கீழடி, அரிட்டாபட்டி, சிவகளை, கொடுமணல் பற்றி எல்லாம் இங்கே அதிகமாகப் பேசப்படுகிறது. அதற்கு இணையாக போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு இடத்தை, வளர்ச்சி என்ற பெயரில் முழுவதும் குழி தோண்டிப் புதைக்கும் வேலையைத் தமிழ்நாடு அரசு செய்து வருவது பற்றிய செய்தி இது.
மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி தொடங்கி திருப்பரங்குன்றம், யானைமலை, ஒத்தக்கடை, குன்னத்தூர், அரிட்டாபட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம், கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, அழகர்கோவில், திருவாதவூர், கீழவளவு, புலிப்பட்டி, மேலவளவு, அருவிமலை, கருங்காலக்குடி, கல்லங்காடு என்பவை தமிழர்களின் முக்கிய வரலாற்றுத் தடங்களை பறைசாற்றும் ஊர்ப்பெயர்களாகும்.
மதுரை மாவட்டத் தொல்லியல் துறை சார்பாக இதுகுறித்த செய்திகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டும் உள்ளன.
கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், குடைவரைக் கோயில்கள், கற்படுக்கைகள், சமணப்படுக்கைகள், சிற்பங்கள் வடிவில் தமிழர் நிலத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுக் களஞ்சியமாக இவை திகழ்கின்றன. இதனாலேயே, மதுரை மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு மற்றும் தொல்லியல் மண்டலமாக அறிவிக்கக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழ்க் கல்வெட்டு, பாண்டியர் காலக் கோயில்கள், தடிமனான செந்நிற பானை ஓடுகள், செம்பூரான் கற்கள், பெருங்கற்காலச் சின்னங்கள், பழமையான கோயில்காடுகள், மேய்ச்சல் நிலங்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள் என அனைத்தும் நிறைந்த இடம் மதுரை மாவட்டம் மேலூர் கல்லங்காடு ஆகும்.
இத்தனையும் நிறைந்த ஒரு இடத்தை போகிற போக்கில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனக் காரணத்தைக் கூறி கடந்த திமுக அரசு சிப்காட் தொழிற்பேட்டைத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தது. முக்கியமான தொல்லியல் கூறுகள் நிறைந்த இந்த இடத்தை அரசு ஆவணங்களில் சேர்க்காமல், வெறுமனே தரிசாகப் பராமரித்து வந்துள்ளனர். மக்களிடம் எந்தவிதமான கருத்தும் கேட்காமலும், மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்புக் குரலுக்கு செவி கொடுக்காமலும் திட்டத்தைச் செயல்படுத்துவதிலேயே கடந்த அரசு குறியாக இருந்து வந்தது. தங்களின் வாழ்வாதாரங்களோடு பண்பாட்டுக் கூறுகளும் ஒருங்கே அழியப் போகிறது என கலங்கி நின்ற மக்கள் காத்திருப்புப் போராட்டம், மனு கொடுக்கும் போராட்டம், வழிபாடு நடத்தும் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
கமிஷன்களுக்காகவும் தேர்தல் நிதி திரட்டுவதிலேயே குறியாக உள்ள அரசியல்வாதிகள் மத்தியில் இவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. மகத்தான மக்கள் போராட்டமான டங்ஸ்டன் போராட்ட வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கல்லங்காடு பகுதி மக்களுக்கு ஆதரவு தந்ததுடன், அவர்களுக்காக மதுரை மேலூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இந்த முக்கியமான பிரச்சினை குறித்து எடுத்துரைத்தும் வருகின்றனர்.
இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் பெரிய அளவில் வெளியே செல்லாமல் அப்போதைய திமுக அரசு தடுத்தது. பல்வேறு வடிவில் நடந்த போராட்டத்தை மழுங்கடிக்கத் தேவையான அத்தனை விஷயங்களையும் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டது. பொய் வழக்கு போடுவது, மிரட்டுவது, ஏமாற்றி ஆசை காட்டுவது என வழக்கமான மலிவான உத்திகளைக் கடைப்பிடித்து மக்களைப் பிளவுபடுத்த முயன்றது. கல்லங்காட்டில் சிப்காட் அமைகிற இடத்தில் எந்தவிதமான கட்டடங்களோ, புராதன சின்னங்களோ, விலை உயர்ந்த மரங்களோ இல்லை என்று மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி அறிக்கையின் அடிப்படையிலும், கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியதில் மக்கள் திட்டத்தை ஆதரிப்பதான பொய்யான தகவலும் அரசாணையில் இடம் பெற்றதைக் கண்டு மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
மக்களைக் காக்க வேண்டிய அரசே பொய்யான தகவலைப் பரப்பி மக்களை அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கல்லங்காடு சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரங்களையும் வரலாற்றையும் முற்றாக அழிக்கவரும் சிப்காட் திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்ட வழித்தட ஆவணம் என்பது இங்கே அமையவிருக்கும் சிப்காட் பற்றிய மேற்கண்ட அரசாணையில் இடம்பெற்றுள்ள செய்திகளைப் பொய்யாக்கும் வண்ணமாக கல்லங்காட்டில் உள்ள அனைத்துவிதமான அடையாளச் சின்னங்கள், பண்பாட்டுக் கூறுகள், தொல்லியல் சின்னங்கள் பற்றிய உண்மைகளையும், சிப்காட் வேண்டாம் என கையெழுத்திட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கையெழுத்தும் அதில் இடம்பெற்றுள்ளன.
மக்கள் தயாரித்திருந்த இந்த முக்கியமான புத்தக வடிவிலான ஆவணம் திட்டத்திற்கான தவறான அறிக்கைகளை முறியடித்து அதிகாரிகளின் பொய்முகங்களைத் தோலுரிக்கிறது.
உள்ளூர் மக்கள் போராட்டக்களத்திலும், வெளியிலும் கல்லங்காட்டில் அமைந்துள்ள அழகுநாச்சியம்மன் சக்தி வாய்ந்தவள்; இவள் ஆட்சி செய்யும் நிலத்தில் கை வைப்பவனை ஆத்தா சும்மா விடவே மாட்டாள் எனத் தொடர்ச்சியாகச் சாபம் விட்டு வந்தனர். அவர்கள் மொழியில் இருந்த உறுதியும் உணர்வும் ஏதோ ஒருவகையில் பலிக்கும் வண்ணமாக யாரும் எதிர்பாராத வகையில் திமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியை இழந்தது.
இந்த சிப்காட்டிற்காக கங்கணம் கட்டி வேலை செய்துவந்த திமுக அமைச்சர் மூர்த்தியும், சிப்காட்டை ஆதரித்து நின்ற மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளானும் தேர்தலில் மண்ணைக் கவ்வினர்.
புதிதாக ஆட்சி அதிகாரம் பெற்ற விஜய் தலைமையிலான தவெக அரசு கல்லங்காட்டை காக்க உதவும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் சார்பில் மேலூரில் போட்டியிட்டு வென்று தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள விஸ்வநாதனைச் சந்தித்து முறையிட்டுள்ளனர்.
அவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்த்துவிட்டு அடுத்த கட்டம் பற்றி முடிவு செய்யவுள்ளதாக கல்லங்காடு சுற்றுவட்டாரப் பாதுகாப்பிற்கான 18 கிராம மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பெரியவர் சந்திரன் கூறுகிறார்.
கல்லங்காடு என்பது அப்பகுதி மக்களின் பார்வையில் வெறும் நிலப்பரப்போ அல்லது பயன்பாடின்றி கிடக்கும் இடமோ அல்ல. அது தங்கள் முன்னோர்களின் நினைவுகளின் இடம், வாழ்வாதாரத்தின் அடித்தளம், பண்பாட்டு மரபின் தடம், மேலும் தமிழர் தொன்மை அடையாளங்களோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நிலம். அதனால், "இந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியப் பகுதி" என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மதுரை இயற்கை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை நேரடியாக கல்லங்காட்டை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இதற்கான காரணங்களை வலுவாக முன்வைக்கிறது.
இதேபோல பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களும் கல்லங்காடு சுற்றுவட்டாரத் தொன்மை குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
நாகப்பன்பட்டி, மூவன்சிவலப்பட்டி, கண்டுகாட்டி, முரக்கடிமுவன்பட்டி, சொக்கக்கவுண்டன்பட்டி, முத்தம்பட்டி உள்ளிட்ட ஊர்கள் தொன்மையான மேய்ச்சல் தொழிலில் இன்றளவும் ஈடுபட்டு வருவதோடு விவசாய வேலைகளிலும் முழு ஆர்வம் உடையவர்களாக உள்ளனர்.
ஒரு சமூகத்தின் வரலாறு அதன் நூல்களில் மட்டுமல்ல; அதன் நிலங்களில், வழிபாட்டு முறைகளில், வாழ்வியல் பழக்கங்களில், இயற்கையோடு இருந்த உறவிலும் பதிந்திருக்கும். கல்லங்காடு பற்றி பேசும் மக்கள், அந்தப் பகுதியை கால்நடை மேய்ச்சல் நிலம், சிறு விவசாய வாழ்க்கை, உள்ளூர் தெய்வ வழிபாடு, மரபுத் திருவிழாக்கள் மற்றும் பழங்கால வாழ்வியல் சுவடுகளோடு இணைத்து விளக்குகின்றனர். சிலர் அங்கு பெருங்கற்காலச் சின்னங்கள் அல்லது சங்ககால நாகரிக எச்சங்கள் இருப்பதாகக் கூறி, விரிவான ஆய்வு தேவை என்றும் வலியுறுத்துகின்றனர்.
இதுவே ஒரு இடம் தொழில்துறை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமா, அல்லது அதன் வரலாற்றுச் சுற்றுச்சூழல் மதிப்பை ஆய்வு செய்து பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமா? என்ற முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது.
கல்லங்காட்டைச் சுற்றி மக்கள் முன்வைக்கும் வாதங்களில் மூன்று அம்சங்கள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன:
முதலாவது – தொன்மை மற்றும் பண்பாட்டு அடையாளம். மக்கள் பார்வையில், கல்லங்காடு என்பது வழிபாட்டுத் தலங்களும் சமூக நினைவுகளும் இணைந்த இடம். தமிழர் மரபு உள்ளூர் தெய்வ நம்பிக்கைகள், தலைமுறைகள் கடந்து தொடரும் வாழ்வியல் நடைமுறைகள் ஆகியவற்றோடு இந்த நிலம் இணைந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய இடங்கள் நிர்வாகப் பதிவுகளில் 'அரசு நிலம்' எனக் குறிக்கப்பட்டிருந்தாலும், சமூக நினைவுகளில் அவை அடையாளப் பகுதிகளாக வாழ்கின்றன.
இரண்டாவது – இயற்கை மற்றும் வாழ்வாதாரம். கால்நடை மேய்ச்சல், மழைநீர் சார்ந்த சூழல், விவசாய ஆதரவு, உள்ளூர் உயிரியல் பல்வகைமை போன்ற அம்சங்கள் குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒரு பகுதியின் பொருளாதார மதிப்பை மட்டுமன்றி, அதன் வாழ்வியல் பயன்பாட்டையும் மதிப்பிட வேண்டுமென்ற கோரிக்கை இதில் அடங்கியுள்ளது.
மூன்றாவது – அறிவியல் ஆய்வும் வெளிப்படைத்தன்மையும். கல்லங்காடு உண்மையில் தொல்லியல் அல்லது பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியா? அங்கு பெருங்கற்கால அல்லது பழங்கால அடையாளங்கள் உள்ளனவா? சுற்றுச்சூழலில் தாக்கம் என்னவாக இருக்கும்? இவை அனைத்தும் சுயேச்சையான ஆய்வுகள் மூலம் மதிப்பிடப்பட வேண்டிய கேள்விகளாகும்.
வரலாறு, தொல்லியல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார ஆய்வாளர்களுக்கான பல்துறைக் குழு அமைத்தல்; பொதுக் கருத்துக் கேட்பு மற்றும் கிராமசபை ஆலோசனைகளை வெளிப்படையாக நடத்துதல்; உள்ளூர் மக்களின் பயன்பாடு மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளை ஆவணப்படுத்துதல்; பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளைச் சட்டரீதியான பாதுகாப்பு வளையமாக அறிவிப்பது உள்ளிட்டவற்றில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும். கல்லங்காடு குறித்த விவாதம் ஒரு பகுதியை மட்டும் பற்றியது அல்ல; வளர்ச்சியும் மரபும் மோதும்போது ஒரு சமூகம் எதைத் தேர்வு செய்கிறது என்ற பெரிய கேள்வியையும் தொடுக்கிறது.
தமிழர்களின் தொன்மை அடையாளம் என்று மக்கள் உணர்கிற ஒரு இடமாக கல்லங்காடு பார்க்கப்படுகிறது என்றால், அதைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன் முழுமையான ஆய்வு, திறந்த உரையாடல், மற்றும் பொதுநலப் பார்வை அவசியம். ஏனெனில், ஒருமுறை அழிந்த பாரம்பரியத்தை மீண்டும் உருவாக்க இயலாது; ஆனால், ஆய்வு செய்து பாதுகாப்பது எப்போதும் சாத்தியமே. தொடர்ச்சியாக எழும் குரல் புதிய அரசை நோக்கியும் முன்வைக்கப்படுகிறது.
தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்கும் கல்லங்காட்டைப் பாதுகாக்க விஜய் தலைமையிலான புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- கம்பூர் செல்வராஜ்