kuthoosi gurusamyஇதென்னடா, நாட்டில் இவ்வளவு தொல்லைகள் மலிந்து போச்சே! எங்கு பார்த்தாலும் பஞ்சமும், பட்டினியும், படுகொலையுமாகவே இருக்கே! சுரண்டல்காரன் கொழுத்துக் கொண்டே யிருக்கிறான்; உழைப்பாளி உருக்குலைந்து கொண்டே யிருக்கிறானே, என்ன செய்யலாம்? நம்மால் ஆனது ஏதாவது செய்ய வேண்டாமா? உண்பதும் உறங்குவதுந்தானா நம் வேலை? பன்றிகூட இந்த வேலை தானே செய்கிறது? அதற்கும் நமக்கும் என்னதான் வேற்றுமை?-

என்று பண்டிட் நேரு முதல் அவரது கடைசிப் பிரஜையாகிய நான் வரையில், எல்லோரும் மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், “அப்பாடா! ஒரு வழி பிறக்கப் போகிறது!” என்று பெருமூச்சு விடும்படியான ஒரு செய்தி கிடைத்திருக்கிறது!

திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம் எந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் பரவ வேண்டுமோ அந்த அளவுக்குப் பரவாதபடியால், அதை எல்லோரும் பயின்று பரவும்படி செய்வதற்காக சென்னையில் சேக்கிழார் கழகம் ஏற்பட்டிருக்கிறதென்றும், மே மாதம் 22-ந் தேதி சேக்கிழர் மாநாடு நடத்துவதற்கு இக்கழகத்தினர் ஏற்பாடு செய்திருக்கின்றனரென்றும் “குளோப்” செய்தி கூறுவதைப் பார்த்தவுடனே வயிற்றில் பால் வார்த்தது போலவே இருக்கிறது!

போகட்டும்! புண்ணியவான்கள் பெரிய புராணத்தைப் பரப்புவதற்குப் பெரிய ஏற்பாடு செய்யப் போகிறார்களாம்! இதற்கடுத்தபடி “சின்னப் புராண மாநாடு” நடத்துவார்களென்று எதிர்பார்க்கிறேன்!

இனிமேல் தமிழ் இலக்கியம் வளர்ந்தே தீரும்! தமிழர்களின் வறுமை ஒழிந்தே தீரும்! தமிழர்களின் படிப்பின்மை மடிந்தே தீரும்!

“உலகெலாம்” என்று முதலடி யெடுத்துக் கொடுத்த கருணை வள்ளல், ஷேக்ஸ்பியருக்கும், ஷெல்லிக்கும் (மத வேறுபாடு கருதி) அடியெடுத்துக் கொடுக்காமலிருந்தாலும், இந்நாட்டுச் சைவ மெய்யன்பர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காவது பரீட்சை எழுதும்போது ஒவ்வொரு கேள்விக்கும் தர வேண்டிய பதிலின் முதலடி யெடுத்துக் கொடுப்பார் என்று நினைக்கிறேன்!

துறையூர் தமிழர் மாநாடு, சென்னைத் தமிழன்பர் மாநாடு, பூவாளூர் சைவ சித்தாந்த மாநாடு, சென்னைத் தமிழர் மத மாநாடு - போன்ற பல மாநாடுகளில் அந்தக் காலத்துப் புலவர்கள்(அவர்களில் ஒரு சிலர் இன்றும் இருக்கிறார்கள்) சுயமரியாதைக்காரரிடம் நடுங்கிய நடுக்கத்தையும், இந்தக் காலத்துப் புலவர்களிற் சிலர் குளிர்விட்டுப் போய் கம்பர் மாநாடும், சேக்கிழார் மாநாடும் நடத்தி வருகின்ற ஆர்ப்பாட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, என்னை யறியாமலே என் தலை (எழுதும்போது!) குனிந்து கொள்கிறது! இனிமேல் என் நெற்றியிலேயே விபூதி இடச் சொல்லிக் கட்டாயப் படுத்தினால் கூடப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் போலிருக்கிறது!

அந்தக் காலத்திலே (அதாவது நான் வீரனாயிருந்த காலத்திலே) இம்மாதிரி மாநாடுகளெல்லாம், அவர்கள் செலவிலே நாங்கள் நடத்திய சுயமரியாதை மாநாடுகளாகவே இருந்தன! பாவம்!

“கடவுள் பற்றிய நூல்கள் எதையும் பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்கக் கூடாது” - என்ற ஒரு தீர்மானத்தை சி.பி. ராமசாமி அய்யர், சாரநாத அய்யங்கார் கே. வி. விருஷ்ணசாமி அய்யர், டி. பி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சத்திய மூர்த்தி அய்யர், முத்துரங்க முதலியார், திரு. வி. க., ராஜா சர் அண்ணாமலை செட்டியார், உ. வெ. சாமிநாதய்யர், ‘கல்கி’ அய்யர், போன்ற இன்னும் பல பிராமணத் தலைவர்களும், சைவத் தலைவர்களும், ஏராளமாகத் கூடியிருந்த ஒரு மாநாட்டில், ஒரு மனதாக நிறைவேற்றி வைத்த என் தோழர்களும் நானும் இன்றைக்கு எங்கள் “முற்பிறப்பை” நினைத்துப் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!

அடாடா! அன்றைக்கு என்ன பரபரப்பு! என்ன நடுக்கம் இன்றைக்கு என்ன கூத்து! 3-4 ஆண்டுகளுக்கு முன்பு மேரீஸ் ஹாலில் ஒரு நாடகம் நடந்தது! அன்று வர வேண்டிய முக்கிய நடிகர் வருவதற்கு நாழியான படியால் சுமார் அரைமணி நேரம் வரையில் அந்நாடக சபையின் விகடர் ராமாயணத்தைப் பற்றி ஏதேதோ உளறிக் கொண்டிருந்தார், மேலும் பொறுக்க முடியாத என் தோழர் ஒருவர் (?) எழுந்தார். “ஓய்! போ உள்ளே! ராமாயண காலட்சேபம் கேட்க நாங்கள் வரவில்லை! நாடகம் பார்க்க வந்தோம்!” என்றார்! அதே சமயத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து மேலும் 7-8 பேர் “இராமன் ஒழிக இராமாயணம் ஒழிக” என்று கூச்சலிட்டார்கள்! விகடர் ஓடினார், திரைக்குள்ளே!

சேக்கிழார் மாநாட்டில் எவ்வளவோ முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றலாம், அம்மாதிரி எண்ணமுடையவர்கள்! உதாரணமாக:-

“பெரிய புராணத்தின்படி சில முக்கியமான நாயன்மார்கள் கலப்பு மணமும் விதவா மணமும் செய்திருக்கிறபடியால் உண்மையான சைவர்கள் அம்மாதிரி மணங்களேயே செய்ய வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது,”

“பார்ப்பனச் சிசு திருஞானசம்பந்தருக்கு ஒரே பாடலில் அருள் கூர்ந்த கடவுள், தமிழராகிய அப்பருக்குப் பத்துப் பாடல்கள் வரையில் அருள் சுரக்காமலிருந்தது பற்றி கடவுள் மீது இம்மாநாடு வகுப்புத் துவேஷக் குற்றஞ் சாட்டுகிறது,”

“தென்னாடுடைய சிவனே போற்றி” என்று சைவர்கள் அடிக்கடி கூறுவதன் மூலம் பாரத நாட்டை இரண்டாகப் பிளக்கின்ற உணர்ச்சி ஏற்படுகிறபடியால் அதைக் கைவிடுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது,”

“நாயன்மார்கள் பாடிய தேவாரத்தை அலட்சியமாகக் கருதி, வெறுத்து ஒதுக்கி விட்டு, சமஸ்கிருத மந்திரங்களை மட்டும் ஏற்றுக் கொள்கின்ற கடவுள்களை இம்மாநாடு மிக வன்மையாகக் கண்டிக்கிறது,”-

என்பன போன்ற தீர்மானங்களைச் சேக்கிழார் மாநாட்டில் கொண்டு வரக் கூடிய தமிழன்பர்கள் தேவை. இவைகளைப் போல, சேக்கிழார் புராணத்தை ஒட்டிய எத்தனையோ தீர்மானங்களை நான் தர முடியும்!

- குத்தூசி குருசாமி (13-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It