பொன்னியும் கொள்ளிடமும் அடிவருடப்படுத்துறாகும் படியளந்த பெருமானே! கேள்!

kuthoosi gurusamyபடியளப்பாய், படியளப்பாய் என்று நம்பி நம்பி ஏமாந்தோம், நாங்கள்! காலம் கலிகாலம் என்கிறார்களே சரிதானோ? நீ எங்களுக்குப் படியளந்தது போய், நாங்கள் உனக்குப் படியளக்கலாச்சே!

சீரகச் சம்பா விளையும் ஊரில் ரேஷன் அரிசி ஏன்; அதுவும் உன் சந்நிதியை நினைவூட்டுவது போன்ற மடிசல் நாற்றம்! கல்லும் களிமண்ணும் கலந்ததாக; அரை வயிற்றுக்கும் போதாததாக! உணவு விடுதிகளில் பார்ப்பார் கொடுப்பது ஒரு கிண்ணம் சோறு! பட்டையாக! சிவன் கோவில் சம்பாக்கட்டியில் சரி பாதி! அணா மட்டும் எட்டு வாங்குகிறானே! இந்த அக்கிரமத்தைக் கேட்க சர்க்காருக்குத்தான் வாயில்லை; பதவி என்னும் பாதாம் அல்வாவினால் நிறைந்திருப்பதனால்! துஷ்டநிக்ரஹம் செய்யும் நீ கூடவா கேட்கக் கூடாது?

தொலையட்டும்! அங்கே பார்! வடக்கே பார்! வடக்கே என்றால் நீயும் அவர்களைப் போல் டில்லியைப் பார்க்காதே! அதற்கும் வடக்கே பார்! பார்த்தாயா? உலகம் முழுதும் உனக்கு டெலஸ்கோப்பில் பார்ப்பது போலத் தெரியும் என்கிறார்களே! என்ன தெரிகிறது பார்த்தாயா? இந்தப் பாட்டைக் கேளய்யா, பெருமாளே!

ரஷ்யா என்றொரு தேசமிருக்குதாம்! - அங்குள்ள பேர்க்கு

ரொட்டி காசின்றிக் கிடைக்கப் போகுதாம்!

                                                            (நந்தனார் கீர்த்தனை மெட்டில்)

1949 ஜூன் மாதம் முதல் எவ்வளவு ரொட்டி தேவையானாலும் காசு-பணம் தராமல் இலவசமாகக் கிடைக்கப் போகுதாம், ரஷ்யாவிலே!

அடடா! என்ன ஆச்சரியம்! என்ன விநோதம், உண்மைதானா? அப்படியானால் அங்கு நான்-

 “போய் வருக உத்தாரம் தாருமே!”

உலகமே பஞ்சத்திலாழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு மட்டும் இலவசமாக, அதுவும் தேவையான அளவுக்கு, (ஆறு அவுன்சோ, எட்டு அவுன்சோ அல்ல! ரொட்டியா? அது எப்படி முடிகிறது? அந்த அதிசயத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வரட்டுமா? பெருமாளே! இந்த ஓரவஞ்சனை ஏன்? உலகத்தையெல்லாம் பஞ்ச சாகரத்தில் (சப்த சாகரத்திற்குப் பதிலாக!) ஆழ்த்தி விட்டு அந்த நாட்டுக்கு மட்டும் இப்படி அருள் புரியலாமா? இது தர்மமா? வைகுண்ட வாசா! லட்சுமி நேசா!

இந்த மாதிரிக் கேட்டேன்! அவர் சந்நிதிமுன்பு நின்று அலறினேன்! கதறினேன்! வாய் திறந்தாரில்லை! கண்ணையும் திறந்தாரில்லை; பள்ளிவிட்டும் எழுந்தாரில்லை!

கடவுள் எப்போதும் அசரீரியாகத்தான் பேசுவார் என்று சொல்கிறார்களே என்பது நினைவுக்கு வந்தது! அண்ணாந்து பார்த்தேன்! என்ன ஆச்சரியம்! மெலிந்த குரலில் பேசுவது கேட்டது!

“பக்தா! உன் உணவு ஒப்பாரியைக் கேட்டேன்! விரைந்தோடி வந்தேன்! ரஷ்யாவில் நடப்பது அதிசயம் ஒன்றுமில்லை! இதைப் பார்ப்பதற்காக நீ அங்கே செல்ல வேண்டியதில்லை! உன்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்! என்னையே அனுமதிக்க மறுத்து விட்டார்கள்! பொல்லாதவர்கள்! அவநம்பிக்கைக்காரர்கள்! அங்கு உணவுப் பொருள் உற்பத்தி; வெள்ளம்போல் பெருகியதற்குக் காரணம் கூட்டுப் பண்ணையாம்! அதன் அர்த்தம் எனக்குத் தெரியாது! காமதேனு! கற்பக விருக்ஷம்! இவைகள் தான் எனக்குத் தெரியும்! இவைகளைத்தான் அவர்கள் பாஷையில் ‘கூட்டுப் பண்ணை’ என்கிறார்களோ என்னவோ! நீ மோட்சத்திற்கு வந்தால் உனக்கும் ரஷ்யாவில் கிடைப்பதுபோல் ஏராளமான உணவு இலவசமாகவே கிடைக்கும்! என்றைக்கு வருகிறாய்? முன்னாடியே சொன்னால் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்புவேன்!”

- என்றது, அந்த அசரீரி!

திடுக்கிட்டேன்! ‘தொப்’ பென்று குதித்தது, ஓர் உருவம்!

என்ன ஆச்சரியம்! பெருமாளின் வைர முடியைக் கையில் ஏந்தியபடியே காட்சியளித்தான் ஒரு மனிதன்!

பிறகு இருட்டில் மறைந்து ஓடியே போனான். அவன் யாராயிருக்கும்? சந்தேகமென்ன! படியளக்கும் பெருமாள்தான் மனித உருவத்தில் வெளியேறி யிருக்க வேண்டும்!

(கற்பனையைத் துப்பி விட்டு கருத்தை உட்கொள்ளுங்கள்; கரும்பு தின்பது போல!)

- குத்தூசி குருசாமி (28-01-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It