நமக்கு வயதாகும் போது எலும்புகளும் சேர்ந்தே பலவீனமாக ஆகும். எலும்புகளின் நுண்ணிய கட்டமைப்பு மாறி எலும்புத்தாது அடர்த்தி குறைந்து எலும்புகள் வலுவிழந்து இருக்கும். சாதாரணமாக கீழே விழுதல் போன்றவைகளில் கூட எலும்பு முறிய வாய்ப்பு அதிகம். இதுவே எலும்புப்புரை (Osteoporosis) வியாதி என்றழைக்கப்படும்.

இந்த எலும்புப்புரை பொதுவாக மாதவிடாய் நின்றுவிட்ட பிறகு பெண்களுக்கு ஆரம்பமாகலாம். முக்கிய ஹார்மோன்கள் இல்லாததே இதற்கு காரணம். இது “மாதவிடாய்க்கு பிந்தைய எலும்புப்புரை” என்றே அழைக்கப்படும். ஆண்களுக்கும் வயது முதிர்வின் போது இத்தகைய எலும்புப்புரை நோய் ஏற்படும்.

இப்போதைக்கு உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒரு எலும்புமுறிவு எலும்புப்புரை வியாதியால் ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்களில் ஒரு பெண்ணும், ஐந்து ஆண்களில் ஒரு ஆணும் எலும்புப்புரை வியாதியால் அவதிப்படுகிறார்கள். (2017 data)

இந்த வியாதி பொதுவாக முதுகு முள்ளந்தண்டு(Spine), இடுப்பு பந்து கிண்ணமூட்டு, தோள்பட்டை எலும்பு மற்றும் கை மணிக்கட்டு பகுதிகளில் எலும்பு பலமின்மையை உண்டாக்கி சிறு அடி மற்றும் பாரம் விழுந்தாலும் கூட எலும்புமுறிவை உண்டாக்கும்.

bone fracture 600எப்படி கண்டுபிடிப்பது?

50 வயதுக்கு மேலானவர்கள் தங்களது இரத்தத்தில் வைட்டமின் D அளவு மற்றும் எலும்பு அடர்த்தி சோதனை எனும் BMD – Bone Mineral Densitytest செய்து தங்களது எலும்பு அடர்த்தியை அறிந்து கொள்ளலாம். எலும்பு அடர்த்தி குறைவாக இருப்பின் மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று எலும்பு அடர்த்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

வருமுன் காப்பதே மேல் - உடற்பயிற்சி

சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதன் மூலம் எலும்பு அடர்த்தியை பராமரிக்கலாம். முக்கியமாக வயதானவர்களுக்கு நடைப்பயிற்சியுடன் உடற்பயிற்சியும் அவசியம்.

உணவுப்பழக்கம்

 கால்சியம் என்னும் எலும்புச்சத்து மிக்க உணவுப்பொருட்களான பால் மற்றும் பாலாடை கட்டி, பீன்ஸ், பாதாம் மற்றும் பருப்பு வகைகள் அதிகம் சேர்க்கவும்.

 நமது உடலில் வெயில்படுமாறு (Sunlight enposure) செய்வதனால் தானாகவே வைட்டமின் D சத்து கிடைக்கும்.

 வைட்டமின் D சத்து அதிகம் உள்ள மாமிச உணவுப் பொருட்களான மீன் மற்றும் மீன் ஈரல் எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, மாட்டு ஈரல் போன்றவைகளைச் சேர்க்க வேண்டும்.

 காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.

 புரதச்சத்து மிக்க உணவுப் பொருட்களைச் சேர்த்தல்.

 சிகரெட் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல்.

இவற்றுடன் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையை (Sedentary Life Style) மாற்றி உடற்பயிற்சி/ நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதுடன், ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளையும் சேர்த்து, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறை மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வதனால் இந்த எலும்புப்புரை வியாதியினால் முதியவர்கள் அவதிப்படாமல் வாழலாம்.

Pin It