தமிழகத்தின் கிராமங்களில் எந்த விதமான விளையாட்டுக் கருவிகளும் இன்றி சிறுவர்கள் இரவு பகல் என எந்த நேரத்திலும் விளையாடும் விளையாட்டே இந்த ஆபியம் என்னும் விளையாட்டாகும். இதை தென்னகத்தில் பச்ச குதிரை விளையாட்டு என்றும் அழைக்கிறார்கள். இந்த விளையாட்டை பழங்காலத்தில் அரசர்கள் மற்றும் அவரது படைவீர்கள் இந்த விளையாட்டின் மூலம் தங்களது போர் திறனை வளர்த்துக்கொண்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அத்தகைய விளையாட்டை விளையாடும் சிறுவர்களும் போர்த் திறமையையும் உடல் வலிமையையும் வளர்த்துக்கொள்வதாகவே கருதுகிறார்கள்.

இந்த விளையாட்டை எத்தனை சிறுவர்கள் வேண்டுமானாலும் குழுவாக சேர்ந்து விளையாடலாம். இந்த விளையாட்டில் ஒருவர் குதிரை போல் குனிந்து கொள்வார் மற்றவர்கள் குனிந்தவரின் முதுகில் கையை ஊன்றி குனிந்தவரின் ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்குத் தாண்டுவார்கள். அவ்வாறு தாண்டும் போது குனிந்தவர் மீது தன் கால்கள் படாமல் தாண்ட வேண்டும். ஒருவேளை தாண்டுபவர் கால் குனிந்திருப்பவர் மீது பட்டுவிட்டால் தாண்டுபவர் தோற்றவர் ஆவார். அவர் மீண்டும் குனியவேண்டும் மற்றவர்கள் எல்லாம் குனிந்தவர் முதுகை கையால் ஊன்றித் தாண்டவேண்டும். யார் முதலில் குனிய வேண்டும் என்பதை தீர்மானிக்க விளையாட்டில் கலந்துகொள்வோர்கள் எல்லாம் சேர்ந்து சாட் பூட் திரி மூலம் முடிவு செய்வார்கள்.

குனிந்திருப்பவர் முதுகைத் தாண்டும் போது

“ஆபியம்....

மனியாபியம்...

இஷ்ட்டாபியம்...

லாகரச்சி கொக்கு.....

ராஜா சூத்துல ஒத குடு...”

என்று பாடிக்கொண்டே குனிந்தவரின் முதுகைத் தாண்டுவார்கள். இந்தப் பாடலில் இன்னொருவகை

"ஆபியம்...

மனியாபியம்...

இஷ்ட்டாபியம்...

குரங்காபியம்...

நகரத்தின் எல்லைக் கோடு...

குட்டிச் சாத்தான் மண்ணைத் தின்றான்...

தற... தற... சூத்துல உதை!"

என்றும் சிலர் பாடிக்கொண்டு தாண்டுவது உண்டு.

ஆட்டத்தில் ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் அவரின் முதுகில் கை வைத்து, வரிசையாக மற்றவர்கள் தாண்ட வேண்டும். முதல் முறை ஆபியம்... என்று சொல்லித் தாண்டும்போது, குனிபவர், தன் கையை கால் விரல்களைத் தொட்டபடி குனிந்திருக்க வேண்டும். இரண்டாவது இஸ்டாபியம் என்று சொல்லித் தாண்டும்போது தன் கைகளை கால் விரல்களிலிருந்து ஒரு ஜாண் உயரத்திலும், மூன்றாவது தாண்டலுக்கு முட்டிகளையும், நான்காவது ஆபியத்தில் இடுப்பிலும் கை வைத்து நிற்க வேண்டும். இப்படியே பத்து ஆபியம் வரை கை மேலே மேலே உயர்ந்துகொண்டே இருக்கும். யார், முதுகைத் தாண்ட முடியாமல் இருக்கிறாரோ, அவர் அடுத்ததாகக் குனிந்து நிற்க வேண்டும். இது உயரம் தாண்டுதலில் ஒவ்வொரு முறையும் கோல்களின் உயரத்தை அதிகப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

கால்களை அகலமாக்கி வைத்துக்கொள்வதிலும், கைகளால் உடம்பை உயர்த்தி வைத்துக் கொள்வதிலும் தான் இந்த ஆட்டத்தின் வெற்றியின் ரகசியம் ஒளிந்திருக்கிறது. இந்த விளையாட்டு எதையும் தாங்கும் உடல் வலிமையைக் கொடுப்பதோடல்லாமல் எப்பொழுதும் கவனமா செயல்படவும் இந்த விளையாட்டு சொல்லிக்கொடுக்கிறது. மேலும் தசைகளை உறுதியாக்கவும், மூட்டு சேரும் இடங்களை உறுதியாக்கவும், எலும்பு வளர்ச்சிக்கும் இந்த விளையாட்டு உதவுகின்றன. இந்த விளையாட்டு பழங்காலத்தில் மன்னர்களும் அவரின் வீரர்களும் போரில் ஈடுபடும்போது எதிர்படும் உயர்ந்த சுவர்களைத் தாண்டுவதற்கும், குதிரையின் மீது ஏறுவதற்குமான பயிற்சியாக விளங்கியதாம். அதனால்தான் இந்த விளையாட்டை பச்ச குதிரை என்றும் அழைத்திருக்கிறார்கள்.

எனவே நம் குழந்தைகளுக்கு ஆளைத் தாண்டி விளையாடும் ஆபியம் விளையாட்டை சொல்லிக்கொடுப்போம். அவர்கள் வாழ்க்கையில் தடைகளைத் தாண்டி வளர்வார்கள்.

- இன்னும் விளையாடலாம்

Pin It