வில்லியம் ஹார்வி இங்கிலாந்தில் உள்ள போல்க்ஸ்டோன் (Folkestone) நகரில் 01.04.1578-ஆம் நாள் பிறந்தார்.  அவரது தந்தையார் தாமஸ் ஹார்வி .

William Harveyசிறுவயதில் தமது சகோதர சகோதரிகளுடன் விளையாடும் பொது சில நேரங்களில் உடலில் காயம் ஏற்படும், காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வழியும். ஏன் இரத்தம் வழிகிறது என்றும், இரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்றும் வில்லியம் ஹார்வி சிந்தித்தார்!

ஹார்வி தமது ஆரம்பக் கல்வியை காண்டர்பரி (Cantenbury) நகரில் கிங்ஸ் பள்ளியில் (King’s school) முடித்தார்.  பின்னர், கேம்பிரிட்ஜ் சென்று கேயஸ் கல்லூரியில் (Caius College) சேர்ந்து பயின்றார்.

கல்லூரியிலிருந்த ஆய்வுக் கூடத்தில்  தவளை, மீன், பல்லி முதலியவைகளை வெட்டி உள்ளுறுப்புகள் எப்படி இருக்கின்றன? எவ்வாறு இயங்குகின்றன? என்பதைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்.  மனிதப் பிணங்களை அறுத்துப் பரிசோதனை செய்ய ஹார்வி விரும்பினார்.  ஆனால், மனிதப் பிணங்களை அறுத்துப் பரிசோதனை செய்யக்கூடாது என அப்போது இங்கிலாந்து நாட்டில்  சட்டம் இருந்தது.  அறிவியலில் அவருக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக யாருக்கும் தெரியாமல் பிணங்களை எடுத்து வந்து அறுத்து ஆராய்ச்சி செய்தார்.

                இத்தாலி நாட்டிலிருந்த பாதுவா (Padua) பல்கலைக் கழகத்தில் 1599-ஆம் ஆண்டு சேர்ந்தார்.  அங்கு பேராசிரியர் பெரிப்சியஸ் (Fabricius) என்பவருடன் ஹார்வி தொடர்பு கொண்டார்.  அவரிடம் இரத்தக் குழாய்கள் பற்றி நன்கு அறிந்தார்.  ஹார்வி பாதுவாப் பல்கலைக் கழகத்தில் பயிலும்போது அறிவியலாளர் கலிலியோ, அப்பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பல்கலைக் கழகத்தில் பயிலும்போதே, அறிவை வளர்த்துக்கொண்டு, சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளை மனதில் கொண்டார். 

பட்டம் பெற்று தமது தாயகமான இங்கிலாந்து நாட்டிற்கு 1602-ஆம் ஆண்டு திரும்பினார்.  லண்டன் மாநகரில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மருத்துவ இயல் ஆய்வுச் சங்கத்தில் உறுப்பினரானார்.  பின்னர், பார்த்தோலாவில் மருத்துவராக பணி நியமனம் செய்யப்பட்டார்.  தமது இருபத்தாறாவது வயதில், இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த எலிஸபெத் பிரௌனியை ஹார்வி திருமணம் செய்து கொண்டார்.

பாம்பு, நாய், பன்றி முதலிய விலங்குகளை அறுத்து அவற்றின் இரத்த ஓட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்தார்.  மேலும், மனித உடலில் இரத்த ஓட்டம் எவ்வாறு உள்ளது என்பதை, இறந்த மனித உடல்களை அறுத்து ஆய்வு செய்தார்.

இதயம் என்பது தசையால் ஆனது.  அது ரப்பர் போல் சுருங்கி விரிவடைகிறது.  நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது.  இதயம் சுருங்கி விரிவதால் இதயத்திலிருந்து இரத்தம் உடலெங்கும் ஓடுகிறது.  இதயத்திலிருந்து தமனி என்ற குழாய் இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது.  சிரை என்ற இரத்தக் குழாய்கள் உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வருகின்றன.  இதயத்தின் நான்கு அறைகள் இவ்வேலையைச் செய்கின்றன.  உடலின் இரத்த ஓட்டம் இதயத்தில் தொடங்கி இதயத்திலேயே முடிகிறது என்பதை ஹார்வி தமது ஆராய்ச்சி மூலம் நிரூபித்தார்.

வில்லியம் ஹார்வி இரத்த ஓட்டம் பற்றி “விலங்குகளின் இதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம் பற்றிய உடற்கூற்று ஆய்வு” (An Anatomical Treatise on the movement of the Heart and Blood in Animals) என்னும் ஆய்வு நூலை 1628-ஆம் ஆண்டு லத்தீன் மொழியில் எழுதி வெளியிட்டார்.  இந்த நூலில், நமது உடலின் உள்ளே உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது பற்றியும், இரத்தம் நமது உடல் முழுவதும் இடைவிடாமல் சுற்றி வருகிறது என்பதையும் விரிவாகக் கூறியுள்ளார்.

வில்லியம் ஹார்வி அக்காலத்தில் மிகச் சிறந்த மருத்துவராக விளங்கினார்.  முதலாவது ஜேம்ஸ், முதலாவது சார்லஸ் ஆகிய இரு அரசர்களுக்கும், தத்துவஞானி பேகனுக்கும் தனி  மருத்துவராக இருந்தார்.

மருத்துவ உலகிற்கு துணிந்து உண்மைகளைக் கூறும் ஆற்றலைக் கண்ட அரசவை மருத்துவர், ஹார்வியைப் பாராட்டினார், ஹார்வியை அரசவை மருத்துவராக மன்னர் நியமித்தார்.  மேலும், ஹார்வி ஆராய்ச்சி செய்வதற்காக விண்சரில் இருந்த சோலைகளை  அன்பளிப்பாகக் கொடுத்தார்.

வில்லியம் ஹார்வியின் பெயரால் ஆண்டுதோறும்  அரசு மருத்தவக் கழகத்தில் சொற்பொழிவு நடைபெறுகிறது.  அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன.

வில்லியம் ஹார்வி பல நாடுகளுக்கு அரசின் தூதுவராகச் சென்றார்.  அந்நாடுகளில் அவர் கண்ட பூச்சிகள், விலங்குகள், பறவைகள் மற்றும் செடிகள், மரங்கள், மலர்கள், காய்கள், கனிகள் முதலியவற்றை ஆர்வமுடன் கூர்ந்து பார்த்து ஆய்வுகள் செய்தார்.

வில்லியம் ஹார்வியின் மருத்துவ சேiயைப் பாராட்டும் வகையில் சோவியத் யூனியன் 1957-ஆம் ஆண்டு அவரது நினைவாக தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

வில்லியம் ஹார்வி 03.06.1657-ஆம் நாள் மறைந்தார்.  அவர் மறைந்தாலும், அவர் மருத்துவ உலகிற்கு ஆற்றிய தொண்டு என்னும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It