இந்தி மொழியைத் தேசிய மொழி என்றும் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை வட்டார மொழிகள் என்றும் தொடர்ந்து அரசியல் சட்ட வழியும், கல்வி, நீதி, நிர்வாகம், ஊடகம் வழியாகவும் திணிப்பதுடன், இந்தியாவை ஆள்வோர் எவராயினும் இந்தி, சமற்கிருதம் தேசிய மொழிகள் எனும் ஒரு மாயைப் பரப்பி வருகின்றனர். இப்படி நமது தாய் மொழியான தமிழை இழித்தும் பழித்தும் புறக்கணித்தும் வரும் நெருக்கடியான காலத்தில் நாம் இப்போது வாழ்கின்றோம்.

anti hindi agitation 1938நமது தேசிய எழுச்சிக்குத் தடைக்கல்லாய் இருப்பது யார் என்பதிலும் ஒரு குழப்பமான நிலையைத் தற்போது உருவாக்க சிலர் முயல்கின்றனர். தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் தடையாய் இருப்பது யார், எதிரிகள் யார் என்பதை அறிவதன் வழியே தமிழ்த்தேசிய எழுச்சியை நாம் உருவாக்க முடியும். அசோகர் கால பிராமி எழுத்துக்களுக்கு முன்பே கி.மு.6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எளிய மக்கள் தங்கள் பெயர்களைப் பானைகளில் எழுதி வைத்திருப்பது தமிழி என்று அறிப்படுகிறது.

தமிழகத்தில் இன்றும் திருமணமானவர்களுக்கு வழங்கப்படும் பித்தளை, சில்வர் பாத்திரங்களில் தங்கள் பெயர்களைப் பொறித்துத்தரும் வழக்கம் இருப்பது கீழடி காலத் தமிழர்களின் தொடக்கமாகக்கூட இருக்கலாம். இப்படிப்பட்ட தொன்மையான தமிழ் நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களான நமது வரலாற்றை கண்டு அஞ்சும் ஒரு கூட்டம் கி.மு.238-இல் அசோகர் கல்வெட்டில் எழுதிவிட்டுப்போன எழுத்துக்களுக்குப் பிற்காலத்தில் பிராமி எனப் பெயரிட்டுத் தமிழின் தொன்மையைச் சமற்கிருதத்திற்குக் கீழானதாகக் கருதுவதுடன், இன்றைக்குக் கீழடியில் கிடைத்துள்ள தமிழி எழுத்துக்களைத் தமிழ் பிராமி என கூறி சிறுமைப்படுத்தி வருகிறது.

தமிழர்களின் கீழடி நகர நாகரிகம் உலகம் அறியப்படுவதைத் தடுப்பதுடன், அங்கே தமிழ்க் குடிமக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதையும் கண்டு அஞ்சும் அவர்கள் கீழடி தமிழர் நாகரிகத்தைப் பாரதப் பண்பாடு என்று வெட்கமற்று கூறுகின்றனர். சமற்கிருத மற்றும் மத அடையாளங்களை இதில் ஏற்றி தமிழ்-தமிழர் தொன்மையை மறைக்கத் திட்டமிடுகின்றனர். இது இன்று நேற்றல்ல வரலாறறிந்த காலம் தொட்டு தொடர்கிறது.

1920-ஆம் ஆண்டு தில்லிக்கும் லாகூருக்கும் இடையே ஆங்கிலேயர்கள் இருப்புப்பாதை அமைத்த போது பல மணல் மேடுகள் எதிர்ப்பட்டன. அவற்றைத் தகர்த்து எறிந்தபோது பானை ஓடுகள், காசுகள், வீட்டுப்பயன் பாட்டுப்பொருள்கள் எல்லாம் கிடைத்தன. பிறகு அந்த மேடுகளில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டபோது அங்கே ஒரு நகரமே புதைந்து கிடப்பதைப் பார்த்தார்கள், அது தான் மொகஞ்சதாரோ.

இது என்ன நாகரிகம்? இங்கே வாழ்ந்த மக்கள் யார்? என்றெல்லாம் தெரியாத நிலையில் இது ஆரிய நாகரிகம் என்று அவசரகதியில் ஆராயாமல் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அறிவித்து விட்டார்கள். அப்போது பம்பாய் நகரில் கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த ஈராஸ் என்னும் பாதிரியார் மொகஞ்சதாரோ, சிந்து சமவெளி பகுதிகளுக்குச் சென்று அங்கே கிடைத்த பானை ஓடுகள், வரிவடிவ எழுத்துக் கள் இன்னபிற பொருள்களை எல்லாம் ஆய்வு செய்து அங்கிருந்த தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என அறிவித்தார்.

ஆரியச் சார்புடைய ஆய்வாளர்கள் அவரைப் பைத்தியக்காரன் என்று தூற்றினார்கள். கி.மு.530 முதல் 486 வரை பாரசீகத்தை ஈரான் ஆண்ட மன்னர் டேரியஸ் வரலாற்றை விவரிக்கும் கெர்மன்ஷா மாநிலத்தில் பெஹிஸ்டன் மலையில் உள்ள கல்வெட்டில் ஆரியன் என்ற வார்த்தை காணப்படுகிறது. 1846 முதல் இங்கிலாந்தில் அமர்ந்து கொண்டு ரிக் வேதத்தை ஆய்வு செய்த செர்மானியரான மாக்ஸ் முல்லர் இந்தச் சொல்லை ஓர் இனத்திற்கான அடையாளமாக மாற்றி ஆரியர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்ற உணர்வை ஐரோப்பாவில் ஊன்றினார்.

இவரைத் தொடர்ந்து பிரம்மஞான சபையைத் தோற்றுவித்த ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி ஆரியர் உயர்ந்த இனம் மற்றவர்கள் ஆரியர்களுக்கு கீழானவர்கள் என்ற நச்சு விதைகளைப் பரப்பினார். இந்தியாவில் இக்கொள்கைகளை முன் வைத்து இயங்கிய பாரப்பனர்களுக்கு இது பெரு வாய்ப்பாக அமைந்தது. சமற்கிருதம் உலகிலுள்ள பல மொழிகளில் ஒரு மொழி மட்டுமல்ல மாறாக உன்னதமான ஆரியரைப் பிரித்துக்காட்டவும், ஆரியரின் சாத்திர, சடங்குகளைப் பாதுகாக்கவும் உதவிய மொழியே சமற்கிருதம் என்பது பார்ப்பனர் களின் கருத்து.

மேலும் ஆரிய தர்மம், அதன் தூய்மை, அதன் நிலைத்த தன்மை, பண்பு தவறா நிலை ஆகிய அனைத்துமே சமற்கிருத மொழியின் தூய்மையே சார்ந்திருக்கின்றன என்பது ஆரியப் பாரப்பனர்களின் மேலான எண்ணமாகும்.

இக்கருத்தின் பின்புலத்தில் சிந்து வெளி தொடங்கி இன்றைய கீழடி வரை கிடைத்து உள்ள தமிழ், தமிழர் தரவுகளைப் பார்த்து பதைக்கிறார்கள். தங்களின் ஆரிய, சமற்கிருத புனைவுகளுக்கு ஆபத்தாக இது அமையும் என்பதால் தமிழர் அடையாளத்தை மறைத்து, சமற்கிருத மேலாண்மையை நிறுவ முயல்வதுடன், சமற்கிருதத்தை திணித்து தமிழை ஒழிக்கப் பார்க்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவரும் இந்துப் பழமைவாத சிந்தனையில் முகிழ்ந்த வருமான சம்பூர்ணானந்த் ஆரியர்களின் தாயகம் இந்தியாதான் என்றும் இங்கிருந்துதான் அவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் பரவினார்கள் என்று இந்து மகாசாபை அமைப்பின் கருத்துக்களுக்கு புத்துயிர் ஊட்டினார்.

இந்திய ஒன்றியத்தின் தொடர்பு மொழிக்கான தீர்வு என்ற வகையில் சமற்கிருதம் அந்த இடத்தைப் பிடிக்கும் காலம் வரையில் வசதியின் பொருட்டு இந்திக்கே நாம் முன்னுரிமைக் கொடுத்தாக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மேனாள் தலைவர் கோல்வால்கர் கூறினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குசராத்தைச் சார்ந்தவரும் ஆரிய சமாஜத்தை அமைத்த வருமான சுவாமி தயானந்தர், இந்துப் பழமை வாதச் சடங்குகளை எதிர்த்த வங்காளியான இராசாராம் மோகன்ராய் போன்றோர் இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்கக் கோரினர்.

ஆரிய சமாஜத்தில் சேர்ந்த சிற்றரசர்கள் தங்கள் நிர்வாகப் பகுதிகளில் இந்தியை ஆட்சி மொழியாக்கினர். பலதேசிய இனமக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் காந்தி, நேரு, படேல், லால்பகதூர் சாஸ்திரி போன்ற காங்கிரசுகாரர்களும், இந்து மகாசபையைச் சேர்ந்தோரும் இந்தியைத் திணித்தனர். இந்தியாவில் நிலவும் பன் மொழிகளையும் அவர்கள் மதிக்க மறுத்தனர். ஆங்கிலேயர் ஆண்டபோதே 1937-இல் சென்னை மாகாணத்தின் ஆட்சியைப்பிடித்த காங்கிரசு கட்சியின் பிரதம அமைச்சர் இராஜாஜி ஜமன்லால் பஜாஜ் என்ற பெருவணிகரின் வற்புறுத்தலுக்கு இணங்கி தமிழகப் பள்ளிகளில் இந்தித்திணிப்பைச் செய்தார்.

அப்போது சட்டசபை உறுப்பினராக இருந்த பி. கலிபுல்லா சாகிப் இந்தித்திணிப்பு என்பது ஒரு பார்ப்பனச் சதி; இந்தியாவை இந்து இந்தியாவாக உருவாக்குவது; இந்தியைப் புகுத்தி அதை சமற்கிருத மயமாக்கி விடுவது என்கிற அவர்களின் சூழ்ச்சியைச் சட்டசபையிலேயே அம்பலப்படுத்தினார். அதுவரை எதிரும் புதிருமாய் செயல்பட்டுவந்த மறைமலையடிகள், சோமசுந்தரபாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதன், அண்ணா, மருத்துவர் தர்மாம்பாள், மீனாம்பாள் சிவராசு உள்ளிட்ட பலரும் தந்தை பெரியார் தலைமையில், தமிழறிஞர்கள். பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் தமிழ் காக்க வேற்றுமைகளைக் கடந்து ஒன்று திரண்டு இந்தி எதிர்ப்புப் போர் முரசு கொட்டினர். சிதறிக்கிடந்த தமிழர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து ஒன்றுபட்டு போராடினர். தமிழ் நாடு தமிழருக்கே என்ற உரிமை முழக்கத்தை எழுப்பினர். இராஜாஜி 1940-இல் பதவி விலகியதை ஒட்டி பள்ளிகளில் இந்தித் திணிப்பு முயற்சியும் கைவிடப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் ஆட்சி மொழி குறித்து அரசமைப்புச் சட்ட அவையில் பல சூழ்ச்சிகளைச் செய்து தேவநாகரி வரிவடிவிலான இந்தியை அரசமைப்புச் சட்டப் பகுதி 17-ஐ உருவாக்கி, விதி 343 முதல் 351 வரை ஏற்படுத்தி இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்கிக் கொண்டனர். இந்தி அல்லாத பல இனமக்களின் மொழிகளை ஒடுக்கினர். இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியை இந்திய ஆட்சிமொழி ஆக்கிட கோரினார். தமிழகத்தைச் சேர்ந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட கோரினார். இக்கோரிக்கைகள் தனிநபர் கோரிக்கைகளாக முன்வைக்கப் பட்டு யாரும் கண்டு கொள்ளாத நிலையில் அப்போது புறந்தள்ளப்பட்டது.

இந்தியாவின் ஆட்சி மொழி இந்தியா? ஆங்கிலமா? என்ற விவாதம் நடைபெற்றதே அன்றி இந்தியாவில் உள்ள தமிழ் வங்காளம் குசராத்தி, கன்னடம் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டு இனவழி தேசிய மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக்கப்படுவது குறித்த எந்த விவாதமும் எழுப்படவில்லை. ஆரிய இனம், ஆரிய தேசம், ஆரிய மொழி என அறியப்பட்ட சமற்கிருத வழி இந்தியை இந்தியாவில் திணிக்க அன்றைக்குச் செல்வாக்குச் செலுத்திய தலைவர்கள் பேயாட்டம் ஆடினர். இந்தித் திணிப்பை எதிர்த்து 1938, 1948, 1953, 1963, 1965 தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை ஈவுஇரக்கமற்று ஒடுக்கினர்.

1965-இல் இந்தியைத் திணிக்கும் அரச மைப்புச் சட்டப் பகுதி 17-ஐ நீக்கப் போராடிய தமிழக மாணவர்களைப் பொது மக்களைக் காக்கை குருவிகளைப் போல் சுட்டுப்பொசுக்கிக் கொன்று புதைத்தனர். தமிழகத்தின் வேலைவாய்ப்பில், பள்ளிகளில் ஆட்சி, நீதி, நிருவாகத்தில் இன்றைக்கும் இந்தித் திணிப்பை மேற்கொள்கின்றனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாம் விரும்பும் இடத்தை இந்தி இன்னும் பிடிக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

தகவல் தொடர்புக்கேற்ற செழுமை நிறைந்த மொழியாக இந்தி ஆக்கப்படுவதை எது தடுக்கிறது. எதனால் இந்த முயற்சியில் தோல்வி அடைந்தோம் என்பது குறித்து கவலைப்பட்டு இந்தியைத் திணிக்க முயன்றாரே அன்றி தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளை ஆட்சி மொழிகளாக்க அவர் விரும்பவில்லை.

கெட்ட மரத்தில் விளைந்த நல்ல கனி என்று போற்றப்பட்ட வாஜ்பாய் நிலையே இது வென்றால் அவரின் அரசியல் வாரிசாக தன்னை காட்டிக்கொண்டு ஒரே இந்தியா, ஒரேமொழி, ஒரே பண்பாடு என இந்தி, சமற்கிருத்த வளர்ச்சிக்கும் ஆதிக்கத்திற்கும் வழிவகை செய்யும் பாசகவின் மோடி அரசு தமிழை அழிக்க திட்டமிடுவதில் வியப்பேதும் இல்லை. தமிழ் அழிப்பு என்பது தமிழகத்தை அழிப்பது, தமிழர் அடையாளத்தை, இயற்கை வளத்தை அழிப்பது தமிழ்நாட்டை, நாட்டின் அரசியல் இறைமையை அழிப்பது என்பதாகும். சாதி ஏற்றத்தாழ்வாலும், மத வேற்றுமைகளாலும் பிரிந்து வீழ்ந்து கிடந்த தமிழகத்தில் பேரெழுச்சியை 1938 இந்தி எரிப்பு போராட்டம்தான் தமிழ்நாடு தமிழருக்கே என ஒருங்கிணைத்தது. இன்றைக்கும் நமக்குள் பல வேற்றுமைகளை உருவாக்கித் தமிழையும் தமிழர்களையும் அழிக்க பல சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே நாடு, ஒரே மொழி என ஒற்றை இந்தியாவை உருவாக்கிட இந்தி - சமற்கிருதத்தை திணிக்கும் ஆதிக்கச் சக்தி களுக்கு எதிராக தமிழ்மொழியை முன்வைத்து ஒன்றிணைவோம். தமிழ்த்தேசத்தின் வாழ்வும் எழுச்சியும் இந்தி - சமற்கிருத ஆதிக்கத்தை வீழ்த்துவதில்தான் மையம் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து தமிழர்களே ஒன்றிணை வோம். தமிழ்த்தேசத்தை எழுச்சி கொள்ள உழைப்போம். வாரீர்!

காஞ்சி அமுதன்

Pin It