kuthoosi gurusamyகடல் நீர் முழுதும் தீப்பற்றிக் கொண்டது! வேதப் பிராமணர்கள் வயலில் இறங்கி உழுகிறார்கள்! சங்கராச்சாரியார் எலிமெண்டரி ஸ்கூல் உபாத்தியாயராகி விட்டார்! பண்டார சந்நிதிகள் கல் உடைக்கிறார்கள்! மதுரைக் கோவில் பிள்ளைப் பேறு ஆஸ்பத்திரி ஆகிவிட்டது! திருப்பதி வெங்கடாசலபதியின் 10 லட்ச ரூபாய் வைர முடியை விற்று கண் ஆஸ்பத்திரி கட்டி விட்டார்கள்! ஜாதிச் சின்னங்கள் - மதச் சின்னங்கள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை என்று உத்தரவு வந்து விட்டது!

இம்மாதிரிச் செய்திகளை நம்பினாலும் நம்புவீர்கள்! முதலாளிக ளெல்லோரும் கம்யூனிஸ்ட்களாகி விட்டார்கள் என்று நான் கூறினால் நம்புவீர்களா? சொல்லுங்கள்!

ராஜா சர் முத்தையா செட்டியார் 'அண்டர் கிரவுண்ட்' போய்விட்டார்! டாக்டர் அழகப்ப செட்டியார் மில் தொழிலாளியாகி விட்டார்! வடபாதி மங்கலம் முதலியார் வாய்க்கால் வெட்டுகிறார்! 'ஹிந்து' சீனுவாசன் கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்! 'ஜெமினி' வாசன் தெருவில் பத்திரிகை விற்கிறார்! கோவை, மதுரை, சென்னையில் முதலாளிகளெல்லோரும் கம்யூனிஸ்ட்கள் என்று சந்தேகிக்கப்பட்டு பாதுகாப்புக் கைதிகளாக வேலூர் சிறையில் வைக்கப் பட்டிருக்கின்றனர்! இம்மாதிரிச் செய்திகள் வந்தால் நீங்கள் நம்புவீர்களா? நிச்சயம் நம்ப மாட்டீர்கள்!

ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் முதலாளிகளெல்லோரும் கம்யூனிஸ்ட் ஆனாலும் ஆவார்கள்! ஆரம்பத்தில் கூறிய சங்கதிகள் மட்டும் அவ்வளவு சுளுவில் நடக்க முடியாது!

ஏன் தெரியுமா? முதலாளிகளுக்குத் தங்கள் செல்வத்தைக் காப்பாற்று வதிலிருக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. முதலாளிகள் என்பதற்காக மூன்று மடங்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட முடியாது! ஒரே சமயத்தில் மூன்று மோட்டார் கார்களில் பிரயாணஞ் செய்ய முடியாது. தங்கக் கட்டிலில், பட்டு மெத்தையில் பூக்களை நிரப்பிப் படுத்தாலும் அதற்கென்று தனிமையான ஒரு நல்ல தூக்கம் வரப் போவதில்லை!

ஆகையால் “உங்கள் சொத்துக்களை யெல்லாம் நாங்களே எடுத்துக் கொள்கிறோம்,” என்று சர்க்கார் கூறுவார்களேயானால், “நீங்கள் நீடூழி வாழ வேண்டும்! தயவு செய்து உடனே ஏற்றுக் கொள்ளுங்கள்,” என்றுதான் முக்கால்வாசி முதலாளிகள் பதில் கூறுவார்கள்! (இது தெரிந்துதான் நாமெல்லாம் முதலாளிகளாகாமல் முன் ஜாக்கிரதையா யிருக்கிறோம் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது!)

இதோ, ஒரு செய்தி தருகிறேன், படியுங்கள்!

“இனிமேல் நான் முதலாளியல்ல; கம்யூனிஸ்ட் ஆகி விட்டேன். கம்யூனிஸ்ட்களைப் போலவே நானும் பாமர மக்களின் குறைகளைப் போக்கும் பணியில் ஈடுபடப் போகிறேன்.” -

இந்த மாதிரிச் சொன்னவர் யார் தெரியுமா? வடநாட்டுப் பத்திரிகைகளை யெல்லாம் விலைக்கு வாங்கியிருப்பவரும், திருச்சிப் பக்கத்திலே பெரிய சிமெண்ட் தொழிற்சாலை வைத்திருப்பவரும், காங்கிரஸ் இயக்கத்திற்கே ஒரு வைரத் தூணாக (விலை மதிப்பு உட்பட) உள்ளவரும், இந்திய சர்க்காரையே தன் சட்டைப் பைக்குள் வைத்திருப்பவருமான டால்மியா சேட்! ஆமாம்! அவரே தான்! 25-3-50 “பிளிட்ஸ்” பத்திரிகையில் இந்தச் செய்தி வந்திருக்கிறது.

இது பொய்ச் செய்தியென்றே வைத்துக் கொண்டாலும், எவ்வளவு துணிச்சலான ஒரு செய்தி, பாருங்கள்! கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கிண்டல் செய்வதற்காக டால்மியா இப்படிக் கூறியதாக வைத்துக் கொண்டாலும் சரி! அல்லது விரைவில் நிகழப் போகிற ஒரு காரியத்துக்குத் தாமாகவே ஒத்திகை பார்க்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் சரி!

-  குத்தூசி குருசாமி (27-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It