ஒன்றிய அரசு எந்தெந்த வழிகளில் தமிழர் உரிமையைப் பறிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் பறித்து வருகின்றது. அதில் முதன்மையான ஒன்று மொழியுரிமை. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்குமான ஒரே பணி என்பது, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணித்து மற்ற மொழிகளை, அதிலும் குறிப்பாகத் தமிழை நசுக்குவதாகும். அப்படி ஒன்றிய அரசின் ஒரு துறையான இந்தியக் கலாச்சார உறவுக்கான கவுன்சில் (ஐ சி சி ஆர்) அதன் பங்கிற்குத் தமிழை நசுக்கும் பணியைச் செய்திருக்கிறது.

iccr 614வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்தியப் பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப ஐ சி சி ஆர் அண்மையில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. இவ்விளம்பரத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதற்காக விண்ணப்பிக்கும் ஐசிசிஆர் இணையதளத்தில் தமிழ் இடம் பெறவில்லை. “உலகின் பழைமையான மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பதை எண்ணி ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட வேண்டும்” என்று பிப்ரவரி 26, 2002 அன்று வானொலியில் பிரதமர் மோடி பேசினார். ஆனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான இருக்கைகளில் தமிழ் இல்லை. பார்ப்பனிய அரசின் சார்பாகப் பேசும் பிரதமர் தமிழ் பற்றி தம்பட்டம் அடிப்பதெல்லாம், தமிழை வளர்க்க அல்ல, தமிழை அழிக்கவே.

ஐசிசிஆர் இணையதளத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் இருக்கைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 51 இருக்கைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ் இல்லை. அதாவது தமிழுக்கான இருக்கை எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. 51 இருக்கைகளில் இந்தி மொழிக்கு மட்டும் 14 இருக்கைகள் இருக்கின்றன. அடுத்தபடியாக சமஸ்கிருதத்திற்கு 5 இருக்கைகள் இருக்கின்றன. உருது மொழிக்குத் தனியே ஒரு இருக்கையும், இந்தியுடன் இணைந்து மற்றொரு இருக்கையும் என மொத்தம் இரண்டு இருக்கைகள் இருக்கின்றன. மற்ற இருக்கைகள் இந்தியக் கல்வி, வரலாறு, தத்துவம், பொருளாதாரம், புத்த மதம், பெங்காலி நாட்டுப்புற நடனம் ஆகிய துறைகளுக்கானவை.

போலந்தில் செயல்பட்டு வந்த தமிழுக்கான இரண்டு இருக்கைகள் தற்போது ஐசிசிஆர் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெறவில்லை. போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திலும், கிராக்கூப்யாகி எலோனியன் பல்கலைக்கழகத்திலும் அமைந்திருந்த தமிழ் இருக்கைகளுக்கு, பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 2014 முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் ஜெயகிருஷ்ணனைத் தேர்வு செய்திருந்த ஐசிசிஆர் அவரையும் போலந்து அனுப்பவில்லை.

 தமிழ் வளர்ச்சியைத் தடுப்பதையே கடமையாகக் கொண்டு ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதை ஐசிசிஆர் உறுதிப்படுத்தி உள்ளது. ஐ சி சி ஆரின் “வெளிநாடுகளில் இந்திய இருக்கைகள்” அறிமுகக் குறிப்பு கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது:

“ICCR, in consultation with Indian Missions abroad, establishes Chairs of Indian Studies (Political Science, Philosophy, History, Sociology & Economics) & Hindi, Sanskrit In different foreign universities / institutes across the globe. The purpose of these Chairs, apart from familiarizing students about India its history and cultural Polity is to become a nucleus around which Indian Studies and Indian languages as given above to develop in academic institutions abroad.”

 அதாவது இந்திய மொழிகள் என்று ஐசிசிஆர் கருதுவது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மட்டும்தான் என்பதை மிக வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். உள்நாட்டில் மொழி வளர்ச்சிக்காக நிதி ஒதுக்குவது தொடங்கி வெளிநாட்டில் இருக்கைகள் அமைப்பது வரை இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் அள்ளிக் கொடுக்கப்படுகிறது. மற்ற மொழிகளுக்குக் கிள்ளிக்கூடக் கொடுக்கப்படுவதில்லை. எல்லாம் இந்திய மொழிகள்தாம். ஆனால் தங்களை மட்டுமே சுத்தமான தேசப்பற்றாளர்களாக காட்டிக் கொள்ளும் இந்துத்துவாவாதிகள் ஏன் இந்தி சமஸ்கிருதம் என்னும் இரு மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்ற மொழிகளைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை இந்தியாவில் வாழும் பல்வேறு மொழிகள் பேசும், அனைத்து மாநில மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தியும் சமஸ்கிருதமும் வளர்வது என்பது பார்ப்பனியமும் வர்ணாசிரமமும் வளர்கிறது என்பதன் பொருள். தமிழ் வளர்ந்தால் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் பார்ப்பனியத்திற்கு நேர் எதிரான சமத்துவ நெறி வளர்கிறது என்று பொருள். பார்ப்பனியம் சமத்துவத்திற்கு எதிரானது. இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஆதரவானது.

தமிழ் வளர்க்கும் பணியில் திராவிட இயக்கம் ஒரு நூறாண்டாகப் போராடி வருகிறது. இன்றும் இந்தியாவின் மற்ற மொழிகளுக்கும் சேர்த்துக் குரல் கொடுப்பது தமிழகம்தான். தமிழ் மொழி வளர்ச்சி தமிழர் உரிமை. தமிழர் உரிமையை மறுக்கும் ஒன்றிய அரசின் ஒரு துறையான ஐசிசிஆரின் செயல்பாட்டைக் கண்டித்துத் தமிழகத்தின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் குரல் எழுப்பி, தமிழ் இருக்கைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மா.உதயகுமார்

Pin It