kuthoosi guruசென்னை பாலசரஸ்வதியோ, கும்பகோணம் பானுமதியோ உயர்தர மான நடனமாடுகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு நானும் நடனமாடினால் எப்படியிருக்கும்?

பெரியார் தாடி வளர்த்திருக்கிறார் என்பதற்காக உங்களில் ஒருவர் நாளைக்கே பெரியார் ஆக வேண்டுமென்பதற்காகத் தாடி வளர்க்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்?

ஆச்சாரியார் கருப்புக் கண்ணாடி போட்டிருக்கிறார் என்பதற்காக ஆக்கிரகாரக் குஞ்சு ஒன்று, அவரைப்போல் ஆகவேண்டுமென்று கருதிக் கொண்டு கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டால் எப்படியிருக்கும்?

காந்தியார் ஆறடித் தடி வைத்திருந்தார் என்பதற்காக வட்டிக் கடை குஜராத்தியொருவன் தானும் காந்தியார் ஆவதற்காக முழங்காலளவு வேட்டி கட்டிக் கொண்டு, அதே போல ஆறடித் தடி வைத்திருந்தால் எப்படியிருக்கும்?

காந்தியாரும், பெரியாரும், ஆச்சாரியாரும் நேர்மையான பொதுநல சேவை என்ற பாங்கியில் (யெமே) 30-40 ஆண்டு தினசரி முழு நேரத் தொண்டு என்ற செல்வத்தைத் திரட்டி, கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருப்பவர்கள்!

நேற்று முளைத்த அருகம்புற்கள் எவ்வளவு தான் நடித்தாலும், ஏமாற்றினாலும் அவர்களைப் போல் ஆக முடியாது!

இரவு பகலாகப் பழகி, இடுப்பை வளைத்து, கையை முறுக்கி, வியர்வையைச் சிந்திக் கற்றுக் கொண்டு, நூற்றுக் கணக்கான மேடை களில் நடனஞ் செய்து புகழ் பெற்ற ஒரு பாலசரஸ்வதி அல்லது பானுமதியைப் போலவே அங்காடி விற்கின்ற அங்கம்மாளும் திடீரென்று ஆடிப்பார்த்தால் வருமா?

மயிலைப் பார்த்து வான்கோழி ஆடினால் அதுவும் ஆட்டந்தான்! ஆனால் அழகாயிருக்காது! கண்ணை மூடிக்கொண்டுதான் ரசிக்க வேண்டியிருக்கும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகமான கரும்பு உற்பத்தி செய்தமைக்காக, திருவாளர்கள் - சவுந்தரபாண்டியனார், இருளப்பனார் - மலைச்சாமியார் ஆகிய மூவருக்கும் 1-2-3 ஆகிய பரிசுகளை முறையே வழங்கியிருக்கிறார், மதுரை மாவட்ட கலெக்டர்!

பரிசு பெற்றவர்களைப் பாராட்டுகிறேன். இது போலவே உத்தர பிரதேச ராஜ்யத்தில் அதிகக் கோதுமை, நெல், ஆகியவற்றை உற்பத்தி செய்தமைக்காக தலைமை அமைச்சர் நேருவும் பரிசு வழங்கியிருக்கிறார், சில நாட்களுக்கு முன்பு.

இரும்பு - நிலக்கரி உற்பத்தி முதல், டாக்டர் தொழில் வரையில் - பல தனி உடைமைக் கொள்ளைகளை ஒழித்துக் கட்டிவிட்டு, தேசியமயமாக்கி யிருக்கின்ற இங்கிலாந்தில் கூட இம்மாதிரிப் பரிசுகள் வழங்கப்படுவதில்லை.

ஆனால் “நஷ்ட ஈடு தராமல் எந்த உற்பத்தியையும் தேசீய மயமாக்குவதில்லை”, என்ற சட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கின்ற இந்திய சர்க்காரும் அதற்குக் கீழ்ப்பட்ட இராஜ்ய சர்க்கார்களும் பரிசுகள் வழங்குகின்றன!

ஏன் தெரியுமா? ரஷ்யாவில் இம்மாதிரிப் பரிசுகள் வழங்குகிறார்களல்லவா? அதைப் பார்த்த இங்கு “காப்பி!” அவ்வளவுதான்!

அங்கே யிருப்பது கூட்டுப்பண்ணை! பல பேர் போட்டியிட்டுத் தங்களுக்குப் பொதுவான சர்க்கார் நிலங்களில், தனித்தனியே உற்பத்தி செய்து நாட்டின் உற்பத்தியைப் பெருக்குகிறார்கள்! உற்பத்தி சாதனங்கள் முழுதும் ஆட்சியாளரால் சரிசமமாகப் பகிர்ந்து தரப்படுகின்றன. உழைப்பினாலும் அறிவினாலும் அதிக உற்பத்தி செய்து பரிசு பெறுகிறார்கள்.

ஆனால் இங்கே? தனிப்பட்ட முதலாளிகள், அதுவும் தனி வசதி பெற்றவர்கள், சர்க்கார் சலுகையுடையவர்கள், தங்கள் சொந்த நிலத்தில் அதிக உற்பத்தியைக் காட்டியிருக்கிறார்கள்; இதற்குக் கூடவா பரிசு?

அப்படியானால், இந்நாட்டிலேயே அதிகமான பத்திரிகைகளை உற்பத்தி செய்திருக்கின்ற டால்மியாவுக்கும், கோயங்காவுக்கும் பத்திரிகை உற்பத்திப் பரிசுகளை அளிக்கலாம்!

தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிந்து அதிகமான துணி உற்பத்தி செய்கின்ற பக்கிங்ஹாம் மில் டைரெக்டர்களுக்குத் துணி உற்பத்திப் பரிசு அளிக்கலாம்!

பல்வேறு தொழில்களை நடத்தி, தினம் லட்சம் லட்சமாகப் பணம் பெருக்கிக் கொண்டிருக்கின்ற உயர்திரு. முத்தைய்யா செட்டியாரவர்களுக்குப் பண உற்பத்திப் பரிசு அளிக்கலாம்!

ஆட்சியாளரையும் அதிகாரிகளையும் தம் கையில் போட்டுக் கொண்டு தமக்கு வேண்டிய எல்லாவிதச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, சுமார் ஆயிரத்துக்குக் குறையாத பஸ்களையும் லாரிகளையும் ஓட்டி, ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் பொருள் திரட்டி வருகின்ற உயர்திரு. டி. வி. சுந்தரமய்யங்காருக்குப் பஸ் - லாரி வளர்ச்சிப் பரிசு அளிக்கலாம்!

இறுதியாக, அந்த நாட்டில் ஏழ்மையும், வேலையில்லாமையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரக்கூடிய வகையில் இந்திய அரசியல் சட்டத்தை வகுத்து, அதன்படி 5 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்ற உயர் திரு. நேரு அவர்களுக்கு வறுமை உற்பத்தியின் முதற் பரிசையே வழங்கி விடலாமே!

குத்தூசி குருசாமி (20-1-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It