குடு குடு குடு! குடு குடு குடு! நல்லகாலம் பொறக்குது! நல்ல சேதி வரப் போவுது!

குடு குடு குடு! இந்த வீட்டு அய்யாவுக்குச் சுக்கிரதசை வருது! இதைவிடப் பெரிய வேலை வரப் போவுது!

kuthoosi gurusamy 300குடு குடு குடு! அய்யாவின் எதிரியெல்லாம் அய்யோண்ணு போகப் போறான்! அவனே வந்து அய்யா! காலிலே விழப் போறான்!

குடு குடு குடு! கம்பளத்தாயி! வாடியம்மா, வா! வந்து சொல்லடி, நல்ல சேதி!

குடு குடு குடு! அய்யாவை ஊரைவிட்டு விரட்டினவன் மனசு மாறிப் பூட்டான்! மன்னிப்புக் கேட்கப் போறான்!

குடு குடு குடு! அய்யாவே கூடாதிண்ணவன் அய்யா பெயரை மண்டபத்துக்கு வச்சிருக்கான்! அய்யாவைத் துரத்தினவன் அய்யா படத்தை பள்ளியிலே மாட்டச் சொல்லுறான்!

குடு குடு குடு! அய்யாவுக்கு அபராப் புகழ் வருது! கல்கத்தாவை விட்டு டில்லிக்குப் போகப் போறாங்கோ! இன்னும் பெரிய வேலைக்குப் போகப் போறாங்க!

குடு குடு குடு! அய்யா சம்பந்தி இடம் காலியாக் கிடக்கு! அந்த இடத்தையே பார்க்கிறாரு! காமாட்சி கிருபையிலே கட்டாயம் கிடைக்கும்!

குடு குடு குடு! அய்யாவுக்கு வடக்கே போக ஆசையில்லை! தெற்கே வர நினைக்கிறாரு! குறுக்கே மலைப் பாம்பு படுத்திருக்கு! அய்யா அஞ்ச வேண்டியதில்லை! அய்யாவைக் கண்டா பாம்பு நகர்ந்துடும்! அய்யாவுக்குக் கேடு நினைச்சவன் அய்யா காலிலே விழுந்தான்! இன்னமும் விழுவான்!

குடு குடு குடு! அய்யாவுக்கு யோகம் பிறக்குது! நினைக்கிற காரியம் கை கூடுது! நினைக்காத காயிமும் தானாவரப் போகுது!

1. மே. த. ஆச்சாரியார் மவுண்ட் பேட்டனுக்குப் பிறகு கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்படுவார்.

2. சென்னை மவுண்ட் ரோடிலுள்ள சர்க்கார் விருந்து மாளிகை ‘ராஜாஜி மண்டபம் என்று இனி அழைக்கப்படும்.

3. சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகள் அத்தனையிலும் ஆச்சாரியாரின் படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

4. மே. த. ஆச்சாரியார் அடுத்த சென்னை கவர்னராகவும் நியமிக்கப்படலாம்.

“ஏண்டாப்பா, ஒரே துள்ளா துள்ளினையே, ஆச்சாரியாரைக் காங்கிரசை விட்டே விரட்டிவிட்டதாக! என்ன சொல்கிறாய், இப்போது? அவர் உட்கார்ந்திருக்கும் உச்சியை உன்னால் அண்ணாந்து பார்க்காவாவது முடியுமா? வெள்ளைக்காரன் இருந்த கவர்னர் ஜெனரல் இடத்துக்கு உன் ஆள் எவனாவது வர முடிஞ்சுதா? உன் ஆட்களுந்தான் பெரிய பெரிய நிர்வாகிகள், உலகஞ் சுற்றிகள், அரசியல் நிபுணர்கள், பொருளாதாரப் புலிகள் என்றெல்லாம் பெயரெடுத்தார்கள்! என்ன பிரயோஜனம்? என்ன படிப்புப் படித்தாலென்ன? என்ன அநுபவம் இருந்தால்தான் என்ன. கீதையும் உபநிஷத்தும் படித்த எங்கள் தலைவர் தானே கவர்னர் ஜெனரலாக வர முடிந்தது! அடுத்தபடியாகக்கூட யார் கவர்னர் ஜெனரலாக வரப் போகிறார், பார்க்கலாமா? இதோ பார்! நான் சொல்வதைக் கேள்! எங்களை விரட்ட ஈஸ்வரனாலும் முடியாது என்பது ஞாபகமிருக்கட்டும்! நாங்கள் எந்தெந்த வேஷத்தில் வருவோம் என்பதாவது உனக்குத் தெரியுமா? எத்தனையோ வேஷம்! உன் வேஷத்திலேயே கூட வருவோம்! உங்களால் ஒன்றும் முடியாது! வெறும் காட்டுச் கூச்சல் தான்! தெரியும்! நாங்கள் காரியவாதிகள் எதை, எப்படி, எப்போது செய்வது என்பதை அறிந்தவர்கள். ‘ஆகஸ்ட் துரோகி’ என்றீர்கள்! ஆரியப் பாதுகாவலன் என்றீர்கள்! மற்றவனை வளரவிடாத சுயநலத்தவன் என்றீர்கள்!

என்ன ஆயிற்று? உங்கள் ஆட்களில் எத்தனையோ தடிராமன்கள் இருந்தான்களே! அவன்களில் எவன் படமாவது பள்ளிகளில் வைக்கப்பட்டதா? உங்கள் திருவள்ளுவனையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உங்களவன்களில் எவன் பெயரையாவது பாங்க் வெடிங் ஹாலுக்கு’ வைக்க முடிஞ்சுதா? ஆகஸ்ட் துரோகியின் பெயரைத் தானே வைத்தாய்? அதுவும் அதே ஆகஸ்ட் வீரர்கள்தானே வைத்தீர்கள்?

ஏன், இஞ்சி தின்ற குருங்கு மாதிரி விழிக்கிறாய்? ஆத்திரப்பட்டு என்ன செய்வது? நாக்கைப் பிடுங்கிக் கொள்ளேன்! பிரமாத வீச்சு வீசினாயே! உன் ஜம்பமெல்லாம் எங்கே போச்சு?”

இந்த மாதிரிக் கேட்கிறார், திருவல்லிக்கேணி ஆரியர் ஒருவர், காங்கிரஸ் திராவிடத் தோழரைப் பார்த்து!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It