சில மாதங்களுக்கு முந்தி ஜோலார்பேட்டையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பல ஆதித்திராவிடத் தோழர்கள் தங்கள் தப்பட்டைகளைக் கொண்டு வந்து குவித்து அவைகளுக்குத் தீ வைத்தார்களாம். தங்களுக்கிருக்கும் இழிநிலைக்குக் காரணம் தப்பட்டை அடிப்பதுதான் என்று கருதியே அவ்விதம் செய்தார்களாம். இனிமேல் தப்பட்டை அடிப்பதில்லை என்றும் உறுதி கூறினார்களாம். தஞ்சை, திருச்சி, சேலம் போன்ற வேறு பல ஜில்லாக்களிலும் இம்மாதிரியே நடந்திருக்கிறது.

kuthoosi gurusamyஇப்படிச் செய்வது சரியா தப்பா என்று என்னைக் கேட்காதீர்கள். எந்தத் தொழிலும் கேவலமானதல்ல என்பதே என் கருத்து.

தொழில் பற்றித்தான் முதன் முதல் ஜாதிகள் ஏற்பட்டன என்று சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனால் அந்தப் பிரிவுகூட இன்று எவ்வளவு ஆபத்தை உண்டாக்கி விட்டது பாருங்கள்! மண் பானை செய்பவனின் மகன் வக்கீலாகிறான். ஆனால் வக்கீல் வரதாச்சாரி பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிகிறதா? தொழில் பற்றி ஜாதி என்றால், வக்கீல் ஜாதியிலுள்ள இரண்டு பேரும் ஒரே ஜாதி தானே?

பறை யடித்ததற்காக ‘பறையன்’ என்ற ஜாதி (பிரிவு) ஏற்பட்டதாம்! ஆனால் அவன் மகன் செல்வராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டராயிருக்கிறானே! இன்ஸ்பெக்டர் ஜாதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி முதலியார் வீட்டுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகிறதா? தொழிற் சங்கங்கள் ஏற்பட்டால், சமத்துவம் மலரும், சமத்துவத்தினால் பொதுவுடைமை காய்க்கும் என்கிறார்களே, கம்யூனிஸ்ட் தோழர்கள்? ட்ரைவர் சங்கத்திலுள்ளவர்களெல்லாம் உண்ணல், உறவாடல், மணஞ்செய்தல் முதலியவைகளில் ஒரே ஐக்கியத்துடனிருக்கிறார்களா? ஏன் இல்லை? கார்ல் மார்க்ஸ் புத்தகத்தில் இதற்குப் பதில் காண முடியாது.

தான் ஒரு தொழில் செய்வதனால்தான் தன்னைப் பிறர் இழிவாகக் கருதுகிறார்கள் என்று கருதுபவர் சிலர் இருக்கலாம். தான் இழிவாகக் கருதும் ஒரு தொழிலை விட்டுத் தொலைப்பதை யாரும் ஆட்சேபிக்கக்கூடாது. இனித் தப்பட்டை அடிப்பதில்லை என்றால் யாரையும் வற்புறுத்தக் கூடாது. அந்தத் தொழிலை நாமே செய்யப் பழக வேண்டும். இல்லாவிட்டால் அது இல்லாமலே வாழ்க்கை நடத்த வேண்டும்.

“இனி க்ஷவரத் தொழில் செய்யமாட்டோம்,” என்று அத்தொழிலாளர்கள் முடிவு செய்துவிட்டால், அதற்காக அவர்கள் மேல் குற்றஞ் சொல்லலாமா? ‘எந்த நாட்டிலும் க்ஷவரம் செய்கிறவர்கள் இருக்கின்றனர்; அது ஒரு இழிவுத் தொழிலல்ல. ஆனால் அதற்கென ஒரு தனி ஜாதிதான் இருக்கக்கூடாது,’ என்று சொல்லிப் பார்க்க வேண்டும். அவர்கள் பிடிவாதமாயிருந்தால் நாம் எல்லோருமே க்ஷவரம் செய்து கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டியதுதானே! (இப்போது மட்டும் என்ன வாழ்கிறது?) அல்லது தாடி மீசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

“இந்தப் பாழும் பஞ்சாங்கம் இருப்பதனால்தானே, எல்லோரும் என்னை இப்படி முறைத்துப் பார்க்கிறார்கள்! பலர் “ஏ! ஏமாற்றுக்காரா!” என்று அழைக்கிறார்கள்! சிலர் ஓய்! கோட்ஸே!” என்று கூப்பிடுகிறார்கள்! இந்தச் சனியன் இனி வேண்டாம். இனிமேல் நான் விறகு உடைத்தாலும் உடப்பேனே தவிர இந்த ஈனத் தொழிலைச் செய்யமாட்டேன்,” என்று சொல்லி தன் பஞ்சாங்கத்தை தப்பட்டை எரியும் அதே தீயில் போடுவதானால் நாம் எப்படித் தடுக்க முடியும்? அவனிஷ்டம் பாவம்! நாம் என்ன செய்வது? இனி நாமே நம் காரியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். எனக்கு நானே புரோகிதன் என்று தானே திருப்திப்பட வேண்டும்?

“இனிமேல் என்னால் சமையல் செய்ய முடியாது,” என்று சமையற்கார ஜாதி (சக்தி என்று சொல்கிறீர்களே, அந்தப் ‘பெண்’ ஜாதியைத்தான் சொல்கிறேன்.) சொல்லிவிட்டால் நீங்களும் நானும் பேனாவை வைத்துவிட்டு கரண்டியைக் கையிலெடுக்க வேண்டியது
தானே!

இதெல்லாம் எதற்காகச் சொல்கிறேன், தெரியுமா?

நாளைக்குச் சில பார்ப்பனர் நம் கூட்டங்களுக்கு வரலாம்! “ஏனய்யா எங்கள் பாவத்தைக் கொட்டிக் கொள்கிறீர்கள்? கோட்ஸே இனம், கோட்ஸே இனம் என்று சும்மா, சும்மா சொல்லித் தெலைக்கிறீர்களே! இனி நாமெல்லோரும் ஒன்றுதான். இதோ பாருங்கள்! ஏமாற்றுச் சின்னங்கள்!” என்று சொல்லி பூணூல், பஞ்சாங்கம், தர்ப்பை முதலியவைகளைக் கூடை கூடையாக நம் எதிரில் கொட்டி அவர்களே அவைகளுக்குத் தீ வைக்கலாம் (தோழர்கள் தப்பட்டைகளுக்கு வைத்ததுபோல) அந்தச் சமயத்தில் அவர்களை நீங்கள் யாரும் தடை செய்யாதீர்கள் என்பதற்காகவே இதை எழுதினேன். பார்ப்பனர் எதைச் செய்தாலும் தடுப்பது என்று கருதி விடப் போகிறீர்கள்! அவர்களுடைய இழிவைக் (!!!) குறிக்கும் எதையும் எரிப்பதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. அந்த உரிமையில் தலையிடாதீர்கள்! நீங்களாகவும் அதைச் செய்யாதீர்கள்!

என் அருமைப் பார்ப்பனத் தோழர்களே! போதுமா நான் எழுதியது? எங்கே பார்க்கலாம்! புறப்படுங்கள் தீப்பெட்டியோடு! போங்கள் திராவிடர் கழகக் கூட்டங்களுக்கு, வைத்திநாத லீலை செய்வதற்கல்ல! உங்கள் இழிவைப் போக்கிக் கொள்வதற்குத்தான்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It