திருக்கழுக்குன்ற ஸ்தல விசேடத்தைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். அது பெரிய விஷயம்! ரிஷிகளே கழுகு உருவங் கொண்டதைப் பற்றிய பிரச்னை! அக்கழுகுகள் இரண்டையும் சுட்டால் சாகுமா? கல்லாலடித்தால் பறக்குமா? சோறு வைக்காவிட்டால் வருமா? - என்ற கேள்விகளை யெல்லாம் கேட்காதீர்கள். பக்தர்கள் மனம் புண்படும். பிறகு அந்தப் புண்ணில் சீழ் வடியும்! அதனால் துர்நாற்றம் வீசும்! அதெல்லாம் பெரும்தொல்லை. ஆனால் ஒன்று கூறுகிறேன். இரண்டு ரிஷிகளும் (கழுகுகள்) இராப்பகலாக பக்கத்து மரத்திலும் கோபுரத்திலும் உட்கார்ந்திருப்பதைத் திருக்கழுக்குன்றத்து வாசிகள் (பொய் சொல்லாதவர்கள்) ஒப்புக் கொள்வார்கள்.

kuthoosi gurusamy 268அந்த ரிஷிகள் ஏதாவது பிண வாடையைத் தேடி ஓடிப் போய்விடப் போகிறார்கள் என்பதற்காகவே நாள் தவறாமல் சோறு தரப்படுகிறார்கள் என்பதையாவது தெரிந்து கொண்டால் போதும்.

கழுகுகளுக்கு ரொம்பப் பிடித்தமான உணவு பிணம். மனிதக் கழுகுகளுக்குப் பிடித்தமானது பணம். திருக்கழுக்குன்றத்துக் கழுகுகள் இரண்டும் தினம் வடக்கே யிருந்து வருவதாகத்தான் நம்பிக்கை.

தமிழ் நாட்டுக்கு இவ்வாரத்தில் இரண்டு கழுகுகள், வடக்கேயிருந்து வந்திருக்கின்றன. ஒன்று மதுரையில் பிணத்தைத் தோண்டித் தின்று கொண்டிருந்ததாம்! இன்னொன்று சென்னையில் வந்து சித்து விளையாண்டதாம்! இது இத்துடன் இங்கேயே, நிலையாக, நிற்க!

ஸ்ரீலஸ்ரீ ராம லக்ஷமணானந்தஜீ என்னும் ரிஷிகேசம் சுவாமிகள் 12 மணி நேரம் ஸமாதி நிலையிலிருந்தாராம். அதாவது மூச்சை யடக்கி யோக நிஷ்டையிலிருந்தாராம். உண்மைதான். செயற்கரிய செய்கைதான். ஆனால் சமாதி நிலை கலைந்ததும், “தாம் அலகாபாத்தில் ஆரம்பிக்க இருக்கும் யோக சங்கத்துக்குச் சென்னை வாசிகள் நன்கொடை தர வேண்டும்,” என்றாராமே! அதுதான் எனக்கு ரொம்பச் சங்கடமாயிருக்கிறது. கம்பங் கூத்தாடி அறுபதடிக் கம்பத்தின் உச்சியில் தலையை வைத்துக் காலைத் தூக்கி நின்றுவிட்டுக் கீழே இறங்கி வந்து புளி உருண்டையும், மிளகாயும், காலணாவும் கேட்கிறானே, அதைவிடக் கண்ட்ராவியாயிருக்கிறது!

பட்டினத்தார், தாயுமானவர், பத்திரகிரியார் போன்றவர்கள் ஏதேதோ சிந்து விளையாண்டதாகப் படிக்கிறோம்! ஆனால் எவர் தலையிலும் ஐஸ் வைத்து மாலையிட்டதாகவோ, எவரும் பண உதவி கேட்டதாகவோ, படித்ததில்லை!

சமாதி நிலையென்றால் சாமான்யமா? நல்ல பழக்கம் வேண்டும். மூச்சை அடக்கி நிறுத்தக் கூடிய பழக்கம் முதிர்ச்சி யடைந்திருக்க வேண்டும். தண்ணீருக்குள் மூழ்கி சாமான்களையோ சவங்களையோ தேடும் பழக்கமுள்ளவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த மாதிரி உங்களாலும் என்னாலும் செய்ய முடியுமா? மூழ்கிய முதல் நிமிஷத்திலேயே மூச்சுத் திணறி நீர்மட்டத்திற்கு வர வேண்டியிருக்கிறதே!

இந்தச் சமாதி நிலையைப் பழக்கிக் கொள்வதற்கு இதைவிட நல்ல தருணமே கிடைக்காது. இந்த ஸ்வாமிஜீயை அனுப்பிவிட வேண்டாம். இவரை வைத்துக் கொண்டு சரியான வேலை செய்யலாம் கேளுங்கள், என் யோசனையை:-

மாதத்துக்கு 100 பேருக்காவது இவர் இந்த யோகத்தைக் கற்றுக் கொடுக்கச் செய்ய வேண்டும். எல்லோரும் காலையில் 8 மணிக்கு ‘சமாதி’யில் அமர்ந்தால் இரவு 8-மணிக்குத்தான் சமாதி கலைய வேண்டும். அதன் பிறகு தூங்கிவிடலாம். மறுநாள் காலையில் மீண்டும் ‘சமாதி!’ இப்படியே பழகிவிட்டால் ரேஷன் கடைக்குப் போக வேண்டியதில்லை; துணி மணிகூடத் தேவையில்லை. பணந்தான் எதற்கு?

பகலில் சமாதி நிலை! இரவில் தூக்கம்! குடியிருப்பதற்குத்தான் வீடு எதற்கு? எங்கேயோ ஒரு மரத்தடி அல்லது கடற்கரையே போதுமே! உணவுப் பஞ்சமாவது, துணிப் பஞ்சமாவது! எதுவும் நம்மை நெருங்கவே நெருங்காது.

இதுமட்டுமல்ல. இன்னொரு யோசனைகூட கடலில் குளித்து முத்தெடுக்கும் வேலையை இவரிடமே ஒப்படைக்கலாமே! 12 மணி நேரம் கடலுக்குள்ளேயே திரிந்து தேடினால் எத்தனை அருமையான முத்துக்கள் கிடைக்கும்? ஆனால் உள்ளே போய் இவர் கண்ணை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்து விட்டால் முத்து எப்படிக் கிடைக்கும்?

இந்தச் சமாதிச் சாமி வேறொன்றும் செய்யாவிட்டாலும் இங்கே நுழைந்திருக்கும் வடநாட்டு மூட்டைப்பூச்சிகளை யோகம் கற்றுக் கொடுக்கத் தன் ஊருக்கு அழைத்துப் போனாலே போதுமே! யோகத்தை நம்பாமல் உலக போகத்தை நம்புகிறவர்களாவது நிம்மதியாயிருப்பார்களே! அப்படிச் செய்வதாகக் காணோமே! பணமல்லவா கேட்கிறது, இந்த யோக நிஷ்டைச் சாமி?

ஒரு கழுகு பணம் பிடுங்கித் தின்னப் பார்க்கிறது! மற்றொரு கழுகு பிணம் தின்னுகிறது! இரண்டும் வடக்கேயிருந்து! இன்னொரு திருக்கழுக்குன்றம்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It