kuthoosi gurusamy 300பல்லி விழும் பலனை அறிவதற்காகப் பஞ்சாங்கம் வைத்திருப்பவர்கள் பலர்! பல்லி ஓசைக்குப் பயந்து பஞ்சாங்கத்தைப் புரட்டுகிறவர்களும் பலர்! பல்லி விழுந்த (ஆனால் செத்துப் போன) உணவைத் தின்றால் உடன் மரணம் என்கிறார்கள், டாக்டர்கள். ஆனால் பல்லி உடம்பில் விழுந்தாலே நடுங்கிச் 'சாகிற' வீராதி வீரர்கள் எத்தனையோ பேருண்டு! போலீஸ்காரரையும் இராணுவ வீரர்களையும் சேர்த்தே சொல்கிறேன்! வைதீகமான ஒரு போலீஸ்காரர் திருடனைப் பிடிக்கத் தாவும்போது ஒரு பல்லி அவர் தலையில் விழுந்து விட்டால் அந்தப் போலீஸ்காரர் திருடனை விட்டு விடுவார் என்பதை நிச்சயமாக நம்பலாம்!

பல்லி விழுவதே இப்படி யென்றால், கல் விழுந்தால் கலங்காமலிருக்க முடியுமா?

சாக்கிய நாயனார் என்ற பக்தர் கடவுளைக் கல்லால் அர்ச்சனை செய்தாராம்! ஆனாலும் அவர் அன்பை மெச்சி கடவுள் அவரைத் தம் ஊருக்கு அழைத்துப் போனாராம்! அன்பில்லாமல் வீசுகின்ற மன்மதனின் பூக்களைவிட அன்போடு வீசுகின்ற சாக்கியனின் கல்லையே விருப்புடன் ஏற்றுக் கொண்டார், கடவுள்! இந்தச் சங்கதியில் ஏதாவது சந்தேகம் உள்ளவர்கள், கடவுளையே நேரிற் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்!

கல் பல நல்ல காரியங்களுக்குப் பயன்படுவது போலப் பல தீய காரியங்களுக்கும் பயன்படுகிறது. போலீஸ்காரர் ஒரு கலகக் கூட்டத்தைத் தாக்கும்போது கூட்டத்திற்குக் கிடைக்கும் கருவி கல்தானே?

மேல உழுவூர் என்ற ஊரில் (தஞ்சை) ஏதோ ஒரு கடையின் மீது 5 நிமிஷத்திற்கு ஒரு கல் விழுந்து கொண்டே யிருக்கிறதாம். ஒரு வாரமாகவே இப்படி நடக்கிறதாம். இரவு பகல் 24 மணி நேரமும் விழுந்து கொண்டிருக்கிறதாம்! காரணம் என்னவென்றே தெரியவில்லையாம்! இதைப் பில்லி சூனியம் என்று சொல்கிறார்களாம்.

சாமிநாதன் என்றொரு நண்பர் எனக்குக் கடிதம் எழுதி, இதன் காரணத்தைக் கூறச் சொல்கிறார். இந்தக் கடிதத்தைப் படித்த என் நண்பரான கட்டட காண்ட்ராக்டர் ஒருவர், “என்ன செலவானாலும் அந்த ஊருக்குப் போய்த் தீருவேன்” என்று புறப்பட்டார். நான்தான் “இது வீண் புரளி; நம்ப வேண்டாம்,” என்று கூறித் தடுத்தேன். அவர் கேட்பவராயில்லை. அந்த மனுஷனுக்கு அவ்வளவு பேராசை! அந்தப் பில்லி சூனியத்தை எப்படியாவது சென்னைக்குக் கொண்டு வந்து, அடையாறு பக்கத்தில் கல்மாரி பொழியச் செய்தால் தமக்குத் தினம் ஆயிரம் ரூபாய்க்குமேல் லாபம் வருமாம்! அமிஞ்சிக்கரையிலிருந்து லாரி ஒன்றுக்கு 10-15 ரூபாய் கொடுத்து வாங்கி வருவதற்குப் பதிலாக, தேவையான கற்களை ஒரே நாளில் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றார்!

பல மாதங்களுக்கு முந்தி சென்னை முத்தியாலுப் பேட்டைக் கோவிலுக்குள் ஒரு சேவல் வந்த அதிசயமும், அது ‘கடவுளை’ வலம் வந்த கதையும், அதைப் படம் பிடித்து 'சுதேசமித்திரன்' போன்ற பாட்டியம்மா பத்திரிகைகள் வெளியிட்ட சங்கதியும், பக்தர்கள் சேவலைக் கண்டு வணங்கும் பொருட்டு கூட்டம் கூட்டமாகச் சென்றதும் நினைவிருக்கலாமே!

சரி! பில்லி சூன்யம் என்றால் என்ன? மந்திரக்காரனை வரவழைத்து நம் எதிரிகளுக்குத் தொல்லை கொடுக்குமாறு செய்வது! அப்படியானால் காஷ்மீர் போருக்காக தினம் லட்சம் லட்சமாக ரூபாயைக் கரியாக்கிவிட்டு, இப்போது அமெரிக்காவிடம் தஞ்சமடைவதற்காக பண்டிட் நேரு செல்ல வேண்டியதில்லையே! பாகிஸ்தான் சர்க்கார் மீது நம் பில்லி சூன்யங்களை ஏவிவிட்டு, ஒரே நல்ல பாம்பு மழையாகப் பெய்யுமாறு செய்யலாமே! (அல்லது பன்றிக்கறி மழையாகக் கூடப் பெய்யச் செய்யலாமே!)

ரஷ்யாமீது அமெரிக்காவுக்கு உள்ள ஆத்திரத்திற்கு உழுவூர் பில்லி சூன்யக்காரர் மட்டும் கிருபை புரிவாரேயானால் ஒரு லட்சம் டாலர் கொடுப்பார், ட்ரூமென்! ஒரே ஒரு மணி நேரத்திற்கு ரஷ்யா மீது பெட்ரோல் மழை! மழை ஓய்ந்ததும் ஒரே ஒரு தீக்குச்சி!

பில்லி சூன்யம் வைக்கிறவருக்கு வேண்டியது பணம்தானே? அப்படியானால் ரிசர்வ் பாங்க் மீது தன் திறமையைக் காட்டி, அங்குள்ள பவுன்களைக் கூடை கூடையாக வாரிப் போகலாமே!

கடிதம் எழுதிய நண்பர் கவலைப்பட வேண்டாம்! கல் மழை இந்நேரம் நின்று போயிருக்கும். ஏனென்றால், கல் விலை ஏறியிருக்கும் இந்நாளில், அதிகப்படியான கற்கள் (உடைந்த கற்களையே சொல்கிறேன்!) இன்னும் எங்கிருந்து வரப் போகின்றன?

பில்லி சூனியம்! மீன் காவடி! சேவல் தரிசனம்! பிள்ளை பிடிப்பது! சாமி ஆடுவது! - எல்லாம் இந்த நாட்டில் தானே? பல்லிக்குப் பயந்து பஞ்சாங்கத்தைப் புரட்டுகின்ற இந்த நாட்டில்தானே! உண்மையான வீரர்கள் உள்ள நாட்டில் இந்தப் பீடைகளெல்லாம் தலை காட்டுமா?

- குத்தூசி குருசாமி (13-10-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It