தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்று கடந்த நவம்பர் 24ஆம் நாள் தமிழக அரசு பிறப்பித்த ஓர் ஆணை இசுலாமிய மதவாதிகள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது, இதே போலவே இதற்கு முன் கடந்த அக்டோபர் 25ஆம் நாள் தில்லி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், நாட்டில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்த ஓர் ஆணையும் இசுலாமிய மதவாதிகள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இவ்வெதிர்ப்புக்கு இவர்கள் சொல்லும் ஒரே காரணம் ‘‘எங்கள் மதத்திற்கென்று தனியாக ‘ஷரியத்’ சட்டம் இருக்கிறது. அதற்குத்தான் நாங்கள் கட்டுப்பட்டவர்களே தவிர, நாட்டிலுள்ள பிற சட்டங்களுக்கு அல்ல. அப்படி எங்களைக் கட்டுப்படுத்த முயல்வது எங்கள் மத உரிமையைப் பறிப்பதாக, எங்கள் மதத்தை அவமானப்படுத்து வதாக உள்ளது என்பதுதான்’’ இந் நிலையில் இது குறித்து நமது சிந்தனைக்காகவும் விவாதத்திற்காகவும் சனநாயக மற்றும் மனித உரிமை நோக்கில் சில கருத்துகள்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக அமைதியைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களை வகைப்படுத்தி. அவற்றிற்கான தண்டனைகளை வழங்கும் வகையில் பெரும் மற்றும் சிறு சட்டங்கள் நாட்டில் பல இருக்கின்றன. இவை அனைத்து மக்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவை. அனைத்து சமூகப் பிரிவினரையும் கட்டுப்படுத்து பவை. இதில் போய் நாங்கள் சிறுபான்மை இனம் அல்லது சிறுபான்மை மதம் என்பதன் பேரால் விலக்கு கோர முடியாது. சலுகை கோரவும் முடியாது.

ஆனால், நாட்டு மக்களின் குடும்ப உறவுகள் மற்றும் பண்பாடு சார்ந்த சட்டங்கள் என்பவை இப்படி அனைத்து மக்களுக்கும் பொது வானதாக இல்லை. காரணம் பல்வேறு இனம், மதம் சார்ந்து சமூகத்தின் பல்வேறு மக்கள் பிரிவினரிடையேயும், பல்வேறு பழக்க வழக்கங்கள், மரபுகள் நிலவுவதால், அவரவர் தனித் தன்மை யையும் அடையாளத்தையும் பாது காக்கக் கூடிய வகையிலேயே இவை வெவ்வேறாக நிலவுகின்றன. குறிப் பாக குடும்ப உறவுகள் சொத்துரிமை, மண வாழ்க்கை, மண விலக்கு, மறு மணம் முதலானவை சார்ந்த சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித் தனியாகவே இருக்கின்றன.

வெள்ளை ஆதிக்கம் இந்திய மண்ணில் காலூன்றிய போது இங்கு நிலவிய மதங்கள் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், பார்சி, சீக்கியம், இசுலாமியம் மற்றும் தங்கள் ஐரோப்பிய மண்ணிலிருந்து கொண்டு வந்த கிறித்துவம் எனப் பலதரப்பட்டு இருந்தன. 1860இல் வெள்ளை ஆட்சி கொண்டுவந்த ‘இந்திய தண்டனைச் சட்டம்’ இவ்வனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகவே இருந்தது. எனில், திருமண உறவுகள் மற்றும் பண்பாடு பழக்க வழக்கங்கள் சார்ந்து இயற்றப் பட்ட சட்டங்கள் மட்டும் வெவ் வேறாக இருந்தன.

காட்டாக, Indian Christian Marriage Act 1872,  Divorce Act 1869, Marriage Validation Act 1892, Parsi Marriage and Divorce Act 1936, Muslim Personal Law (Shariat) Application Act 1937, Dissolution of Muslim Marriage Act 1939, Anand Marriage Act 1909, Arya Marriage Validation Act 1937 எனப் பல சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினர்க்கும் தனித் தனியாக நிலவின. எனினும் மேலே குறிப்பிட்ட மதத்தவர் அல்லாத பிற மதம் சார்ந்த மக்களுக்கு இப்படிப் பட்ட சட்டங்கள் ஏதும் இல்லை என்பதும் அவர்கள் மரபு வழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த எழுதப் படாத பல சட்டங்களை பின்பற்றியே வாழ்ந்தார்கள் என்பதும் நோக்கத் தக்கது.

எனில், பின்னாளில் வெள்ளை ஆட்சி இவ்வனைத்து மக்கள் பிரிவினரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு இந்துக்கள் எனப் பெயரிட இவர்களுக்கான தனிச் சட்டம், சுதந்திர இந்தியா வில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே 1955இல் உருவாக்கப்பட்டது. இதுவே இந்து திருமணச் சட்டம் 1955 எனப்படுகிறது. இது இதற்கு முன் நிலவிய எழுதப்படாத பல சட்டங்களை, குறிப்பாக வேதங்கள், ஸ்மிருதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஆக இவ்வாறாகவே நாட்டில் இந்துக்கள், இசுலாமியர், கிறித்துவர் என அந்தந்த மதத்தினர்க்கும் தனித்தனியாக சட்டங்கள் உருவாக்கப்பட்டு நிலவி வருகின்றன.

இவற்றுள் நாம் கவனிக்க வேண்டுவது இசுலாமிய மதம் சார்ந்த சட்டங்கள் இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பும், கிறித்துவ மதம் சார்ந்த சட்டங்கள் இன்றைக்கு சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பும் வெள்ளை ஆட்சியால் உருவாக்கப் பட்டு, சுதந்திர இந்தியாவிலும் அவை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நீடித்து வருகின்றன. ஆனால் 1955இல் கொண்டு வரப்பட்ட இந்து திருமணச் சட்டம், ஏற்கெனவே நிலவிய பல எழுதப்படாத சட்டங்களை, வேதங்கள். ஸ்மிருதிகளிலிருந்து தொகுத்த அதே வேளை இந்து சமூகத்தில் அவ்வப்போது எழுந்த பல சீர்திருத்தங்கள் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் சமூகத்தில் ஏற்பட்டு வரும் சனநாயக சிந்தனைகளுக்கேற்ப தன்னை மாற்றங்களுக்கு உட்படுத் தியும் வருகிறது. அதாவது சுருக்கமாக இந்து மதம் மட்டும் காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்கி தன்னை மாற்றிக்கொண்டு வர, இசுலாம், கிறித்துவ மதங்கள் மட்டும் தம்மை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்திக் கொள்ளாமல் இன்னமும் அப்படியே பழமைவாதப் போக்கிலேயே இருந்து வருகின்றன என்பதுதான்.

காட்டாக, சுதந்திரத்திற்கு முந்தைய வெள்ளை ஆட்சியில் இந்துக்களிடையே நிலவிய சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க Sati Regulation Act 1829, மரபு வழி சாரா திருமணங்களை அங்கீகரிக்க Special Marriage Act 1872, கணவனை இழந்த கைம்பெண்கள் காலம் முழுவதும் விதவையாக வாழவேண்டும் என்கிற நிலையை மாற்றி கைம்பெண்களும் மறுமணம் செய்துகொள்ள வழி வகுக்கும் Hindu Widow Remarriage Act 1856, குழந்தைத் திருமணத்தைத் தடை செய்ய Age of Consent Act 1891, குடும்ப உறுப்பினர்களின் சொத்துரிமையைப் பாதுகாக்க Indian Succession Act 1925 எனப் பலச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட துடன், சுதந்திர இந்தியாவிலும் காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே நிலவி வரும் சட்டங் களுக்கு மாற்றாகவோ, அல்லது புதிதாகவோ பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. Hindu Marriage Act 1955,  Special Marriage Act 1954, Hindu Adoption and Maintenance Act 1956, Hindu Succession Act 1956, Hindu Minority and Guardianship Act 1956 ஆகியன இப்படிப்பட்டவை. எனில், இசுலாமிய கிறித்துவ மதங்களில் மட்டும் இப்படிப்பட்ட புதிய சட்டங்களோ அல்லது பழைய சட்டங்களுக்கு மாற்று சட்டங்களோ ஏதும் இயற்றப்படவில்லை.

இப்படி இந்து மதத்தில் சாத்தியப்பட்ட இந்த மாற்றம், பிற மதங்களில் ஏற்பட இயலாமல் போனதற்கு ஒரே முக்கிய அடிப்படை காரணம், இசுலாமியர்களுக்கு குரான் போல, கிறித்துவர்களுக்கு விவிலியம் போல இறுகி கெட்டித் தட்டிப்போன எந்த நூலும் இந்துக்களுக்கு இல்லை என்பதுதான். அதாவது இந்து மதம் என்பது வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் வழி கட்டமைக்கப்பட்டதுதான் என்றாலும் அவை எந்த நாளிலும் அப்படியே மாற்றப்படாத ஒன்றாய் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டு வந்ததில்லை. மாறாக காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அது தன்னை மாற்றம் செய்து கொண்டே வருகிறது.

ஆனால், இசுலாமியம், கிறித்துவம் என்பவை இப்படியில்லை. இதில் ‘குரான்’ இருக்கிறது. ‘விவிலியம்’ இருக்கிறது. ஆகவே, இம்மதவாதிகள் பலரும் எங்களுக்கு உரிய எல்லாம் இதிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதைத் தாண்டி புதியதாக வேறொன்றும் வேண்டியதில்லை. வேறெந்தச் சட்டமும் எங்களைக் கட்டுப்படுத்தவும் தேவையில்லை என்கின்றனர்.

இந்நிலையில் நாம் இவர்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். இசுலாமியர்களோ, கிறித்துவர்களோ, இந்துக்களோ எவரானாலும், அவர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்பவர்களானாலும் அவரவரும் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இப்படி உட்பட்டேதான் அவரவரும் வாழ்ந்து வருகின்றனர். அதேபோலவே இந்திய ஆட்சிப் பரப்பிலும் வாழும் எம் மதத்தினரும் இந்த நாட்டில் நிலவும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வாழவேண்டும். வாழக் கடமைப் பட்டவர்கள்.

இதில் பல்வேறு உரிமைகள் நோக்கில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராடுவதோ அல்லது சிறுபான்மை இனங்கள், மதங்கள் தங்கள் தனித் துவம், அடையாளம் காக்க சில சலுகைகள் பெறுவது என்பதோ வேறு செய்தி. ஆனால் இச்சலுகைகள் எதுவும் சனநாயகத்திற்கு உலை வைப்பதாகவோ, தனி மனித சுதந் திரத்தைப் பறிப்பதாகவோ, மனித உரிமைகளை மீறுவதாகவோ அமைந்து விடக் கூடாது என்பது பொது நியதி, எனவே இந்தப் பொது நியதியைக் காப்பதில் அனைத்து மதத்தினரும் பெருந்தன்மையோடும், பக்குவத்தோடும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும் நடந்து கொள்ளவேண்டும்.

நாட்டில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என தில்லி உச்ச நீதிமன்றமும் தமிழக அரசும் ஆணையிட்டிருப்பதன் நோக்கம் எந்த மதத்தவரையும் புண்படுத்துவதோ, அவமதிப்பதோ, அவர்கள் மத உரிமைகளில் தலையிடுவதோ அல்ல. மாறாக ஒருவனுக்கும் ஒருத்திக்கும் திருமணம் என்பதன் பேரால் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தம் இருவருக்கும் சட்டபூர்வமானதாக, இருவரில் எவர் பாதிக்கப்பட்டாலும் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதாக, நியாயம் வழங்குவதாக இருக்க வேண்டும் என்பதுதானே தவிர வேறு அல்ல.

இந்து, கிறித்துவ மதங்களை ஒப்பு நோக்க, இசுலாமிய மதத்திலேயே பெண்ணடிமைத் தனம் மிகுதி என்பதும், இம்மதத்திலேயே பெண்கள் அதிகம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும், இசுலாமிய மதத்தில் உள்ள சனநாயக சக்திகளாலே ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மை. இப்படிப்பட்ட நிலையில், பாதிப்புக்குள்ளா கிறவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு நியாயம் வழங்குவதும் அரசின், ஆட்சியாளர்களின், நீதிமன்றங்களின் கடமை. இந்தக் கடமையின் தேவையிலிருந்தே கட்டாயத் திருமணப் பதிவு குறித்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் உள்ள வேறு எந்த மதத்தினரும் இதை எதிர்க்காத நிலையில் இசுலாமிய மதத் தலைவர்கள் மட்டும் இதை எதிர்த்துள்ளனர். பிற எல்லா மதத்தவரையும் போல இன்றுள்ள நவீன வாழ்க்கை வசதிகளை, அறிவியல் முன்னேற்றங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, 1200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குரானை, இன்றைக்கும் அப்படியே வரி பிசகாமல் பின்பற்றிக் கொண்டு வாழ முடியுமா, வாழ முயல்வது நியாயமா என்பதை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும். ஆதிக்க மதமும் அடிமைப்பட்ட மதமும் மோதும் போது அடிமைப்பட்ட மதத்தின் பக்கம் நிற்பது நியாயமானதுதான். ஆனால் மத உரிமையும், மனித உரிமையும் மோதும்போது மனித உரிமையின் பக்கம் நிற்பதே நியாயமானது. இந்த நியாயத்தை இசுலாமியர்கள் உணரவேண்டும். கட்டாயத் திருமணப் பதிவு ஆணையை எதிர்ப்பின்றி ஏற்கவேண்டும்.

- இராசேந்திர சோழன்

(மண்மொழி ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It