supreme court 600உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலிஜியம் தற்போது பரிந்துரை செய்திருக்கிறது. கொலிஜியம், எஸ்.வி.இரமணா தலைமையில் நான்கு பேர் அடங்கியக் குழுவைக் கொண்டதாகும். பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு பேர்களில் ஒருவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜம்ஷெத் பி. பார்த்திவாலா என்பவர் ஆவார். இவரது பின்னணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

2015 டிசம்பர் 1 இல் ஹர்திக் பட்டேல் பிரிவுக்கு தனி ஒதுக்கீடு கேட்ட வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் வந்த போது, அவர் தெரிவித்த கருத்து கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் தனது தீர்ப்பில் இவ்வாறு கூறினார். “இந்த நாட்டை அழித்துவரும் இரண்டு கேடுகள் எதுவென்று என்னைக் கேட்டால், ஒன்று ‘இட ஒதுக்கீடு’, மற்றொன்று ‘ஊழல்’ என்று நான் கூறுவேன். நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த ஒரு குடிமகனும் இட ஒதுக்கீடு கேட்பது வெட்கக் கேடானது” என்று அவர் கூறியதோடு, “அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு நீடிக்கும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

உண்மையில் அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் பத்தாண்டுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு அது தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த அடிப்படையான அரசியல் சட்டப் புரிதல் கூட இல்லாமல், எஸ்.சி, எஸ்.டி மக்கள் மீதுள்ள கசப்பான உணர்வின் காரணமாக விஷமக் கருத்துக்களை கக்கியவர் குஜராத்தை சார்ந்த ஜாம்ஷெட்பி பார்த்தி வாலா.

அவர் அப்போதே இப்படியான கருத்துக்களை கூறியவுடன், 58 மாநிலங்களைவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்கள். அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்டத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் இப்படி ஒரு தீர்ப்பை எழுதியவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்படி கையெழுத்திட்ட 58 மாநிலங்களவை உறுப்பினர்களில் திமுக வைச் சார்ந்த திருச்சி சிவாவும் ஒருவர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவைகள் அதில் கையெழுத்திட்டிருக்கின்றன.

மே 2028 இல் இவர் தலைமை நீதிபதியாக வரக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. நீதித் துறையின் உயர்ந்த மட்டத்தில் அரசியல் சட்டத்தை சரியாகப் புரிந்துக் கொள்ளாதவர்கள், இட ஒதுக்கீடு என்றாலே வெறுப்பைக் கக்கக்கூடியவர்களை உட்கார வைத்து நாட்டில் இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு கொலிஜியமும் துணை போகக் கூடாது. இந்த நியமனத்தை எதிர்த்து நாடாளுமன்ற, மாநிலங்களவை, மக்களவையில் கடுமையான கண்டனங்களை எழுப்புவதோடு சமூக நீதியில் அக்கறை உள்ள அத்தனை இயக்கங்களும் இதற்குக் கடுமையான கண்டனங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It