மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல வழங்கியது, பெரும் அதிர்ச்சியை தலித் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியது. இதனை எதிர்த்தும், உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியும் மு.பூபால் உள்ளிட்ட 12 இளம் வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அவர்களில் இருவருக்கு குற்றவாளிகள் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் கடிதங்களும் வந்தன. பின்னர், 11.2.2005 அன்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, உயர்நீதிமன்ற மேல்முறையீடு நிலுவைக் காலத்தில் பிணை வழங்கியிருக்கக் கூடாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த பிணையை ரத்து செய்தும், அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

 ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும் பிணையை ரத்து செய்யும் அதிகாரம் பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் தான் உண்டு. பிணையில் விடுவிக்கும்போது அந்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இடும் நிபந்தனைகள் மீறப்படும்போது, பிணையை வழங்கிய நீதிமன்றமே பிணை உத்தரவை ரத்து செய்யலாம். மற்ற நிகழ்வுகளில் உயர் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482 வழங்கியுள்ள தன்னதிகாரத்தின் கீழும் (Inherent Powers) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 227இன் படியான கீழமை நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் அதிகாரத்தின் கீழும் (Supervisory Juisdiction) பிணையை ரத்து செய்யலாம்.

ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமென கீழ்க்கண்ட ஏதாவது ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம். இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும், இவை முழுமையானவை அல்ல. இவை தவிர மற்றெந்த நியாயமான, ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு.

1. பிணையில் விடுவிக்கப்படும் நபர் பிணையில் இருக்கும்போது எவ்வகையான குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரோ, அதே வகையான குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர் பிணையில் தொடர்ந்து இருக்கும் தகுதியை இழந்தவராகிறார். 2. புலன்விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவலின் அடிப்படையில் அந்நபர் கூடுதல் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவராகத் தெரிய வருமாயின், அந்நபரின் பிணை திரும்பப் பெறப்படலாம். 3. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் புலன்விசாரணைக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்துவாரானால் அந்நபரின் பிணை திரும்பப் பெறத்தக்கதாகிறது. 4. வழக்கின் சம்பந்தப்பட்ட சாட்சிகளை எவ்வகையிலாவது மிரட்டுவதன் மூலம் சாட்சியத்தைக் கலைக்க முற்படுவாரானால், அச்சூழலில் அவர் பிணையில் இருக்கும் தகுதியை இழக்கிறார். 5. பிணையில் உள்ள நபர் தலைமறைவாக முயற்சித்தாலோ, தப்பித்துச் செல்ல முயற்சித்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்தாலோ, அல்லது வேறு வகையில் நீதிமன்றப் பார்வையிலிருந்து மறைந்து கொள்வாராயின், அந்நபரின் பிணை ரத்து செய்யப்படலாம். 6. புலன்விசாரணை அதிகாரி மீதோ அல்லது வழக்கு சாட்சிகளின் மீதோ வன்முறை புரிதலும் பிணை திரும்பப் பெறலாகும்.

7. நீதிமன்றம் பிணை வழங்கும்போது பிழையான அணுகுமுறையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தால் அப்பிணை ரத்து செய்யப்படலாம். 8. குற்றச்சாட்டின் தன்மை மாறுபடும் பட்சத்திலும், வேறு விதமான வழக்குச் சூழ்நிலை மாற்றங்களும்கூட பிணை ரத்து செய்யக் காரணமாக அமையலாம். 9. நீதிமன்ற நிபந்தனைப்படி பிணையிலுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலும் பிணை ரத்து செய்யப்படத்தக்கதே. 10. பிணையாளர்கள் குற்றம்சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர பத்திரம் முலம் நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியவர்கள், தாங்கள் வழங்கிய பிணைப் பத்திரத்தை திரும்பப் பெறக்கோரி நீதிமன்றத்தில் மனு செய்தாலும் பிணை ரத்து செய்யப்படலாம். 11. பிணைப் பத்திரம் தவறுதலாகவோ, மோசடியாகவோ அல்லது வேறு வகையிலோ நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைபாடாக இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் பிணை ரத்து செய்யப்படலாம். 12. பிணையப்பத்திரம் வேறு எவ்வகையிலாவது செல்லுபடியாகும் தன்மையை இழக்கும் போதும் பிணை ரத்து செய்யக்கூடியதாகிறது.

இவ்வகையில், வன்கொடுமை வழக்குகளில் பிணை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை பாதிக்கப்பட்டோர் தரப்பு வலிமையுடன் எடுக்கும்போது, வழக்கு சிதைக்கப்படாமலும் வலுவிழக்காமலும் நீதிமன்றத்தில் நடத்தப் பெற முடியும். இதை சரியாகப் பயன்படுத்தினால் வன்கொடுமையாளர்கள் – பாதிக்கப்பட்டோரையோ, மற்றவர்களையோ அச்சுறுத்துதல் செய்வதை முழுமையாகத் தடுக்க முடியும்.

இதே போல், கடலூர் மாவட்டத்தில் 2003இல் நடைபெற்ற ஒரு வன்கொடுமை பலருக்கு நினைவிருக்கும். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு படித்த ஆணும், படையாச்சி இனத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்த குற்றத்திற்காக அவர்களிருவரையும் விஷம் குடிக்க வைத்து கொன்ற சம்பவமே அது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். குப்பநத்தத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் சாமிக்கண்ணுவின் குடும்பம் பக்கத்து கிராமமான புதுக்கூரைப்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது. சாமிக்கண்ணுவின் மூத்த மகன் முருகேசன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். புதுக்கூரைப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி. இவர் படையாச்சி சாதியைச் சேர்ந்தவர். இவருடைய இரண்டாவது மகள் கண்ணகி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம். படித்து வந்துள்ளார். கண்ணகி தன் அஞ்சல் வழிப்படிப்பிற்காக நேர்முக வகுப்புகளில் கலந்து கொள்ள சிதம்பரம் சென்று வந்திருக்கிறார். இவ்வகையில், முருகேசனும் கண்ணகியும் அறிமுகமாகியுள்ளனர். பின்னர், இந்த அறிமுகம் காதலாக மாறியிருக்கிறது.

சாதி வேறுபாட்டைப் புறக்கணித்த இவர்கள் தங்கள் மனதொற்றுமையை உறுதிப்படுத்த, கடலூர் திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் 5.5.2003 அன்று தங்கள் குடும்பத்தினர் அறிந்து கொள்ளாத வகையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் சமயம் வரும்போது தக்க வகையில் முடிவை வெளிப்படுத்திக்கொள்ளலாம் என தற்காலிக முடிவு செய்து இருவரும் தத்தம் குடும்பத்துடனேயே வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்குமிடையேயான காதல் பற்றி சந்தேகம் கொண்ட கண்ணகியின் வீட்டார், சாதி பாகுபாடு காரணமாக கண்ணகியைக் கண்டித்துள்ளனர். இது பற்றி கண்ணகி முருகேசனுக்கு கடிதம் எழுத, தங்கள் முடிவை இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாத சூழலில் 3.7.2003 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது, கண்ணகியின் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தீவிரமாகத் தேடியும் இருவரும் கிடைக்காததால், முருகேசன் தன்னிடம் 8 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியது தொடர்பாக பேச வேண்டுமென்று பொய்யான காரணத்தைச் சொல்லி சாமிக்கண்ணுவை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார், கண்ணகியின் தந்தை துரைசாமி. அதை நம்பி சென்ற சாமிக்கண்ணுவை, “எங்கேடா உன் மகன்?” என்று கேட்டு துரைசாமி திட்டியதுடன் சாமிக்கண்ணுவை செருப்பால் அடித்துள்ளார். அவமானப்பட்டு பயந்துபோன சாமிக்கண்ணு, தான் தேடிப்பார்த்து தகவல் சொல்லுவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

தான் பட்ட அவமானத்தை வெளியில் சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு, தன் மனைவியிடம் மட்டுமே இதை சாமிக்கண்ணு சொல்லியிருக்கிறார். பின்னர், தன் தம்பிகளிடம் முருகேசன் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கச் சொல்லிவிட்டு, தானும் முருகேசன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டு விட்டார். இதேபோல், சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமியிடமும் துரை சாமி நாடகமாட, அதை நம்பிவிட்ட அய்யாசாமி வண்ணாங்குடிகாடு என்ற கிராமத்தில் தங்கியிருந்த முருகேசனை 7.7.2003 அன்று அழைத்து வந்திருக்கிறார்.

அவர் மருதுபாண்டியனிடம் முருகேசனை ஒப்படைத்தார். முருகேசனை கட்டிவைத்து துரைசாமியின் மகன் மருதுபாண்டியனும் அவரது நண்பர்களும் அடித்தனர். ஆனாலும் முருகேசன் கண்ணகி பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். எனவே, அவரது காலை நீண்ட கயிற்றால் கட்டி சுமார் 5 அடி அகல 300 மீட்டர் ஆழமுள்ள ஆழ்துளையில் தலைகீழாக உள்ளே விட்டு இழுத்து மிரட்டினர் (இந்த ஆழ்துளையானது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் போடப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது). மிரண்டுபோன முருகேசன், கண்ணகி திருவண்ணாமலை பகுதியில் உள்ள மூங்கில் துறைப்பாடு என்ற கிராமத்தில் தனது சித்தப்பா அய்யாசாமியின் மாமனார் வீட்டில் இருப்பதை தெரிவித்தார்.

இரவு புதிய டாடா சுமோ வண்டியை தயார் செய்தனர். அதனை படையாச்சி சாதியை சார்ந்த சாமிக்கண்ணுவின் மகன் சின்னவன் ஓட்டிச் சென்றார். அதில் ராமதேசு, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, கோதண்டபாணி, பாலு, கவுன்சிலர் கலியபெருமாள், மலையான் ஆகியோர் சென்றனர். தனது சித்தப்பா அய்யாசாமியையும் உடன் அழைத்துச் சென்றனர். மூங்கில் துறைப்பட்டு சென்று கண்ணகியை மிரட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பினர். அங்கிருந்து செல்போன் மூலம் மருதுபாண்டிக்கு தகவல் கொடுத்துக் கொண்டே காலை 4.30 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.

மருதுபாண்டியும் அவரது நண்பர்களும் முருகேசனை ஊருக்கு அருகில் உள்ள முந்திரி தோப்பில் வைத்து அடித்தனர். இரவு முழுவதும் அங்கு முருகேசனை துன்புறுத்தினர். ஊரிலுள்ள தலித் மக்கள் சிலரை வைத்து கட்டைகளை சுடுகாட்டில் அடுக்கினர். பொன்னேரிக்கும் புதுக்கூரப்பேட்டைக்கும் நடுவில் உள்ள குட்டையில் சுமோ வண்டியை கொண்டு வந்து நிறுத்தினர். கண்ணகியை வண்டியை விட்டு இறக்கியதும், முருகேசனை முந்திரித் தோப்பிலிருந்து கொண்டு வந்தனர். இருவரையும் அடித்து மிரட்டினர். இரண்டு டம்ளர்களில் விஷத்தை ஊற்றி அவர்களை குடிக்கும்படி மிரட்டினர். அவர்கள் மறுத்ததால் முதலில் கண்ணகியை பிடித்து வாயிலும் காதிலும் விஷத்தை ஊற்றினர். அவர் மூச்சு நின்று விழுந்ததும் முருகேசனைப் பிடித்து அழுத்தி அவர் திமிரதிமிர விஷத்தை ஊற்றிக் கொன்றனர். பின்னர், கண்ணகியின் உடலை சுடுகாட்டில் அடுக்கியிருந்த கட்டைகளுக்கு மத்தியில் வைத்து டீசலை ஊற்றி எரித்தனர். முருகேசனது உடலை அருகிலுள்ள பள்ளத்தில் கட்டைகளை அடுக்கி அதில் வைத்து டீசலை ஊற்றி எரித்தனர். இந்த சூழலில் நூற்றுக்கணக்கான மக்கள் இதனை பார்த்துள்ளனர். 8.7.2003 அன்று காலை 7.00 மணியளவில் இந்தக் கொடுமை நடந்துள்ளது.

- காயங்கள் தொடரும்

Pin It