ஆதி மனிதன் உடை இன்றி காடுகளில் அலைந்து திரிந்த போது பெண்ணின் உடல் அடிமைப்படுத்தப்படவில்லை, இழிவாகப் பார்க்கப்படவில்லை . நாகரிகம் அடைந்த மனிதன் , ஆடைகளை கண்டு பிடித் தான், மதத்தை உருவாக்கி னான் , இந்த இரண்டு கூறுகளுமே பெண்களை, அவர்கள் உடலை இழிவாகப் பார்க்க இந்தச் சமூகத்தை பழக்கப்படுத்தியது. எப்படி பெண்ணின் இயற்கை மாதவிடாய் குருதி தீட்டு என அருவருப்பாகப் பார்க்கப்படு கிறதோ அதே போன்று தான் பெண்ணின் உடலும் இங்கு அவமானம், இழுக்கு என பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில் இருந்து தான், அவள் உடலை வெளிக்காட்டக் கூடாது ,   அவள் ஆணின் பொருள் என்னும்  , மதங்களின் அரசியல் உள்ளது. அதனால் தான் அவள் உடலின் சில அங்கங்கள்  தெரியும்படி நடந்தால் அவளுக்கு வேசி எனும் பட்டம் வெகு இயல்பாய் இந்தச் சமூகத்தில் தரப்படுகிறது. 

lady in modern dressஒரு பெண் தன் உடல் தெரியும்படி உடை அணியும் போது அது அவமானம் என கருதும் பெரும்பான்மை மனிதர்கள் பெண்ணின் உடல் அவமானமானதா? என்ற கேள்விக்கு பதில் சொல்லிட வேண்டும் ; ஒரு பெண் தன் உடலை வெளிப்படுத்தும் உடை அணிவதில் ஆண் மனதின் அரசியல் உள்ளது எனச் சொல்லும் பலர் ஒரு பெண் எப்போதும் தன்னுடலை மறைத்தே பயணிக்க வேண்டும் என்பதிலும் ஆண் மனதின் அரசியல் உண்டென்பதை உணர மறுக்கின்றனர். 

எடுத்துக்காட்டுக்கு இந்தியச் சூழலில் பெண்கள் சேலை உடுத்துகிறார்கள். அது கண்ணியமான உடை என்றும் நம்ப வைக்கப்படுகின்றனர் . ஆனால் அதில் இடுப்பு , மார்பகம் தெரிவதில் பிரச்சனை இல்லை . ஆனால் ஒரு பெண் இந்தியச் சூழலில் நீண்ட கால்சட்டை அணிந்து , மேலை சட்டை அணிந்து , அப்போது கையை மேலே தூக்கும்போது தெரியும் இடுப்பு பலருக்கு அருவருப்பாக இருக்கின்றது . ஏன் என்றால் இந்திய மக்களைப் பொருத்தவரை சேலை கண்ணியமான , நம் பண்பாட்டை பறைசாற்றுகின்ற உடை , ஆனால் ஜீன்ஸ், டி- சர்ட் அப்படி இல்லை என்கின்ற முன் பதிந்த எண்ணங்கள். 

மேற்கத்திய நாடுகளில் நீண்ட பிராக்(கவுன்) மட்டுமே பெண்கள் அணிவது கண்ணியமாக பார்க்கப்பட்ட சூழல் இருந்தது. இன்றைக்கு அவர்கள் அணியும் நீண்ட கால்சட்டை உடுத்த பெருமளவில் போராட்டங்கள் நடத்தியே இன்று இயல்பாக அணியும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர் என்பதே வரலாறு. 1919 ஆம் ஆண்டு Puerto Rico வைச் சேர்ந்த லுய்சா காபிடிலோ (Luisa Capetillo) என்பவர்தான் பொது இடத்தில் முதன் முதலாக நீண்ட கால்சட்டை அணிந்தவர், அதன்  காரணத்தால் மிகப் பெரிய குற்றம் இழைத்ததாக கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.  

1969 இல் சார்லோடே ரெய்டு (Charlotte Reid) என்பவர்தான் யு.எஸ் காங்கிரசில் நீண்ட கால் சட்டை அணிந்துச்சென்ற முதல் பெண்மணி. 1993 வரை நீண்ட கால் சட்டை அணிய யு. எஸ். செனட், பெண்களுக்கு அனுமதிக்கவில்லை. செனடர்கள் பார்பரா மிக்குல்சிகி (Barbara Mikulski) , கார்ல் மோசிலே பிரைன்( Carol Moseley Brain) என்பவர்கள் முதன் முதலில் கால்சட்டை அணிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

2013 இல் தான் பிரான்ஸ் அதன் நாட்டு பெண்கள் ஆண்கள் உடை , கால்சட்டை அணியலாம் என தங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தனர்.  

உலகெங்கிலும் பெண் தன் உடைத் தேர்வைக் கூட சட்டங்கள் மூலமே பெற்றிருக்கின்றனர் என்பதை அறியும் போது இந்த உலகம் எந்தளவிற்கு ஆணாதிக்க குறியீடாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தந்தை பெரியார் 1920 களில் பெண்களே ஆண்களைப் போன்றே வசதியான உடை அணிந்து கொள்ளுங்கள் என தொலைநோக்குச் சிந்தனையுடன் கூறினார் .  

இத்தாலி ரோம் நகரில் ஒரு 18 வயதுப் பெண் 45 வயது அவளின் மகிழுந்து பயிற்றுனரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாள். கீழ் நீதிமன்றம் அந்த நபருக்கு தண்டனை வழங்கியது. வழக்கு மேல் முறையீடுச் சென்றது. இந்தாலியின் உச்ச நீதிமன்றம் அந்த தண்டனையை திரும்பப்பெற்றது . என்ன காரணம் சொல்லிற்று தெரியுமா?   , அந்த மாணவி இறுக்கமான ஜீன்ஸ் அணிந்திருந்தார். அந்த ஜீன்சை ஒருவரால் கழற்றியிருக்கமுடியாது. அந்த இறுக்கமான உடையை பெண்ணும் அனுமதி அளித்தால் மட்டுமே கழற்றியிருக்க முடியும் . எனவே இது பாலியல் வன்புணர்வு இல்லை . அந்த பெண்ணின் ஒப்புதலோடு நடந்த காரணத்தால் இதற்கு தண்டனை வழங்கி இருப்பது தவறு என்றது. அந்த தீர்ப்பு வழங்கிய அடுத்த நாள் இத்தாலி நாட்டின் பார்லிமெண்டில் உள்ளப் பெண்கள் , ஜீன்ஸ் அணிந்து கொண்டு , “ஜீன்ஸ் : பாலியல் வன்புணர்விற்கு அயிலிட சான்று (Alibi)) “ என பதாகைகள் ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் . 2008 இல் இத்தாலிய உச்ச நீதி மன்றம் தன் போக்கை மாற்றிக்கொண்டது. 

இப்படி பல போராட்டங்கள் மூலம் மட்டுமே தங்கள் விருப்பப்படி வசதியான உடையைப் பெண்கள் இன்றைக்கு போடும் நிலை கிட்டியுள்ளது. அதில் முக்கியமான போராட்டமாக நாம் கருத வேண்டியது பொது இடங்களில் குழந்தைக்கு பாலூட்டுவது. 

பெண் பாலூட்டும் போதும் , ஆடையை மறைத்துக்கொண்டு கொடுத்தால்தான் பண்பாடு எனப் புல்லரிக்கும் நம் மனங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் , பாலூட்டுதல் என்பது குழந்தையின் பசியாற்றுதல். நாம் நமக்கு பசிக்கும்போது உணவை மறைத்து வைத்து உண்பதில்லை. ஆனால் பெண்ணின் மார்பகங்களைக் காமத்திற்காக மட்டுமே அறிந்து வைத்திருக்கும் இந்தச் சமூகம் அந்த மார்பகங்கள் மூலம் பாலூட்டப்படும்போது அதை பெண் உடலின் மறைப்பு அங்கம் என்பதால் மறைத்தே பாலூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 

I don’t pee or masturbate in public, so why should a woman breastfeed?”

என கேட்கும் அறிவாளிகளிடம் கேட்க ஒரே கேள்விதான் உள்ளது. குழந்தைக்கு பாலூட்டுவது அசிங்கமானது, உடல் கிளர்ச்சி தொடர்புடையதாக இந்தச் சமூகம் பார்க்கின்றதா? ஆம் எனின் இந்தச் சமூகத்தின் மனங்கள் பக்குவப்படுத்தப்பட வேண்டி உள்ளது. 

அதே நேரத்தில் மற்றொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் கழிப்பிடங்கள் இல்லாத காரணத்தால் வெளியில் மறைவில் காலைக்கடன்களை முடிக்கச்செல்லும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன. இதை எந்தப் பண்பாடும் பேசுவதே இல்லை என்பதே பெண்களுக்கு எதிரான அருவருப்பான சமூகச் சூழல் இங்கு இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது. 

உடை அணியும்போது பெண்ணின் உடல்வாகும் இங்கு எள்ளி நகையாடப்படுகின்றது. இந்த உடம்பிற்கு இந்த லெகின்ஸ் தேவையா என்பதும் கூட பெண் என்பவள் ஒல்லியாக இருக்க வேண்டும் , அப்படி இல்லாதவர்கள் உடை அணிவதில் கவனமாக இருக்க வேண்டும், என திரும்ப திரும்ப பெண் உடலும் , உடையும் இந்த சமூக மதிப்பீடுகள் படியே இருக்க வேண்டும் என்பதும் பெண்ணை அவள் உடல் , உடை சார்ந்து மட்டுமே சிந்திக்க வேண்டும் , அதுவும் சமூக மதிப்பீடுகளுக்கு மட்டுமே அவர்கள் உடை அணிய வேண்டும் என்பதே மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. 

உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு, எனச் சொல்லும் கூறுகள் ஆண்களுக்கு ஒரு போதும் வழங்கப்படுவதும் இல்லை , உடைக்காக, உடலுக்காக அவன் மதிக்கப்படுவதும் இல்லை . அவன் மதிப்பு அவன் ஆண் என் பதற்காக மட்டுமே அந்தச் சமூகம் வழங்குகின்றது. 

மேலும் ஒரு பெண் தன்னுடலை மதித்தால் உடல் தெரியும் படி உடை அணிவார்களா? என்ற கேள்வியே குழந்தைத்தனமானது. 

இயற்கையில் மனித உடல்கள் அழகானவை, அதை வழிபடவும் ஒன்றும் இல்லை ,  அவமானப்படவும் ஒன்றும் இல்லை என்ற சிந்தனையை நாம் இந்தச் சமூகத்தில் வளர்த்தெடுக்க முடியாதக்கார ணத்தால்தான் பெண்களின் ஒளிப்படத்தை அவர்கள் அனுமதியின்றி மார்பிங் செய்து வெளியிடும்போது ஒரு பெண் அவமானத்தால் கூனிக்குறுகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.  

அடுத்து வைக்கப்படும் குற்றச்சாட்டு ஒரு ஆண் பெண்ணின் அரைகுறை ஆடைக்கண்டு கிளர்ச்சி அடைவார்கள் என்பதே. உண்மையில் ஆண் இந்தச் சமூகம் பெண்கள் மீது சுமத்துகின்ற ஒழுக்க மதிப்பீடுகள் காரணமாக சிதைந்த மனத்தோடே வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.

 முழு உடையில் எப்போதும் இருக்க வலியுறுத்தும் அரபு நாடுகளில் பெண் கைவிரல் தெரிந்தாலும் ஆண் கிளர்ச்சி அடைகிறான். பெரும்பாலான பாலியல் வன்முறைகளுக்கு உடையை ஒரு காரணமாக கூறுகின்ற சமூகத்திடம் கேட்கப்பட வேண்டிய ஒரே கேள்வி, 2 வயது பெண் குழந்தைக்கும், 70 வயது மூதாட்டிக்கும் கூட உடை ஒரு காரணமா? என்பது தான்!

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பாலியல் வன்புணவிற்கு உள்ளாகும் பெரும் பான்மையான பெண்கள்  சேலை, அல்லது முழு உடல் மூடிய உடை களையே அணிந்திருப்பவர்கள் என்பதை செய்தி களைப் படிக்கும் போது நாம் தெரிந்து கொள்ள முடியும்.  

பெண்களின் உடல் உயிரியல் படி சில மாற்றங்கள் கொண்டது, அந்தப் புரிதலை ஏற்படுத்துவது மட்டுமே இங்கே பெண்களின் உடல் , உடை இவற்றில் உள்ள பெண்களை அடிமைப்படுத்தும் கூறுகளை களையும், அந்தப் புரிதலை எதிர்பாலினத்திற்கு, ஆணாதிக்கச் சிந்தனையை ஏற்றுக்கொண்ட பெண்கள் இருவருக்கும் உணர்த்துவது காலத்தின் கட்டாயம். இவர்களோடு தொடர்ந்து உரையாடுவோம்!!

Pin It