kuthoosi gurusamy 300“அந்தக் காலத்திலே நான் காலேஜிலே படிக்கிறப்போ,” ஹைகோர்ட் ஜட்ஜ் என்றால் என்ன மரியாதை? என்ன மதிப்பு? சினிமா “ஸ்டார்களை”ப் பார்த்தாலும் பார்க்கலாம், ஹைகோர்ட் ஜட்ஜ்களைப் பார்க்கவே முடியாது! இன்ன சங்கதி பற்றி, இவர்கள், இன்னதுதான் நினைக்கிறார்கள் என்பதையே கண்டுபிடிக்க முடியாது! யூகிக்கக் கூட முடியாது. வழக்குகளில் தீர்ப்புக் கூறுவதைத் தவிர, அவர்கள் பொது மக்களுக்கு எதிரில் வாய் திறப்பதே யில்லை. நீதிமன்றத்தில் வருவதும் போவதும், பொம்மைகள் அசைவது போலவே யிருக்கும்! தமக்கென்று ஒரு கருத்தே இல்லாத மனிதர்கள், இவர்களைத் தவிர வேறு யாருமே மனிதப் பிறவியில் கிடையாது என்றே எல்லோரும் கருதி (நம்பி) யிருந்தனர்! வாயைத் திறந்தால் முத்துச் சிந்தவது மாதிரிதான்!

இப்படி யிருந்ததால் தான் அவர்கள் தீர்ப்புக்களிலும் ஒரு தனி மரியாதையும் பயமும் இருந்தது! இது அந்தக் காலம்!

ஆனால் இன்றைக்கு எப்படி யிருக்கிறது, பார்த்தீர்களா? ஹைகோர்ட் ஜட்ஜ்களில் ஏதோ 2-3 பேரைத் தவிர மற்றவர்களெல்லோரும் “அதிகப் பிரசங்கிகளாகவே” யிருக்கின்றனர்! அதாவது அதிகமாகப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கின்றனர்! எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வரத் தயாராயிருக்கின்றனர். அசல் அரசியல் தலைவர்களைப் போலவே இருக்கின்றனர். படம் திறக்க வேண்டுமா? பகவத் கீதை பற்றிப் பேச வேண்டுமா? திருப்புகழ் பஜனை செய்ய வேண்டுமா? எந்த வேலைக்குக் கூப்பிட்டாலும் வரத் தயாராயிருக்கின்றனர்! வந்து ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் நம் தலைகளெல்லாம் சொட்டச் சொட்ட சொல்மாரி பொழியவும் தயாராயிருக்கின்றனர்!

இன்ன ஜட்ஜுக்கு இன்ன விஷயத்தில் அதிகப் பற்று என்பதை எளிதல் கண்டு கொள்கிற மாதிரியில் ஹைகோர்ட் ஜட்ஜுகளில் பெரும் பாலோர் பொதுஜனத் தலைவர்களாகவே காட்சியளித்து வருகின்றனர்! மந்திரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பேச்சுத் தொண்டு செய்து வருகின்றனர்!

தேர்தல் நெருங்க நெருங்க, தேர்தல் பிரசாரத்துக்குக் கூட இவர்களை அழைக்கலாம் போலத் தோன்றுகிறது! பிரசங்க ருசி அவ்வளவு அதிகமாகி விட்டது! இவர்கள் அதிகமாகப் பேசப் பேச, பொது மக்களுக்கு நீதியிடமிருந்த நம்பிக்கையானது இவர்களின் சொல்மாரியில் சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பிக்கிறது!

"அடேடே! இவரிடமா, விசாரணை? இவர் இன்ன இடத்திலே இன்ன மாதிரிப் பேசியவராச்சே! நிச்சயம் தண்டனை தான்!” என்று ஒரு சிலராவது சந்தேகப்படாமலிருக்க முடியவில்லை.

இவைகளை யெல்லாம் மனதில் வைத்துத்தான், சென்னை மேல் சபையில் பேசிய டாக்டர் லட்சுமணசாமி முதலியார், “ஜட்ஜ்களின் பேச்சுகளுக்கு ஏதாவது ஒரு வரையறை இருக்க வேண்டியது அவசியம்” என்று கூறியிருக்கிறர் என நினைக்கிறேன்! ரொம்பச் சரியான பேச்சு! பேச்சுக் கட்டுப்பாடு வேண்டும்! அதாவது ஜட்ஜ்களுக்கு 144 தடை விதிக்க வேண்டும்! வேண்டுமானால் பேச்சு ஆசை பீறிட்டுக் கொண்டு வருகிறவர்கள், வீட்டில் தங்கள் தங்கள் மனைவிகளிடம் பேசிக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை! மாலை போட்டுகொள்ள ஆசை யிருக்குமானால் கோர்ட்டில் நாள்தோறும் தீர்ப்பு முடிந்ததும் எதிர்க்கட்சி வக்கீல்கள் நீதிபதிகளுக்கு மாலை போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விடலாம்! வழக்குகளுக்காக எவ்வளவோ பணம் செலவழிகிறபோது, இந்த அற்பத் தொகை தானா பிரமாதம்?

- குத்தூசி குருசாமி (08-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It