மேலைய ஆராய்ச்சியாளர்கள் விவரித்த ஆரியக் கோட்பாடு எவ்வளவு பலவீனமானது என்பதையும், அதனை அவர்களுடைய பிராமண சகாக்கள் எவ்விதம் தங்குதடையின்றி ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதையும் மிகவும் விளக்கமாக எடுத்துரைத்தோம். அப்படியிருந்தும் இந்தக் கோட்பாடு எப்படியோ மக்களிடம் பொதுவாக ஒரு பிடிப்பை ஏற்படுத்தி விட்டது.

இதனால் அதற்கு எதிராகக் கூறப்பட்ட வாதங்கள் போதிய ஆதரவைப் பெறத் தவறி விட்டன. பாம்பை அடிப்பது போல் இந்தக் கோட்பாட்டை நசுக்கியாக வேண்டும். எனவே, இந்தக் கோட்பாட்டை மேலும் ஆராய்வதும், இதன் பொய்ம்மையை, வஞ்சக முகமூடியை முற்றிலும் கிழித்தெறிவதும் அவசியமாகிறது.

ambedkar 240ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து, தாசர்களையும், தசியுக்களையும் வெற்றி கொண்டு அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள் என்ற கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் ரிக் வேதத்திலுள்ள சில செய்யுட் பகுதிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள்.

இந்த செய்யுள் பத்திகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த செய்யுள்களைக் கருத்திற் கொள்ளாமல், வெளியிலிருந்து வந்து இந்தியாவின் மீது ஆரியர்கள் படையெடுத்தார்கள், இங்குள்ள ஆரியரல்லாத சுதேச குலமரபுக் குழுக்களை வெற்றி கொண்டார்கள் என்ற கோட்பாட்டை நிலை நாட்ட முயல்வது முற்றிலும் பயனற்றதாகும். நான் மேலே குறிப்பிட்ட ரிக் வேதப் பாசுரங்களைக் கீழே தருகிறேன்:

1) ரிக்வேதம், vi.33.3- “இந்திரா, எங்களுடைய இரு பகைவர்களான தாசர்களையும் ஆரியர்களையும் நீ கொன்று விட்டாய்.”

2) ரிக்வேதம், vi.60.3. – “நன்னெறியையும் நியாயத்தையும் நேர்மையையும் பாதுகாக்கும் ஓ, இந்திரா மற்றும் அக்னி’, எங்களுக்குத் தீங்கிழைக்கும் தாசர்களையும் ஆரியர்களையும் அடக்கி ஒடுக்குவீர்களாக.”

3) ரிக்வேதம், vii.81.1. – “சுதாசனின் எதிரிகளான தாசர்களையும் ஆரியர்களையும் இந்திரனும் வருணனும் கொன்று, சுதாசனை அவர்களிடமிருந்து காப்பாற்றினார்கள்.”

4) ரிக்வேதம், X.38.3. – “ஓ, இந்திரா, ஈவு இரக்கமற்ற கொடியவர்களான ராட்சதர்களிடமிருந்தும் சிந்து நதி தீரங்களில் வதியும் ஆரியர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாற்றினாய்; இதே போன்று தாசர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து எங்களைக் காப்பாற்றுவாயாக.

5) ரிக்வேதம், X, 38.3 – “பெரிதும் பூசித்துப் போற்றுதற்குரிய ஓ இந்திரா, சமயப் பற்றற்றவர்களும், எங்களுடைய பகைவர்களுமான தாசர்களையும் ஆரியர்களையும் நாங்கள் அடக்குவதற்கு அருள்பாலிப்பாயாக. உனது துணையுடன் அவர்களைக் கொன்று தீர்ப்போம்.

6) ரிக்வேதம், X. 86.19. – “ஓ, மாமேயு, உன்னைப் பிரார்த்திப்பவர்களுக்கு எல்லா ஆற்றல்களையும் அருள்வாயாக, உனது உதவியுடன் எங்களுடைய ஆரிய பகைவர்களையும் தசியு பகைவர்களையும் அழித்தொழிப்போம்.”

இந்தப் பாசுரங்களைப் படித்துவிட்டு, மேலைய கோட்பாட்டைப் பரிசீலித்துப் பார்ப்பவர்கள் நிச்சயம் அதிர்ச்சியடையவே செய்வர். இந்தப் பாசுரங்களை இயற்றியவர்கள் ஆரியர்கள்தான் என்றால், இப் பாசுரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்திலிருந்து இரண்டு வேறுபட்ட ஆரிய வகுப்பினர் இருந்து வந்திருப்பதும், அவர்கள் வேறுபட்டவர்களாக மட்டுமன்றி, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்களாகவும், ஒருவர் மீது ஒருவர் பகைமை கொண்டவர்களாகவும் இருந்து வந்தனர் என்பதும் தெளிவாகிறது. இரு வகையான ஆரியர்கள் இருந்தனர் என்பது வெறும் ஊகமோ அல்லது கற்பனையோ அல்ல. இது நிதர்சன உண்மையாகும். இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

II

இத்தகைய முதலாவது சான்று பல்வேறு வேதங்களின் புனிதத் தன்மையை அங்கீகரிப்பதில் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வரும் பாரபட்சமாகும். உண்மையில் இரண்டு வேதங்கள்தான் இருக்கின்றன என்பது வேதங்களைப் பற்றி ஆராய்ந்து வரும் அனைவருக்கும் தெரியும். அவை (1) ரிக்வேதம், (2) அதர்வ வேதம், சாம வேதமும் யஜூர் வேதமும் ரிக் வேதத்தின் வேறுபட்ட வடிவங்களே அன்றிவேறல்ல.

அதர்வ வேதம் ரிக் வேத்தைப் போன்றே புனிதமானது என்பதை பிராமணர்கள் நீண்டகாலம் வரை அங்கீகரிக்கவில்லை என்பதை வேத ஆராய்ச்சியாளர்கள் நன்கு அறிவர். இந்தப் பாராபட்சம் ஏன்? ரிக் வேதம் மட்டும் ஏன் புனிதமானதாகக் கருதப்பட்டது? அதர்வ தேவம் கீழானது என்று ஏன் எண்ணப்பட்டது? இதற்கு நான் அளிக்கக்கூடிய பதில் இதுதான்: இந்த இரண்டு வேதங்களும் இரு வேறுபட்ட ஆரிய இனத்தவர்களுடையவையாக இருந்தன. இந்த இரு பிரிவினரும் ஒன்றாக ஆனபோதுதான் அதர்வ வேதம் ரிக்வேதத்துக்கு இணையாகக் கருதப்படத் தொடங்கியது.

இதுவன்றி, குறிப்பாக சிருஷ்டி பற்றி இரு வேறுபட்ட சித்தாந்தங்கள் இருந்து வந்துள்ளன என்பதற்கு பிராமணிய இலக்கியத்தில் ஆங்காங்கு பல சான்றுகள் காணக்கிடக்கின்றன; இரண்டு வேறுபட்ட ஆரிய இனங்கள் இருந்தன என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. இந்த இரு சித்தாந்தங்களில் ஒன்றைப் பற்றி ஏற்கெனவே இயல் 2ல் விவரித்திருக்கிறோம். இப்போது இரண்டாவது சித்தாந்தத்தைப் பற்றிப் பார்ப்போம்.

முதலில் வேதங்களை எடுத்துக் கொள்வோம். பின்கண்ட சித்தாந்தம் தைத்ரீய சம்ஹிதையில் காணப்படுகிறது: (முயிர், தொகுதி I, பக்கம் 26)

தை.ச.vi 5.6.1, - “புத்திரச் செல்வம் வேண்டி ஒருசமயம் அதிதி தெய்வங்களுக்கு பலி உணவை சமைத்து நிவேதனம் செய்தாள். அந்தத் தெய்வங்கள் அந்த உணவில் எஞ்சிய பகுதியை அதிதிக்கு வழங்கினர். அவள் அதை உண்டாள். நாளடைவில் அவளுக்குக் கரு தரித்தது. அவளுக்கு நான்கு ஆதித்தியர்கள் பிறந்தனர். பிறகு இரண்டாவது தடவையாக பலி உணவைச் சமைத்தாள். அப்போது அவள் மனத்தில் பின்கண்ட எண்ணம் தோன்றிற்று: ‘தெய்வங்களுக்கு படைத்த நைவேத்தியத்தில் எஞ்சிய பகுதியை உண்டு எனக்கு இந்தப் புதல்வர்கள் பிறந்திருக்கிறார்கள். பலி உணவை முதலில் உண்டால் இவர்களை விடவும் மிகவும் புகழ்சான்ற பிள்ளைகள் பிறக்கக் கூடுமல்லவா!

இந்த எண்ணம் அவள் மனதில் பதியவே பலி உணவை முதலில் உண்டாள்; இதன் பேரில் அவளுக்குக் கரு தரித்தது; ஆனால் குழந்தை பிறக்கவில்லை; அரைக்குறையாக ஒரு முட்டைதான் அவள் வயிற்றிலிருந்து வெளிவந்தது. பின்னர் மூன்றாவது பலி உணவை சமைத்தாள்; ‘எனது இந்தப் பிரார்த்தனைக்கு நற்பலன் கிட்டட்டும்’ என்று வேண்டிக் கொண்டால். அப்போது ஆதித்தியர்கள் பின்வருமாறு கூறினர்: ‘நாங்கள் ஒரு வரம் தருகிறோம். இப்போது தோன்றப் போகிறவன் எங்களுக்குரியவனாக இருப்பான்; அவனது வழித்தோன்றல்களில் எவன் வளமிக்க வாழ்வு பெறுகிறானோ அவன் எங்களை மகிழ்விப்பான்.’ இந்த வரத்தின் பலனாக ஆதித்திய வைவசுவதன் பிறந்தான். அவனது வழித்தோன்றல்கள்தான் மனிதர்கள். இவர்களில் வேள்வி செய்பவனே வளம் பெற்று தெய்வங்களை மகிழ்விப்பான்.

இனி அடுத்து பிராமணங்களை எடுத்துக் கொள்வோம். சிருஷ்டி பற்றி சதபத பிராமணங்களில் பின்கண்ட விவரங்கள் காணப்படுகின்றன:

ச.பி. I. 8.1.1 – காலையில் மனு உடல் அலம்புவதற்காக தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்கள். கையில் தண்ணீரை எடுத்து உடல் அலம்புவதுதான் வழக்கம். இந்த வழக்கப்படி மனு கைகளில் தண்ணீரை எடுத்த போது, அதில் ஒரு மீன் இருந்தது. அந்த மீன் பின்கண்டவாறு பேசிற்று: ‘எனக்கு நீங்கள் பாதுகாப்பளித்தால் நான் உங்களைக் காப்பாற்றுவேன்.’ ‘எதிலிருந்து என்னைக் காப்பாற்றுவாய்?’ என்று மனு கேட்டார்: ‘ஒரு பிரளயம் ஏற்பட்டு உயிர் ராசிகள் அனைத்தையும் அடித்துச் சென்றுவிடும்; அப்போது அந்தப் பிரளயத்திலிருந்து உங்களை நான் காப்பாற்றுவேன். (முய்ர், தொகுதி I, பக்கங்கள் 181-184) ‘சரி, உன்னைப் பாதுகாப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்” என்று கேட்டார் மனு.

அதற்கு மீன் பின்வருமாறு பதிலளித்தது: ‘நாங்கள் சிறு மீன்களாக இருக்கும்வரை எப்போதும் எங்களுக்கு அபாயம்தான்; ஏனென்றால் பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்கி விடும்; எனவே, நீங்கள் முதலில் என்னை ஒரு ஜாடிக்குள் வைத்துக் காப்பாற்ற வேண்டும். ஜாடியைவிடவும் பெரிதாக நான் வளர்ந்து விடும்போது ஓர் அகழியை வெட்டி அதில் என்னைப் பாதுகாத்து வையுங்கள். அகழியைவிடவும் நான் வளர்ந்து விடும்போது என்னை மகாடலில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள். அப்போது நான் அபாய எல்லையைத் தாண்டி விடுவேன்.’

உடனேயே அந்த மீன் படிப்படியாக வளர ஆரம்பித்தது; பிரம்மாண்டமானதாக வளர்ந்ததும் மீன் பின்வருமாறு கூறிற்று: ‘இந்த ஆண்டில் வெள்ளம் வரும். வெள்ளம் அதிகரித்ததும் நீங்கள் ஒரு கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். பிறகு உங்களை நான் வெள்ளத்திலிருந்து காப்பாற்றுவேன்!’ மீன் கூறியப்படியே மனு அதனை மாகடலில் கொண்டுபோய்ச் சேர்த்தார். பிறகு மீன் குறிப்பிட்ட அதே ஆண்டில் மனு ஒரு கப்பலை நிர்மாணித்து, மீனிடம் கொண்டு சென்றார். மீன் அவரை நோக்கி நீந்திச் சென்றது. அவர் கப்பலின் கம்பி வடத்தை மீனின் கொம்புடன் பிணைத்து விட்டார். இவ்விதமாக மனு வடக்கிலுள்ள இந்த மலைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மீன் கூறிற்று: ‘நான் உங்களைக் காப்பாற்றி விட்டேன். கப்பலை மரத்துடன் கட்டிப்போடுங்கள். ஆனால் நீங்கள் மலையில் இருக்கும்போது தண்ணீர் உங்களைத் துண்டித்து விடாதபடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் வடியும்போது நீங்களும் அதனுடன் சேர்ந்தே கீழே இறங்குங்கள். மீன் கூறியபடியே மனுவும் தண்ணீர் வடியும் போது அதனுடன் சேர்ந்து கீழே இறங்கினார். இவ்வாறு அவர் இறங்கிய காரணத்தால் அந்த வடபுலத்து மலையின் பெயர் அதன் பேரிலேயே வழங்கலாயிற்று. பிரளயம் எல்லா உயிர் ராசிகளையும் அடித்து சென்றுவிட்டது. மனு மட்டும் இப்போது அங்கு தன்னந்தனியாக இருந்தார். புத்திர பாக்கியம் வேண்டி அவர் வழிபடலானார்; பல்வேறு கடினமான சமயச் சடங்குகளை மேற்கொண்டார். பசு படையல் வைப்பதும் இதில் அடங்கும்.

நெய், கெட்டியான பால், பாற்கட்டி ஊறல் நீர், தயிர் முதலியவற்றை நிவேதனமாக தண்ணீரில் இட்டார். பின்னர் ஓராண்டில் ஒரு பெண் தோன்றினாள். அவள் வழவழப்பாகக் காட்சியளித்தாள். அவளது காலடியில் நெய் ஒட்டிக் கொண்டிருந்தது. மித்ரனும் வருணனும் அவளைச் சந்தித்தனர். ‘நீ யார்?’ என்று அவளைக் கேட்டனர். ‘மனுவின் மகள்’ என்று அவள் பதிலளித்தாள். ‘எங்களுடையவள் என்று சொல்’ என்று அவர்கள் எதிர்த்துக் கூறினர். “இல்லை, நான் அவருடையவள். அவர்தான் என்னைத் தோற்றிவித்தவர்’ என்று அவள் பதில்மொழி இறுத்தாள். அவள் மீது அவர்கள் உரிமை கொண்டாட விரும்பினர். இதற்கு அவள் ‘சரி’ என்றும் சொல்லாமல், ‘முடியாது’ என்றும் சொல்லாமல் அங்கிருந்து அகன்று விட்டாள்.

பின்னர் அவள் மனுவிடம் வந்தாள். ‘நீ யார்?’ என்று மனு கேட்டார். ‘உங்கள் புதல்வி’ என்று அவள் பதிலளித்தாள். ‘என்ன ஆச்சரியம், நீ என் மகளா?’ என்று மனு மிகவும் வியப்போடு மீண்டும் வினவினார். வெண்ணெய், கெட்டியான பால், பாற்கட்டி ஊறல் நீர், தயிர் முதலிய இந்தத் திருப்படையல் பொருள்களை நீரில் அர்ப்பணித்து அவற்றிலிருந்து நீங்கள்தான் என்னைப் படைத்தீர்கள். நான் உங்கள் ஆசியால் தோன்றியவள். நீங்கள் என்னை உங்கள் வேள்வியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் என்னை வேள்வியில் பயன்படுத்தினால் உங்களுக்குப் புத்திர செல்வமும், கால்நடைச் செல்வமும் பெருகும்.

என் மூலமாக நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிட்டும்’ என்று அவள் கூறினாள். அவ்வாறே மனு அவளை – இதாவை – வேள்வியில் பயன்படுத்திக் கொண்டார். புத்திரச் செல்வம் வேண்டி கடுமையான பல சமயச் சடங்குகளைச் செய்தார். இவ்வாறுதான் மனுவுக்கு இந்த உலகில் வழித்தோன்றல்களும், ஏனைய ஜீவராசிகளும் மீண்டும் தோன்றின; உலகில் செல்வ வளங்களும் பெருகின.”

2) ச.பி. (முயிர், தொகுதி I, பக்கம் 30) – “இந்தக் காரணங்களால் ‘பிரஜாபதி அந்த உலகங்களைப் படைத்த பிறகு பூமியைத் தாங்கிக் கொண்டிருந்தார் எனக் கூறுகிறார்கள். அவருக்காக இந்த மூலிகைகள் உணவாக சமைக்கப்பட்டன. அந்த உணவை அவர் உண்டார். அதன் பின்னர் அவர் கருத்தரித்தார். அவர் தமது மேல் உயிர் மூச்சிலிருந்து தேவர்களையும், கீழ் உயிர் மூச்சிலிருந்து மனிதர்களையும் படைத்தார்.”

3) ச.பி (மேற்படி நூல், பக்கம் 24) vii. 5.2.6. – ஆதியில் பிரஜாபதி இந்தப் பிரபஞ்சமாக மட்டுமே இருந்தார். உணவைப் படைத்து இனப்பெருக்கம் செய்ய அவர் விரும்பினார். அவர் தமது மூச்சிலிருந்து விலங்குகளைப் படைத்தார். தமது ஆன்மாவிலிருந்து மனிதனையும், தமது கண்ணிலிருந்து ஒரு குதிரையையும், தமது மூச்சிலிருந்து ஒரு காளையையும், தமது செவியிலிருந்து ஒரு செம்மறியாட்டையும், தமது குரலிலிருந்து ஒரு வெள்ளாட்டையும் உருவாக்கினார்.

அவர் தம்முடைய மூச்சுகளிலிருந்து விலங்குகளைப் படைத்ததால் ‘மூச்சுகள் என்பவை விலங்குகள்’ என மனிதர்கள் கூறுகின்றனர். ஆன்மாதான் இத்தகைய மூச்சுகளி.ல் முதலாவது, பிரஜாபதி தம்முடைய ‘ஆன்மாவிலிருந்து மனிதனை உருவாக்கியதால்’ மனிதன் மிருகங்களில் முதலாவது மிருகமும் மிகவும் வலிமை படைத்த மிருகமும்’ என்று கூறுகின்றனர். ஆன்மாதான் அனைத்து மூச்சுகளும்; ஏனென்றால் எல்லா மூச்சுகளும் ஆன்மாவையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. அவர் மனிதனை தம்முடைய ஆன்மாவிலிருந்து தோற்றுவித்ததால் ‘மனிதனே எல்லா மிருகங்களும்’ ஏனென்றால் இவை யாவும் மனிதனுடையவையே என்று கூறுகின்றனர்.”

4) ச.பி. (மேற்படி நூல், பக்கம் 31) X. 1.3.1. – “பிரஜாபதி எல்லா உயிர் ராசிகளையும் படைத்தார். அவர் தம்முடைய மேல் மூச்சுகளிலிருந்து தேவர்களை உருவாக்கினார்; தமது கீழ் மூச்சுகளிலிருந்து அநித்திய ஜீவன்களைத் தோற்றுவித்தார். பின்னர், உயிரினங்களை விழுங்கக்கூடிய மரணத்தைப் படைத்தார்.

5) ச.பி. (மேற்படி நூல், பக்கம் 25) xiv. 4.2.1. – “இந்தப் பிரபஞ்சம் ஆதியில் ஆன்மாவாக மட்டுமே புருஷன் வடிவத்தில் இருந்தது; உற்று நோக்கியபோது புருஷன் தன்னைத் தவிர (அல்லது ஆன்மாவைத் தவிர) வேறு எதையும் பார்க்கவில்லை. அவர் முதலில் இவ்வாறு சொன்னார்: ‘இது நான்தான்!’ பிறகு அவர் நான் என்ற பெயர் கொண்டவரானார். எனவேதான் இன்றும்கூட ஒரு மனிதனை அழைக்கும்போது ‘நான்தான் பேசுகிறேன்’ என்று முதலில் கூறுகிறான், பின்னர்தான் தனது மற்ற பெயரைக் கூறுகிறான்.

இந்தப் பூர்வ பாவங்கள் எல்லாம் எரிக்கப்பட்டு விட்ட பிறகு அவர் புருஷன் என அழைக்கப்ட்டார். புருஷன் தன்னந்தனியாக இருப்பதற்கு பயப்பட்டார். இன்றும் கூட மனிதன் தனியாக இருப்பதற்கு அச்சமடைய இதுவே காரணம். ‘என்னைத் தவிர வேறு எவரும் இல்லாதிருக்கும்போது நான் எதற்காகப் பயப்பட வேண்டும்?’ என்று புருஷன் தனக்குள் சொல்லிக் கொண்டார். பிறகு இந்த பயம் அவரை விட்டு விலகிச் சென்றது. எனினும் தன்னந்தனியாக இருப்பது புருஷனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனவே தான் இப்போதும்கூட தனியாக இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைவதில்லை. புருஷன் இன்னொரு துணையை நாடினார். தானே ஆணாகவும் பெண்ணாகவும் மாறி கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்; எனவே தன்னைத் தானே இரண்டு பகுதிகளாக ஆக்கிக்கொண்டார். அப்போதிருந்து கணவன் மனைவி தோன்றினர்.

‘ஒருவர் தன்னந்தனியாக இருப்பது பிளக்கப்பட்ட பயிரைப் போன்றதாகும்’ என்று யாக்ஞவல்க்யர் கூறினார். எனவே இந்த வெற்றிடம் பெண்ணைக் கொண்டு நிரப்பப்படுகிறது. புருஷன் அவளுடன் கூடி வாழ்ந்தனர். அவர்களிடமிருந்து மனிதர்கள் தோன்றினர். அவள் சிந்திக்கலானாள்: ‘தன்னிலிருந்தே என்னை உருவாக்கி எப்படி அவர் என்னுடன் கூடி வாழ முடியும்? ஓ, நான் மறைந்துவிட வேண்டும்!; (மேற்படி நூல், பக்கம் 28-29) பிறகு அவள் பசுவாக மாறினாள்; புருஷன் காளையாக மாறினார்.

அவர் அவளுடன் சுகித்து வாழ்ந்தார். அவர்களிடமிருந்து பசுக்கள் தோன்றின. பிறகு அவர்களில் ஒருவர் பெண்குதிரையாகவும் மற்றவர் ஆண் குதிரையாகவும் மாறினர்; இதே போல் ஒரு பெண் கழுதையாகவும் மற்றவர் ஆண் கழுதையாகவும் மாறினர். புருஷர் அவளுடன் கூடி வாழ்ந்தார். அவர்களிடமிருந்து பிளவுபடாத குளம்புகளுடைய விலங்கினங்கள் தோன்றின.

ஒருவர் பெண் வெள்ளாடாகவும் மற்றவர் ஆண் வெள்ளாடாகவும், ஒருவர் பெண் செம்மறியாடாகவும் மற்றவர் ஆண் செம்மறியாடாகவும் மாறினர். அவரும் அவளும் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களிடமிருந்து வெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் பிறந்தன. இவ்வாறாக எறும்புகள் முதல் எல்லா வகையான உயிர் ராசிகளும் ஜோடி ஜோடியாகப் பிறந்தன.”

தைத்ரீய பிராமணம் பின்வருமாறு கூறுகிறது:

தை.பி. (மேற்படி நூல், பக்கம் 28-29) ii.2.9 – “ஆரம்பத்தில் இந்தப் பிரபஞ்சம் ஒன்றுமில்லாததாக இருந்தது. வானமோ, பூமியோ, காற்று மண்டலமோ இல்லை. எதுவுமில்லாததாக இருந்தபோது ‘சரி, இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்’ என்று அது தீர்மானித்தது. எனினும் பிறகு அது உணர்ச்சி வயப்பட்டது. அதிலிருந்து புகை தோன்றிற்று. மீண்டும் அது உணர்ச்சி வயப்பட்டது. அதிலிருந்து அனற் கொழுந்து தோன்றிற்று. அது மீண்டும் உணர்ச்சி வயப்பட்டது.

அதிலிருந்து சுவாலைகள் தோன்றின. அது மீண்டும் உணர்ச்சி வயப்பட்டது. அப்போது அது மேகம் போல் சுருங்கி விட்டது. அதில் ஒரு துளை போடப்பட்டதும் அது கடலாகி விட்டது. மக்கள் கடல் நீரை அருந்துவதில்லை. அதனை இனப்பெருக்க இடமாக அவர்கள் கருதுவதே இதற்குக் காரணம். அப்போதிருந்துதான் ஒரு விலங்கு பிறப்பதற்கு முன்னர் தண்ணீர் வெளிப்படுகிறது. இதற்கு பின்னர் தசஹோத்ரி (ஒரு குறிப்பிட்ட விதிமுறை) தோற்றுவிக்கப்பட்டது.

பிரஜாபதிதான் அந்த தசஹோத்ரி. தன்னொழுக்கத்தில் எவன் மிகவும் கண்டிப்பைக் கடைப்பிடிக்கிறானோ அவன் வெற்றி பெறுகிறான். அது அப்போது தண்ணீராக இருந்தது. பிரஜாபதி உணர்ச்சி மேலிட ‘நான் எதற்காக பிறந்தேன். அப்படியே பிறந்தாலும் எந்த ஆதாரமுமில்லாமல் ஏன் பிறக்க வேண்டும்’ என்று கூறி அழுதார். அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளி நீரில் விழுந்து பூமியாயிற்று. அவர் துடைத்த மற்றொரு கண்ணீர்த் துளி வளிமண்டலமாயிற்று.

அவர் மேல் நோக்கித் துடைத்தக் கண்ணீர்த் துளி ஆகாயமாயிற்று. அவர் அழுத (ஆராதித்) சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இந்த இரண்டு உலகங்களும் ரோதஸி எனப் பெயர் பெற்றன. இதை அறிந்தவன் இல்லத்தில் எவரும் அழுவதில்லை. இதுதான் இந்த உலகங்களின் பிறப்பு. இந்த உலகங்களின் பிறப்பை அறிந்தவன் இவ்வுலகங்களில் எத்தகைய இன்னல் இடுக்கண்களுக்கும் துன்ப துயரங்களுக்கும் உள்ளாக மாட்டான். பிரஜாபதி இந்த பூமியை ஆதார மையமாகப் பெற்றார். இவ்வாறு இந்தப் பூமியை ஆதார மையமாகப் பெற்ற பிறகு, இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது.

அவர் கடும் தவம் புரிந்தார். இதனால் அவர் கருவுற்றார். அடிவயிற்றிலிருந்து அசுரர்களைத் தோற்றுவித்தார். அவர்களுக்கு மண்பாண்டத் தட்டில் உணவு பரிமாறினார். பின்னர் அவர் தனது உடலை விட்டொழித்தார். அது இருட்டாயிற்று. இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு மீண்டும் ஏற்பட்டது. அவர் கடும் தவம் மேற் கொண்டார். அவர் கருவுற்றார். தமது பிறப்பு உறுப்பிலிருந்து உயிர் ராசிகளை (பிரஜைகள்) படைத்தார். அவர்களைத் தமது பிறப்பு உறுப்பிலிருந்து படைத்ததால் அவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக உள்ளனர்.

அவர்களுக்கு அவர் மரத்தாலான தட்டில் பாலை வழங்கினார். பிறகு அந்த தனது உடலை வீசியெறிந்தார். அது நிலா வெளிச்சம் ஆயிற்று. இனப்பெருக்கம் செய்ய வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அவர் கடும் தவம் மேற்கொண்டார். அவர் கருவுற்றார். தமது அக்குள்களிலிருந்து பருவ காலங்களைத் தோற்றுவித்தார். அவர்களுக்கு ஒரு வெள்ளித் தட்டில் வெண்ணெயை வைத்துக் கொடுத்தார். அந்த உடலைத் தூக்கியெறிந்தார். அது பகலையும் இரவையும் பிணைக்கும் காலமாயிற்று. இனப்பெருக்கம் செய்ய வேண்டுமென்ற ஆசை அவருக்கு மீண்டும் ஏற்பட்டது. அவர் கடும் தவம் மேற்கொண்டார் அவர் கருவுற்றார். அவர் தமது வாயிலிருந்து தெய்வங்களைப் படைத்தார். அவர்களுக்கு தங்கக் கோப்பையில் சோமபானம் தந்தார். அத்துடன் அவர் தமது உடலைத் துறந்தார். அது பசுவாயிற்று. இவைதாம் பிரஜாபதியின் இனப்பெருக்கங்கள். இதை அறிந்தவன் சந்ததியைப் பெறுகிறான்.

‘நமக்குப் பகற்பொழுது (திவம்) வந்துவிட்டது’ என்ற இந்தக் குதூகலம் தெய்வங்களின் பரத்துவத்தைக் குறிக்கிறது. இவ்வாறு தெய்வங்களின் பரத்துவத்தை அறிபவன் தெய்வங்களை அடைகிறான். இதுதான் பகற் பொழுதுகளின், இராப்பொழுதுகளின் தோற்றமாகும். இவ்விதம் பகற்பொழுதுகளின், இராப் பொழுதுகளின் தோற்றத்தை அறிபவன் பகலிலும் இரவிலும் எத்தகைய துன்பத்துக்கும் உள்ளாக மாட்டான்.

மனம் (அல்லது ஆன்மா, மனஸ்) சூன்யத்திலிருந்து உருவாயிற்று. மனம் பிரஜாபதியைத் தோற்றுவித்தது. பிரஜாபதி கால் வழியை உருவாக்கினார். இவையனைத்தும், உள்ளவை யாவும் முற்றிலும் மனத்தையே ஆதார அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதையே பிரம்மா சுவோவசியம் எனக் குறிப்பிட்டார். இவ்விதம் வைகறையை (உஷாவை) அறிந்தவன் மேன்மேலும் வெளிச்சம் காண்கிறான்; இனப்பெருக்கத்தையும் கால்நடை வளத்தையும் பெறுகிறான்; பரமேஸ்தின் நிலையை அடைகிறான்."

3) தை.பி. ii.3.8.1. – “பிரஜாபதி இனப்பெருக்கம் வேண்டுமென்று விரும்பினார். கடும் தவம் மேற்கொண்டார். அவர் கருவுற்றார். மஞ்சள் கலந்த பழுப்பு வண்ணமாக மாறினார். இதனால்தான் கருத்தரித்த ஒரு பெண் மஞ்சள் நிறமாக இருந்து பழுப்பு நிறமாக மாறுகிறாள். கரு பூரண வளர்ச்சியடைந்த போது அவர் களைப்படைந்தார்; களைப்படைந்ததால் அவர் கறுப்பு கலந்த பழுப்பு நிறமானார். இதனால்தான் சோர் வடைந்தவர்கள் கறுப்பு கலந்த பழுப்பு நிறமாகிறார்கள். அவரது மூச்சு உயிர்த் துடிப்போடு இருந்தது. அந்த மூச்சோடு (அசு) அவர் அசுரர்களைப் படைத்தார். இதில்தான் அசுரர்களின் அசுரத் தன்மை பொதிந்துள்ளது.

இவ்விதம் அசுரர்களின் அசுர இயல்பை அறிந்தவன் உயிர்த்துடிப்புடையவனாகிறான். மூச்சு அவனைக் கைவிட்டு விடுவதில்லை. அசுரர்களைப் படைத்த பிறகு பிரஜாபதி தம்மை மூதாதையாகக் கருதிக் கொண்டார். அதன்பின்னர் அவர் மூதாதையாரை (பிதிர்களை) படைத்தார். இதில்தான் மூதாதையர்களின் பிதிர் தன்மையை அறிந்தவர்தானே மூதாதையாகிறார்; பிதிர்கள் அவருக்கு நைவேத்தியம் படைக்க முற்படுகிறார்கள். மூதாதையர்களைப் படைத்த பிறகு அவர் சிந்தனை செய்தார். இதன் பின்னர் மனிதர்களைப் படைத்தார். இதில்தான் மனிதர்களின் மனித தன்மை பொதிந்துள்ளது.

மனிதர்களின் மனிதத்தன்மையை அறிந்தவன் விவேகமிக்கவனாகிறான். அப்போது மனம் அவனைக் கைவிட்டு விடுவதில்லை. அவர் மனிதர்களைப் படைத்துக் கொண்டிருந்தபோது வானுலகில் பொழுது புலர்ந்தது. இதன் பின்னர் அவர் தேவர்களைப் படைத்தார். இதில் தேவர்களின் தெய்வீகத்தன்மை அடங்கியுள்ளது. இவ்விதம் தேவர்களின் தெய்வீகத் தன்மையை அறிந்தவர்களுக்கு வானுலகில் பகற்பொழுது தோன்றுகிறது. இவைதான் நான்கு நீரோடைகள். அதாவது தேவர்கள், மனிதர்கள், பிதிர்கள், அசுரர்கள் இவை யாவற்றிலும் தண்ணீர் காற்று போல் இருக்கிறது.

4. தை.பி.iii.1.2.3.9 – “சூத்திரன் சூனியத்திலிருந்து தோன்றியிருக்கிறான்.

சிருஷ்டியின் தோற்றம் பற்றி தைத்ரீய ஆரண்யகத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டிருக்கிறது: (முய்ர், தொகுதி I, பக்கம் 32)

தை.ஆ.i.12.3.1 – “எங்கும் தண்ணீராக இருக்கிறது. பிரஜாபதி தன்னந்தனியாக ஒரு தாமரை இலையில் அமர்ந்திருக்கிறார். ‘இதை நான் சிருஷ்டிப்பேன்’ என்ற ஆசை அவர் மனத்தில் எழுந்தது. எனவேதான் ஒரு மனிதன் தன் மனத்தில் எதைக் குறிக்கோளாகக் கொண்டாலும் அதை சொற்களில் வெளிப்படுத்துகிறான்; செயலில் செய்து முடிக்கிறான். இதனால் தான் இந்தச் செய்யுட்பகுதி இங்கு உரைக்கப்படுகிறது.

‘ஆரம்பத்தில் ஆர்வ வேட்கை மனத்தில் எழுகிறது, இதுதான் மனத்தின் கருமூலம், ஞானிகள் தமது அறிவாற்றல் மூலம் ஆராய்ந்து, இருப்பவற்றுக்கும் இல்லாதவற்றுக்கும் இடையேயான பிணைப்பை இதயத்தில் கண்டுணர்கின்றனர். (ரிக் வேதம் X. 129.4). இதை அறிந்த மனிதன் எதை விரும்புகிறானோ, அதை அடைகிறான். பிரஜாபதி கடும் தவம் மேற்கொண்டார். இவ்வாறு கடும் தவம் மேற்கொண்டு அவர் தமது உடலைக் குலுக்கினார். அதன் தசையிலிருந்து அருணர்கள், கேதுக்கள், வாதரசனர்கள் தோன்றினர். அவரது நகங்கள் வைகாநசர்களாகவும், ரோமங்கள் வாலகில்லியர்களாகவும் மாறின. அவரது சரீரத்தில் கசிந்த வேர்வையிலிருந்து ஓர் ஆமை உருவாகி நீரில் தவழ்ந்து கொண்டிருந்தது.

‘நீ என் சருமத்திலிருந்தும் சதையிலிருந்தும் தோன்றினாய்’ என்று பிரஜாபதி கூறினார். ‘இல்லை, நான் இங்கு முன்னமேயே இருந்து வருகிறேன்’ என்று ஆமை பதிலளித்தது. இந்த ‘முன்னமேயேயில்‘ தான் அதாவது பூர்வத்தில்தான் ஒரு மனிதனின் புருஷத்தன்மை அடங்கியுள்ளது. ஒரு மனிதனாக மாறிய புருஷன் ஆயிரம் தலைகளுடனும், ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் பாதங்களுடனும் எழுந்தார். (ரி.வே.X.90.1).

‘நீ என் முன்னால் தோன்றிவிட்டாய், முதலில் இதைச் செய்’ என்று பிராஜாபதி புருஷனிடம் கூறினார். பிறகு இரு கரங்களின் இடுக்கிலும் தண்ணீரை ஏந்தி கிழக்கே தெளித்து, ‘நீ சூரியனாகக் கடவது’ என்று கூறினார். இதனைத் தொடர்ந்து சூரியன் தோன்றினான். அது கிழக்கு திசை ஆயிற்று. பின்னர் அருணகேது தண்ணீரை எடுத்து தெற்கில் தெளித்து ‘நீ அக்னியாக கடவது’ என்று கூறினார். அதிலிருந்து அக்னி தோன்றினான். அது தெற்கு திசை ஆயிற்று. அடுத்து, அருண கேது நீரை தெற்கில் தெளித்து ‘நீ வாயுவாகக் கடவது’ என்று கூறினார். அதிலிருந்து வாயு தேவன் தோன்றினான். அது மேற்குத் திசை ஆயிற்று. பிறகு அருண கேது நீரை வடக்கில் தெளித்து ‘நீ இந்திரனாகக் கடவது’ என்று கூறினார். அதிலிருந்து இந்திரன் தோன்றினான்.

அது வட திசை ஆயிற்று. அதன்பின்னர் அருண கேது நீரை மத்தியில் தெளித்து ‘நீ புஷனாகக் கடவது‘ என்று கூறினார். அதிலிருந்து புஷன் தோன்றினான். அதுதான் இந்தத் திசை. பிறகு அருண கேது நீரை மேலே தெளித்து ‘நீங்கள் தேவர்கள் ஆகக் கடவது’ என்று கூறினார். அதிலிருந்து தேவர்களும், மனிதர்களும், பிதுர்களும், கந்தருவர்களும், அப்சரசுகளும் தோன்றினர். அது மேல் திசை ஆயிற்று.

ஆங்காங்கே சிதறிய நீர்த்துளிகளிலிருந்து அசுரர்களும், ராட்சதர்களும், பிசாசுகளும் உருவாயினர். எனவே அவர்கள் அழிந்துபட்டனர்; நீர்த் திவலைகளிலிருந்து அவர்கள் தோன்றியதே இதற்குக் காரணம். இதிலிருந்துதான் பின்கண்ட செய்யுட் பத்தி உச்சரிக்கப்படுகிறது: ‘விவேகம் நிறைந்த நீர்நிலைகள் கருவுற்று சுயவாம்புவைத் தோற்றுவித்தபோது, அவற்றிலிருந்து இந்தப் படைப்புகள் யாவும் உருவாக்கப்பட்டன. இவையனைத்தும் நீரிலிருந்து தோன்றியவை. ஆதலால் இவையாவும் பிரம சுயவாம்பு.

இவை தனித்தனியானவையாகவும் நிலையற்றவையாகவும் இருந்தன. தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட பிரஜாபதி அவற்றில் பிரவேசித்தார். இதனால்தான் பின்கண்டவாறு கூறப்படுகிறது: ‘உலகையும், உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவரும், முதலில் பிறந்தவருமான பிரஜாபதி தம்முள் தாமே பிரவேசித்தார்.’” 

(பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 5) 

Pin It