உன் கார்டு கிடைத்தது தம்பீ! நீ படிக்கின்ற வில்லிவாக்கம் ஹைஸ் கூலில் உன் தலைமை ஆசிரியரான அய்யங்காரின் அட்டகாசம் சகிக்க முடியவில்லை என்று எழுதுகிறார்! 5-வது ஃபாரம் வரையில் ஹிந்தி கட்டாயமாக்கப் பட்டிருக்கிறதென்றும், ஹிந்திப் புத்தகம் இல்லாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்களென்றும் எழுதியிருக்கிறாய். என்ன செய்வது? 100க்கு 90 பள்ளிகளில் இப்படித்தான் செய்கிறார்கள், இந்தப் பார்ப்பனார்! கல்வி அதிகாரிகளாலும் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. 100க்கு 90 ஜில்லா கல்வி அதிகாரிகள் அக்கிரகாரவாசிகளாகவே யிருக்கிறார்கள்!

kuthoosi gurusamy 263நாள்தோறும் காலையில் சமஸ்கிருதத்தில் கடவுள் வணக்கம் நடப்பதாக எழுதியிருக்கிறாய்! இதிலென்னப்பா ஆச்சரியம்?

“மெள்ள மெள்ள சமஸ்கிருதத்தைக் கட்டாய பாடமாக்குவதற்காகத் தான் முதலில் ஹிந்தியைக் கட்டாய பாடமாக்குகிறேன்,” - என்று 1937-ல் லயோலா கல்லூரியில் அன்றைய முதலாமைச்சரான ஆச்சாரியார் பேசியிருப்பது உனக்குத் தெரியாதா?

இன்றைக்கும் அந்தப் புண்ணியவான் ஆட்சி தானேப்பா நடந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வது?

காங்கிரஸ்காரரும் கோட்சே கூட்டத்தாரும் மாணவர்களுக்குத் தூண்டில் போடுவதில் வெகு மும்முரமாயிருக்கிறார்களே, ஏன் தெரியுமா? திராவிட மாணவர்களில் 100க்கு 100 பேர் கடவுள்-மத-காங்கிரஸ் எதிர்ப்புக் காரர்கள்- அதாவது கருஞ்சட்டைக்காரர்கள், என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியுமே!

நேற்று மாலை மட்டும் இரண்டு பெருந்தலைவர்கள் மாணவர்களிடம் போய் சரடு விட்டிருக்கிறார்கள்!

டாக்டர் சுப்பராயன் அவர்கள் மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி உணவு விடுதி மாணவர்களிடம் சரடு விட்டிருக்கிறார்!

உயர்திரு. ஆச்சாரியார் அவர்கள் தாம்பரம் கிறிஸ்துவர் கல்லூரி மாணவர்களிடம் சரடு விட்டிருக்கிறார்!

விவேகானந்தா கல்லூரி மாணவர்களைப் பற்றிக் கவலையில்லை, 100க்கு 99 பேர் அக்கிரகாரக் குட்டிகளாதலால்! ஆகையால்தான் முழு நேரமும் ஹிந்தியை ஆதரித்தும், திராவிடர் கழகத்தைத் தாக்கியும், ஆரிய-திராவிட இன வேறுபாடு கிடையாதென்றும் பேசித் தீர்த்திருக்கிறார், பொதுத் தேர்தலில் மண்ணைக் கவ்லிய டாக்டர் சுப்பராயன்!

ஆச்சாரியாரோ ஆத்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், மனித உற்பத்தியைப் பற்றியும் பேசித் தள்ளியிருக்கிறார்! கீதா காலட்சேபம் கேட்க வருகின்ற அக்கிரகாரத்து வெள்ளை முக்காட்டுக் கிழவிகளுக்குச் சொல்ல வேண்டிய சங்கதிகளைப் பகுத்தறிவு மன்றத்தின் வீரச் சேய்களிடம் உதறியிருக்கிறார்!

எதை வேண்டுமானாலும் பேசட்டும்! ஆனால், கடவுளை மறுத்துக் கூறுகிறவர்கள் தம்மைப்போல விஞ்ஞானங்களைக் கற்கவில்லை யென்றும், படிக்காதவர்களே தம்மை மூடநம்பிக்கைகாரர் என்று அழைப்பதாகவும் பேசியிருக்கிறாரே! அந்த அகம்பாவந்தான் எனக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை, தம்பீ! அவர் யாரைக் குறிப்பிட்டு இப்படிப் பேசியிருக்கிறார் என்பது யாருக்குத் தான் தெரியாது? அவர் சுட்டிக்காட்டும் பேர்வழி விஞ்ஞானம் படிக்காதிருக்கலாம் - பட்டதாரியில்லாமலிருக்கலாம்! ஆனால் இதே கடவுள் பிரச்னை, மதப் பிரச்னை பற்றி ஒரு மாபெரும் பட்டதாரிகள் மகாநாட்டில் அவரோடு வாதாடிப் பார்க்கட்டுமே! வருவாரா, ஆச்சாரியார்?

ஆச்சாரியாரை விட அதிகம் படித்த விஞ்ஞானிகளெல்லாம், “கடவுளைப் பற்றிக் கவலைப்படாதே!” என்றும், “மதம் மக்களுக்கு அபின்” என்றும் கூறியிருப்பதை ஆச்சாரியார் படித்ததில்லையா? புத்தரைவிட மகா மேதாவியா ஆச்சாரியார்? சாக்ரடீசைவிட அறிவாளியா ஆச்சாரியார்? பர்ட்ராண்ட் ரஸ்ஸலைவிட அதிக விஞ்ஞானம் படித்தவரா ஆச்சாரியார்? ஜான் ஸ்டூவர்ட் மில்லைவிடச் சிறந்த கல்விநிபுணரா ஆச்சாரியார்? சிங்காரவேலரை விட ஆராய்ச்சிக்காரரா ஆச்சாரியார்? கைவல்ய சாமியாரை விட அதிக சாஸ்திர அறிவும் அநுபவமும் பெற்றவரா ஆச்சாரியார்? இவை போல ஆயிரம் பெயர்களைக் கூறுவேன், தம்பீ!

மாணவர்களிடம் சரடு விட்டுப் பார்க்கிறார், பாவம்! அதுதான் பலிக்காது!

மாணவத்தம்பீ! ஆனால் ஒன்றை நீ மறக்கக்கூடாது. உன் படிப்பில் மிக மிகக் கவலையாயிருக்க வேண்டும். பார்ப்பனார் சூழ்ச்சிகளையும், விஷமத்தையும், ஜாதி வெறியையும் தோற்கடிக்க வேண்டுமானால் உழைப்பினால் அவர்களை மிஞ்ச வேண்டும், தம்பீ!

காலையில் 4. 30 மணிக்கே எழுந்து விடு! அதற்குமேல் தூங்கவே தூங்காதே! 5 மணி முதல் 8 மணி வரையில் ஒரு விநாடி கூட வீணாக்காமல் படி! கவனமாகப் படி! விளக்கமாகப் பேசவும், அழகா எழுதவும் பழகிக் கொள்! பள்ளியில் சுறு சுறுப்பாகவும் கவனமாகவும் கேள்! ஆசிரியர் களிடம் மரியாதையாக நடந்து கொள்! உன்னை ஓழிக்க வேண்டுமென்று நினைக்கின்ற ஆசிரியரிடம் கூட நீ அன்பாக நடந்துகொள்! மாலை நேரத்தில் நன்றாக விளையாடு! சினிமாவுக்குப் போய் கண்ணையும், கருத்தையும், உடலையும், நேரத்தையும் பணத்தையும் பாழாக்காதே! அந்த நேரத்தில் ஆடு! ஓடு! விளையாடு! உடலை “ரோஸ்உட்” மாதிரி உறுதியாக வைத்துக்கொள்! புகை பிடிப்பது போன்ற தீச்செயல்களை விட்டு விலகி நில்! இரவில் 7 முதல் 9 வரையிலாவது நன்றாகப்படி! ஓய்வு நேரங்களில் வீட்டு வேலைகளைக் கவனி! முதியவர்களுக்கு உதவிசெய்! நெறியோடு நட!

வில்லிவாக்கம் லட்சுமணா! இதுதான் மாணவனின் மதம்! இதுதான் மாணவனின் கடவுள்! வேறு மதமுங் கிடையாது; கடவுளுங் கிடையாது.

தம்பீ! நீ உன் கடமைகளைச் சரிவரச் செய்து கொண்டிரு! திடீரென்று ஒரு பெரிய கொந்தளிப்பு - சமுதாய புரட்சி - ஏற்படும்! நிச்சயம் ஏற்படும்! அப்போது உன்னையறியாமலே நீ அதில் குதிப்பாய்! உடனே ஒரு புதிய சமுதாயம் மலரும். அதில் நீ இன்று காண்கின்ற குறைகளில் எதுவுமே இருக்காது. போர் வருகின்ற வரையில் போர் வீரன் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்க வேண்டாமா?

- குத்தூசி குருசாமி (08-08-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It