‘மகாகவி’ பாரதியார் தமிழ்ச் சமூகத்தின் முதன்மையான ஆளுமை. நவீன இலக்கியத்தின் முன்னத்தி ஏர். ஹிந்து சமூகத்தின் கேடுகளை நீக்கப் போராடியவர். ஹிந்து கடவுளர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் விதந்தோதியவர். தமிழ்ச் சமூகத்தில் நிறைந்திருந்த சாதி, மதங்களையும் புறந்தள்ளியவர் எனப் பன்முகங்களைப் பாரதியார் மீது பொருத்திப் பார்க்கலாம். அந்த வரிசையில் பாரதியார் தம் வாழ்வில் ‘சாமியார்’கள் மீது குறிப்பாக, ஹிந்து மதச் சாமியார்களின் செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாடும் தொடர்பும் கொண்டு விளங்கினார். பாரதியாருக்கு சாமியர்கள் குறித்தும் அவர்களுடைய தொழிற்பாடுகள் பற்றியும் ஒருவாறு புரிதல் இருந்துள்ளது. அதனால் தான் சாமியார்களைக் கவனப்படுத்தியுள்ளார்.
கொட்டைய சாமியார், குள்ளச்சாமியார், மிளகாய்ப் பழச் சாமியார் போன்ற பெயர்களைத் தமது கதைகளில் பயன்படுத்தியதன் வழி, தனக்கான சிந்தனையை வெளிக்காட்டிக் கொண்டார். எண்ணங்களின் பிரதிபலிப்பு அல்லது சமுதாயத்தில் நிகழக் கூடிய செயல்களைக் காட்சி/கதையாக்குதல் மூலம் கதைகள் பலவற்றைப் படைத்துள்ளார். பாரதியாரின் ‘கொட்டைய சாமி’, ‘வண்ணான் தொழில்’ (குள்ளச்சாமியார்) ‘மிளகாய்ப் பழச் சாமியார்’ என்ற மூன்று கதைகள் வெளிப்படுத்தும் கருத்துகளை மட்டுமே எடுத்துரைத்து ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மையான நோக்கமாகும்.
சிறுகதை என்ற இலக்கணம் கட்டமைக்கப்படும் முன்பே, பாரதியார் கதைகள் எழுதத் தொடங்கி விட்டார். ஆனால், ஓர் இயக்கமாக, சிறுகதைக்கான வரையறைகள் செய்து கொண்டு தமிழ்ச் சமூகம் தம் கருத்துகளை முன் வைத்தபோதும் பாரதியின் கதைகள் சிறுகதைகள் தான் என்பது கவனத்தில் கொள்ளவில்லை. பிறகே, இக்கதைகள் அனைத்தும் சிறுகதைகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டன. பாரதி தாம் வாழும் காலத்தில் எப்படி கொண்டாடப்படவில்லையோ, அதேபோல், அவரின் சிறுகதைகளும் அமைந்தன. ஆனால், இன்றைய காலத்தின் தேவை, அவசியம் பாரதியின் கதைகள் பொருத்தமாக இருக்கின்றன. பாரதியார் காலத்தால் நிலைத்து நிற்கிறார். அவர்தம் படைப்புகள் மேலும் செழுமை பெறுகிறது.
‘காளிதாஸன்’ என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதினார். குறிப்பாக, சுதேச மித்திரன் இதழில் இந்தக் கதைகள் வெளியாகின. அந்தவகையில், கொட்டைய சாமி என்ற கதை ஜமீன்தார்களின் ஆதிக்க, அதிகார அரசியலைப் பேசுகிறது. படிப்பவர்களுக்குச் சில செய்திகள் என்னும் பின் குறிப்பில், “பொழுது போக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்து ஜமீன்தார்களின் பொதுவான குணாதிசயங்களை விளக்க எழுதிய இந்தக் கதையில் கொட்டையசாமி என்பவன் ஜமீன் சபையில் நிகழ்த்திய ஆட்ட – பாட்டங்களைப் படித்து ரசிக்கலாம்” (ப.505) என்ற கூற்று தமிழ் ஜமீன்களின் செயற்பாடுகளை விளக்குவதாக உள்ளது.
இக்கதையானது, “தென்பாண்டி நாட்டில் நெட்டையபுரம் என்றொரு ஊர் இருக்கிறது. .... அந்த ஊரில் மிகவும் கீர்த்தியுடைய சிவன் கோவில் ஒன்றிருக்கிறது. ஆனித் திருவிழாவின்போது அக்கோவில் தேரோட்டம் மிகவும் அற்புதமாக நடக்கும். சூழ்ந்துள்ள கிராமங்களின்றும் நாயக்கர்களும், நாயக்கச்சிகளும், ரெட்டிகளும், ரெட்டிச்சிகளும் பறையர் பறைச்சிகளும் பெருங்கூட்டமாகத் தேர் சேவிக்கும் பொருட்டு வந்து கூடுவார்கள்” (ப.497) என்று குறிப்பிடுகிறார். கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் சாதி, மத வேறுபாடுகளின்றி அனைவரும் வணங்கி மகிழும் தன்மை தமிழ்நாட்டிற்கே உரியது. ஜமீன் ஆதிக்கக் காலகட்டங்களில் அனைவரும் பெருங்கூட்டங்களாக வந்து தெய்வ வழிபாடு நடத்திச் சென்றுள்ளனர். இன்று சாதி பார்த்து மக்களைத் தள்ளி வைக்கும் நிலை அன்றும் இருந்திருக்கும். ஆனாலும் சமூகத்தில் வாழும் அனைவருக்கும் தெய்வம் உரியதாக இருந்துள்ளதைப் பாரதியாரின் இக்கூற்று தெளிவாக்குகின்றது.
ஜமீன்கள் என்பவர்கள் பல நூறு ஏக்கர் அளவிலான நிலங்களை தங்களின் உடைமையாக வைத்திருந்தனர். பின்னர், நில உச்சவரம்பு சட்டம் (1961) வந்த பிறகே அவை வரன்முறைப்படுத்தப்பட்டன. என்றாலும் செல்வாக்கிலும் சொல்வாக்கிலும் வன்மை – திண்மை மிக்கவர்களாக ஜமீன்கள் இருந்தனர். நவீன அரசியலமைப்புச் சட்டங்கள் இன்று நிலையை மாற்றியுள்ளன. அக்கால ஜமீன்கள் ஒரு குறிப்பிட்ட நில எல்லைக்கு அரசராகவே இருந்து வழி நடத்தினர். அவர்களின் நடை, உடை, பாவனை போன்ற சாதாரண, இடைநிலைச் சமூகத்து மக்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. ஜமீன்களின் உடல் தோற்றம் குறித்துக் குறிப்பிடும் பாரதியார், “கோவிலுக்கு வரும் சமயங்களில் மாத்திரம் இவர் ஐரோப்பிய உடையை மாற்றித் தமிழ் உடை தரித்துக் கொழுக் கொழுக்கென்ற உடம்பும் பரந்த மார்பும், விரிந்த கண்களும், தலையில் ஒரு ஜரிகைப் பட்டுத் துண்டும், கை நிறைய வயிர மோதிரங்களும், தங்கப் பொடி டப்பியும், தங்கப்பூண் கட்டிய பிரம்புமாக இந்த ஜமீன்தார்...” (ப.499) என்று தமிழ்நாட்டில் இருந்த ஜமீன்(கள்) பற்றி விவரிக்கிறார். பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் போல், இந்த ஒரு ஜமீனே அனைவரின் அடையாளமாக விளங்குகிறார்.
கொட்டைய சாமியார் என்ற மனிதர் குறித்துக் கூறுகையில், “கன்னங் கரேலென்ற நிறமும், மலர் போலத் திறந்த அழகிய இளைய முகமும், நெருப்புப் பொறி பறக்கும் கண்களுமாக ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடைய இளைஞனொருவன் வந்து தோன்றினான். இவன் பெயர் கொட்டைய நாயக்கன். இவன் யோகியென்று அந்த ஊரில் சிலர் சொல்லுகிறார்கள். ஞானப் பயித்தியங் கொண்டவனென்று சிலர் சொல்லுகிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவனுக்குக் கொட்டைய சாமியார் என்ற பெயர் வழங்குகிறார்கள்” (ப.499) என்று அறிமுகப்படுத்துகிறார் பாரதியார்.
ஜமீன்கள், சாமானியர்கள் எப்படியிருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டி அக்காலச் சூழ்நிலையை முழுவதுமாக விளக்குகிறார். கொட்டைய சாமியாருக்கும் ஜமீனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் சிறப்புத் தன்மை வாய்ந்தது. ‘வாடா கொட்டையா’ என்று ஜமீன் அழைப்பதும் ‘சாமி’, ‘பாண்டியா’ என்று சாமானியன் ஜமீனை அழைப்பதுமான உரையாடல் நீள்கிறது. அதில் உணவுக்கு என்ன பண்ணுகிறாய் என்று ஜமீன் கேட்க, உங்கள் அரண்மனையில் என் மனைவி சமையலறையில் வேலை செய்கிறாள். அங்கு சமைக்கப்படும் உணவு உங்களுக்கு வந்து சேருவதற்குள் எனக்கு வந்துவிடும் உங்களுக்கு முன்பாகவே நான் உண்டு விடுவேன் என்று நக்கலாக பதிலளிக்கின்றான். இதனை, “பரமசிவனுடைய கிருபையாலும், மஹாராஜாவின் கிருபையாலும் மேற்படி பெண்டாட்டி கிருபையாலும் சாப்பாட்டுக்கு யாதொரு கஷ்டமுமில்லை” (ப.500) என்று கொட்டையன் கூறுவதாக அமைகிறது.
அடுத்ததாக, ஜமீன் உடைக்கு என்ன செய்கிறாய் கொட்டையா என்று வினவுகையில் மெளனம் காக்கிறார் கொட்டையன். ஜமீன்தார் அவனைப் பார்த்து, பாம்பலம்மன் கோவிலில் கற்சிலைகளையும் வேலாயுதத்தையும் வேஷ்டிகளையும் திருடிக் கொண்டு வந்தாயா என்று வினவுகிறார். அதற்குக் கொட்டையசாமி திருடிக்கொண்டு வரவில்லை எடுத்துக் கொண்டு வந்தேன் என்று பதிலளிக்கிறார்.
திருடிக் கொண்டு வந்ததைக் கோயில் பூசாரியிடம் கொடுத்து விட்டேன். வேலை மட்டும் நான் வைத்துக்கொண்டேன் என்று கூறுகிறார். வேலை என் வீட்டுத் தோட்டத்தில் மந்திரம் சொல்லி ஊன்றி வைத்துள்ளேன். அதனை பூதம் ஒன்று காவல் காக்கிறது என்று ஜமீன்தாரிடம் எடுத்துரைக்கிறார். இதனைக் கேட்ட ஜமீன்தார் கலகலவென்று சிரித்தார். பின்னர், பாட்டுப் பாடு என்று கொட்டையனுக்குக் கட்டளையிடுகிறார். உடனே, ‘உத்தரவு பாண்டியா’ என்று கொட்டைய சாமியாரும் பாடலைப் பாடுகிறார். பாட்டில் லாயித்துப் போன ஜமீன் ‘இன்னுமொரு பாட்டுப் பாடு’ என அடுத்தடுத்த பாடல் பாடும்படி கோருகிறார். அந்தப் பாடல்கள் எல்லாமே நகைச்சுவையை மையப்படுத்தியதாக உள்ளது. அவற்றுள் ஒன்று,
வெற்றிலை வேண்டுமா கிழவிகளே?
வேண்டாம் வேண்டாம் போடா!
பாக்கு வேண்டுமா கிழவிகளே?
வேண்டாம் வேண்டாம் போடா!
புகையிலை வேண்டுமா கிழவிகளே?
வேண்டாம் வேண்டாம் போடா!
ஆமக்கன் வேண்டுமா கிழவிகளே?
எங்கே? எங்கே? கொண்டு வா, கொண்டு வா (ப.503)
இந்தப் பாடலைக் கேட்டதும் ஜமீன்தார் மிகவும் சிரித்து விட்டு, ‘போதும் போதும் நிறுத்து கொட்டையா’ என்று சொல்லுமளவிற்கு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதில், ஆமக்கன் என்ற சொல்லுக்குப், பொருள் அறிந்தால் பாடலை வாசிப்போரும் சிரித்து மகிழாலம். அதாவது, வெற்றிலை, பாக்கு, புகையிலை எதுவும் வேண்டாம் என்று சொல்லும் கிழவிகள் ஆமக்கன் - கணவன் வேண்டுமா என்று கேட்கையில் எங்கே... எங்கே... கொண்டு வா என ஆவலுடன் கேட்பது நகைச்சுவையாக இருக்கிறது. இதனைப் பொருளுணர்ந்து கொண்டால் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது. இந்தப் பாடலுக்குப் பிறகு ஜமீன் கொட்டையனுக்கு ஒரு பட்டுத்துண்டு இனாமாகக் கொடுத்தார் என நிறைவுறுகிறது. ஜமீன் கொடுத்த பட்டாடையைச் சுக்கு நூறாகக் கிழித்துக் கட்டிக்கொண்டிருந்தார் கொட்டையன். பாரதியார் இதனைக் கண்ணுகிறார் அது குறித்துக் கொட்டையனிடம் வினவும் பாரதியார் அவருக்கு மறுமொழியாக கொட்டையன் பாடல் ஒன்றினைப் பாடுகிறார். அப்பாடல்,
பட்டைக் கிழித்தவன் பட்டாணி – அதைப்
பார்த்திருந்தவள் கொங்கணச்சி
துட்டுக் கொடுத்தவன் ஆசாரி – இந்தச்
சூழ்ச்சியை விண்டு சொல், ஞானப் பெண்ணே! (ப.504)
இப்படியாக பாடல் பாடிவிட்டு அங்கிருந்து போய்விடுகிறார். பாரதியார் இதற்கான பொருள் என்னவென்று கேட்கையிலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டு ஓடிவிடுகிறார். இதற்கான விடையாக சில நாட்கள் கழித்தே பிறரிடமிருந்து அறிந்து கொள்கிறார்.
அது என்னவெனில், பாட்டுக்காக ஜமீன்தார் கொடுத்த பட்டாடைக்கு மேல் கொஞ்சம் பணம் கேட்டதாகவும் அதற்கு மேல் தர முடியாது என்று சொன்னதால் ஏற்பட்ட கோபத்தால் ஜமீன் கொடுத்த பட்டாடையைக் கிழித்துவிட்டதாக கூறுகிறார். இவ்வாறு ஜமீன் மீது இருக்கும் வெறுப்புகளும் கோபங்களும் நேரிடையாகக் காட்டிட முடியாது என்றாலும் மறைமுகமாக தங்களால் இயன்ற முறையில் அவற்றை மக்கள் வெளிப்படுத்தி வந்தனர் என்பதன் ஒரு புறமுகமாக கொட்டைய சாமியார் காட்சியளிக்கின்றார்.
தங்களை ஒரு பொழுதுபோக்குக் கருவியாக அல்லது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவராக கருதும் அதிகார மனநிலையில் இருப்போர் சக மனிதர்களை உயிர்களாக மதிப்பதில்லை. இதற்கு விதிவிலக்கில்லாமல் ஜமீன்கள் போன்றோரும் இருந்துள்ளனர். தனி மனிதருக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றைக் கூட அளிக்காமல் வெறும் நகைச்சுவைக்கான கருவியாக கொட்டைய சாமியைப் போல பலரும் ஆளக்கப்பட்டனர் என்பது தான் வரலாறு. இது இன்றும் நீண்டு கொண்டே செல்கிறது. நவீன அரசுகளும் இப்படியான மனநிலையைப் பெற்றவர்களாகவே இருக்கின்றனர். மக்களுக்குரிய அடிப்படைகளைக் கவனிக்காமல் அவர்களிடமிருந்தே சுரண்டுவதே முதன்மையாக பார்க்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.
02.06.1917 அன்று சுதேச மித்திரன் இதழில் வெளியான “வண்ணான் தொழில்” கதையில், “குள்ளச்சாமியார்” என்ற கதாபாத்திரத்தின் வழி வாழ்வின் தத்துவத்தையும் உடல், உள்ளத் தூய்மை மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குறித்துப் பேசுகிறார். இதில் குள்ளாச்சாமியாரின் அறிமுகம், “வேதபுரத்தில் குள்ளச்சாமி என்றொரு பரதேசியிருக்கிறார். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ – யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை அடியிருக்கும். கருநிறம், குண்டு சட்டியைப் போல் முகம். உடம்பெல்லாம் வயிரக் கட்டை போலே நல்ல உறுதியான பெயர் வழி; ............. ............. .......... தெருவிலே படுத்துக் கிடப்பார். பசித்தபோது எங்கேனும் போய்ப் பிச்சை வாங்கிச் சாப்பிடுவார். கள் குடிப்பார்; கஞ்சாத் திண்பார். மண்ணிலே புரளுவார். நாய்களுடன் சண்டை போடுவார்” (ப.649) என்றிவ்வாறு விவரிக்கின்றார் பாரதியார். குள்ளச்சாமியார் என்பதற்கான பெயர் காரணம் குறித்து அறியமுடியவில்லை. என்றாலும் உயரம் குறைந்தவர் என்பதால் ‘குள்ளச்சாமியார்’ என்று அழைத்திருக்கலாம். இன்றும் உயரம் குறைந்தவர்களை, ‘குள்ளன் – குள்ளச்சி’ என்று அழைப்பது வழக்கத்தில் உள்ளதைக் காணலாம்.
இப்படியான குள்ளச்சாமியார், யாருடைய நெற்றிலும் திருநீறு பூசிவிட்டு ஓடி விடுவது, யார் அடித்தாலும் திட்டினாலும் பொறுத்துக் கொள்வது என்பது அவரின் அன்றாட செயல்பாடாக இருந்துள்ளது. அவர் தரும் திருநீற்றினைப் பூசிக்கொள்வதனால் நோய் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது. இப்படியான சாமியாரைப் பார்த்து வணங்குவதும் வழிபடுவதும் பாரதியின் தொடர் செயல்பாடாகவும் நம்பிக்கையாகவும் இருந்துள்ளது. அதன்போக்கில் அவரிடம் பாரதி உரையாடும் வாய்ப்பு கிடைக்கையில், “ஏ... சாமி உனக்கென்ன பயித்தியமா? கந்தைகளைக் கட்டி ஏன் முதுகிலே சுமக்கிறாய்? என்று கேட்டேன். “நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய். நான் முதுகின் மேலே சுமக்கிறேன்” என்று சொல்லி ஓடிப்போய் விட்டார்.” (ப.650) மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் தேவையில்லாத குப்பைகளை எல்லாம் சுமந்துகொண்டு, பாகுபாடுகளுடன் நடந்து அக உலக வாழ்வின் இன்பப் பயன்களை நுகராமல் விடுகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சாடும் இன்றைய மனிதர்கள் தங்களின் மனநல இயல்பினைச் சற்று பரிசோதிக்க வேண்டும். இக்கூற்று பாரதியை இவ்வுலக வாழ்வின் மீதான பற்றுகள் குறித்து சிந்திக்க வைத்தது எனலாம்.
மனித உடல் உறுப்புகளில் கண், காது, மெய், வாய், மூக்கு போன்ற ஐந்து புலன்களை ஒருவர் அடக்கினாலே போதும் ஒரு சிறப்பான வாழ்வினை வாழ்ந்திட முடியும். இதனைத் தான் சித்தர் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. வாழ்க்கையைச் செம்மையாக வாழ்ந்திட வேண்டியே சித்தர்கள், ஞானிகள், தவ சிறப்பு உடையவர்கள் எனப் பலரும் புலன் செயற்பாடுகளை அடக்கி ஆள்வது குறித்து விவரிக்கின்றனர். அந்த வகையில், இந்தக் குள்ளச்சாமியார், ஐம்புலன்களை அடக்கி ஆளும் தொழிலான வண்ணான் தொழிலைத் தான் மேற்கொள்வதாக கூறுகிறார். பிச்சை எடுத்து வாழும் வாழ்வை குறித்துப் பாரதி கேட்கையில் இந்த விடையை அவர் குறிப்பிடுகிறார். “தம்பி நானும் தொழில் செய்து தான் பிழைக்கிறேன். எனக்கு வண்ணான் வேலை. ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்க்கிறேன். அந்தக்கரணமாக துணி மூட்டிகளை வெளுக்கிறேன்” என்றார்” (ப.651) இப்படியான மனித தத்துவத்தை அந்த நபர் கூறுவதாக அமைகிறது.
ஞானநெறியில் செல்வதற்கு முதன்மையான செயல்பாடு என்ன என்று பாரதி குள்ளச்சாமியாரிடம் பாரதி வினவுகிறார். அதற்கு “முதலாவது நாக்கை வெளுக்க வேண்டும். புறஞ் சொல்லக் கூடாது. முகஸ்துதி கூடாது. தற்புகழ்ச்சி கூடாது. வருந்தச் சொல்லலாகாது. பயந்து பேசக் கூடாது. இதுதான் வண்ணான் தொழில் ஆரம்பம்” (ப.652) என்று உரைக்கின்றார். அவர் கூறுவது எவ்வளவு உண்மை. அச்செய்திகள் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. அதுபோல், என்றைக்கும் நிலைத்து நிற்கும் எனலாம். பொய் பேசுவது, புறம் சொல்வது, தற்புகழ்ச்சி அடைந்து கொள்வது எல்லாம் மனித குணங்களுக்கு நல்லதல்ல என்று உணர்தல் வேண்டும்.
ஊரில் மனிதர்கள் மனங்களை மட்டுமல்ல சுற்றுப்புறத்தினையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவில்லை என்று சாடுகின்றார். “ஹிந்துக்கள் தற்காலத்தில் குப்பைக்குள் முழுகிப் போய்க் கிடக்கிறார்கள். வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை. ஜலதாரைகளை ஒழுங்குபடுத்தவில்லை. கிணறுகளையும், குளங்களையும், சுனைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை. கோயிற் குளங்களில் ஜலம் புழுத்து நெளிகிறது. நாற்றம் குடலைப் பிடுங்குகிறது” (ப.651) என்று மனிதர்களின் வாழ்விடப் புற ஒழுங்குகளையும் சுட்டுகின்றார். அதுபோலவே, தான் மனம் என்னும் அகத்தினையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென்கிறார். அதற்குத்தான் ‘வண்ணன் தொழில்’ மிக இன்றியமையாத ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.
குள்ளச்சாமியார் பாரதியினைப் பார்த்து, “தம்பி நீ இலக்கணக்காரனாச்சே வண்ணான் என்ற வார்த்தையை உடைத்துப் பொருள் சொல்லுவாயா” என்று கேட்கிறார். அதற்குப் பாரதி, “சாமி உடைக்கிற இலக்கணம் எனக்குத் தெரியாது” (பக்.652 - 653) என்று பதிலுரைக்கின்றார். என்ன உடைக்கிற இலக்கணம் என்றால் அதுதான் பகுபத உறுப்பிலக்கணம் என்ற சொற்பிரிப்பு யாப்பிலக்கணம் என்று உணர முடிகிறது. பகுதி, விகுதி, சந்தி, சாரியை, விகாரம், இடைநிலை என்ற உறுப்பின் பயன்களாகும்.
அப்படி குள்ளச்சாமியார் பாரதியிடம் கேட்க, தமிழ் இலக்கணத்தின் குறிப்பாக, யாப்பிலக்கணத்தின் அனைத்து நிலைகளையும் அறிந்த பாரதிக்கு இந்த இலக்கணப் பகுதி தெரியாது என்றுரைப்பது கதையினை நகர்த்தி ஒரு செய்தியினை உணர்த்திடவே என்று புரிந்துகொள்ள முடிகிறது. அச்செய்தி பின்வருமாறு, “வண் – ஆன்: வண்ணான். ஆன் என்பது ரிஷபம். வள்ளலாகிய ரிஷபம் நந்திகேசுரர். அவருடைய தொழில் சுத்த ஞான மூர்த்தியாகிய சிவனைச் சுமந்து கொண்டிருத்தல். ............... இந்த நந்தி பகவானுடைய தொழிலாகிய ஆசார்யத் தொழிலையே நான் வண்ணான் தொழிலென்று சொல்லுகிறேன். எனக்கு வண்ணான் தொழில்” என்று மேற்படி குள்ளச்சாமியார் சொன்னார்” (ப.653) என்று பாரதி விளக்குகிறார்.
இக்கதை ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் பாரதியார் பெற்ற அனுபவத்தினையும் அறிவையும் காணமுடிகிறது. அதோடு, மனநலம் பாதிக்கப்பட்டவரின் வழி தனக்கான சிந்தனைகளையும் வினாக்களையும் பாரதி கருத்தியலாகப் பதிவு செய்கிறார் என்றே புரிந்துகொள்ள முடிகிறது. மன ஒழுக்கமும் புற ஒழுக்கமும் ஒருவரைச் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற கருத்தினை ஊடுபாவாகக் காணலாம்.
அடுத்ததாக, ‘மிளகாய்ப் பழச் சாமியார்’ கதை காணக் கிடக்கிறது. இது 01.12.1917ஆம் ஆண்டு சுதேச மித்திரன் இதழில் வெளியானது. 1917 வாக்கில் பெண்கள் விடுதலை, பெண்கள் தன்னாட்சி, பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற சிந்தனைப் போக்கில் பாரதியால் எழுதப்பட்ட கதையாக “மிளகாய்ப் பழச் சாமியார்” விளங்குகிறது. இக்கதையானது பெண் சாமியார் ஒருவர் பாரதியிடம் உதவி வேண்டி நிற்பதாகவும் அதை செய்து தருவதாக பாரதி ஒப்புக்கொள்வதுமாக அமைகிறது. பாரதியாரின் எண்ணத்தில் இருந்ததை ஒரு பெண் சாமியார் வந்து தனக்கு நிறைவேற்றி தர வேண்டுவது போல், எடுத்துக் கூறி தனக்கான உள்ளார்ந்த எண்ணச் செயற்பாடுகளை வெளிப்படுத்துகிறார்.
வேதபுரம் அடுத்த முத்துப்பேட்டை என்னும் இடத்தில் கணவனை இழந்த நாற்பத்தைந்து வயதான ஒரு பெண்மணி தான் இந்த மிளகாய்ப் பழச் சாமியார். இவரை அங்காளியம்மன் வடிவாக அந்த ஊர் மக்கள் வணங்கி வருகின்றனர். குறிப்பாக, நெசவுத் தொழில் செய்யும் தெலுங்கு நெசவாளர்களும் தமிழ்க் கைக்கோளரும் வணங்குகின்றனர் என்று குறிப்பிடுகிறார் பாரதி. லுங்கி, கைலி என்றும் வழங்கப்படும் ஆடை இஸ்லாமியரின் முதன்மையான ஆடையாக இருந்ததனையும் அவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியானதையும் ““லுங்கிகள்” என்றும், “கைலிகள்” என்றும் சொல்லப்படும் மகமதியருக்கு அவசியமான கெட்டி சாயத் துணிகள் இங்கு மிகுதியாக நெய்யப்பட்டு சிங்கப்பூர், பினாங்கு முதலிய வெளித் தீவாந்தரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன” (ப.691) என்று பாரதியார் பதிவு செய்கிறார்.
இந்தச் சாமியாரின் தோற்றம் குறித்துக் குறிப்பிடுகையில், “இவள் காவி வஸ்திரமும் சடை முடியும் தரிக்கின்றாள். இவளுடைய முகம் முதிர்ந்த பெரிய வலிய, உறுதியான ஆண் முகம் போலே இருக்கிறது. அத்துடன் பெண்ணொளி கலந்திருக்கிறது. இவளுடைய கண்கள் பெரிய மான் விழிகளைப் போலே இருக்கின்றன” (ப.691) என்று விவரிக்கின்றார். அத்துடன் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறாள். அது முடியும் தருவாயில் உள்ளது. இச்சாமியார் வீட்டில் வேல் வைத்து பூஜை செய்து வருகின்றாள். கோயிலும் இவள் வீட்டிற்கு மிக அருகில் தான் உள்ளது. இப்படியானவரை பாரதியார் பல முறை சென்று வணங்கி விட்டு வந்திருக்கின்றேன் என்றவாறு தனக்கும் அந்த சாமியாருக்குமான உறவினைத் தெளிவுபடுத்துகின்றார்.
மிளகாய்ப் பழச் சாமியார் என்று பெயர் பெற்றதற்கான காரணமாக பாரதியார் பதிவு செய்வன, “திருக்கார்த்திகையன்று, பிரதி வருஷமும் அடியார்கள் சேர்ந்து இவளுக்கு மிளகாய்ப் பழத்தை அரைத்து உடம்பெல்லாம் தேய்த்து ஸ்நாநம் செய்விக்கிறார்கள். அதானலே தான் இவளுக்கு “மிளகாய்ப் பழச் சாமியார்” என்ற நாமம் ஏற்பட்டது” (ப.692) இப்படியாக, கணவனை இழந்த ஒரு அபலைப் பெண் மிளகாய்ப் பழச் சாமியாராகத் தோற்றம் பெற்றுத் திகழ்கின்றார்.
பாரதியாரும் மிளகாய்ப் பழச் சாமியாரும் தங்களுக்குள்ளான உறவின் நிலைப்பாட்டினை விளக்குகின்றனர். இதன்வழி “நான் இந்த மிளகாய்ப் பழச் சாமியாருடைய கோயிலுக்குப் பல முறை போய் வேலைக் கும்பிட்டிருக்கிறேன். இன்று காலை இந்த ஸ்திரி என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தாள். வந்து கும்பிட்டாள். “எதன் பொருட்டு கும்பிடுகிறீர்?” என்று கேட்டேன். “எனக்குத் தங்களால் ஒரு உதவியாக வேண்டும்” என்றாள். “என்ன உதவி” என்று கேட்டேன். “பெண் விடுதலை முயற்சியில் எனக்குத் தங்களால் இயன்ற ஸஹாயம் செய்ய வேண்டும்” என்றாள். “செய்கிறேன்” என்று வாக்குக் கொடுத்தேன்” (ப.692) என்று கூறுகிறார். அதில், பாரதியின் ஆளுமையைக் கண்டாதலோ என்னவோ அவ்வளவு பேரில் பாரதியை மட்டும் தேர்ந்தெடுத்து, இந்த சாமியார் உதவி கேட்கிறார். சிறு தெய்வ வழிபாட்டிற்குரிய மக்கள் பெருந்தெய்வ வழிபாட்டிற்குரியவர்களாலே விடிவு கிடைக்கும் என்பது போல, தெய்வ வடிவாக இருக்கும் அவள் பாரதியிடம் உதவி வேண்டுகிறார்.
அப்போது பெண் விடுதலைக் குறித்து மிளகாய்ப் பழச் சாமியார், பாரதியாருக்கு மிக நீண்ட உரையை (உபந்யாஸம்) வழங்குகிறார். அதில் ரஷ்யாவில் கொடுங்கோலாச்சி அகன்று விட்டதையும் ஐரோப்பாவில் ஏழைகளுக்கும் பெண்களுக்கு உரிமை வேண்டி போராடுகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் பெண்ணுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்பதனைக் கடுமையாக கூறுகின்றார். பெண்கள் துணி துவைத்து, வீடு காத்து, தெய்வ வழிபாடு செய்தும் குழந்தைகளைப் பாதுகாத்தும் வருகின்றனர். ஆனால், ஆண்கள் அவர்களை தாழ்வுபடுத்திப் பார்க்கின்றனர்.
இதனைப் பாரதியாரும் அந்தப் பெண் சாமியாரின் வாயிலாக, “உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக் கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை. பறையனுக்குப் பார்ப்பானும், கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்யமென்று நான் சொல்லுகிறேன்” (ப.693) சாதியும் மதமும் தாண்டி பெண் விடுதலை மிக இன்றியமையாத ஒன்று அது நிகழ்ந்திட வேண்டும் என்கின்றார். பறையன் – பார்ப்பான் என்ற சாதி இழிவுகளும் வெள்ளை – கறுப்பு என்ற நிற வேறுபாடுகளைக் காட்டிலும் பெண் விடுதலை உடனடி தேவையாக இருந்துள்ளது என்பதனை மேற்கண்ட கூற்றின் வழி உய்த்துணரலாம்.
ஆண் செய்யும் தவறுகளுக்கு இந்த உலகம் இன்றுவரை வேறொரு விதி விலக்கினைக் கொண்டியங்குகின்றது. ஆனால், பெண்ணுக்கு அப்படியில்லை. பெண் தவறிழைத்தால் கொடுங் தண்டனைகள் பெற்று தீர வேண்டும். இதனைக் குறிப்பிடும் பாரதி “வியசாரிக்குத் தண்டனை இஹலோக நகரம். ஆண் மக்கள் வியபிசாரம் பண்ணுவதற்குச் சரியான தண்டனையைக் காணோம்” (ப.694) என்று ஆணாதிக்கப் போக்கினைச் சுட்டுகிறார்.
பாரதியார் பெண் குறித்துப் பலவாறு தம் படைப்புகளில் பதிவாக்கியுள்ளார். “ஆணும் பெண்ணும் ஸமானம். பெண் சக்தி. ஆண் கருவி. பெண்ணுக்கு ஆண் தலைகுனிய வேண்டும். பெண்ணை ஆண் பணிய வேண்டும். பெண்ணை ஆண் அடித்து நசுக்கக் கூடாது. இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். உங்களுக்குப் பராசக்தி நீண்ட ஆயுளும் இஷ்ட காம்ய சித்திகளும் தருவாள்” (ப.694) என்று மிளகாய்ப் பழச் சாமியார் பாரதிக்கு அருள் புரிகிறார். நன்றி சொல்லி விடை பெற்று கொண்டதாக கதை நிறைவுறுகிறது. ஆண் பெண்ணுக்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்ற இருவிதமான சிந்தனைகளையும் எடுத்துக்காட்டுகிறார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதி இப்படியாக பதிவு செய்கிறார் என்றால் அதற்கு முன்பான காலகட்டம் என்பது நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு இருந்திருக்கிறது. இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்றால் அப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்றே பொருளாகிறது. பெண்ணடிமைத்தனம் என்பது வேரூன்றியிருந்த காலத்தில் தான் பாரதி இவ்வாறான கதைகளில் வழி தனக்கான சிந்தனைகளை வெளிப்படுத்தி நிற்கிறார்.
பாரதியார் எப்போது ஆண், பெண் சமம். பெண்ணுக்கு நிகர் இங்கு எதுவுமில்லை. பெண் தெய்வ வடிவானவள், பெண் உலகத்தின் முதன்மையள் என்பதில் சற்றும் மாறுபாடு கொள்ளாது இருந்திருக்கின்றார். புதுமைப் பெண்களை காண விழைந்தவர் பாரதி என்றால் அது மிகையில்லை. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்ற கொடுங்கோல் காலத்தில் பெண் கல்வி, பெண் வேலைவாய்ப்பு, பெண் விடுதலை குறித்தெல்லாம் பாரதி சிந்தித்தும் அதனை தன்னால் முயன்றளவு சாத்தியப்படுத்தியும் வந்திருக்கிறார். அவர்தம் எழுத்துக்களின் காணலாகும் பெண்ணியச் சிந்தனைகளே இதற்குச் சான்று பகர்கின்றன.
ஆண் அதிகாரம், ஆண் ஆதிக்கம், நிலவுடமையாளர்களின் ஆதிக்கம், சாதி, மதம், நிற வேறுபாடுகள், அகப்புற ஒழுக்கங்கள் குறித்தும் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார் பாரதி. இதனை மேற்கண்ட மூன்று கதைகளின் (கொட்டைய சாமியார், வண்ணான் தொழில் (குள்ளச்சாமியார்), மிளகாய்ப் பழச் சாமியார்) வழி காணலாம்.
சாமியார்கள் என்ற துறவு நிலையைக் கொண்டவர்களுடனான பழக்கம் அதனூடான வழக்கமான செயற்பாடுகளே பின்னாளில் பாரதியின் புதிய சிந்தனைகளுக்கு அடிகோலியது எனலாம். அதோடு பாரதி கஞ்சா திண்பது, புகைப்பது போன்ற உடல்நலத் தீவினைச் செயற்பாடுகளும் கற்றுக்கொண்டது இவர்களைப் போன்றவர்களிடத்திலும் கூட இருக்கலாம். என்றாலும் சமுதாய மறுமலர்ச்சிக்குப் பாரதியின் புதிய கருத்துக்கள் எழுச்சியையும் மாற்றத்தையும் உண்டாக்கியது. யாருமே பேசாத அக்காலத்தில் மிகவும் துணிச்சலுடன் பெண் உரிமை, ஜமீன்களின் ஆதிக்க – அதிகார அரசியல், மூட நம்பிக்கைகள், அகப் புற ஒழுக்கச் செயற்பாடுகளைத் தம் கதைகள் வழி எடுத்துரைத்துள்ளார். இன்னும் பாரதியை ஆழப்படுத்தி ஆராய்கையில் பல செய்திகள் வெளிப்படும்.
துணைநூல்:
டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் (தொகுப்பு), பாரதியார் கதைக் களஞ்சியம், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2012.
- முனைவர் ஜெ. மதிவேந்தன், கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, செய்யாறு – 604 407. திருவண்ணாமலை மாவட்டம்