்னு சரஸ்வதி வந்து சொன்னாளாம். தெரியும் தெரியும் இந்தா தலையில தண்ணி விடப்போறேன்னாராம். 

அதாவது பிரம்மா வெளியே இருந்துட்டு வந்து கால்கழுவும் முன்னால ராமன் - ராவணன் பிறந்து வளர்ந்து வனவாசமாகி ராம-ராவண யுத்தம் முடிஞ்சு போச்சாம். எல்லாம் கதைதானே. ஏற்கெனவே பிரம்மாவோட நாலாவது மண்டையப் பிச்சு எடுத்திட்டேன்ன ஒரு கேஸ்பெண்டிங்ல இருக்கு. இப்போ தேவர்களுக்கு ஆயுள்காலம் எவ்வளவு? 

- எஸ்.இலட்சுமணப் பெருமாள்

Pin It