இனி இந்தியாவின் தலையெழுத்தே மாறப் போகிறது. மோடி தலைமை அமைச்சர் ஆகிவிட்டார். அமெரிக்காவை விடக் குறைந்த செலவில் விண்வெளி விந்தைகள் நடக்கின்றன. மங்கள்யான் விட்டாகி விட்டது. இனித் துடைப்பத்திற்கு வேலையே இல்லை. மோடி தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கி விட்டார். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஒரு வாக்கு உள்ளதுபோலவே, ஒரு வங்கிக் கணக்கும் உருவாகப் போகிறது. அந்த வகையில் அண்ணாடங் காய்ச்சியும் அம்பானியும் ஒரே நிறையாகப் போகி றார்கள். இந்தியாவை வல்லரசாக்க நரேந்திர மோடி நாடு நாடாகப் பறந்து கொண்டிருக்கிறார். நூறு நாள் ஆட்சிக்கு அச்சாரமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அரசு தொலைக்காட்சியிலேயே தோன்றத் தொடங்கிவிட்டார்.

இப்படி விந்தைகள் விரிந்துகொண்டே போகும் நிலையில், நாட்டின் ஒரு மூலையில் வேதனையான செயல் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. தற்போது பீகார் மாநிலத்தின் முதல்வராய் இருப்பவர் ஜித்தன் ராம்மஞ்சி. இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நாடாளு மன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சந்தித்த தோல்விக்குப் பொறுப்பேற்று அப்போதைய முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகி ஜித்தன் ராம் மஞ்சியை முதல்வராக்கினார்.

கடந்த மாதம் ஜித்தன் பீகாரின் தலைநகரான பாட்னாவிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலை விலுள்ள ஒரு கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி இருக்கிறார். அவர் அங்கிருந்து கிளம்பிய உடனே அர்ச்சகப் பார்ப்பனர்கள் அக்கோயி லின் சாமிச் சிலை தீட்டாகிவிட்டது என்று சொல்லிக் கோயிலில் தீட்டுக்கழிக்கும் வேலைகளைச் செய்துள்ள னர். எதற்கெல்லாமோ கொந்தளித்து எழுந்து பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மக்கள் மலிந்த இந்த நாட்டில் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இவ்வளவு பெரிய இழிவு நேர்ந்தும் யாரும் கண்டுகொள்ள வில்லை.

மேலும் இதில் வெட்கமும் வேதனையும் படவேண்டிய செய்தி என்னவெனில் ஒரு தலித் முதல்வராக உள்ள இந்த பீகார் மாநிலத்தில்தான் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன.

கடந்த 8.10.2014 அன்று பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டம் குர்முரு கிராமத்தைச் சேர்ந்த அய்ந்து தலித் பெண்களை அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச்சாதி இளைஞர்கள் மூவர் கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுமைக்கு ஆளான ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.90,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டது. குற்றம் நேர்ந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சட்டத்தின்முன் நிறுத்திவிட்டோம் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார் அப்பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ண பிகாரி.

கொடுமைக்கு ஆளான அந்த அய்ந்து பெண் களுக்கும் போஜ்பூர் மாவட்டத்திலேயே அவர்களுக்கு வசதியான அருகமை பள்ளிகளில் சத்துணவு ஆயாக் களாகப் பணி நியமனம் அளிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி பங்கஜ்பால் தெரிவித்துள்ளார். அதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அற்ப வேலையும், 90,000 ரூபாய் இழப் பீடும் மானம் பறிபோன அந்தப் பெண்களின் வாழ்வை மீட்டுவருமா? கடுமையான எதிர்ப்பு, எல்லா மட்டங் களில் இருந்தும் வந்த கூடுதலான அழுத்தம் போன்ற வை காரணமாக போஜ்பூர் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் பா. இராஜேஷ்குமார் பாதிக்கப்பட்ட பெண்கள் அய்வர்க்கும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டோர்க்கான இழப்பீட்டை ரூ.7.5 இலட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளார்.

இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ரன்வீர் சேனா என்ற ஆதிக்கச் சாதி வெறிக்கும்பலின் தலைவன் நீல் நீதிசிங்கும் அவனுடைய மற்ற கூட்டாளிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென மாநில மகளிர் ஆணையம், மாநில மனித உரிமைக் கழகம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்டு - இலெனினிஸ்டு) போன்ற அமைப்புகளும் பிற அரசி யல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன (தி இந்து (ஆங்கிலம்) 13.10.14).

தலித் மக்கள் மீதான கொடுமைகள் பீகாரில் அத்துடன் நின்றபாடில்லை. கடந்த 14.10.2014 அன்று பாட்னா மாவட்டம் மசாரியை அடுத்த கடிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்த லோத்பூர் என்னும் சிற்றூரைச் சேர்ந்த நான்கு தலித் பெண்கள் அவ் வூரைச் சேர்ந்த ஆதிக்கச் சாதிவெறியாளர்களால் மிகக் கொடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு நடந்த இரண்டு கிழமைக்கு முன்பு தான் நபட்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த சியாம்தேவ மஞ்சி என்ற தலித் பெண் ஆதிக்கச் சாதியினரால் கொல்லப் பட்டார். அப்பெண்ணைக் கொலை செய்த மூன்று குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தொடர்ந்து நடக்கும் இக்கொலைகளுக்கும் கொடுந் தாக்குதல்களுக்கும் அஞ்சி கயா மாவட்டத்தைச் சேர்ந்த முந்நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் செப்டம் பர் மாதத்திலேயே வெளி மாவட்டங்களில் உள்ள அரசுப் புகலிடங்களுக்குத் தஞ்சம் அடைந்துவிட்டனர்.

கடந்த 15.10.2014 அன்று ரோஹத் மாவட்டத்தின் சரகக் காவல்நிலைய எல்லைக்குள் அமைந்த மோகன் பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சாயிராம் என்னும் 15 வயதான இளைஞனின் ஆட்டுக்குட்டி ஒன்று ஆதிக்கச் சாதி ஆண்டையான குன்குன்சிங் என்பவரின் வயலில் மேய்ந்துவிட்டது. இதைக்கண்டு அஞ்சி மிரண்டு போன சாயிராம், அங்கிருந்து ஓடிவந்து தன் கூரை வீட்டில் ஒளிந்து கொண்டான். சும்மா விடுவார்களா கல் நெஞ்சக் கயவர்கள்? அவன் ஒளிந்திருந்த கூரையின் மீது மண்ணெண்ணையை ஊற்றி சாயிராமை உயி ரோடு கொளுத்திவிட்டார்கள்.

இந்தக் காட்சிகளை நேரில் கண்டு துடித்துப்போன சாயிராமின் தந்தை ஜிட்டுராம் தன் மகனின் எரிந்து போன உடம்பை எடுத்துக் கொண்டு உள்ளூர் மருத்துவ மனைக்கு ஓடினார். சாயிராம் பல மணிநேரத்துக்கு முன்பே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர். பதினைந்து வயது தலித் இளைஞனை உயி ரோடு கொளுத்திய குற்றத்துக்காக குன்குன் சிங்கை யும் மற்ற மூவரையும் காவல்துறை கைது செய் துள்ளது (தி இந்து (ஆங்கிலம்) 14.8.2014).

இத்தகைய தொடர் கொடுமைகள் நடக்கும் பீகாரில் தான், அந்த மாநிலத்தின் முதல்வரே இழிவுபடுத்தப் பட்டுள்ளார்.

இதே பீகார் மாநிலத்தில் இதற்கு முன்பும் இத்தகைய தொரு இழிசெயல் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராய் இருந்தவர், பாபு ஜெகஜீவன் ராம். அவரும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர். சம்பூரணானந்தா என்னும் வடமொழி அறிஞரின் சிலை ஒன்றை அவர் அந்நாளில் திறந்த வைத்த போது, அந்தச் சிலையும் தீட்டாகிவிட்டதாகச் சொல்லி, கங்கை நீரை அச்சிலையின் மீது கொட்டித் தீட்டுக் கழித்தனர் அன்றைய அர்ச்சகப் பார்ப்பனர்கள்.

இத்தகைய நிகழ்வுகள் யாவும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ஆகும். ஆனால் இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டம் இன்று வரை மனுநீதிக் கும் வருணாசிரம சாதி அமைப்புக்கும் வலிமையான பாதுகாப்பு அரணாய் உள்ளது.

இன்றைக்கு நாட்டை ஆளும் பாரதிய சனதா கட்சி இந்துத்துவக் கருத்தியலுக்கு ஆட்பட்ட கட்சி என்பது அனைவரும் வெளிப்படையாய் அறிந்த உண்மை. ஆனால் ‘தேசப்பிதா’ என்று எல்லோராலும் பாராட்டப் படும் காந்தியாரே தம் வாழ்வின் இறுதி மூச்சுள்ள வரை வருணாசிரமக் கொள்கையை வற்புறுத்தி வந்ததுதான் பெரிய அவலம்.

“ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தருமம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தருமத்தை அந்தந்த வருணத்தார் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். பிராமணனுக்குச் சில தருமங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும் போது அவன் உயர்ந்தவ னாகிறான். ஜனசேவையே பிராமணனுக்கு முக்கிய தருமம். எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனு டைய தருமம். அந்தத் தருமத்தை அவன் செய்யும் போது மற்ற எல்லோரிலும் மேம்பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வருணத்தினர்களும் தத்தம் தருமங்களைக் கடமைகளாகச் செய்கையில் அவ ர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்” என்பவைதாம் காந்தி உதிர்த்த பொன்மொழிகள் (மேற்கோள் : ‘குடிஅரசு’ 14.8.1927).

காந்தி மேலும் கூறுகிறார் :

நான் என்னை ஒரு சனாதன இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால், 1. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இந்து சாத்திரங்கள் என்று சொல்லப்படும் யாவற்றையும் அவதாரங்களை யும், மறுபிறவியையும் நான் நம்புகிறேன்.

2.என் கருத்துப்படி வேதப்பொருளில் தற்போ துள்ள பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல், நான் வருணாசிரமத் தருமத்தை நம்புகிறேன்.

என வெளிப்படையாகவே அவர் அறிவித்தார் (‘யங் இந்தியா’, 12.10.1921).

காந்திக்கு மிகவும் பிடித்த நூல்களில் ஒன்று பகவத் கீதை. அந்த பகவத் கீதையில்தான் ‘பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்’ என்கிற நான்கு வருணங்களையும் தானே படைத்தாகக் கண்ணன் கூறியுள்ளார். இன்றைய இந்தியப் பிரதமர் மோடிக்கும் பிடித்த நூல் பகவத் கீதைதான். அதனால்தான் அவர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் (இப்போது அந்த வேலையைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்). பகவத் கீதை நூலை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குப் பரிசாக அளிக்கிறார்.

பகவத் கீதை பைத்தியக்காரனின் உளறல் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். ‘என் கைகளில் மட்டும் அந்த மனு என்பவன் கிடைப்பானாகில் அவனை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன். ஆனால் அவனுடைய ஆவிவடிவம் அல்லவா இந்தச் சாதி முறையை இன்றள வும் பாதுகாத்து வருகிறது’ என்று கொதித்துப் போன உள்ளத்துடன் குமுறினார்.

மனுவையும், பகவத் கீதையையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைவிட மேலானதாகப் போற்றும் மோடி அரசு அசைக்க முடியாத வலிமையுடன் நடுவண் ஆட்சியைப் பிடித்துவிட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலக் கட்சிகளை ஒவ்வொன்றாக காலி செய்து கொண்டு வருகிறது. அதற்கான அண்மைய எடுத்துக்காட்டு மகாராட்டிரம், அரியானா தேர்தல் வெற்றிகள். மனுவின் கொடி மளமளவென உச்சிக்கு ஏறிக் கொண்டிருக்கிறது. மக்களே... என் மக்களே! நாம் என்ன செய்யப் போகிறோம்? எதிரிகளை வீழ்த்த அணிதிரள வேண்டியது நம் கடமை அல்லவா?

Pin It