kuthoosi gurusamy 300காந்தியாரை ஓடிப் போகச் சொல்லி ஸ்ரீரங்கம் அய்யங்கார் கூட்டம் 1934வது ஆண்டில் துண்டு விளம்பரம் அச்சிட்டதை அப்படியே வெளியிட்டிருந்தேனே! நினைவிருக்கிறதா? சிலருக்காவது நினைவிருக்கலாம் என்று நினைக்கிறேன். மறந்து போனவர்களுக்கும் புது வாசகர்களுக்கும் நினைவூட்டுவதற்காக அதைச் சுருக்கித் தருகிறேன்:-

வராதே காந்தீ!

ஓடிப்போ காந்தீ!!

பேசாதே காந்தீ!!!

- என்ற தலைப்பில் இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. (அசல் நோட்டீஸ் என் வசமிருக்கிறது)

“வேதத்தை அறியாமலே கொண்ட வெறியை, வேதத்தை விளக்கியே தீர்க்க வரும் வேதப் பிரானொத்த ஜகத்குரு சங்கராச்சாரியாரைக் காண விரும்பாத காந்தி, ஓடிப் போ!”

இங்கிலீஷ் படித்த கர்வமும், பட்டினி கிடக்கும் கெட்ட பிடிவாதமும் தவிர வேறொரு சரக்குமில்லாத காந்தீ ஓடிப்போ!”

“ராஜத் துரோஹியாகவே வாழ்நாளை வீண்படுத்திய பழக்கத்தினால் தர்மத்தை யறியாமல் தெய்வ துரோஹியாய்த் தலைப்பட்ட காந்தீ ஓடிப் போ!”

இவைகளைப் போன்ற லட்சார்ச்சனைகள் பல இருக்கின்றன. இந்த நோட்டீசில், அதை வெளியிட்டவர் பெயர் பார்த்தசாரதி அய்யங்கார்; “திருவரங்கம் பெரிய கோவில்” பத்திராதிபர். அச்சிட்ட இடம் ஸ்ரீவாணி விலாஸ் பிரஸ். ஸ்ரீரங்கம். அச்சிடப்பட்ட தேதி 9-2-1934. 17-9-48 ‘விடுதலை’, 'பல சரக்கு மூட்டை'யில் முழு நோட்டீசையும் வெளியிட்டிருக்கிறேன்.

பார்ப்பனருக்குக் “கோட்ஸே இனம்” என்று நான் கொடுத்த பெயர் எப்படியோ நிலைத்து விட்டது. இனி மறையாது. காந்தியாரைக் கொன்றவன் ஒரு மராத்திப் பார்ப்பனன் என்ற உண்மை மறையாதிருக்க வேண்டுமானால் ‘கோட்ஸே இனம்’ என்ற பெயர் மறையக் கூடாது!

இதில் பார்ப்பனருக்கு ஒன்றும் அவமானமில்லை ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ என்ற ஃப்ரெஞ்சு வீரப் பெண்மணியைத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள் இங்கிலீஷ்காரர் என்பதற்காக இங்கிலீஷ்காரர் அதை மறைக்கிறார்களா, என்ன? அதைப் போலத்தான் இதுவும்!

இனிமேல் “கௌசிகர் கோத்திரம்,” “விஸ்வாமித்திரர் கோத்திரம்” என்று கூறிக் கொள்வது போல், “நான் யார் தெரியுமா? கோட்ஸே கோத்திரம்! நீங்கள் தான் துரோணாச்சாரி கோத்திரம் என்று சொன்னீர்களே! உங்கள் பெண்ணை என் பையனுக்குத் தருகிறீர்களா?” என்று சர்வ சாதாரணமாய்க் கேட்கலாம், நமது முப்புரி நூலார்!

வலது கைக் கட்டை விரலை வாங்கியவரை விட, உயிரையே வாங்கியவர் எந்த விதத்தில் சோடையானவர்?

ஸ்ரீரங்கம் நோட்டீசை வெளியிட்டிருந்தேனல்லவா? அது விஷ்ணுவின் சேவை! இன்று ஸ்ரீரங்கத்தின் தம்பியான சிதம்பரத்தின் சங்கதியைப் படியுங்கள்! தில்லை நடராஜன் மட்டும் எந்த விதத்தில் சோடையானவர்?

7 அங்குலத்திற்கு 5 அங்குலம் அளவுள்ள நோட்டீசை (இதை அனுப்பி வைத்த தோழர் சி. ஆளவந்தாருக்கு என் அன்பும் நன்றியும்!) அப்படியே கீழே தந்திருக்கிறேன்:-

சிதம்பரத்தில் திரு. காந்திஜீ வரவேற்பு உண்மை

சுயராஜ்யம் பறந்துபோச்சு-

               காந்தியே நீர் போம்!

“இந்து முஸ்லீம்” குளறிப்போச்சு-

               காந்தியே நீர் போம்!

“உப்புக் கலகம்” ஓஞ்சுபோச்சு-

               காந்தியே நீர் போம்!

கதர் பேச்சு காஞ்சிபோச்சு-

               காந்தியே நீர் போம்!

தொட்டதெல்லாம் விட்டு விடும்-

               காந்தியே நீர் போம்

கை வைத்தால் கெடுக்கும் மகான்-

               காந்தியே நீர் போம்!

காங்கிரஸைக் கொன்று விட்ட-

               காந்தியே நீர் போம்!

நம்பினோரை நாசமாக்கும்-

               காந்தியே நீர் போம்!

தர்மங்களைத் தாக்க வந்த-

               காந்தியே நீர் போம்!

இந்துக்களை ஈனப்படுத்தும்-

               காந்தியே நீர் போம்!

ஊர் ஊராய்ப் பணம் பறிக்கும்-

               காந்தியே நீர் போம்!

வீர்யம் போன வெறும் பொருளே-

               காந்தியே நீர் போம்!

சிதம்பரம், இங்ஙனம்

 16-2-34 ழு. க்ஷ.ஊ.

என்ன சொல்கிறீர்கள்? 1934 -லேயே ஆர்.எஸ்.எஸ். “அண்டர் கிரவுண்ட்” வேலை செய்திருக்கிறதே, பார்த்தீர்களா?

இன்று மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு (ஹிந்து) ஆர்.எஸ்.எஸ்.ஐ. ஆதரித்து தலையங்கம் எழுதுவதிலும், வெங்கட்ராம சாஸ்திரியாரும், எம்.எஸ். சுப்பிரமணிய அய்யரும், அறிக்கை விடுவதிலும் ஆச்சரிய மென்ன? “புல்லேந்திய கையில் வாளேந்துவோம்,” என்று அவர் கர்ஜிப்பதிலும் ஆச்சரியமென்ன?

சிதம்பரம் நோட்டீசை வெளியிட்டவர், “அண்டர் கிரவுண்ட்” ஆசாமி! ‘ழு.க்ஷ.ஊ.’ என்று தான் போட்டிருக்கிறார்! அசல் பெயரில்லை! அச்சகத்தின் பெயருமில்லை!

அங்கு அய்யங்கார் கும்பல்! இங்கு தில்லை வாழ் அந்தணர் கும்பல்!

கோட்ஸே வேலை நடந்து இம் மாதம் 30-ந் தேதியுடன் ஓராண்டு முடியப் போகிறது! “கடவுளே காந்தியைத் தம் திருவடிக்கு அழைத்துக் கொண்டார்,” என்று பிரின்ஸ்பால் கே. சாமிநாதனும் கட்டுரை எழுதி விட்டார்!

ஆகவே பிர்லா மாளிகையில் ஜனவரி 30 வெள்ளிக் கிழமை சாயந்திரம் 5-மணிக்கு நடந்த காரியம் தனிப்பட்டவனின் வெறிக் குணத்தால் ஏற்பட்டதல்ல, அய்யா, அல்ல! நீண்ட காலத் திட்டம்! வெகுநாள் ஏற்பாடு!

ஸ்ரீரங்கம்! சிதம்பரம்! இரண்டு உதாரணங்கள் ஆச்சு! இன்னும் எத்தனை வேண்டும்? ஏராளமாய்த் தருகிறேன், நாளடைவில்!

- குத்தூசி குருசாமி (19-01-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It