தொலைக்காட்சி விவாதங்களில் இந்துமத பயங்கரவாதிகளையும், பார்ப்பனர்களையும் எதிர்த்துக் காரசாரமான பதில்களைக் கொடுத்துவருபவர் தோழர் அருணன். அதனால் சில புதிய கருஞ்சட்டைத் தோழர்கள் பலருக்கும் அவர் மீது மதிப்பும், நம்பிக்கையும் இருக்கும். அந்தப் புதிய தோழர்கள், கடந்த 11.07.2018 அன்று தோழர் அருணன் அவர்கள் பதிவுசெய்துள்ள முகநூல் பதிவைப் பாருங்கள்.

ராமாயணம் பற்றிய மார்க்சிய நோக்கு

“கேரளாவில் மார்க்சிஸ்டு கட்சி ராமாயண மாதம் கொண்டாடுகிறது” என்று ஒரு புரளியை கிளப்பினார்கள். அப்படி கட்சி ஏதும் செய்யவில்லை என்று பதிலடி தந்திருக்கிறார் மாநிலச் செயலாளர் தோழர் கொடியேறி பாலகிருஷ்ணன். ராமாயணத்தைப் பக்திப்பூர்வமாக நோக்கிக் கொண்டாடுவது, அதன் மூலமாக, பிறமத வெறுப்பை வளர்ப்பது ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத அரசியல் நிகழ்ச்சிநிரல். அந்த வேலையை மார்க்சியர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். அதேநேரத்தில் ராமாயணம், மகாபாரதம் எனும் இதிகாசங்களை வெறும் குப்பைகள் என்று சில பெரியாரியவாதிகள் போல இழிவாக நோக்கவும் மாட்டார்கள். இங்கே பிரச்னை ஆத்திகமா, நாத்திகமா என்பது அல்ல. மாறாக அதீத புனைவுகள் கொண்ட முன்னோர்களின் இலக்கிய படைப்புகள் என்று முறையில் அவற்றிலிருந்தும் சரித்திரம் தேர்ச்சி கொள்ள முயலுவார்கள். கிரேக்க இலக்கியம் பற்றிய மார்க்சின் பார்வை இந்த இதிகாசங்களை புரிந்து கொள்ளவும் வழி காட்டுகிறது. சில பெரியாரியவாதிகளும் சங்பரிவாரிகளுடன் சேர்ந்து கொண்டு இது விஷயத்தில் மார்க்சியர்களை தாக்குவது அவர்களது மார்க்சியம் பற்றிய அறியாமையை உணர்த்துகிறது. இதிகாசங்கள் மீதான அவர்களின் முரட்டுத்தனமான பார்வையும், தாக்குதலும் சங்பரிவாரிகளின் மதவெறி அரசியலை முறியடிக்க உதவாது என்பது மட்டுமல்ல, இந்து வெகுமக்கள் மத்தியில் பரிவாரிகள் ஊடுருவவே வழி வகுக்கும் என்பதை நமது நண்பர்கள் உணர வேண்டும்.”

இதுதான் அவரது உண்மை முகம். திருப்பூரில் 1922 லேயே காங்கிரஸ் கட்சி மாநாட்டிலேயே “இராமாயணத்தை எரிக்க வேண்டும்” என அறைகூவல் விடுத்தவர் தோழர் பெரியார். குடி அரசு ஏட்டில் தொடர்ச்சியாக இராமாயணத்தைத் தோலுரித்து, அவற்றைத் தொகுத்து ‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்ற நூலாக இலட்சக்கணக்கானோரிடம் பரப்பினார். 1956 ஆம் ஆண்டு இராமன் பட எரிப்புப் போராட்டத்தையும் அறிவித்தார்.

“கடவுள் தன்மை, ஒழுக்கம், நாணயம், சாதாரண அறிவு இல்லாத துரோகம், வஞ்சகம், பேராசை, மதுவருந்தல், புலால் உண்ணல், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல் முதலிய கூடா ஒழுக்கக் குணங்கள் கொண்ட இராமனை மக்கள் கடவுளாக, வழிகாட்டியாக, பிரார்த்தனை, பக்தி செலுத்தத் தக்கவனாகக் கருதக் கூடாது என்பதற்காகத் தான் இராமாயண இராமனைக் கொளுத்தச் சொல்கிறேன்”

என்றார். டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, தவத்திரு குன்றக்குடி அடிகளாப் ஆகியோர் “மக்கள் மனம் புண்படும்” என்று கூறிப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர்.

“இராமன் படத்தை எரிக்கக் கூடாது என்பவர்கள், தாம் சொல்லும் காரணங்களை - காட்டும் ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவற்றை மறுத்து அல்லது சமாதானம் கூறாமல் கொளுத்த வேண்டாம்; கொளுத்துவது தப்பு என்று கூறாமல் மக்கள் மனம் புண்படும் என்று கூறுவது சரியல்ல - என்றும் இழிவிலிருந்து வெளியேற வேண்டும் என்பவனுக்கு ‘மக்கள் மனம் புண்படும்’ என்பது மதிக்கத்தக்கது ஆகாது. திட்டமிட்டபடி இராமன் பட எரிப்புப் போராட்டம் 01.08.56 இல் நடத்தப்படும்”

என்றும் அறிவித்தார்.  அறிவித்தவாறு, 01.08.56 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்திக்காட்டினார். 5000 க்கும் மேற்பட்டவர் திராவிடர் கழகத்தினர் இராமனை எரித்துக் கைதானார்கள். இராமன் பட எரிப்பில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப் பட்டால் நீதிமன்றத்தில் பின் வருமாறு வாக்குமூலம் சொல்ல வேண்டும் என்று 30.7.1956 ‘விடுதலை’யில் அறிவுறுத்தப்பட்டது.

“நான் குற்றவாளியல்ல. எவர் மனத்தையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இக் காரியத்தைச் செய்யவில்லை. இராமாயணம் என்பது கட்டுக்கதை என்பதையும், இக்கதையில் திராவிடர்கள் இழிவாகக் கூறப்பட்டிருக்கின்றனர் என்பதையும், இந்த உண்மையானது, பண்டித நேரு அவர்கள் உள்ளிட்ட எல்லா சரித்திர ஆசிரியர்களாலும் கூறப்பட்டிருக்கிறது என்பதையும், திராவிட மக்களுக்கு எடுத்துக்காட்டுவ தாகவும், இதற்கான ஒரு வகைப் பிரச்சார முறையாகவுமே இராமன் படத்தை வரைந்து தீ வைத்துக் கொளுத்தினேன். இதற்காக, நீதிபதியவர்கள், எந்தத் தண்டனை விதித்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.”

நீதிமன்றத்தில் விடுதலையின் கருத்தைக் கூறி தண்டனை பெற்றார்கள் ஆயிரக்கணக்கான தோழர்கள். இராமாயணம், மகாபாரதங்களைக் குப்பைகளாக அறிவித்ததோடு மட்டுமல்ல, அந்தக் குப்பைகளைக் கொளுத்தியவர்கள் பெரியார் தொண்டர்கள். இந்தச் செயல்கள் இழிவானதா? இந்த இதிகாசங்களுக்கு அங்கீகாரம் வழங்கிக்கொண்டு, “தேவடியாள் மகன்” பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வது இழிவானதா?

“இதிகாசங்களைப் பற்றிய பெரியாரிஸ்ட்டுகளின் பார்வை முரட்டுத்தனமானது. இதனால், வெகுமக்கள் நம்மை விட்டுப் போய்விடுவார்கள், சங்பரிவாரங்களுக்கு இது சாதகமாக அமையும்” என்ற வரிகளை வரலாற்றை நன்கு அறிந்த தோழர் அருணன் எழுதக்கூடாது. அவர் மறைக்க விரும்பும் தகவல் ஒன்றை அவருக்கும் தெரிவிக்கிறேன்.

1971 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில், சேலத்தில் திராவிடர் கழகப் பேரணியில், இராமன் படம் செருப்பால் அடிக்கப்பட்டது. அதற்குக் காரணம் தி.மு.க தான் என்று காங்கிரஸ் கட்சியாலும், பார்ப்பனர்களாலும் மிக மிக அதிகமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.  இராமனைச் செருப்பாலடித்த கட்சிக்கா உங்கள் ஓட்டு? என்று நாடு முழுவதும் பெரும் பரப்புரைகள் நடந்தன. அந்தத் தேர்தலில் தி.மு.க 184 தொகுதிகளில் வெற்றிபெற்றுச் சாதனை படைத்தது. அன்றைய நிலையை விளக்கிப் பெரியார்,

“இராமனைத் தார் பூசி நெருப்பிட்டுக் கொளுத்தியதோடு, “இராமன், முருகன் முதலாகிய கடவுள்களை செருப்பாலடித்ததாக” உருவகப்படுத்தி, படம் எழுதி சுவற்றில் ஒட்டி பல லட்சம் பத்திரிக்கைகளில் வெளியிட்டு இந்தியா முழுவதும் தெரியும்படி, அறியும்படிச் செய்த பிறகு தமிழ்நாட்டிலும், ஆந்திரம், மைசூர் நாட்டிலும் மற்றும் இந்தியாவில் பல இடங்களிலும், நாம் இமாலய வெற்றியும், பார்ப்பனர், ஆத்திகர் படுதோல்வியும் அடையும்படியான நிலை ஏற்பட்டதென்றால், இந்த வெற்றி செருப்படிக்கா அல்லது அது கூடாது என்பதற்காக?

...நாட்டின் பட்டிதொட்டி, மூலை மூடுக்குகளிலெல்லாம் ஆள் உயர செருப்படி சுவரொட்டிப் படங்களும், இராஜாஜியும் காமராஜர் முதலிய பெருந்தலைவர்கள் என்பவர்களும் பிரச்சாரம் செய்தும் (எதிரிகளுக்கு) செய்தவர்களுக்கு வெட்கப்படத்தக்க தோல்வி என்றால், மக்கள் செருப்படியை விரும்புகிறார்கள் என்று அர்த்தமா? வெறுக்கிறார்கள் என்று அர்த்தமா? என்று கேட்கிறேன். - 28.03.1971- விடுதலை

என்றார். இதிகாசங்களைக் காப்பாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதே 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை என்பதையும் செங்காவிகள் நினைவில் கொள்ள வேண்டும். இதிகாசங்களை இழிவுசெய்தால், இந்துத்துவப் பயங்கரவாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும் என்று எழுதுவது, அருணன் போன்ற வரலாற்று ஆய்வாளர்களுக்கு அழகல்ல. வரலாறுகள் தெரிந்தவர் அப்படி எழுதுகிறார் என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்குமல்லவா? அதையும் பார்ப்போம்.

மனுசாஸ்திரக் கம்யூனிஸ்ட்டுகள்

இந்திய அளவில் மூத்த பொதுவுடைமைவாதியும், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சரும், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவருமான தோழர் இ.எம்.சங்கரன் (நம்பூதிரிபாட்) அவர்கள் மனுசாஸ்திரத்தைப் பற்றி எழுதியுள்ளதைப் பாருங்கள்.

“அர்த்தசாஸ்திர ஆசிரியரின் காலத்தில், ஆதிக்கம் பெற்றிருந்த அரசனுக்கும், படைத்தலைவர்களுக்கும்,  உயர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கும் பதிலாக  - சமுதாயத்தின் ஆதிக்கம் பிராமணர்களின் கைக்கு மாறவும் செய்தது. இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிற இலக்கிய நூல்தான் மனுஸ்மிருதி.”

இதில் இரண்டு செய்திகள் உள்ளன. மனுசாஸ்திரம் என்ற இந்து ஜாதியச் சட்டத்தொகுப்புக்கு “ஒரு இலக்கிய நூல்” என்ற அந்தஸ்தைக் கொடுக்கிறார் ஈ.எம்.எஸ். கூடுதலாக, மனுசாஸ்திரக் காலத் துக்கு முன்பு பிற்படுத்தப்பட்டவர்கள் ஆதிக்கத்தில் இருந்தனர் என்ற தவறான வரலாறும் உள்ளது.

மனுசாஸ்திரத்தைக் கொளுத்துவது நமது பண்பாடு. அதே மனுசாஸ்திரத்தை இலக்கியமாகக் கொண்டாடுவது சி.பி.எம் மின் பண்பாடு. இதுமட்டுமல்ல. தோழர் இ.எம்.சங்கரன் அவர்கள் இந்து மத வேதங்களின் பெருமையைப் புகழ்ந்து பாடி ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூலின் பெயர் “வேதங்களின் நாடு”. வேதங்களின் நாடு நூலிலும், சி.பி.எம். இன் அதிகாரப்பூர்வ இதழான “மார்க்சிஸ்ட்”  ஏட்டிலும் செங்காவிகள் அருளியுள்ள சில கருத்துக்களைப் பாருங்கள்.

“சமூக விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவை அறியும் தாகத்தால் இந்திய வேதங்களையும் இதிகாசங்களையும் ஆழ்ந்து ஆராய்கின்றனர். அயல்நாடுகளில் தங்கள் மொழியில் இவைகளை வெளியிடுகின்றனர். இந்தியாவின் பண்டைக்காலக் கலாச்சாரத்தைப் போற்றுகின்றனர். இந்தியர்களான நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய இந்தக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் என்ற பேரில் வரலாற்றில் அறியப்படுகிறார்கள். அதன் காரணமாக பண்டைக்கால இந்தியக் கலாச்சாரத்தை ஆரியக் கலாச்சாரம்” என்றும், அந்தக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் வேதங்களாக இருந்ததினால் வேதக்கலாச்சாரம் என்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர்”.

“இந்தியக் கலாச்சாரத்தில் ஆரியர்களால் இயற்றப்பட்ட வேதங்களும் இதிகாசங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை இந்தக் கலாச்சாரம்தான் இந்திய மக்களின் கலாச்சாரமாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது”.

“வேதங்கள், உபநிஷத்துகள், பல்வேறு விஞ்ஞானத் துறைகள் குறித்து எழுதப்பட்ட நூல்கள், புராண இதிகாசங்கள், காவிய நாடக இலக்கிய நூல்கள் இவைகள் மூலமாக மனித சமுதாயத்தின் கலாச்சார வளர்ச்சிக்கு விலை மதிக்க முடியாத பங்கு செலுத்த ஆரிய சமூகத்தினால் முடிந்தது”.

“ஒட்டுமொத்தமாக ஆரியர்களுக்கும், வேதங்களுக்கும் தென்னிந்தியா உட்பட இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் மிகப் பெரிய பங்குண்டு என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மை”. “பொதுவாக இந்தியக் கலாச்சாரத்தில் மட்டுமின்றி தமிழ் கலாச்சாரத்தை உருவாக்கியதிலும் வேதங்களுக்கும் ஆரியர்களுக்கும் பங்குண்டு என்பது தானே உண்மை”

இவற்றை எழுதியது கோல்வாக்கர்தான், சவார்க்கர்தான் என்று யாராவது கூறினால் மறுக்க முடியாத அளவுக்கு வேதங்களின் புகழ்பாடியுள்ளனர் பழம்பெரும் (சி.பி.எம்) கம்யூனிஸ்ட்கள். இவர்கள் வேதங்களின் பெருமை பேசுவதோடு நிற்கவில்லை. ஆரியர் - திராவிடர் என்ற இனப்பிரிவினைக் கருத்துக்களும், பார்ப்பனர்களை ஆதிக்கச் சக்திகளாக வரையறுப்பதும் தவறு என்றும் எழுதியுள்ளனர்.

“ஆரிய திராவிட இனவாதத்தை இப்போதும் பேசிவருவதும் உழைத்து வாழும் வர்க்கமாக மாறி விட்ட பிராமண சாதியினரை சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாக இனமாகப் பார்ப்பதும் சமூக மாறுதல், வளர்ச்சி பற்றிய விஞ்ஞானப் பார்வைக்குப் பொருந்தாதது. அதன் காரணமாக பகுத்தறிவிற்கும் மாறுபட்டது. இந்தப் பார்வை இன்றைய சமுதாயத்தின் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக சாதி, மத இனபேதமின்றி உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடுவதைத் தடுக்கக் கூடியது. மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடியது” (மார்க்சிஸ்ட் ஜூன் 93 பக் 63).

பார்ப்பன எதிர்ப்பு என்பது விஞ்ஞானப் பார்வை இல்லையாம். பகுத்தறிவும் இல்லையாம். தோழர் இ.எம்.எஸ். அவர்களைப் போலவே, பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தார். அவர் பி.இராமமூர்த்தி என்ற பார்ப்பனர். அவர் எழுதிய ஒரு முக்கிய நூலின் பெயரைக் கேட்டாலே போதும், அவரைப் புரிந்துகொள்ள முடியும். “ஆரிய மாயையா? திராவிட மாயையா?” இது தான் அந்த நூலின் பெயர்.  தோழர் இராமமூர்த்தி அவர்கள் கூறியுள்ள சிலகருத்துக்கள்.

“மனுஸ்மிருதி பார்ப்பனியத்தை நிலைநாட்டுவதற்காக எழுதப்பட்ட சட்டநூல் என்பது முற்றிலும் உண்மை. அதற்காக அதில் கூறப்பட்டுள்ள நல்ல தத்துவத்தையும் கைவிட்டுவிடலாமா? என்பதை இங்கு திராவிடர் கழகத்தினருக்குச் சொல்வது பொருத்தமாக இருக்கும்” - இந்திய வரலாறு. ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் நூல்

“ஆரியர்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கே நுழைந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.”

“இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்களே? கிறிஸ்தவ மதத்தில் மூடநம்பிக்கைகள் இல்லையா?”

“இராமாயணம் கற்பனை என்கிறீர்கள். இராமனை ஆரியன் என்கிறீர்கள். இராவணனைத் திராவிடன் என்கிறீர்கள் எப்படி நியாயம்?

இப்படிக் கேள்வி கேட்பதும், எழுதுவதும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்ல. தோழர் அருணனின் முன்னோர்கள். தோழர் இராமமூர்த்தி அவர்கள் கேட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் கேள்விகள் அனைத்துக்கும் பதிலடியாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஒரு  தொடர்சொற்பொழிவையே நடத்தினார். முனைவர் பட்ட ஆய்வு போன்ற அந்தத் தொடர்சொற்பொழிவு பெரிய நூலாகவே வெளியானது. 1985 இல் வெளியான “விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும், உண்மை வரலாறு” என்ற அந்த நூலைத் திராவிடர் இயக்கங்களின் புதிய தோழர்கள் அவசியம் படிக்க வேண்டும்.  அதேபோல, 1991 இல் தோழர் அருணன் அவர்களுக்கு ‘பெரியார் மய்யம்’ எழுதிய மறுப்புநூலான, “பெரியாரியமா? மார்க்சியமா?” என்ற நூலும் இந்த சிவப்பு இந்துத்துவாதிகளை அம்பலப்படுத்தியுள்ளன.

இன்றைய அரசியல் சூழலில் சி.பி.எம் கட்சியை நாம் விமர்சிப்பது தேவையற்றது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் தோழமையாக நிற்க வேண்டும் என்றும் பலர் எண்ணலாம். தேர்தல் அரசியல் அடிப்படையில்கூட, இந்தியாவில் வயதுவந்த அனைவருக்கும் வாக்கு என்ற அறிவிப்பின்படி நடந்த 1952 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் முதற்கொண்டு இன்று வரை - தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் உருவாக்கப்பட்ட காலம் முதற்கொண்டு இன்று ரஜினி - கமல் ஆகியோர் அரசியலில் கால் வைத்துள்ள காலம் வரை அவர்கள் திராவிட இயக்கங்களுக்கு எதிரான நிலையைத் தான் எடுத்துவருகிறார்கள்.

ஆனாலும்கூட நாம் அவர்களை வேண்டுமென்று வீம்புக்கு விமர்சிக்கவில்லை. தோழர் அருணன் போன்ற அறிஞர்களே இன்றும், “இதிகாசங்களைப் பழிப்பது இழிவு”, “இராமாயணத்தைப் பழித்தால் சங்பரிவாரங்களுக்குச் சாதகமாகிவிடும்” என்று வெளிப்படையாக, பார்ப்பன ஆதரவுக் கருத்தியலில் அழுத்தமாக நிற்கும் போது, நாம் நமது தோழர்களுக்கு நமது நிலையை இன்னும் கூடுதல் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Pin It