எல்லாவற்றையும் அற்ப அரசியலுக்காக இந்துமயப்படுத்தும் போக்கு பாஜக ஆட்சியில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவை ஒரு பார்ப்பனமயப் படுத்தப்பட்ட இந்து நாடு என அறிவிக்காமல் மோடி அரசு அதன் எல்லா நிகழ்ச்சி நிரலிலும் அதை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது.
நீதித்துறை, காவல்துறை, அமலாக்கத்துறை, புலனாய்வு அமைப்புகள் என அனைத்துமே இந்துத்துவ காவி பாசிசத்தின் அடியாள் படையாக மாற்றப்பட்ட பின்பு இப்போது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் காவி மயப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கிகள் மோசமான போலி அறிவியல் கதைகளை சொல்லி மக்களை முட்டாளாக்கும் போது கூட, பெரும்பாலான இந்திய அறிவியலாளர்கள் மெளனமாகவே இருந்தார்கள். காரணம் பெரும்பாலான இந்திய அறிவியலாளர்கள் தீவிரமான மூட நம்பிக்கை கொண்டவர்களாகவும், மதப்பற்றாளர்களாகவும் இருந்ததுதான்.
அறிவியலை வாழ்க்கைக் கண்ணோட்டமாக கொள்ளாமல், பிழைப்பதற்கான ஒரு வழியாக நினைத்துப் படித்தவர்கள் எவ்வளவு பெரிய உயரிய இடத்திற்குச் சென்றபோதும், தங்களுடைய ஆதாரமற்ற, முட்டாள்தனமான பிற்போக்குக் கருத்துக்களை கைவிடாமல் இருப்பதோடு, அதை மற்றவர்களும் பின்பற்றுவதற்கு வழி காட்டுகின்றார்கள்.
இந்தியாவின் வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் பல அறிவியலாளர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளுக்காக மதவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டதோடு கொலையும் செய்யப்பட்டார்கள்.
இந்தியாவில் பிறந்து வாழ்ந்த ஆரியபட்டர், வராகமிகிரர் போன்றோர் போதுமான கருவிகள் இன்றியே சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமியின் வடிவம், அதன் சுற்றுவேகம், அது சூரியனைச் சுற்றி வருவது மற்றும் பிற கோள்களின் புறச்சூழல்கள் போன்றவற்றை கணிதத்தின் மூலம் அனுமானித்துக் கண்டறிந்தனர்.
விண்மீனின் தூரம் மற்றும் கோணம் அறியும் கருவியைக் கண்டுபிடித்த ஹைப்பேஷியாவும், பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்ன ஜியார்டானோ புரூனோவும் கொடூரமாக மதவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.
கோப்பர் நிக்கஸ் பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என்ற கோட்பாடு அவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் அவரது சீடர்களால் புத்தகமாக வெளியிடப்பட்டது. அந்தளவிற்கு மதவாதிகளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது.
கலிலியோ பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என வெளிப்படையாகச் சொன்னதற்காக சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டார். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி அறிவியலாளர்களின் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் பெரிய விடுதலையையும் சுதந்திரத்தையும் கொடுத்தது.
உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை பெரிய அளவில் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே உபரி மதிப்பை சுரண்ட முடியும் என்ற நிலையில் அறிவியல் சிந்தனைகள் பெரிய அளவில் வளர்வதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால் முதலாளித்துவம் அறிவியலாளர்களை எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாற்றி வைத்தது.
அதனால் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் சாமானிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை ஒட்ட சுரண்டுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
நாம் அறிவியலாளர்களின் மீது அளவு கடந்த நம்பிக்கையோ அல்லது அவர்களுக்கான புனித பிம்பத்தையோ கட்டமைக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்கள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக செயல்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே அது முடிவு செய்யப்பட வேண்டியது.
இன்று இருக்கும் அறிவியலாளர்களுக்கு ஆரியபட்டர், வராகமிகிரர், ஹைப்பேஷியா, புரூனோ, கோப்பர் நிக்கஸ், கலிலியோ போன்றவர்களுக்கு இருந்த, உயிர் போகும் நெருக்கடி இல்லை என்றாலும், இயல்பிலேயே இவர்கள் அற்பவாதிகளாகவும் பிழைப்புவாதிகளாகவும் தங்களுடைய சுயநலத்துகாக ஒரு சமூகத்தின் அறிவியல் பார்வையையே காயடிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
தங்களின் செயல்பாடுகள் மக்களின் அறிவியல் கண்ணோட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் அறிவியல் சிந்தைனையை மழுங்கடிக்கும் என்றோ, அறிவியலை தங்களின் வாழ்வியல் கண்ணோட்டமாக ஏற்று வாழ்பவர்களால் எள்ளி நகையாடப்படும் என்றோ, ஏளனப்படுத்தப்படும் என்றோ, அவர்களிடம் எந்தக் கூச்சமோ குற்ற உணர்வோ இல்லை.
அப்படியான பிற்போக்குவாதிகளின் கூடாரமாக இஸ்ரோவும், அதில் பணியாற்றும் அறிவியலாளர்களும் இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு முறையும் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு முன்னும் மத ரீதியான வழிபாட்டை பொதுவெளியில் செய்து, இஸ்ரோ என்பது இந்துத்துவவாதிகளின், பார்ப்பன அடிமைகளின் கூடாரம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் என எல்லோரும் தரும் வரிப்பணத்தில் செயற்கைக் கோள்களை ஏவும் இஸ்ரோவும், அதில் பணியாற்றும் அறிவியலாளர்களும் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல், திருப்பதி உட்பட நாட்டில் உள்ள பல இந்து வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று வழிபட்டனர். இதன் மூலம் என்னதான் மனித உழைப்பும், சிந்தனையும் இருந்தாலும், ராக்கெட் சரியான பாதையில் பயணிக்கவும், செயற்கை கோள்கள் சரியான சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தவும் கடவுளின் துணை - குறிப்பாக இந்துக் கடவுள்களின் துணை - கண்டிப்பாக தேவை என்ற பிம்பத்தை திட்டமிட்டே உருவாக்கினர்.
சில நாட்களுக்கு முன்னால் இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 பெரிய வெற்றியைப் பெற்றது. உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
ஆனால் உலகில் மற்ற எந்த நாட்டு அறிவியலாளர்களும் செய்யாத ஆன்மீகக் கூத்தை எல்லாம் செய்துவிட்டுத்தான் சந்திரயான் 3யை நிலவுக்கு ஏவினார்கள் இந்திய அறிவியலாளர்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் மோடி அவர்கள், “இந்தத் திட்டம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்குக் காரணமான உங்கள் அர்ப்பணிப்புக்கு சல்யூட் செய்கிறேன். உங்கள் பொறுமைக்கு சல்யூட் செய்கிறேன். உங்கள் கடின உழைப்புக்கு சல்யூட் செய்கிறேன். உங்கள் உத்வேகத்திற்கு சல்யூட் செய்கிறேன்” என்று பாராட்டிவிட்டு தன்னுடைய சங்கி சூழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பெயரிட முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று தன்னிச்சையாக அறிவித்தார். ஆனால் சர்வதேச வானியல் கழகத்தின் விதிகளின் படி நிலவுக்கு மதரீதியான பெயர்கள் வைக்க முடியாதாம்.
அதாவது மறைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலான பிரபல விஞ்ஞானிகள், வானியல், கோளியல், விண்வெளி அறிவியல் ஆகியவற்றுடன் தொடர்புடைய, அந்தத் துறையில் கணிசமான பங்களிப்பு செய்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள், இறந்த விண்வெளி வீரர்களின் பெயர்கள் மற்றும் வானிலை அல்லது மனநிலை சார்ந்த பெயர்களை மட்டுமே வைக்க முடியுமாம்.
எனவே ‘சிவசக்தி’ என்ற பெயர் சர்வதேச வானியல் கழகத்தின் விதிகளுக்கு முரண்பாடாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடவும் வாய்ப்புள்ளதாக சொல்கின்றார்கள்.
அது ஒருபுறம் இருக்க, மோடிதான் எல்லாவற்றையும் பார்ப்பனமயப்படுத்தும் திட்டத்திற்காக இதைப் பயன்படுத்திக் கொள்கின்றார் என்றால் மோடியின் இந்த அறிவிப்புக்கு சொம்படிக்கும் அறிவியலாளர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது?
தற்போது இஸ்ரோவின் தலைவராக இருக்கும் சோம்நாத், “நான் அறிவியலையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறேன். இதில் அறிவியல் வேறு, ஆன்மீகம் வேறு. இரண்டையும் ஒன்றாக இணைக்கக்கூடாது" என்றும், "நிலவில் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என்று பெயரிட்டதில் எந்தத் தவறும் இல்லை” என்றும் பேட்டி கொடுத்திருக்கின்றார்.
எங்கு நின்று கொண்டு இந்தப் பேட்டியை அவர் கொடுத்தார்? திருவனந்தபுரம் அருகே சாவடிநடை பகுதியில் உள்ள பவுர்ணமி காவு பத்திரகாளி அம்மன் கோயிலில் நின்று கொண்டுதான் இந்த அரிய பேட்டியைக் கொடுத்தார்.
இந்திய விஞ்ஞானிகளிடையே அமெரிக்காவிலுள்ள சமூக-கலாச்சார மதச்சார்பின்மை பற்றிய ஆய்வு நிறுவனத்தினர் (ஐஎஸ்எஸ்எஸ்சி) நடத்திய ஆய்வில் (பங்கேற்றோர் 1100 விஞ்ஞானிகள், எல்லாரும் அடிப்படை அறிவியல்களிலும், பொறியியலிலும், மருத்துவத்திலும் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள்), 26 சதவீதத்தினர் ஒரு தனிப்பட்ட கடவுளின் இருப்பிலும், மற்றொரு 30 சதவீதம் தனிநபர் சாராத ஆன்மீக சக்தியிலும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஏறத்தாழ 40 சதவீத இந்திய விஞ்ஞானிகள் கடவுள் அற்புத செயல்களைச் செய்கிறார் என்றும், 24 சதவீத விஞ்ஞானிகள் சிறப்பு தெய்வீக ஆற்றல் படைத்த ஆடவரும் பெண்டிரும் அற்புதச் செயல்களைச் செய்ய முடியும் என்றும் நம்பினர். குறிப்பிட்ட எண்ணிக்கையினர் (29 சதவீதம்) கர்ம வினையிலும் இன்னும் சிலர் (26 சதவீதம்) மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையிலும் மறு பிறப்பிலும் நம்பிக்கை கொண்டவர்கள். நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் என்ற வகையில் அடங்கக்கூடிய பலரும் பொது வழிபாடுகளில் பங்கேற்பதோடு, அற்புதங்களைச் செய்யும் சாமியார்களைப் பின்பற்றினர்.
மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் சிந்தனையை ஊட்ட வேண்டிய விஞ்ஞானிகளின் சிந்தனையோ இந்தியாவில் மிக ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது. விண்வெளிக்கு ராக்கெட்டை விட்டாலும் நல்ல நேரம் பார்த்து பார்ப்பனர்களை வைத்து பூஜை போடும் நிலையில் தான் இந்திய அறிவியலாளர்களின் அறிவு வளர்ச்சி இன்றும் இருக்கின்றது.
ராகு காலமும், எமகண்டமும், அஷ்டமியும், நவமியும், மோட்சமும் இல்லாத நாடுகளில் அறிவியல் அதன் உச்சத்தை தொட்டுக் கொண்டு இருக்க, இங்கோ இதை எல்லாம் வைத்துக் கொண்டு அறிவியல் வளர்ச்சிக்கு கும்மி அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல் சாயம் பூசி இன்னும் இந்த மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள்.
இதற்காக கல்வி நிலையங்களில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் வேலை செய்து கொண்டு இருக்கின்றது. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு முழுக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால் தான் ஜோசியம், யோகம், வேத அறிவியல்கள் (போலி அறிவியல்) போன்றவற்றை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளாக வைத்து, இவற்றை உண்மை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய மக்களை அவர்கள் என்றென்றும் பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து மீண்டு விடாதபடி சதி செய்ய முடிகின்றது.
எனவே தன்னுடைய வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக பார்ப்பன சடங்குகளைச் சார்ந்து கட்டமைத்துக் கொண்ட ஒருவனால் ஒருநாளும் சுய சிந்தனையாளனாய் மாற முடியாது என்பதைத்தான் பெரும்பாலான இந்திய அறிவியலாளர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன.
இயல்பாகவே மத அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்ட அறிவியலாளர்களின் ஆய்வுகள் அதன் போக்கில் முதலாளித்துவ சுரண்டலுக்கு பல்லக்கு தூக்க மட்டுமே பயன்படும்படியாக இருக்கும்.
நிலவில் யுரேனியம், தோரியம் போன்ற அரிய வகை தனிமங்கள் இருக்கின்றதா? தண்ணீர் இருக்கின்றதா? போன்றவற்றைப் பற்றி ஆய்வு செய்யும் சந்திராயன்3 இன் ஆய்வுகளால் ஒரு சாமானிய இந்தியனுக்கு என்ன பயன் என்று நாம் கேட்கப் போவதில்லை. காரணம் நாளை நிலவை அதானியோ, அம்பானியோ தன்னுடைய சொத்தாக வைத்திருக்க மாட்டார்கள் என்ற உறுதிமொழியை நம்மால் தர முடியாததால்தான்.
- செ.கார்கி