periyar policeநமது நண்பர் ஒருவர் கருப்பத்தடையின் அவசியத்தைத் தான் ஒப்புக் கொண்ட போதிலும் அனுஷ்டிக்கப்பட வேண்டிய முறையைப் பற்றி அடியிற்கண்டவாறு ஆட்சேபிக்கிறார்:- அதாவது,

“கர்ப்ப உற்பத்திக்கு ஹேதுக்கள் சுக்கிலம் சுரோணிதம் என்று கூறப்படுவனவேயாகும். கலவி காலத்தில் ஆடவனிடமிருந்து சுக்கிலமும், ஸ்தீரியினிடமிருந்து சுரோணிதமும் வெளியாகிறது. கர்ப்ப உற்பத்திக்கு சுக்கில ஸ்கலிதம் தான் அவசியமானதேயொழிய சுரோணித ஸ்கலிதம் அவசியமல்ல. உதாரணமாக ஒரு ஸ்தீரி பத்துக் குழந்தைகள் பெற்றிருக்கலாம். அவளுக்கு சுரோணிதமே ஸ்கலிதமாகாமலிருக்கலாம். அதாவது புருஷ இச்சையே பூர்த்தி அடையாமல் இருக்கலாம்.

ஸ்கலிதமான சுக்கிலம், கருப்பையின் வாயிலை நோக்கி நழுவிப் போகும்போது, நிதம்பத்தின் வரைகளில் தங்கியிருக்கும் சுரோணிதக் கிருமிகள், சுக்கிலத்திலுள்ள ஆண் சினைகளிடம் ஸ்வீகரித்துக் கொண்டு கருப்பையில் பிரவேசிக்கிறது. உடனே கருப்பை வாய் மூடிக் கொள்ளுகிறது. அதிலிருந்து மாதவிடாய் நின்று கர்ப்ப உற்பத்தி உண்டாகிறது. இதுகாறும் கூறியவற்றிலிருந்து சுக்கில சுரோணித கிருமிகள் கருப்பையில் பிரவேசித்தால்தான் கர்ப்பம் ஏற்படும் என்பது புலனாகிறது. கிருமிகளை கருப்பையில் புகவிடாமல் செய்தாலும், அல்லது அவற்றை சக்தியிழந்து போகும்படி செய்தாலும், அழித்து விட்டாலும் கர்ப்பம் தரிக்காது”.

தடைமுறை

சக்தியை இழந்து விடும்படி செய்வதோ அல்லது அழிந்துவிடும்படி செய்வதோ, ஸ்திரிகளுக்கு கெடுதலை உண்டு பண்ணும். ஆதலின் செக் பெச்சாரி (Check Pessary) என்று சொல்லப்பட்ட ஓர் ரப்பர் கருவியைப் பெண்களுக்கு அணிவித்து போகித்தால் ஸ்கலிதமான விந்து உள்ளே பிரவேசியாமல் ரப்பர் பையிலேயே தங்கி விடுகிறபடியால் கர்ப்பந்தரிக்க முடியாது என்று சொல்லி விடலாம். இந்த முறையைத்தான் அநேகமாக ஸ்ரீமதி கார்மைக்கேல், மேரிஸ்டோப்ஸ் உள்பட யாவரும் கூறுகிறார்கள். உலகில் பெரும்பாலான இடங்களில் அனுஷ்டானத்தில் இருப்பதும் இது தான். இதைத் தவிர கர்பத்தடை மருந்துகள் என்று சில போலி ஆசாமிகள் செய்து விற்கும் மருந்துகளால் யாதொரு பயனுமில்லை என்று நிச்சயமாய்க் கூறலாம். மற்றப்படி கருப்பச் சிதைவுண்டு பண்ணும் மருந்துகள் உளவென்று ஒப்புக் கொள்ளலாமே யொழிய கர்ப்பத்தடை மருந்துகள் என்று ஒரு மருந்தும் கிடையவே கிடையாது. ஆதலால் யாரும் ஏமாந்து போகக் கூடாது.

“நிற்க, ³ ரப்பர் கருவியை உபயோகிப்பதால் கர்ப்பத்தடை பெற்று விடும் என்பது உண்மையே. அதனால் ஆண்,பெண் இருபாலரும் அனுபவிக்கும் இன்பம் எத்தகையது என்று ஆராயப்புகின் ஒருக்காலும் அத்தகைய கருவியை எவரும் உபயோகிக்க முற்படார் என்பது திண்ணம். ஸ்திரியின் ஜனனேந்திரியம் வெகுநுட்பமானதும் ஸ்பரிச உணர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளதுமாகும். அத்தகைய நுட்பமான இந்திரியத்தில் பிரவேசிக்கும் இயல்பையுடையதும், பிரவேசித்தால் இன்பத்தையன்றி இடரை அளிக்காததுமான இந்திரியம் ஆண் உருப்பொன்றே யாகும். இரண்டு இந்திரியங்களும் வெகுநுட்பமானவை. எலும்பில்லாமல் வெறும் தசை நரம்புகளாலானவை. உணர்ச்சியை மூளைக்கு அறிவிப்பது நரம்பு. ஆகவே வெறும் நரம்புத் தொகுதிகளாலான ஓர் அங்கத்திற்கு எத்தகைய நுட்பமான உணர்ச்சி உண்டு என்பதை வாசகர்களே தெரிந்து கொள்ள வேண்டும்.     

இப்படிப்பட்ட கருவிகள் ஒன்றோடொன்று பொருத்தினால் ஏற்படும் இன்பம் எத்தகையது என்பதையும் பெண் உறுப்பின் தசையின் மிருதுத் தன்மைக்கு எவ்விதத்திலும் ஒவ்வாத ரப்பரை அணிந்து கொண்டு அதுவும் ஆண் உறுப்புக்கும் ஏற்படும் சேர்க்கையின்பம் எத்தகையது என்பதையும் அனுபவிகளே கூற முடியும்.ஒருமுறை இத்தகைய ரப்பர் கருவியை உபயோகித்தவர் மறுமுறை அதை உபயோகிக்க மனம் ஒருப்படார் என்பது திண்ணம்.

இந்த ரப்பரை யணிந்து கொள்ளும் ஸ்திரீகளுக்கு போககாலத்தில் அத்யந்தப் பிரியமாவது உல்லாசமாவது ஏற்படாது என்பதுடன் அரை மருங்குகளில் முதலில் உறைசலை உண்டு பண்ணிவிடும். ஸ்தீரிபுருஷ ஜனனேந்திரியங்களின் கூட்டுறவால் ஏற்படும் இன்பத்தில் அணுவளவும் இத்தகைய கருவியால் எதிர்பார்க்க முடியாது. மேலும் ஆண்உறுப்பின் இயற்கையும் நாளடைவில் மாறிவிடவும் கூடும். போக காலத்தில் பஞ்சேந்திரியங்களும் தத்தம் சுவாதீனத்தையிழந்து இன்பக்குவட்டின் மிசை அமரும் தன்மை இத்தகைய ரப்பர் கருவியால் தடையுறும் என்பது திண்ணம்.”

இந்தப்படி எழுதிய நண்பரின் ஆட்சேபனையில் சில உண்மைகளிருந்த போதிலும் கர்ப்ப ஆக்ஷி ரப்பர் கருவிகளை உபயோகிப்பதில் அவர் நினைக்கிற அளவு கஷ்டமிருக்கவில்லை. கருவியை அனுபவத்தில் பரீக்ஷித்துப் பார்த்தால் அவருக்குத் தோன்றிய சந்தேகங்களுக்கு ஆதாரமில்லை என்பது தெரிய வரும்.

இயற்கையாய் ஏற்பட்டதல்லாமல் மனிதன் செய்கையாய் ஏற்படுத்திக் கொள்ளும் எந்த சாதனங்களையும் கையாளுவதில் ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் தோன்றுவது சாதாரணம். உதாரணமாக, பல் விழுந்த ஒருவர் செயற்கைப் பல்லை செய்து வைத்துக் கொண்டால் ஆரம்பத்தில் சிறிது வலியும், பெருத்த மனக்கஷ்டமும் ஏற்படுவதுண்டு. மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளுவதிலும் முதலில் சிறிது சிரமமேற்படுவது இயல்பு. ஆனால் சிறிது நாட்கள் கழித்தபின் செயற்கைப் பல் வைத்திருப்பவரும், மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பவரும், அம்மாதிரி ஒரு செயற்கை சாதனத்தைத் தான் அணிந்திருப்பதையே மறந்து விடுகிறார்கள். அதே மாதிரி ஒரு ரப்பர் கருவியை மிருதுவான ஒரு பாகத்தில் அணிந்து கொள்ளுவதில் ஆதியில் கொஞ்சம் அருவருப்பும், சிரமமும் தோன்றலாம். ஆனால் கொஞ்ச காலம் பொருத்துக் கொண்டிருப்பதால் அந்த உணர்ச்சி தானாகவே மறைந்து போகின்றது.

நமது நண்பர் கருதுவது போல் ரப்பர் கருவியானது எவ்வித தடங்கலையும் உண்டாக்கக் கூடியதல்ல. உறுப்பில் உணர்ச்சியுள்ள பாகத்தை அது தடைப்படுத்தவில்லை. கருப்பையானது உள்ளே பதிந்து கிடக்கின்றது. அதிலுள்ள சிறு துவாரத்தையே இந்த கருவி மறைக்கின்றதே அல்லாமல் நிதம்பத்தில் மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு விரலில் அங்குஸ்தான் தரிப்பது போல் கருப்பையின் மேல் இக்கருவி தரிக்கப்படுகிறது. கலவி போகத்தில் கருப்பை சம்பந்தம் இல்லை. போக உறுப்புகள் முன்பாகத்திலேயே இருப்பதால் நண்பர் நினைக்கும் தடங்கல் ஏற்படக் காரணமில்லை. அப்படிப்பட்டத் தடங்கலிருந்தால் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் இக்கருவிகளை உபயோகிக்க மாட்டார்கள். ஆனால் இக்கருவிகளை உபயோகிக்கும் மாதிரியை பிசகில்லாமல், முடியுமானால் டாக்டர்களின் மூலமே அறிந்து கொள்ள வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 20.09.1931)

Pin It