சிலர் பெரிய பெரிய சங்கதிகளுக்காக ஆசைப்படுவார்கள்! கிடைக்கிற சமயம் பார்த்து, “எனக்கு வேண்டாம்! பயமாயிருக்கிறது,” என்று சொல்லி ஓடி விடுவார்கள், வேடிக்கை பார்க்கும்போது இராட்டினக் குதிரையில் உட்கார்ந்து சுற்றவேண்டும் என்று குழந்தை ஆசைப்படும். கிட்டே நெருங்கி உட்கார வைக்கிற சமயத்தில் தேள் கொட்டிய மாதிரி “வீர்” என்று கத்தும்!

kuthoosi gurusamy 268“உன்னை இந்திய முதலமைச்சராக ஆக்கப் போகிறேன், வா!” என்று பண்டிட் நேரு என்னை அழைக்கிறதாக வைத்துக் கொள்வோம்! நான் என்ன சொல்வேன்? “அதெல்லாம் வேண்டாம் சார்! நீங்கள் சரியாக ஆட்சி செய்யவில்லை யென்றுதான் சொன்னேனே தவிர, நான் வருகிறேன் என்றா சொன்னேன்?,” என்று கூறிவிட்டு, ஓட்டம் பிடிப்பதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?

எங்கே, எவன் குண்டு வீசிவிடுகிறானோ என்று சதா நடுங்கிக் கொண்டும், வீட்டுக்கெதிரே இன்னும் எத்தனை அகதிகள் வந்து மறியல் செய்யப் போகிறார்களோ என்று நினைத்துக் கொண்டும், எப்போத பார்த்தாலும் போலீஸ் வேலிக்குள்ளேயே இருப்பதென்றால் முடியுமா? நிம்மதியாக 4 மணி நேரமாவது தூங்க முடியுமா? ‘பேட்டி’ தருவதற்கே தினம் 30 மணி நேரம் வேண்டுமே! “சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்,” என்ற கதையாக வைத்துக் கொண்டாலும் சரி! என்னைப் பொறுத்தமட்டில் இவ்வளவு கட்டுப்பாடும், கெடுபிடியும், பாதுகாப்பும் உள்ள ஒரு வேலைக்கு நான் போகத் தயாராயில்லை!

“ஈசனே! சிவகாமி நேசனே! உன் பதாராவிந்தத்திற்கு அழைத்துக் கொள்ள மாட்டாயா? பக்தன் பாடுவது காதில் விழவில்லையா?,” என்று நாள்தோறும் பூஜை அறையிலும், கோவிலிலும், பஜனை மடத்திலும் அலறுகிறவர்கள் எத்தனை ஆயிரம் பேர்! வெண்ணீறு பூசி, முப்புரி யணிந்து வேதங்கள் ஓதி கடவுளை அணைக்கக் கைநீட்டும் பிராமணத் திருமேனிகள் எத்தனை பேர்!

“உடனே மோட்சத்திற்குப் போக விரும்புகிறவர்கள் அத்தனை பேரும் நாளைக் காலை 9 மணிக்குள்ளாக - கோவில் கோபுரத்திற்கு முன்பாக வந்து வரிசையாக உட்கார வேண்டுகிறேன். இப்படிக்கு, “கடவுள்,” -என்று! எல்லோருடைய கனவிலும் இன்று இரவே கடவுள் கூறி விடுவதாக வைத்துக்கொள்வோம்! கோபுர வாயிலுக்கெதிலில் எத்தனை பக்தர்கள் கூடுவார்கள்?

“அதற்குள்ளாக இவ்வளவு அவசரமா? வந்தது வந்தோம், இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருந்து விட்டுத்தான் கோவோமே!” என்றுதானே பரமபக்தன் கூட நினைக்கிறான்!

“நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகையில் ஒரு விநோதமான விளம்பரம் வந்திருக்கிறதாம்!

சந்திரனுக்குப் பிரயாணம் செய்ய விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட விலாசத்துக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்,” -என்பதுதான் அந்த விளம்பரம். வேடிக்கையல்ல, உண்மையான விளம்பரமே!

காலணாக் காசு (ஓட்டைக் காசுகூட) செலவில்லாமல் சந்திரனுக்குப் பிரயாணமாமே! அடாடா! என்ன அதிஷ்டம்! விண்ணப்பம் போடலாமா? என்றுதான் தோன்றுகிறது! அமெரிக்கா போகிறவரையில் விமானப் பிரயாணம் வெகு ஜோராய்த்தானிருக்கும்! அதன்பிறகு? சந்திரனுக்காமே! அங்கே காஃபி கிடைக்குமா? புகையிலை கிடைக்குமா?- என்பதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும். அங்கே எப்படிப் போவது? போனபிறகு எப்படித் திரும்புவது, இறுதியான பயணம் சொல்லிக் கொண்டு, ஒப்பாரி பாடச்சொல்லிக் கேட்டுவிட்டுத்தானே புறப்பட வேண்டும்?

சரி, போகிறோம்! அங்கே யாராவது நம்மை வரவேற்பார்களா? அல்லது நம்மை இட்லி மாதிரி பிட்டுச் சாப்பிடக்கூடியவர்கள் இருப்பார்களா? ஊர் ஒத்துக் கொள்ள வில்லையென்றால் எப்படித் திரும்பி வருவது? “பாஸ் போர்ட்” கிடைக்குமா? அங்கேயும் ரேஷன் அரிசிதானா? சாப்பாட்டு கிளப் உண்டா? கொஞ்சம் புளிச்சோறும் தேங்காய்த் துகையலும் கொண்டு போகலாமா?

இந்த மாதிரிப் பல சந்தேகங்கள் தோன்றும்! போவதற்கு முடிவு செய்துகொண்ட பிறகல்லவா, இந்தச் சந்தேகங்களெல்லாம்?

பேர்வழியைப் பொறுத்து இந்தச் சந்தேகங்கள் அதிகமாகலாம்!

உதாரணமாக காங்கிரஸ் தலைவர்கள் யாராவது அங்கு போவதாக நினைத்தால் “அங்கேயும் கம்யூனிஸ்ட்கள் இருப்பார்களா?” என்றுதான் முதலில் கேட்பார்கள்.

வைதீகர் யாராவது போவதாகக் கருதினால், இங்கே பூதேவர்கள் இருப்பதுபோல் அங்கே சந்திர தேவர்கள் இருப்பார்களா? நான் தர்ப்பணஞ் செய்யவேண்டுமே, என்ன செய்வது?”, என்று கேட்பார்!

சு. ம. காரர் யாராவது போக ஆசைப்பட்டால், “அங்கேயும் மேல் ஜாதி, கீழ் ஜாதி இருக்குமா? இராகு காலம், நல்ல நாள், சகுனம் எல்லா மிருக்குமா? அப்படியானால் இங்கே இருப்பதே மேல்” என்றுதான் சொல்லி விடுவார்!

அங்கே என்ன இருக்கும்? யார் இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்?- என்பதையெல்லாம் கண்டறிவதற்காகத்தான் சந்திர மண்டல யாத்திரைக்கு ஏற்பாடு செய்கிறார்கள், அமெரிக்க விஞ்ஞானிகள்!

ஆனால் இங்கே பாரத பூமியில் என்ன நடக்கிறது? பகவத் கீதை பிரசாரம்! கம்பராமாயண மகாநாடு! உபநிஷத் வியாக்யானம்! பெரிய புராண ஆராய்ச்சி! மண்ணிலும் சாணியிலும் கடவுள்! கல்லுக்கும் செம்புக்கும் கோடி கோடியாகப் பணம்! கைராட்டினத்தில் நூல்!

இந்த நாடு உருப்படுவதற்கு இந்த யுகம் மட்டுமல்ல! இன்னும் பல “யுகங்கள்” வரவேணுமய்யா!

பாரத் மாதாகி ஜே! வந்தே மாதரம்!! ஜேய் ஹிந்த்!!!

- குத்தூசி குருசாமி (01-09-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It