Her stories இணையதளத்தில் வெளியான தோழர் கீதா இளங்கோவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “துப்பட்டா போடுங்க தோழி” என்ற நூல்! வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது ஆணாதிக்க சமூகம். கேட்டால் இது தான் நம் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்வார்கள். பெண்மைக்கு இச்சமூகம் கற்பிக்கும் அவ்விலக்கணங்கள் தான் “துப்பட்டா போடுங்க தோழி” போன்ற பல அறி(வற்ற)வுரைகளை வழங்கி நல்ல அடிமைகளாக பெண்களை உருவாக்குவதில் முனைப்போடு இயங்கும். அப்படியான ஒரு அறி(வற்ற)வுரையையே தலைப்பாகக் கொண்டு சமத்துவப் பாதைக்கு வழிகாட்டும் நூலிது!
பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்களையும், கேள்விகளையும், பல அறி(வற்ற)வுரைகளையும் அடிப்படையாகக் கொண்ட தோழர் கீதாவின் எழுத்துகள், அடிமைத்தனத்தில் சிக்காமல் பெண்களை மனிதர்களாக மீட்டெடுக்கக் கூடிய பல சிந்தனைளைக் கொண்டுள்ளது. தன் வாழ்விலுள்ள பெண்களை எப்படி சமத்துவத்தோடு அணுக வேண்டும் என்று ஆண் தோழர்களுக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது.
பெரியாரின் பெண்ணியமும் இந்நூலும்
Feminist manifesto போலத் திகழும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? நூலில் உள்ள கட்டுரைகளின் கருத்துக்களை, அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாக விளக்கியுள்ளார் தோழர் கீதா. கற்பு பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கற்பிக்கும் சமூகம், ஆண்களுக்கு அப்படி ஒன்று இருப்பதாகவே சொல்வதில்லை. காதல்/பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு மறுக்கப்படுவதற்கும், பெண் உடல் மீது பெண்ணுக்கே அதிகாரம் இல்லாததற்கும், கற்பு என்பதில் நிலவும் சமத்துவமற்ற தன்மை தான் பெருங்காரணமாக இன்று வரை உள்ளது. பெண் ஏன் அடிமையானாள்? நூலில் உள்ள முதல் இரண்டு கட்டுரைகளை தெளிவாகப் புரிய வைக்கிறது “So called கற்பை நொடிக்கு நொடி நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்” என்ற தலைப்பிலான கட்டுரை. “பெண் ஏன் அடிமையானாள்?” மட்டுமல்லாமல், பெரியாரின் எழுத்துக்களை பல இடங்களில் மேற்கோள் காட்டியும், அவரின் கருத்துக்களை இன்னும் தெளிவாகவும், பல கட்டுரைகளில் விளக்கியுள்ளார். “திருமணம் தான் பெண்களுக்கு எல்லாமுமா ?”, “இன்றும் பெண்களுக்கு பெரியார் தேவைப்படுகிறார்” போன்ற கட்டுரைகளே அதற்கு சான்று.
உடை அரசியலும் உடல் அரசியலும்:
பெண் உடை எப்போதும் அவர்களுக்கு வசதியாக இருப்பதில்லை. அதில் நம்பர் 1 வசதி குறைவான உடை சேலை. 2K கிட்ஸ் வரை பல பெண்கள் சேலையை விரும்பி அணிவதைக் கண்டு வியந்துள்ளேன். சேலையை விரும்பியோ விரும்பாமலோ அணியும் இயக்கம் சார்ந்த / சாராத பெண்கள் அனைவரும் அவசியம் "பெண்ணுக்குப் புடவைதான் வசதியா?" என்ற கட்டுரையை வாசித்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
"பெண்களுக்கு தன்னுடைய உடலைப் பற்றி இந்த ஆணாதிக்க சமுதாயம் சொல்லித் தருவதில்லை. அதே நேரத்தில், எதிர்மறையாக உடலைப் பற்றிய குற்றவுணர்வை அவர்களிடம் உருவாக்குகிறது" என்ற வரிகளில் அழுத்தமாக பெண் உடல் அரசியலைப் பேசியதோடு, பெண் orgasm பற்றிப் பெண்களுக்கே தெரியாமல் இருப்பது பற்றியும், அப்படியெல்லாம் பேசும் பெண் “நல்ல பெண்” என கருதப்படுவதில்லை என்பதால் பெண்கள் தயங்குவது பற்றியும் கூறியதோடு விட்டு விடாமல் sex education இல்லாத இந்தியா போன்ற தற்குறி நாட்டிற்கு, "ask the sexpert" என்ற ஆவணப் படத்தைப் பரிந்துரை செய்கிறார் கீதா.
Female orgasm பற்றி ஒன்றும் அறியாத இந்திய ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடும் (vasectomy) செய்து கொள்வதில்லை என்பதைப் புள்ளி விவரங்களோடு விளக்கியுள்ளார் கீதா. கட்டுரைக்கு மிகப் பொருத்தமாக " மனைவியை நேசிப்பவர்கள் வாசக்டமியை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்" என தலைப்பிட்டுள்ளார்.
குடும்பம் திருமணம் என்னும் சிறைகள்:
குடும்ப கவுரவம், ஜாதி கவுரவம் என இன்னும் பல கவுரவங்களையும் பெண்களின் பிறப்புறுப்பிலும் உடலிலும் தான் வைத்துப் பாதுகாக்கிறது இந்திய சமூகம். அதன் காரணமாகவே பெற்றவர்கள் பெண்களைத் திருமணம் வரைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் வேறு விதமாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு தங்கள் வாழ்க்கையை வாழாமலே சாகின்றனர். பெண் கருக்கொலை , பெண் சிசுக் கொலை போல் இல்லாமல் பெண்களை உயிரோடு நடைபிணமாக்கும் நூதனக் கொலைகள் பல உண்டு. அவ்வகையில், கற்பென்ற கற்பனைக் கருத்தாக்கத்தைப் போன்றதொரு கற்பனைக் கதாப்பாத்திரம் தான் குடும்பப் பெண்!
குடும்பப் பெண், குடும்பக் குத்துவிளக்கு என்று ஏதேதோ உளறிப் பெண்களை அடிமைப்படுத்தத் தெரிந்த இச்சமூகம், குடும்ப ஆண் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தவே இல்லை. குடும்பத்தில் உள்ள ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு விதியைக் கூட ஆண்களுக்குக் கூறவில்லை. ஏனெனில், குடும்பம் மற்றும் திருமணம் போன்றவை, பெண்களை அடிமையாக்க ஆண்கள் கண்டுபிடித்த ஆணாதிக்க நிறுவனங்கள்! விதவன், விபச்சாரன், பதிவிரதன் போன்ற சொற்கள் ஏன் இல்லை எனக் கேட்ட பெரியாரின் கேள்வியைப் போன்றே குடும்ப ஆண் யார் ? என்ற கேள்வியைக் கேட்ட தோழர் கீதா, "ஆண் துணையும் குடும்ப அமைப்பும் பெண்ணைச் சாதிக்க விடாமல் எதோ ஒரு வகையில் தடை செய்கின்றன. அது எதனால் என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும்", என்றும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
என்னுடன் இன்ஜினியரிங் படித்த பல தோழிகள் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் வேலைக்கு செல்லாமல் விரும்பியோ / விரும்பாமலோ / வீட்டு வேலை பழுவாலோ, " house wife / home maker" என்ற tagஓடு குடும்பம் என்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தோழர் கீதாவின் எழுத்துக்களில் அன்பு வார்த்தைகள் உள்ளன. வாசித்து சிறை உடைக்கக் கிளம்புங்கள் பெண்களே! அல்லது குறைந்தபட்சம் படித்த படிப்பை வீணாக்காமல் வேலைக்காவது செல்லலாம். பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு எவ்வளவு முக்கியமென்பதை பெண்களுக்குப் பொறுமையாக விளக்கியுள்ளார் தோழர் கீதா.
பல நூல்கள், திரைப்படங்கள், ஆவணப் படங்கள், என பலவற்றைப் பரிந்துரைத்தும், குறிப்பிட்டும் எழுதியுள்ளார். அவற்றில் என் மனதைத் தொந்தரவு செய்தது "What will people say" என்ற திரைப்படம். பாரம்பரியக் குடும்பத்தில் பிறக்கும் ஓர் பெண், தன் இருப்பிற்காக, வாழ்க்கையை வாழ்வதற்காக என்னென்ன போராட்டங்களை செய்திருக்கிறார் என்பதைத் தன் வாழ்க்கையைக் கொண்டே காட்டியுள்ளார் Iram Haq என்ற பெண் இயக்குனர். Thanks for such an awesome suggestion Geetha!
பயணமும் அரசியலும்
பொருளாதாரம் மற்றும் வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு, உள்ளூரில் ஊர் சுற்றவும், மற்ற வெளிநாடுகளில் நண்பர்களோடு சிலாகிக்கவும், ஆண்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்காத இந்திய சமூகம், தங்கள் நண்பர்களுடன் பக்கத்திலுள்ள mallக்கு செல்ல நினைக்கும் பெண்களிடம் பத்தாயிரம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும். அவற்றை மீறிப் பெண்கள் பயணம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
வீடு, குடும்பம் என அனைத்தையும் தாண்டி, அரசியல் அரங்கிலும், சமூக இயக்கங்களிலும் பெண்களின் எண்ணிக்கை என்ன லட்சணத்தில் உள்ளது என்பது நமக்குத் தெரிந்த ஒன்று தான். பெண்களிடம் அரசியல் பேச வேண்டியதன் அவசியத்தை கீதா உணர்த்தியுள்ளார்.
பெண்கள் வாழ்வில் எங்கே எல்லாம், எவற்றாலெல்லாம் அடிமை வாழ்வை வாழ்கிறார்களோ, அவை அனைத்தையும் பெண்களோடு உரையாடி உணர்த்துவதோடு மட்டும் நின்று விடாமல், அடிமைத்தனத்திலிருந்து விடுபடவும் உதவும் ஒரு நூல். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, சமோகத்திற்கோ பாலின சமத்துவத்தை அடைவதற்கான ஒரு அழுத்தமான அறிவுரை உள்ளது. ஆழமாக வாசித்து, உள்வாங்கி, பல விவாதங்களை இந்நூலை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தினால் சமத்துவமுள்ள சமூகத்தை நாம் உருவாக்கலாம். அப்படியான ஒரு படைப்பை அளித்துள்ள தோழர் கீதாவிற்கு அன்பும், வாழ்த்துக்களும்!
பெண் ஏன் அடிமையானாள்? நூலை மலிவு விலைப் பதிப்பாக (ரூ.10) வெளியிட்டு பல இலட்சம் கைகளில் கொண்டு சேர்த்த தோழர் சண்முக சுந்தரம் (கவிஞர் தம்பி, நன்செய் பிரசுரம்) தொடர்ந்து, நல்ல படைப்புகளை அங்கீகரித்து, அதனை மலிவு விலைப் பதிப்பாக வெளியிடவும் செய்கிறார். தோழருக்கும் அன்பும், பாராட்டுக்களும்.
- யாழ் மொழி