மஞ்சப் பையில் அழைப்பிதழோடு தம்பதி சகிதமாய் கிளம்பி விட்டனர் ஆனந்தின் பெற்றோர் வரதப்பனும் காஞ்சனாவும். முதலில் யாருக்கு அழைப்பிதழை வைப்பது என்ற கேள்விக்கு இருவரின் உள்ளத்திலும் விடையாக இருந்தவர் மருத்துவர் அருணாச் சலம். அதனால் அழைப்பிதழை அச்சகத்தி லிருந்து வாங்கிய கையோடு அவரைப் பார்க்க ஈரோட்டுக்கு பேருந்து ஏறினர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு இதே போல் இருவரும் மருத்துவரைப் பார்க்கப் போகும் போது இப்போதிருக்கும் தெளிவு அவர்களுக்கு இல்லை. கவலை, குழப்பம், கோபம், அவ மானம், விரக்தி என பல்வேறு உணர்வுகள் வாட்டி வதைக்க, நொந்து போன நிலையில் தான் டாக்டர் அருணாச்சலத்தை பார்த் தார்கள்.

அருணாச்சலம் பிரபல பாலியல் மருத் துவர். ஏற்கெனவே தன் அலுவலக நண்பர் ஒரு வருக்காக இவரை பார்த்தபோது அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையே வரதப்பனுக்கு இவரை சந்திக்க தூண்டியது.

"இவன்தான் டாக்டர் என் மகன் ஆனந்த். இவன் பண்றதை நீங்களே பாருங்க." என்று தன் போனில் இருந்த வீடியோவை இயக்கி விட்டு மருத்துவரிடம் கொடுத்தார் வரதப்பன்.

நிலைக்கண்ணாடிக்கு சற்று பக்க வாட்டில் வைக்கப்பட்டிருந்த போனில் கேமரா இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் அறைக்குள் நுழைந்த ஆனந்தன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கதவைச் சாத்தினான். கண்ணாடியின் முன் வந்து நின்று தன்னையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், சீப்பை எடுத்துக் கொண்டான். பக்கவாட்டில் வகிடெடுத்து சீவியிருந்தவன் அதைக் கலைத்துவிட்டு நடு வகிடெடுத்து சீவிக் கொண்டான். தான் அணிந்திருந்த கைச் சட்டை, கால் சட்டையைக் கழற்றிவிட்டு, பக்கத்து செல்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அம்மாவின் ஜாக்கெட்டை அணிந்து கொண்டான். மார்புப் பகுதி லூசாக இருக்க கைக்குட்டைகளை எடுத்து மடித்து உள்ளே வைத்துக் கொண் டான். பின் புடவையை எடுத்து முதலில் மாராப்பை போட்டுக் கொண்டு உடலில் புடவையைச் சுற்றிக் கொண்டு இரண்டு கைகளாலும் அழகாக மடிப்பெடுத்து கொசுவம் செருகிக் கொண்டான். பிறகு மாராப்பை இழுத்து மூடி அழகு பார்த்துக் கொண்டு, வளையல், தோடு, லிப்ஸ்டிக் என்று தன்னை அழகுபடுத்திக் கொண்டான்.

வீடியோ நீண்டு கொண்டே போக, மருத் துவர் அதை அணைத்துவிட்டு, வரதப் பனையும் காஞ்சனாவையும் ஏறிட்டார். காஞ் சனா விசும்பிக் கொண்டிருந்தார். வரதப்பன் பரிதாபமாக மருத்துவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"உங்க பையன் கிட்ட இது பத்தி பேசு னீங்களா..?"

"இன்னும் இல்ல.. நாலுபேர் இவன பொம்பளசட்டின்னு சொல்லும் போது நாங்க நம்பல.. அப்புறமா இவனை கண் காணிக்கும் போது உண்மையா இருக்கு மோன்னு சந்தேகம்.. அதனால போன் கேமராவை ஆன் பண்ணி வெச்சிட்டு, கோயிலுக்குப் போறோம்.. வர்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்ன்னு சொல்லி கிளம்பிட்டோம்.. வந்து இதைப் பாத்துட்டு கோபம்தான்.. என்ன செய்யற துன்னு தெரியலை.. அதான் உங்ககிட்ட ஆலோ சனை கேட்டுக்கலான்னு.."

காஞ்சனாவின் விசம்பல் கேட்க, அவளை சமாதானப்படுத்திவிட்டு, "டாக்டர்.. என் பையன் அரவாணியா மாறிட்டானா..?"

"அப்படித்தான் தெரியுது.."

"அரவாணியா மாறித்தான் இப்படி அலங் காரம் பண்ணணுமா..? ஏதோ ஆசப்பட்டு மேக்கப்புக்காக..?"

"நீங்க சொல்றமாதிரி சில பேர் குரோமோ சோம்ல மாற்றம் ஏற்படாம ஆசைக்காக மேலோட்டமா இப்படி செய்யலாம்.. ஆனா இவனோட நடவடிக்கையைப் பார்த்தா அப்படி தெரியலை.."

நப்பாசை நிராசையாகப் போய்விட்ட வருத்தம் வரதப்பனின் முகத்தில். "என்ன செய்யலான்னு இருக்கீங்க..?"

"தெரியல டாக்டர்.."

"நாளைக்கு அவனை கூட்டிட்டு வாங்க நான் பேசிப் பாக்குறேன்.. டெஸ்ட் பண்ணி யும் உறுதி படுத்திக்கலாம்.."

மறுநாள் ஆனந்தனை கூட்டி வந்தார்கள். டாக்டர் ஆனந்தனிடம் தனியாக பேசிப் பார்த்து விட்டு உறுதிப்படுத்தி விட்டார், ஆனந்தன் அரவாணியாக மாறி விட்டான் என்று.

கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பொய்த்துப் போய் விட்டதாய் உணர்ந்தார்கள் இருவரும். ஆசை ஆசையாய் ஆண் மகனைப் பெற் றெடுத்து பதினைந்து வருடங்கள் வளர்த்த பிறகு அவன் ஆண் இல்லை. பெண் என்று சொன்னால் எப்படி இருக்கும்..? அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி இவர்கள் முன் மலைபோல் நின்றது.

"நீங்க மத்தவங்க கிட்ட இருந்து மாறு பட்டிருக்கீங்க..? கேள்விப்பட்ட உடனே பையனை அடிச்சி வெரட்டாம, என்ன செய்ய லாம்ன்னு கேக்கறீங்க பாருங்க.. அதுவே ஒரு நல்ல அணுகுமுறை.. நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா..?"

விரக்தியாய் டாக்டரை நோக்கினர் வரதப் பனும், காஞ்சனாவும்.

"நீங்க பையனைத்தான் பெத்தீங்க.. வளர்த் தீங்க.. ஆனா அதை மறந்திடுங்க.. ஒரு பெண் ணைத்தான் பெத்தோம்ன்னு நெனைச்சி.. ஒரு மகளா இவன பாருங்க.."

"சொந்தக்காரங்க எல்லாம் என்ன பேசு வாங்க..? இனிமே நாங்க என்ன பண்ணு வோம்.. ஐயோ.. "காஞ்சனா வாய்விட்டு அழுதாள்”. “சொந்த பந்த மெல்லாம் தேவை தான்.. அவங்கள விட பெரிய சொந்தம் உங்க மகன்.. அவனோட இடத்துல இருந்து யோசிங்க.. அவனை வெறுக்காதீங்க.. இனி மேல்தான் அவனுக்கு உங்க ஆதரவு தேவைப் படுது..”

"நீங்க சொல்றமாதிரி பாக்குற பக்குவம் எங்களுக்கு இருக்கான்னு தெரியலை டாக்டர்.. நாலு பேர் மூஞ்சியில எப்படி முழிப்போம்.."

என்று செல்லிவிட்டு வரதப்பன் வேக மாக எழுந்து நெடுநெடுவென வெளியே சென்றார். அவர் பின்னாலேயே காஞ்சனாவும் எழுந்து சென்றார். வெளியே உட்கார்ந்திருந்த ஆனந்தன், "அப்பா.. அம்மா.." என்று கூப்பிட தெளிவாகக் கேட்டும் திரும்ப மனமில்லாமல் வரதப்பன் சென்றார். மகனை ஒரு முறை திரும்பப் பார்த்து விட்டு, அவனை அழைப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில் தன் கணவர் பின்னால் வேகமாகச் சென்றார் காஞ்சனா. அவர்கள் பின்னாலேயே ஆனந்தனும் சென்றான். அவனை ஏறிட்டும் பார்க்காமல் அவர்கள் பேருந்தில் ஏறி உட் கார்ந்து கொண்டனர். ஆனந்தனும் ஏறி அவர்கள் பின்னால் உட்கார்ந்து கொண்டான்.

நடத்துனர் வந்து பயணச்சீட்டை கேட்க, "அந்தியூர் ரெண்டு டிக்கெட்.." என்று கேட்ட வரதப்பனின் குரல் உடைந்து வந்தது. ஏங்க மூனு டிக்கெட் எடுங்க என்று சொல்லத் தோன் றினாலும் முடியாமல் முந்தானையை வாயில் பொத்திக் கொண்டு தலையை ஜன்னலோரம் திருப்பிக் கொண்டார் காஞ்சனா.. ஆனந்தின் இதயம் உடைந்து இருக்க வேண்டும்.. அப்பா எனக்கும் ஒரு டிக்கெட் எடுப்பா.. என்று கெஞ்சியது ஆனந்தனின் குரல். அதில் இருந்த பரிதாபம் அவளை இம்சித்தது. தன் கணவனை திரும்பிப் பார்த்தார். பிணத் துக்கு இணையாக செத்துப் போயிருந்தது வரதப் பனின் முகம். அவரிடமும் பேசத் தோன்றாமல், தன் மகனையும் ஏறிட்டுப் பார்க்க விரும்பாமல் தானும் ஒரு பிணமாய் ஜன்னல் கம்பியில் ஒட்டிக்கொண்டார்.

ஆனந்தன் தனக்காக ஒரு சீட்டு கேட்டு வாங்குவது காதில் விழவே காஞ்சனாவுக்கு ஆறுதல். தன் மகன் ஓடிப்போகும் எண்ணத் தில் இல்லை என்று.

பேருந்து அந்தியூரில் நின்றது. அது கடைசி நிறுத்தம் என்பதால் அனைவரும் இறங்கினர். வரதப்பன் இறங்கி வேகமாக நடந்தார். காஞ்சனா எதுவும் தோன்றாமல் அவருடன் சேர்ந்து நடந்தார். பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனந்தன் பின்னால் வருவான் என்று நினைத்தார். ஆனால் அவன் வரவில்லை என்பதை அவள் உள்மனம் சொன்னது. ஒரு வேளை அப்படியே சென்று விடுவானோ.. தாயின் மனம் அடித்துக் கொண்டது. சிறிது தூரம் நடந்து போக பத்ரகாளியம்மன் கோயில் கோபுரம் தெரிய அதைச் சாக்கிட்டு நின்று கொண்டாள். அம்மனை நினைத்து வேண் டிக் கொண்டாள். என் மகனை திரும்பக் கொடுத்துவிடு என்று வேண்டிக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்த்தார். அதுவரை பேருந்தில் இருந்து இறங் காமல் படியிலேயே நின்று கொண்டிருந்த ஆனந்தன், திரும்பிப் பார்த்த அம்மாவின் பார்வையால் டக்கென்று இறங்கிக் கொண் டான். வீட்டுக்குள் வரதப்பன் நெடுநெடு வென்று சென்றுவிட காஞ்சனா திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் ஆனந்தன் வருவதை அறிந்து கதவை அடித்து சாத்தினாள்.

 உற்றார் உறவினரின் ஏச்சுப் பேச்சுக்கு பயந்து கதவை அடித்துச் சாத்தினாலும் தாய்ப் பாசம் அவரை தாழ் போட விட வில்லை. அப்படியே சுவரோடு சுவராக சாய்ந்தார். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்துக் கிளம்பியது.

ஆனந்தன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். அழுது கொண்டிருந்த அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து, அம்மா நான் ஒண்ணும் தப்பு பண்ண லம்மா.. என்ன வெறுக்காதீங்கம்மா.. என்று தொடப்போன வனின் கையை தட்டிவிட்டு எழுத்து போய் அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்து அழுதார்.

 அம்மா.. நான் இனிமே அப்படி பண்ண மாட்டம்மா.. சத்தியம்மா.. என்ன நம்பும்மா.. என்ன வெறுத்து ஒதுக்காதீங்கம்மா.. ஆனந் தன் அழுதான். அவன் சொன்ன வார்த்தை காஞ்சனாவுக்கு தெம்பைக் கொடுத்தது.

இனிமே அப்படி செய்ய மாட்ட தானே.. என் கண்ணுல்ல.. எனக்குத் தெரியும்.. நீ எம் பையன்தான்.. என்று கட்டிக் கொண் டாள்.

வரதப்பனுக்கோ அவன் சொன்னது உள்ளூர மகிழ்ச்சியை உண்டு பண்ணினா லும் இது உதட்டளவில் வந்த வார்த்தையாக இல்லாமல் உள்ளத்தில் இருந்து வந்த வார்த் தையாக நடைமுறைக்கு வந்தால் நல்லது என நினைத்துக் கொண்டார்.

ஒரு மாதம் இயல்பாக கழிந்தது. ஆனந்த் இயல்பாக இருக்க நினைத்தான். இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டான். அவன் நடித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை வரதப்பனும், காஞ்சனாவும் அறிந்தே இருந் தனர். ஆனந்தன் இரவு நேரத்தில் தலைய ணையை முகத்தில் புதைத்துக் கொண்டு அவன் அழுவதும், யாருமில்லாத நேரத்தில் கழிவறைக்குச் சென்று மணிக்கணக்கில் அமர்ந்து கொள்வதும், அவன் அங்க அசையில் இன்னும் கூடுதலாக பெண்மை அதிகரித்து வருவ தையும் அவர்கள் கண்டு கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் அவர்களால் நேரடியாக அவனை கண்டிக்க முடிய வில்லை. ஒரு நாள் தூரத்து உறவினர் ஒருவர் வந்தார். அவருடன், ஆனந்தன் வயதை ஒத்த மகனும் இருந்தான். அவன் ஆனந்தனை விளையாட கூப்பிட அவனுடன் ஆனந்தனால் சகஜமாக விளையாட முடியவில்லை.

அதை அவன் புகாராகவே தன் தந்தை யிடம் சொல்லிவிட்டான். “அப்பா அவன் பொம்பள புள்ள மாதிரி ரொம்ப கூச்சப்படு றாம்ப்பா..”

அவரும் ஆனந்தனின் நடவடிக்கையை கவனித்து விட்டு, போகும் போது, அறிவுரை என்ற பெயரில் ஆனந்தனையும் அவன் பெற்றோரையும் நோகடித்துவிட்டு சென்றார்.

“பாவம் ஒரே பையன் இப்படி இருக்கான்.. நல்ல டாக்டர்கிட்ட காட்டுங்க.. இல்லேன்னா.. அடிச்சி வீட்ட விட்டு தொறத்துங்க.. வச்சி ருந்தா உங்களுக்குத்தான் அவமானம்..”

அவர் போன பிறகு வதரப்பனும் காஞ் சனாவும் வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். அவசியம் கலந்து கொள்ள வேண்டிய திருமண நிகழ்வுக்குக்கூட போகாமல் இருந்து விட்டனர்.

ஆனந்தன் நிலையும் அதுதான். இரு தலைக்கொள்ளி எறும்பாக தவித்தான். இந்த வேதனையிலிருந்து ஒரு விடிவு வேண்டும் என்று முடிவெடுத்து ஒரு நாள் அப்பா இல்லாத நேரம் பார்த்து அம்மாவின் முன் நின்று அழுது கொண்டே சொன்னான்.

“அம்மா.. என்னால நடிக்க முடியலம்மா.. நான் ஆம்பள இல்லம்மா.. பொண்ணு.. ஒண்ணுக்கு போகும் போதெல்லாம் அத பாக்கும் போது கொமட்டலாவே இருக் கும்மா.. மலத்த சுமக்குற மாதிரியே இருக்கு.. நான் போயிட்றேம்மா.. என்னால உங்களுக்கும் அவமானம்.. கஷ்டம்..” என்று சொல்லிவிட்டு உடைகளை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.

“அப்பா வரட்டுண்டா..” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் அம்மா.

“நான் போயிட்டேன்னு தெரிஞ்சா அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாரும்மா.. எனக்கு சந்தோசந் தாம்மா.... என்ன மாதிரி ஆளுங்கள வீட்ட விட்டு அடிச்சு தொறத் துவாங் கன்னுதான் கேள்விப் பட்டேன்.. ஆனா நீங்க அப்படி எல்லாம் செய்யலை.. நானாத்தான் போறேன்.. அந்த வகையில நான் ரொம்ப லக்கீம்மா.. ரொம்ப நன்றிம்மா..”

“டேய் எங்கடா போறே.. உனக்கு எதுவும் தெரியாதேடா..” அம்மா அழுதாள்.

“கூத்தாண்டவர் திருவிழாவுக்கு போ றேம்மா.. அங்க என்ன மாதிரி ஏராள மானவங்க வருவாங்க.. அங்க என்ன மாதிரி நெறைய பேரு வருவாங்க.. அங்க எனக்கு இன்னொரு அம்மாவும் கெடைப்பாங்க.. அக்காவும் கெடைப்பாங்க.. நான் நல்லா இருப்பேம்மா.. அப்பாவோட வாட்ஸ்அப் புக்கு நான் அப்பப்ப மெசேஜ் அனுப்ப றேம்மா.. என்று சொல்லி விட்டு நெடு நெடுவென்று படியிறங்கி தெருவில் நடந்து சென்றான் ஆனந்த். தரை இடிந்து போய் அதல பாதாளத்தில் விழுவது போல் உணர்ந்து அப்படியே மயங்கி விழுந்தார் காஞ்சனா.

சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து பார்த்த வரதப்பன், காஞ்சனாவின் நிலையை அறிந்து பதறிப் போய் தண்ணீர் தெளித்து எழுப்பினார். எழுந்த காஞ்சனா சொன்ன செய்தி அவரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதை எதிர் பார்த்திருந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமாகும் போது வலி இன்னும் கூடுத லாகவே இருந்தது.

ஆனந்தன் அரவாணியாய் மாறிப் போனதும், வீட்டை விட்டு போய் விட்டதும் ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. உறவுக்குள் பற்ற ஆரம்பித்தது. கேலியாக பலரும், பரிதாபமாக சிலரும் பார்க்க ஆரம்பித்தனர். காஞ்சனாவுக்கு அழுதழுது முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிப் போனார். வரதப்பன் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போனார். அவ்வப்போது பலரும் வீட்டுக்கு வந்து அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி விட்டுப் போயினர். அப்படி வந்தவள்தான் காமாட்சி. பக்கத்து வீட்டுப் பெண். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இரண்டு கால்களையும் இழந்த நிலையில் சக்கர நாற்காலில் வந்திருந்தாள்.

வரதப்பனை அப்பா என்றுதான் கூப்பிடுவாள். “அப்பா.. உங்களுக்கே தெரியும்.. கல்யாணம் ஆகிப் போன மூனே மாசத்துல எனக்கு ஆக்சிடென்ட் ரெண்டு காலையும் எடுக்க வேண்டியதாப் போச்சு.. மாமனார் வீட்டுல எல்லாரும்.. என்னை தள்ளி வெச்சிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க.. அவரு என்ன சொன்னாரு தெரியுமா..? இதே ஆக்சி டென்ட் எனக்கு நடந்திருந்தா.. அவ என்னை விட்டுட்டு போயிருப்பாளா.. இல்ல நீங்கதான் என்ன விட்டுடுவீங்களா..? அப்படின்னு கேட்டாரு.. அவங்க யாராலயும் பதில் சொல்ல முடியலை.. அப்ப அவரு சொன்னாரு கடைசி வரைக்கும் காப்பாத்து வேன்னு சொல்லிதான் தாலி கட்டுனேன்.. அத நான் காப்பாத் துவேன்.. என்னோட உடம்புல உசுரு இருக்கிற வரைக்கும் இவதான் என் பொண்டாட்டி..ன்னு எனக்காக உறுதியா நின்னாரு..” என்று சொல்லி விட்டு கண்ணீர் விட்டாள் காமாட்சி.

“நான் ரொம்ப குடுத்து வெச்சவ.. ஆனா அந்த கொடுப்பினை ஆனந்துக்கு இல் லாமப் போச்சே..” என்று சொல்ல இருவரும் அதிர்ச் சியாக அவளைப் பார்த்தனர்.

அவரு எனக்கு சொந்தம் கெடையாது.. கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் அவரைப் பார்த்தேன். கல்யாணம் ஆகி மூனு மாசத்துல ஆக்சிடென்ட்.. மொத்தம் நாலே மாசம்தான் பழக்கம்.. ஆனா அவரு எனக்காக எப்படி உறுதியா போராடுனாரு.. ஆனா நீங்க.. ஆனந்தன் உங்களுக்கு யாரோ இல்ல.. உங்க சதை.. தவமிருந்து பெத்த உங்க ரத்தம்.. பதினாலு வருசம் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த உங்க உசுரு.. எனக்கு நடந்த மாதிரி அவனுக்கு நடந்ததும் ஆக்சிடென்ட்டுதான்.. ஆனா அவன கை விட்டுட்டேங்களேப்பா.. யாரு என்ன சொன்னா என்பப்பா.. ஆனந்தனா பெத்தேன்.. இப்ப ஆனந்தியா வளத்த றேன்னு தைரியமா நெஞ்ச நிமித்தி சொல்லியிருக் கணும்ப்பா..” என்று சொல்லி முடிக்கவில்லை, காஞ்சனா வெடித்து அழ ஆரம்பித்தார். காமாட்சியின் கட்டைக் காலில் விழுந்து பாவ விமோசனம் கேட்பது போல் அழுதார்,. வரதப்பனும் பலர் அறிய முதன் முறையாக கண்ணீர் சிந்தினார். தான் தவறு செய்து விட்டதாய் முதன் முறை உணர்ந்தார்.

அதன் பிறகு பல நாட்கள் உறக்கமின்றி கழிந்தன அவர்களுக்கு. வரதப்பன் கண்களை மூடினால் உறவினர்களின் ஏச்சுப் பேச்சுகளும், அவமானங்களும்தான் கண்முன் நிற்கும். இப்போதெல்லாம் ஆனந்தன் ஆங்காங்கே பிச்சை எடுப்பது போலவும், இரவில் நின்று கொண்டு ஆண்களை அழைப்பது போல வும் தோன்றி இம்சை செய்தன. அவனை அவ்வாறு தவிக்க விட்டிருக்கக் கூடாது. என்று நொந்து கொண்டார்.

பல்வேறு இடங்களில் அரவாணிகள் தங்கும் இடங்களில் சென்று விசாரித்தார். அவனைப் பற்றி தெரியவில்லை. இந்தி யாவின் எந்த மூலையிலும் இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்ததில் கலவரம் அடைந் தனர். எனினும் அவர்கள் நம்பிக்கை இழக்க வில்லை. அவன் சொன்னது போல் கட்டாயம் வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிப்பான் என்று உறுதியாக நம்பினர். அதற்காக கடவுளையும் வேண்டினர்.

அவர்களின் நம்பிக்கையும் வேண்டுதலும் வீணாகவில்லை. இரண்டு மாதம் கழித்து ஆனந்திடமிருந்து வாட்ஸ் அப் வந்திருந்தது. ஒரு பெண்ணைப் போல் அலங்கரித்துக் கொண்டு ஒரு போட்டோவும் ஒரு குறுஞ் செய்தியும் வந்திருந்தது. “அப்பா, அம்மா நன்றாக இருக்கிறேன். பம்பாய் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது பெண்ணாக மாறிவிட்டேன். ஆனால் நீங்கள் வைத்த பெயரை மாற்ற வில்லை ஆனந்தன் என்பதை திருத்தி ஆனந்தி ஆக்கிக் கொண்டேன். என்னைப் பற்றி கவலைப்படா மல் நிம்மதியாக இருங்கள்.. என்றும் உங்கள் நினைவாக உங்கள் அன்பு மகள் ஆனந்தி..”

இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அள வில்லை. உடனே வரதப்பன் பதில் செய்தியை அனுப்பினான். அன்பு மகள் ஆனந்திக்கு. அப் பாவின் அன்பு வணக்கம். இது வரை உன்னை ஆனந்தனாக வளர்த்தோம். இனி மேல் ஆனந் தியாக ஆயுள் முழுக்க வளர்க்க ஆசைப்படுகி றேன். எங்கிருந்தாலும் உடனே வா..

***

மருத்துவர் அருணாச்சலம் வரதப்பனை யும், காஞ்சனாவையும் வரவேற்றார். ஆனந்தன் எப்படி இருக்கான்..? என்று அவர் கேட்க, பதில் சொல்லாமல் கையிலிருந்த பத்திரிகையை நீட்டினார்.

அதை வாங்கிப் பார்த்த அருணாச்சலத் திற்கு ஆச்சர்யம். “இப்படி கூட பத்திரிகை அடிச்சி விழா எடுக்கலாமா..? உங்களுக்கு அந்த அளவுக்கு தைரியம் வந்திடுச்சா..?” பத் திரிகையை வாய்விட்டு படிக்க ஆரம்பித்தார்.

அன்புடையீர் வணக்கம். இதுவரை நாங்கள் பெற்றெடுத்து வளர்த்து வந்த ஆனந்தன் தனது 14வது வயதில் தனது குரோமோசோம் மாறுபாட்டின் காரணமாக பெண்ணாக மாற்றம் அடைந்துள்ளார். அதனால் அவரை மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற்றம் செய் துள்ளோம். அதனை உற்றார், உறவினர், ஊரார்க்கு அறிவிக்கும் முகமாக ஆனந்தன் என்ற அவரது பெயரை ஆனந்தி என பெயர் மாற்றும் விழா நிகழும் மங்களகரமான திரு வள்ளுவர் ஆண்டு 2050 வைகாசி திங்கள் 27ம் நாள், அந்தியூர், தவிட்டுப் பாளையம் 37இ, வேலாயுதம் தெருவில் உள்ள எங்களது இல்லத்தில் இனிதே நடைபெற இருக்கிறது. எனவே தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து எங்கள் மகள் ஆன7ந்தியை வாழ்த்தி அருளுமாறு அன்புடன் வரவேற்கிறோம்.

வரதப்பன் - காஞ்சனா

தவிட்டுப்பாளையம், அந்தியூர்.

- ம.தி.முத்துக்குமார்

Pin It