"என்ன எதுக்கு காப்பி ஷாப்புக்கு வரச்சொன்ன கௌதம்..."

இருவருக்கெனப் போடப்பட்ட நாற்காலியில் ப்ரீத்திக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த கெளதம் காப்பியில் பறந்துக் கொண்ட ஆவியைப் பார்த்தவாறு இருந்தான்.

"வீட்டுல வேண்டான்னு சொல்ராங்க... அது அதுதான்..."

"ஒ... ஓ அப்ப பிரேக் அப்ப... நல்லாயிருக்கு கெளதம்"

"ப்ரீத்தி… புரிஞ்சுக்கோ அதுக்காக நான் உன்ன கூப்பிடுல... நம் இப்போ என்ன பண்றதுனு கேக்கத்தான் கூப்பிட்டேன்..."

"நீ ஆம்பள தான... என்ன பண்ணறதுனு என்னைக் கேக்கற... லவ் பண்ணறப்போ மட்டும் அத கிழிச்சுருவேன் இத கிழிச்சுருவேன் சொல்லற..."

"ப்ரீத்தி..."

“கட் கட்... ஷாட் ஓகே...”

ஆர்.எஸ்.புரம் சாலையில் தோல்ப்பையுடன் நின்றுகொண்டிருந்த சுருதி ஷூட்டிங் நடக்கும் இடத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான்கடி மட்டுமே வளர்ந்திருந்த சுருதி, தன் நிலைக் கண்டு வருந்தாமல் வாழ்வில் உயரப் போராடினாள். அவளுக்கு தகுந்தாற் போல பணிவாய்க்காமல் போனதால். கலைக்களஞ்சிய புத்தகங்களை பள்ளிகள், கல்லுரிகள், அலுவலகங்கள் சில சமயம் பூங்காக்களிலும் கூட விற்பதுண்டு.

காலையில் உணவை சிறிய பெட்டியில் பூட்டிக்கொண்டு தன் பணியை துவங்குவாள். ஒரு புத்தகத்திற்கு ஐம்பதுரூபாய் கூலி என்ற விதத்தில் எப்படியாவது இரண்டு புத்தகத்தை விற்றுவிடுவாள்.

அதிகபட்சமாக நான்கு புத்தகம், இரக்கப்படுபவர்கள் எப்படியும் ஒரு நாளைக்கு ஒருவர் என பார்க்கநேரிடும். நூலகங்களில் இருக்க வேண்டிய புத்தகங்கள் இன்று தெருவுக்கு வந்துகூட விலைபோவதில்லை என்பது இன்றைய நிலைப்பாடு. கணினிகளின் ஆக்ரிமிப்பு இப்போது வாசிப்பை குறைத்துக் கொண்டது.

நெடுநேரமாய் போராடியவளுக்கு இன்று புத்தகம் விலைபோகவில்லை.

சினிமா யூனிட்டில் இருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள், ஒதுங்கிக் கொண்டார்கள், அவள் வித்தியாசமாக பார்க்கப்பட்டாள். குள்ளமாய் பிறந்தவர்கள் நிலைக்கு இறங்கி வர யாரும் விரும்புவது இல்லை.

காப்பிக் கடையின் முகப்பில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு டைலாக்கை மனப்பாடம் செய்துகொண்டிருந்த கதாநாயகனிடம் சென்று பேச்சுக் கொடுத்தாள்.

"சார்... என் பெரு சுருதி.. என்கிட்டே என்சைக்ளோபீடியா புக் இருக்கு வாங்கிக்கிறிங்களா.."

கவனம் உடைந்துக் கொள்ளாமல் காகிதத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருத்தவன், குரல் கேட்டதும் கனவில் இருந்து சற்றென்று விலகிக்கொண்டவன் போல அவளை பார்த்தான்.

"மார்கெட்டிங்கா… இல்ல... நான் இதெல்லாம் படிக்கிற பழக்கம் இல்ல... சோ ப்ளீஸ்..." என்று முடித்துக் கொண்டான்"

"சார்..." என்று சற்று குரல் தாழ்த்தி விண்ணப்பித்தாள்.

மனப்பாடம் செய்வதில் மூழ்கிக் கொண்டான் கதாநாயகன்.

அதே கடையின் கடைசி இருக்கையில் ஒப்பனை சரிபார்த்துக் கொண்டிருந்த கதாநாயகியிடம் நெருங்கினாள் சுருதி.

"மேடம் நீங்க ரொம்ப நல்லா வசனம் சொன்னிங்க. நான் தூரத்திலிருந்து உங்கள ரசிச்சேன்"

"தேங்கியு, பை தி வே நீ..."

"மேடம் என் பெரு சுருதி .நான் புக்ஸ் வித்துட்டு இருக்கேன்..."

"ஓ அப்படியா நீ உள்ள வரும் போது, யாரும் உன்ன கேட்கலையா..."

"ஓ அதுவா மேடம் நான் இருக்கற ஹைட்டுக்கு என்னை யாருக்கு தெரியாது. அதுவும் மனுசங்க இப்பெல்லாம் குனுஞ்சு எதையும் பார்க்கறது இல்ல..."

"இது… எப்படி…" என்று தன் பார்வையில் உயரத்தை அளந்துக் கொண்டாற்போல கேட்டாள்.

"நான் ஸ்கூலுக்கு போகும்போதுதான் இதை கண்டுபிடுச்சாங்க என்ன பண்ண, அதோட வாழ கத்துக்கிட்டேன்."

"உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையா.."

"நினைச்சாத்தானே கஷ்டம் நிமிர்ந்து நின்னா… நம்ம விட உசரம் எதுவுமே இல்ல... வாழ்க்கையை எப்படிவேணுனாலும் வாழலாம் நம்ம நினைச்சா..."

ஷாட் ரெடி…

"சரி மா… நான் ஷூட்டுக்கு போகணும்... நேரமாச்சு..."

எப்படியும் இன்றைக்கு புத்தகம் விற்று போகும் என்ற நம்பிக்கையில் திரும்பவும் கொதித்துக் கொன்றிருந்த தார்சாலையில் தன் பயணத்தை மேற்கொண்டாள் சுருதி.

கதாநாயகிக்கு மனப்பாடம் செய்து கொண்ட டயலாக் மனதில் அலைக்கழித்துக் கொண்டது.

"என்னடி ப்ரீத்தி… பிரேக் டோவ்ன் ஆயிருச்சுனு கவலைப்படுரையா ..என்ன பண்ண எல்லா விதின்னு நனைச்சுக்க வேண்டியது தான்… ஏழு வருஷ காதல் கஷ்டமாத்தான் இருக்கும்...." என்று ப்ரீத்தியின் தோழி சமாதானம் செய்துகொண்டிருந்தாள். டயலாக்கை மறந்தவளாய் ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தாள் ப்ரீத்தி.

டைரக்டர் கட் சொல்வதற்கு எத்தனிக்கும் போது...

“எதுடி கஷ்டம் நிமிர்ந்து நின்னா நம்ம விட உசரம் எதுவுமே இல்ல... வாழ்க்கையை எப்படிவேணுனாலும் வாழலாம் நம்ம நினைச்சா..."

"ட்ரொல்லி மூவ் பார்வர்ட்..."

கைத்தட்டலில் அதிர்ந்துக் கொண்டது படப்பிடிப்பு தளம்

- சன்மது

Pin It