டெல்லி திகார் சிறையில் ரகசியமாகவும், அவசரமாகவும் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு மரண தண்டனையினை மக்கள் சிவில் உரிமைக்கழகம் வன்மையாக கண்டிக்கின்றது.மேலும் அப்சல் குரு குடும்பத்தினருக்கு கூட முறையாக தகவல் தெரிவிக்காது நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை மற்றும் சிறை வளாகத்திற்குள்ளேயே அப்சல் குரு உடலை புதைத்தது போன்றவை சட்ட விரோதமான,மனிதாபிமானமற்ற நடவடிக்கை என கருத வேண்டியுள்ளது. அப்சல் குருவுக்கு குடும்பம் உள்ளது. அக்குடும்பத்தினர் தங்கள் மத வழிபாட்டு முறைப்படி இறந்த உடலை அடக்கம் செய்யும் உரிமை பெற்றவர்கள். ஆனால் இந்த அடிப்படை உரிமைகளை கூட டெல்லி ஆட்சியாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
தேர்தலுக்கு தன்னை தயார்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சி மரண தண்டனையினை தனது செல்வாக்கினை கூட்ட ஒரு வடிவமாக கருதுவது சனநாயக விரோதமானது.தொடர்ந்து கருணை மனுக்களை நிராகரிப்பது,தூக்கு மரத்தை தயார் படுத்த்வது என்ற மத்திய ஆட்சியாளர்களின் போக்கு உலக அரங்கில் மனித உரிமை பண்பாட்டுக்கு எதிரான நாடு என்ற அவப்பெயரையே பெற்றுத்தரும். மரண தண்டனையினை ஒழிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அரைகூவல் கொடுத்துள்ள நிலையில் அப்சல் குருவின் மரண தண்டனை கண்டிக்கத்தக்கது.
அரசியல் போராட்டங்களை அரசியல் வழி வழியே மாத்திரம் தீர்வு காண முடியும் .காஷ்மீர் மக்களின் போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டம் என காண தயாராக இல்லாத ஒரு நிலையிலிருந்தே அப்சல் குரு தூக்கு நிகழ்ந்துள்ளது.மரண தண்டனை சமூகத்தில் குற்றத்தை குறைக்கவோ,தடுக்கவோ எந்த வகையிலும் பயன்படாது.அது சொல்லும் ஒரே செய்தி பழிவாங்கல் என்பது மட்டுமே.இப் பழிவாங்கல் நடவடிக்கைகளால் சமூகத்தில் அமைதியினை நிலை நாட்டமுடியாது.
மரண தண்டனை கொடூரமானது, மனிதாபிமானமற்றது,நாகரீக சமூகத்தை வெட்கி தலைகுனிய செய்வது ,அந்த தண்டனையினை தங்களின் சாதனை என பறைசாற்றும் அரசை கண்டிப்பது சனநாயக சமூகத்தின் கடமை.
- ச.பாலமுருகன், மாநிலச் செயலர்,பியூசிஎல் பேரா.சரஸ்வதி, மாநிலத் தலைவர், பியூசிஎல்