தொடர்புடைய படைப்புகள்

பின்பனியும் முன்பனியும் பெய்யாத நடுநாள் தைப்பொங்கலுக்கு முந்தைய நாள், TVS-இல் 71-ஆம் எண் பேருந்தைப் பிடித்து ஈச்சனாரிக்குப் பயணமாயிற்று. பேருந்தை விட்டு இறங்கிய நான், கோயிலுக்குக் கிழக்குப் புறமாக இருந்த சின்னக் காலி இடத்தைக் கடந்து, அண்ணாச்சியின் பெட்டிக்கடையைத் தாண்டிப் பட்டாப் பூமிக்குள் நுழைந்தேன். பல கோணங்களில் பிரிந்திருந்த ஒத்தையடிப் பாதையில், பெரியவர் தோட்டத்திற்குச் செல்லும் சற்றுத் தென்கிழக்கு ஒற்றையடிப் பாதையைப் பிடித்து நடக்கத் தொடங்கினேன்.

இயற்கையில் எந்த ஜீவராசிகளின் நடமாட்டமும் ஏற்படாத, புற்பூண்டுகளும் தென்படாத அந்த ஒத்தையடிப் பாதை மனிதனின் படைப்போ! பாதையின் அக்கம்பக்கத்தில் இருந்த புற்பூண்டுகளின் மீது ACC சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து வரும் சிறு துகள்கள் வெளுத்துக் கிடந்தன. சிமெண்ட் துகள்களால் தென்னங்குருத்துகள் கூடத் தும்பிப் போயிருந்தன. சீமைக்கருவேல மரம் மட்டுமே மேலெழும்பி நிற்க, அதன்மீது இருந்த துகள்கள் காற்றில் இங்கும் அங்கும் பறந்தன.

எனக்கு 'ஏழாவது மனிதன்' திரைப்படமும், அதில் பன்றிகள் மேய்க்கும் ரகுவரனின் கதாபாத்திரமும் மனக்கண்முன் ஓடின. அதுபோல, இந்தச் செடிகளின் சிரமத்தையும் விவசாய அழிவுகளையும் யாராவது படமாக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் பெரியவர் தோட்டத்தை நெருங்கியதை உணர்ந்தேன். அங்கு இருந்த ஆலமரத்தடியில் தோழர்களின் பேச்சுக் குரலைக் கேட்டபடியே தோட்டத்து வீட்டை நெருங்கினேன். மூன்று புறமும் அண்ணன்-தம்பி மகன்களின் வீடுகள் இருக்க, நான் நடுவே இருந்த கூட்டத்தை நோக்கி நடந்தேன்.

"பவானி வந்தாச்சு!" என்ற குரல் எழுவதைக் கேட்டபடியே எனது பயணப் பையைத் தரையில் இறக்கி வைத்தேன். "தோழர், எனக்கு லுங்கி வாங்கி வந்தீங்களா?" என்ற பெண் தோழரின் கேள்விக்கு, "ஐந்து லுங்கிகள் வாங்கி வந்துள்ளேன்" என்றேன். நானும் அந்தச் உரையாடலில் கரைந்தேன்.

வீதி நாடகங்களை மக்களிடையே கொண்டு சென்ற கோவைத் தோழர்கள், அதுகுறித்த செய்திகளையும் உத்திகளையும் தெரிந்துகொள்ள இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை செயலகத்தில் பணியாற்றும் தோழர் முஸ்தபா பயிற்சி அளிக்க ஏற்பாடாகியிருந்தது. பயிற்சிக்கு முன் அனைவரையும் அந்தக்கூடத்திற்குள் 'ப' (U) வடிவத்தில் அமரவைத்து, எதற்காக இந்த வீதி நாடகப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற நோக்கத்தைப் பற்றிய விவரத்தையும், TNOC-இன் அரசியலான பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தை மக்களிடையே கொண்டு சேர்த்து மக்களைத் தயார்படுத்துவதையும், அதில் ம.க.இ.க.-வின் பணியையும், அதன் விளைவான இந்த வீதி நாடக வடிவத்தைப் பயிற்சி பெறும் தோழர்கள் நன்கு பயன்படுத்துவதுடன் நமது இதழான 'மன ஓசை'யையும் மக்களிடையே பரவலாக்க வேண்டும் என்றும் தோழர் N.S. உரையாற்றி முடித்தார்.

உற்சாகமாக நாடகப் பயிற்சியைத் தோழர் முஸ்தபா தொடங்கினார். ஆனால், அந்தத் தோழருக்குத் தெரியுமா—இதே தோழர்களிடம் எதிர்காலத்தில் தான் 'ஜனநாயகம் நடக்குதா' என்ற பாடலுக்கு நடனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்று!

ஆம், ம.க.இ.க.-வின் மையக் கலைக்குழு நடத்திய வீதி நாடகத்தைப் பார்த்த 'பவானி தேடல்' வீதி நாடகக் குழுவின் தோழர் அன்பு என்னிடம், "நீங்கள் வீதி நாடகத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டீர்கள்" என்றார். இவர் TNOC AOC-ஆக இருக்கும்போது நமது தோழர்கள் சிலருக்கு வீதி நாடகப் பயிற்சியை அளித்தவர். பவானி கந்தசாமி மில் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது தொழிலாளர்கள் கொல்லப்பட்டதைச் சித்தோடு பவானி காடம்பட்டியிலும் மையக் கலைக்குழுவினர் நிகழ்த்திய வீதி நாடக நிகழ்ச்சியின் போது பார்வையாளராக இருந்தார். காடம்பட்டி CPI தோழர்கள் காட்டிய உற்சாகமும் ஆரவாரமும் விண்ணைப் பிளந்தது என்று அந்தத் தோழர் சொல்லியும் காட்டினார்.

அந்த வீதி நாடகத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காட்சிப்படுத்தி, நடிக்கும் தோழர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்பதைத் தோழர் சத்தியன் வடிவமைத்தார். உலக நடப்பை — அதாவது கந்தசாமி மில் போராட்டத்தின் போது நடந்ததைச் சம்பந்தப்பட்டவர்கள் கூற்றை — நாடக வடிவமாக மாற்றிய உத்தி இன்றும் மனக்கண்முன் வலம் வருகிறது. அது ஒரு கூட்டு உழைப்பின் வெளிப்பாடு!

ஆம், ஒரு காட்சி. ஊர்வலம் வருகிறது. கொலைக்களத்தை நெருங்கக் கொஞ்ச தூரமே பாக்கி இருக்க, ஊர்வலத்தில் தொழிலாளத் தோழர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அது காதுகளில் மெதுவாகக் கேட்கிறது. அருகில் வர வர, முழக்கங்களின் ஓசை உரக்கக் காதுகளை அடைகிறது.

இதை அந்த 10x10 அளவில் உள்ள நெசவுப் பட்டறைக்குள், "டேய்!" என்ற பெருங்கூச்சலுடன் ரவுடிகள் செய்து காட்ட வேண்டும். எப்படி? சத்தத்துடன் சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் வீசும் செய்கைகளுடனும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' முழக்கத்துடனும் கொல்களத்திற்குச் செல்லும் அதே 10x10 இடத்திற்குள் ஊர்வலத் தோழர்கள் இறங்கினர். "ஐயோ! அம்மா!" என்ற அலறல்களுடன் நால்வர் அடிவயிற்றிலிருந்து முழக்கத்தைச் மெதுவசைவில் (Slow motion) எழுப்ப வேண்டும். ஆனால், முழக்கமும் தோழர்களின் அலறல்களும் சேர, அங்கிருப்பவர்களின் காதுகளில் விழ வேண்டும்.

பார்வையாளர்களோ பதற்றத்துடன் பார்த்தனர். நடிகர்களின் உதடுகள் மட்டும்தான் அசைய வேண்டும்; மற்றவை எல்லாம் உடல் மொழிகள் மட்டுமே! நாடகத்தை அப்படி நிகழ்த்த எத்தனித்தனர். பார்வையாளர்களின் கண்களும் காதுகளும் ஊர்வல நடிகர்களை ஆர்வத்துடன் பார்த்தன. ஓசை மெதுவாக வாயிலிருந்து வெளிப்பட்டு, அதன் டெசிபல் அதிகரித்து, பார்வையாளர்களை உணர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்ற அந்தச் சிறப்பான காட்சி நிகழ்வை வைத்து, வீதி நாடகங்களில் ம.க.இ.க-வினரின் உத்திகளைப் 'புரட்சி' என்று சொல்ல வைத்தது என்று தேடல் நாடகத் தோழர் கூறினார்.

ஒரு வட்டத்தில் இருந்த நமது தோழர்களின் முழக்கத்தை திடீரென்று பெரிய அளவில் ஒரே சீராக எழுப்பி பார்வையாளர்களைத் திகைக்க வைக்கும் போது, மில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்தச் சூழல் உடைபட்டது.

(குறிப்பு: TNOC ம.க.இ.க. என்ற பெயரை 'மக்கள் கலாச்சாரக் கழகம்' என்று பின்னாள்களில் மாற்றியது).

- முத்து முருகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.