இந்திய தேசிய இனங்களின் பன்மைத்துவ வழிபாட்டை அழிக்கும் ஓர்மை சொல்லாக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற காட்டுக் கூச்சலே வட மாநிலமெங்கும் ஒலிக்கிறது. மாற்று மதத்தவர் மீதான வெறுப்புணர்வின் உச்சமாக இச்சொல் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, சங்பரிவார கூட்டத்தால் மாற்றப்பட்டு விட்டது. இராமனை புனிதக் கடவுளாகவும், இராவணனை கொடியவனாகவும் நிலைநாட்டிய இக்கூட்டம், சமீபத்தில் காங்கிரசின் தலைவரான ராகுல் காந்திக்கு பத்து தலையைப் பொருத்தி இராவணனாக சித்தரித்தது.
இராமனும், இராவணனும் இராமாயணக் கட்டுக் கதையின் கதாபாத்திரங்களே என்றாலும், ஆரிய-திராவிடப் போரின் குறியீடுகளாக இருக்கிறார்கள். ஆரிய உயர்வுக்கு இராமனையும், தென்னிந்திய மக்களை குறிக்கும் திராவிட இனத்தை கொச்சைப்படுத்த இராவணனையும் பயன்படுத்திய பார்ப்பனியத்தினால் இந்த கட்டுக்கதை இன்று இந்திய ஒன்றியம் முழுமைக்கும் பற்றிப் படர்ந்துள்ளது. இராமனை கடவுளாக, புனிதனாக மாற்றியதோடு மட்டுமல்ல, வெறி பரப்பும் ஆயுதமாகவும் ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவார சக்திகள் சுமக்கிறார்கள்.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத புளுகல்களின் தொகுப்பே இராமாயணம். இந்தியம் முழுமைக்கும் பல நூற்றுக்கணக்கான இராமாயணக் கதைகள் உள்ளன. இது நடைபெற்ற காலத்தை திரேதாயுகம் என்கிறார்கள். அதற்கடுத்து துவாபரயுகம். இரண்டும் சேர்த்து 21 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகள். மரபணுச் சான்றுகளின் படி மனித இனம் முதன் முதலில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என அறிவியல் கூறுகிறது. அதுவும் இராமன் யாரெனவே இன்னும் தெரியாத ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் உருவானது. ஆனால் குரங்குகளாக வாழ்ந்த காலத்தில் இந்த கதை உருவானதாக எழுதி வைத்திருக்கிறார்கள்.புத்தரின் பிறப்பு நடந்து 2500 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் புத்தரைப் பற்றி இராமாயணத்தில் பேசப்படுகிறது. சமத்துவம் பேசும் இன்றைய திராவிட சித்தாந்தத்தின் அன்றைய கருத்தியல் பெளத்தம். அந்த பெளத்தத்தை மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வைப் புகுத்திய பார்ப்பனியம் அழிக்க முனைந்ததன் சான்றே இந்த இராமாயணப் புளுகல்கள்.
- “திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாத்திகனுக்கும் பேதமில்லை என்று ராமன் ரிஷியிடம் கூறியதாக அயோத்தியா காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
- சீதையைத் தேடிச் சென்ற அனுமன் இலங்கையில் புத்தர் ஆலயம் போன்ற ஓர் உப்பரிகையைக் கண்டார் என சுந்தர காண்டத்தில் உள்ளது.
- தசரசன் இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய நகரை அலங்கரிக்கும் போது புத்தரின் ஆலயங்கள் போலவும் என அயோத்தியா காண்டத்தில் உள்ளது.
- இலங்கையானது 5000 ஆண்டுகள் முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தினால்தான் தென்னிந்தியாவில் இருந்து பிரிவுபட்டதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இவையெல்லாம் 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக இராமாயணக் கதையில் கூறப்பட்டிருக்கிறது. 2000 வருட முந்தைய பெளத்தம் எனும் போது, இந்த இமாலயப் பொய்கள் எவருக்கும் புரிந்து விடும். ஆனால் இந்த கட்டுக்கதையைப் பார்ப்பனர்கள் கலை வடிவத்தில் கொடுத்து வடவர்களை மட்டுமல்ல, தமிழர்களையும் மூளை சலவை செய்ததன் வெளிப்பாடே மக்கள் கேள்விகளின்றி நம்பிக்கை கொண்டு விட்டார்கள்.
வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்த்து தமிழர்களின் பண்பாட்டுத் தன்மையோடு ஆரிய நஞ்சினையும் கலந்தவர் கம்பர். கம்பர் படைத்த இராமயணத்திலிருந்தும், வடமொழியிலிருந்து மொழிபெயர்த்த இராமாயண நூல்களையும் மேடையில் அடுக்கி வைத்து அதன் வண்டவாளங்களைத் தோலுரித்தவர் பெரியார். இராமாயண மோசடிகளை அப்பட்டமாக அம்பலப்படுத்தினார். இராவணன் கதாபாத்திரத்தின் பெருமைகளைப் பெரியாரின் வழிவந்த தமிழ்ப் புலவர்களே போற்றினார்கள். ஆரியத்தை எதிர்த்து நின்ற தமிழர்களை கொச்சைப்படுத்தவே இராவணன் என்பதை குறியீடாகக் காட்டினார்கள் ஆரியர்கள். ஆனால் தென்பகுதியை ஆண்ட மன்னனாக இராவணக் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி, அவன் சிறப்பியல்புகளை எடுத்துக் கூறினர் தமிழ் கவிஞர்கள்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இராவணனைப் புகழ்கையில்,
“தென் திசையைப் பார்க்கின்றேன்
என்செய்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்குதடடா!
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன்
….
குள்ளநரிச் செயல் செய்யும்
கூட்டத்தின் கூற்றம்!
என் தமிழர் மூதாதை!
என் தமிழர் பெருமான் இராவணன் காண்!
அவன் நாமம் இவ்வுலகம் அறியும்!
…
ராவணன்தன் கீர்த்தி சொல்லி
அவன் நாமம் வாழ்த்த வேண்டும்!”
– என இராவணனின் புகழைப் பாடுகிறார். ஆரியர்களுக்கு எமனே இராவணன் என சீறுகிறார். தமிழர்களின் மூதாதையரே இராவணன் எனப் போற்றுகிறார்.
பெரியார் ஊட்டிய எழுச்சியால் உந்தப்பட்ட தமிழ்ப் புலவர்களில் ஒருவரே புலவர் குழந்தை. அவர் 1946-ல் இராவண காவியம் என்னும் பெருங்காவியத்தை படைத்தார். அந்நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது. பின்னர் திமுக ஆட்சியில் தடை நீக்கப்பட்டது. இராமகாதை – ஆரிய சூழ்ச்சி திராவிட வீரத்தை வென்றது என்பதன் அடையாளச் சின்னமாய் இருக்கும் போது, இராவண காவியம் – ஆரியர் சூழ்ச்சியை தமிழர்கள் அழித்தொழிக்க முனைந்து விட்டனர், இனி ஆரியர் சூழ்ச்சி நில்லாது – என போர்வாள் என்னும் இதழ் இராவண காவியத்துக்கு புகழாரம் சூட்டியது. இராவணனே தமிழர்களின் நாயகன் என பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாக இராவண காவியம் இருக்கிறது. தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழபுரி காண்டம், போர்க் காண்டம் என 3100 பாடல்கள் இதிலுள்ளன. ஆரிய அரசனாம் இராமன் புகழ் பாட கம்பன் வடிவமைத்த காண்டங்களைப் போல தமிழ் அரசனாம் இராவணனின் புகழினைப் பாட புலவர் குழந்தையும் இராவண காவியத்தை வடிவமைத்தார்.
‘இராவணனைக் கொண்டாடுவதால் நாங்கள் இராவண தாசர்களல்ல. இராமதாசர்களைப் போல இராமனுக்கு கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்ய இராவணனைக் கொண்டாடவில்லை. பண்டையக் கவிஞர்கள் இராவணன் மீது சுமத்திய பழிகளை, துருவிப் பார்த்தால் முற்றிலும் வேறான ஒன்று புலப்படுகிறது என்பதற்காகவே இந்த ஏடு’ என அண்ணா இராவண காவியத்தைப் பற்றி எழுதுகிறார். ‘தாசர் (அடிமை) நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா!’ என்று அறிவுறுத்தவே இந்நூல் என விவரிக்கிறார்.
இராமாயணம் எழுதப்பட்ட காலம், ஆரியம், திராவிடம் என இரு வேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய காலம். திராவிடக் கலைகளைச் சிதைத்தும், குறைத்தும் ஆரியக் கலைகளை அதில் ஒட்டியும், பூசியும் வைத்ததை எல்லாம் சலித்தும், புடைத்தும் கண்டுபிடித்தனர் தன்மான இயக்கத்தவரான பெரியாரின் தொண்டர்கள். தமிழ் என்னும் ஊற்றை அள்ளிப் பருகிய அண்ணா, பாரதிதாசன், புலவர் குழந்தை, கலைஞர் போன்ற பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கத்தவர்களே தமிழர்களின் கலையில் கலந்த ஆரியக்கலையை நீக்கும் ஆற்றலை தமிழர்களுக்கு வளர்த்தனர்.
இராமாயணத்தை இலக்கிய ரசனையாக பார்க்கிறோம் என்று சொல்லும் கவிஞர்களிடம், ‘இயற்கைக்குத் தமிழ் ஆபரணம் பூட்டப்பட்டிருப்பது போலவே இராவண காவியத்திலும் பூட்டப்பட்டுள்ளது. அதிலாவது (இராமாயணம்) தேவாம்சம் புகுந்து தமிழின் இனிமைக்கு ஊறு தேடுகிறது. இதன்கண் (இராவண காவியம்) அக்குறையும் கிடையாது. அது ஆரியங்கலந்த கடுந்தமிழில் புலவர்க்காக ஆக்கப்பட்டது. இது எளிய இனிய தனித் தமிழில் எல்லாத் தமிழ் மக்களுக்கும் இயற்றப்பட்டது’ என இராவண காவியத்திற்கு புகழாரம் சூட்டுகிறார்.
இராமனுக்கு கம்பராமாயணம் போல இராவணனுக்கு இராவண காவியம் எழுதினார் புலவர் குழந்தை. அதில் இராவணனின் பெருமைகளை அடுக்கியது போல, கம்ப இராமயணத்திலிருந்த கருத்துக்களை எடுத்தே வேறு ஒரு வகையில் இராவணன் தரப்பான நியாயங்களை ‘நீதிதேவன்’ மயக்கம் என்னும் நாடக நூலில் வடிக்கிறார் பேரறிஞர் அண்ணா. அண்ணாவுக்கே உரிய நகைச்சுவை பாணியில், நீதிபதியாக நீதிதேவனைக் கொண்ட அற மன்றம் முன் இராமயணப் பாத்திரங்களை வரவழைத்து குறுக்கு விசாரணை செய்யும் வகையில் எழுதப்பட்ட புத்தகமே நீதிதேவன் மயக்கம்.
‘இரக்கம் எனும் பொருளிலா அரக்கன்’ என்பதை குற்றச்சாட்டாக கம்பர் முன் வைக்க, அதை எதிர்த்து இராவணன் முன்வைக்கும் விவாதங்கள் பகுத்தறிவை தூண்டக்கூடியவை. ஒரு மானைக் கொல்லும் வேடனுக்கு யாகத்திற்காக பசுக்களைக் கொல்லும் முனிவர்களுக்கு, பிள்ளைக்கறி கேட்ட தயாபரன் இவர்களுக்கு இரக்கம் என்பது வாழ்வியல் முறையினால், பக்தியினால், பக்தி சோதனையினால் வெவ்வேறாக பார்க்கப்படும் போது, தான் மட்டுமா அரக்கன்? என்கிற கேள்வியை வைக்கும் போதும், ஆசைப்பட்ட ஒரு பெண்ணை (சூர்ப்பனகை) நிராகரிப்பதற்கு அவளின் நாசியைத் துண்டித்த இராம – இலட்சுமண் இரக்கத்தை விரட்டி விட்டார்களே, ஏன்? எனக் கேள்வியை கேட்கும் போதும் கம்பர் தடுமாறுவதை அற்புதமான சொல்லாடல்களால் காட்சியை விவரித்திருப்பார் அண்ணா. இராவணனுக்கு இரக்கம் இல்லாததால் இலங்கை அழிந்தது என்று பாடும் கம்பர், கைகேயி என்னும் இரக்கமற்றவள் இருந்ததால் ஏன் அயோத்தி அழியவில்லை? இரக்கமற்று வாலியைக் கொன்ற இராமன் தெய்வம் என்று கம்பர் பாடுவது சரிதானா? என வரிசையாக கேட்கும் விவாதங்களால் நீதிதேவனையே மயங்கி விழும்படி செய்யும் காட்சிகளை அழகாய் விரித்திருப்பார் அண்ணா.
நீதியைப் பற்றி அண்ணா விளக்கும் விதம் என்றென்றும் பொருந்தக் கூடியது. “நீதிதேவனும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஏதோ ஒரு கட்டுத் திட்டத்துக்கு உட்பட்டே வேலை செய்கிறார். துலாக்கோலும், படிக்கற்களும் அவருக்குத் தரப்பட்டவை. நீதிதேவனின் நிறை பார்க்கும் குணத்தைச் சந்தேகிக்கவில்லை. அந்தத் துலாக்கோலையே சந்தேகிக்கிறேன். காலச்சுமை வீழ்ந்து சாய்ந்து போன துலாக்கோலில், தேய்ந்து போன படிக்கற்களைப் போட்டு நிறை பார்ப்பது நீதியாகுமா? அதனைத் தூக்கி எறிந்து விட்டு வழக்கின் சகல அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்ப்பதே நீதி பெறும் வழி. புது உண்மைகள் ஏற்பட்ட பின்பும் முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்புகள் மாற்ற முடியாததா?” என இராவணன் விவாதிப்பதாக அண்ணா விவரிப்பது இன்றைய காலகட்டத்தில் செயல்படும் நீதிக் கட்டமைப்பிற்கும் பொருந்தும்படியான எடுத்துக்காட்டாக இருக்கிறது.
“தமிழருக்கு தமிழ் நெறி, தமிழ் முறை, ஒழுக்கம், வீரம், கற்பு, காதல் எனும் பண்புகளை தரக்கூடியன கலையாக இருத்தல் வேண்டுமேயொழிய, வேறொரு இனத்தைப் புகழ்வதும் அதற்கு ஆதிக்கம் அளித்து தமிழ் மக்கள் மனதிலே தன்னம்பிக்கையற்றுப் போகும்படியும், தமது இனத்தைப் பற்றியே தாழ்வாக கருதிக் கொள்ளும் படியான நிலைமை உண்டாக்குவதுமான கதை, காவியம், இலக்கியம் என்பவைகளை கொளுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். தமிழர் என்று நான் கூறும்போது தமிழ் மொழி பேசுவோர் என்பவரை மட்டுமல்ல நான் குறிப்பது; தமிழ் இனத்தை என்பதை நினைவூட்டுகிறேன்” – ‘தீ பரவட்டும்’ என அண்ணா இராமாயணத்தை ஏன் கொளுத்த வேண்டும்? எனும் தலைப்பில் ஆற்றிய அண்ணாவின் உரை இது. தமிழ் இனத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஏற்ற உரை. ஒவ்வொரு இனமும் அதற்குரிய கலைகளைத் தேடும் ஆற்றலற்று “ஜெய் ஸ்ரீராம்” என்ற கூச்சலின் பின்னால் செல்கிறார்கள். இது ஆரிய அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக் கொள்வது போன்றதாகும். தங்களினத்திற்கே பெரும் துரோகம் இழைப்பதாகும்.
இராமாயணம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு நடைபெற்ற ஆரிய திராவிடப் போரை மையமாகக கொண்டு ஆரியர்களால் ஆரிய மேன்மைக்கு எழுதப்பட்ட ஒரு நூல் தானே தவிர, இதில் துளியும் உண்மையில்லை. ராமன் ஒருவன் வாழ்ந்தானென்ற வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. இராமாயணம் என்பது ஆரிய ஆதிக்கத்திற்கே பயன்பட்டது என ஜவஹர்லால் நேருவே தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான் திராவிட தாக்கத்தை ஏற்படுத்த இராம லீலா நாடகம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் இடையில் அன்னை மணியம்மையார் தலைமையில் இராவண லீலா நாடகம் நடைபெற்றது.
இந்தியம் முழுமைக்கும் வாழ்ந்த திராவிடப் பழங்குடி மக்களை, அம்மக்களின் மூதாதையர்களான தமிழர்களை இழிவுபடுத்த வந்தேறிகளான ஆரியர் முன்வைத்த கோட்பாடுகளே இராமாயணக் கதையானது. அதுவே இன்று வெறியூட்டும் சொல்லாக ‘ஜெய் ஸ்ரீராம்’ கூச்சலுக்கு பயன்படுகிறது. இராவணன் அரக்கனாக்கப்படுகிறார். திராவிட மக்களை குறிக்கவே ராட்சசன் (அரக்கன்) என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. கம்பன் என்னும் இராமதாசன், வடமொழியில் உள்ள ராட்சசனை அரக்கனாக மொழிமாற்றம் செய்தானே ஒழிய, வடமொழி இராமாயணத்தில் தமிழினத்தைக் குறிக்கவே வால்மீகி இந்த சொல்லைப் பயன்படுத்தினான் என்பதை அறியாதவன் ஆனான். இந்த கயமையை துப்புத் துலக்கி கண்டறிந்தவர்களே திராவிடக் கொள்கையாளர்கள். ஆரியக் குப்பை தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, மொழி, இனம் என எங்கெங்கு எல்லாம் கொட்டப்பட்டதோ அதை அகற்ற அரும்பாடுபட்டதே திராவிடம். ஆனால் இவை எதனையும் அறியும் ஆற்றலற்ற பிறவிகளின் கூச்சல் திராவிடத்தை ஒழிப்போம் என்பதாக இருக்கிறது. காலச்சக்கரத்தை சுழற்றிப் பார்க்க விரும்பாத சுகவாசிகளின் வெற்றுப் பிதற்றலாக தமிழ்நாட்டில் இந்த கூச்சலும் ஒலிக்கிறது
தமிழர்களின் குறியீடான இராவணனைக் கொச்சைப்படுத்த பத்து தலையுடைய இராவணன் என்றெல்லாம் ஆரியக் கயவர்கள் எழுதி வைத்தார்கள். பத்து தலையைப் பொருத்தியதாலே ராகுல் காந்தியை இராவணனாக சித்தரித்து விட்டார்கள் என ஒருபுறம் காங்கிரசுக்காரர்கள் பொங்கினார்கள். இராவணன் என்பது தமிழ் சமூகத்தின் வீரத்தின் குறியீடு, பண்பாட்டின் முகவரி. ஆநிரை கவர்தலும், பெண்களை சிறைப்படுத்தலும் அக்காலத்தின் போர் நெறியாகவே இருந்தது. அவர்களின் கதைப்படியே, தென்னாட்டு அரசனாக இருந்து சீதையை சிறையெடுத்து வந்திருந்தாலும், ஆரியத்தின் மாயாஜாலக் கதைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தங்கையின் நாசி அறுத்தவன் வந்து மன்னிப்பு கேட்கும் வரை சீதைக்கு எந்த களங்கமும் நேராமல் பார்த்துக் கொண்ட தமிழ் மரபினன் இராவணன். தமிழ்மரபின் முன்னோடியான இராவணனிடம் இருந்து தமிழரின் அறத்தையே உணர முடியும்.
தேசத் தந்தை என போற்றப்பட்ட காந்தியைக் கொன்ற கோட்சே, வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்டு சிறை மீண்ட சாவர்க்கர், ஹிட்லரின் நாசித் தத்துவத்தின் கீழ் இந்திய சிந்தனையும் மாற வேண்டும் என்றெண்ணிய கோல்வால்கர், ஹெட்கேவர் போன்றோர் வரையறுத்ததே அகண்ட பாரதம். அதில் மத வெறுப்புணர்வைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க, பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் இந்தியா எந்நாளும் இருக்க பாஜக அரசும், பார்ப்பனிய அதிகார மட்டமும் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகளை வைத்து எழுப்பப்படும் ஓர்மைக் கூச்சலே ‘ஜெய் ஸ்ரீராம்’ கோசம். சமத்துவம் நேசிக்கும், ஒற்றுமையை வலியுறுத்தும், பன்மைத்துவம் காக்கும் தமிழர்களான நமக்கு இந்த கோசம் தேவையில்லை. பத்து தலைகளை அல்ல, பத்து தலைக்குள் இருந்த அறிவாற்றலைக் கொண்ட இராவணனைப் போற்றுவோம். தமிழர்களின் அறத்தின், மறத்தின் குறியீடாம் இராவணனை உயர்த்திப் பிடிப்போம்.
- மே பதினேழு இயக்கம்