karunananthanராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற புதினம் ஆரியர்களை உயர்த்திப் பேசுகிறது. அதை வைத்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் கருணானந்தம். (சென்ற இதழ் தொடர்ச்சி)

1) ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை. அடிமைத்தனத்தை வெறுத்த துடன் அதை ஒழிக்க முயன்றனர்.  ஆனால் அசுரர்களிடையே (திராவிடர்கள்) தொழில் அடிப்படையில் பிரிவுகள், அடிமை வியாபாரம், வேசித்தொழில் அனைத்தும் இருந்தன. எனவே இந்த அடிமைத்தனத்திற்கு ஆரியரை குற்றம் சுமத்துவது சரியா ?

ஆரியர்கள் குற்றமற்றவர்கள் என்ற பதிலை மட்டும் எதிர்பார்த்து இந்த கேள்வி கேட்கப்பட்டதாக புரிகிறது. இதை இரண்டாவது கேள்வியுடன் சேர்த்துப் பார்க்கின்றேன்.

2)  ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த ஆரியர்கள் அடிமை வியாபாரமும் வேசித் தொழிலும் செய்யும் அசுரர்களை  தங்களுக்குக் கீழானவர் களாக நினைத்தது இயல்புதானே?

இதில் ஒரு நியாயப்படுத்தலும் வருகிறது. அசுரர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிக்கும், ஒழிப்பு முயற்சிக்குமான நியாயம் இங்கே வந்துவிடுகிறது.

3)  அசுரர்களிடையே பல்வேறு தொழில் செய்யும் திறமைசாலிகள் இருந்தாலும், அவர்கள் போர் வீரர்களைவிட கீழானவர்களாக கருதப்பட்டதும், சிப்பாய்களும், விவசாயிகளும் பாதி அடிமைகளுமாக நடத்தப்பட்டதுமான அசுரர்களின் வாழ்வியல் முறையே அவர்கள் ஆரியர்களிடம் வீழக் காரணமாக இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகம் ஆரியரல்லாத சமூகமாக இருந்தாலும் வீழத் தானே செய்யும்?

முதலில் இந்த மூன்று கேள்விகளை எடுத்துக் கொள்வோம்.

இராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலில் காணப்படுவது தேவ - அசுரப் போர் தான். அதில் அசுரர் கீழானவர்கள் என்றுதான் எழுதப்படுகிறது. முதலாவதாக இந்த நூலில், ஆரியர்களால் அல்லது பிராமணர்களால் படைக்கப்பட்ட நூல்களின் அடிப்படையிலேயே பல தகவல் களை இந்த நூலில் எழுதுகிறார்.

அசுரர்களின் பார்வையில் எந்த ஆதாரங்களை ஆய்ந்து பார்த்து இந்த முடிவுகளை தருகிறார்? ‘ரிக் வேதகால ஆரியர்கள்’ என்பது அவர் அந்த காலத்திலேயே எழுதிய நூல்தான். இதிலும் தேவ - அசுரப் போர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இவர் கூறுகிற ஏற்றத்தாழ்வுகள் தொழில் ரீதியான பிரிவுகள், அடிமை வியாபாரம், வேசித் தொழில் இவையெல்லாம் அசுரர்களிடையே இருந்ததாக குறிப்பிடுகிறார். இதற்கு எங்கும் குறிப்புகளே கிடையாது. இராகுல சாங்கிருத்தி யாயன் வரலாறு எழுதியபோது அதற்கான ஆதாரக் குறிப்புகளை கொடுக்கவில்லை. கதை எழுதும் போது சேர்த்துக் கொள்கிறார்.

அசுரர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆரியர்கள், சிந்துவெளி நாகரிகத்தின் போது போர் செய்து படிப்படியாக பஞ்சாப் அருகில் தங்களது ஆதிக்கங்களை ஏற்படுத்திக் கொண்டனர். சிந்துவெளியில் ஆரியர் படையெடுப்பை நாம் கவனிக்க வேண்டும்.

இது படையெடுப்போ, வருகையோ, அல்லது ஊடுருவலோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சிந்துவெளி ஒரு நாகரிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிந்துவெளி ஒரு நகர நாகரீகம்.

இதே சிந்துவெளியைப்  பற்றி, ரிக் வேதகால ஆரியர்கள் நூலில், சிந்துவெளியின் தடயங்களை விளக்கிவிட்டு ‘இது ஜனநாயக முதலாளித்துவம் கொண்ட ஒரு நாகரீக அமைப்பாக  இருக்க வேண்டும்’ என்று இராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகிறார்.

மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சி என்று குறிப்பிடவில்லை. ஜனநாயக முதலாளித்துவ நாகரிகம்னு குறிப்பிடுகிறார். சிந்து வெளியில் இருந்தவர்கள் செங்கற்களால் ஆன வீடுகளை அமைத்து, நகரங்களை அமைத்து, இன்னும் சொல்லப்போனால் ஒழுங்காக முறைப்படுத்தப் பட்ட தெருக்கள், கழிவு நீர் செல்வதற்கான சாக்கடைகளையும் கொண்ட ஒரு நகரத்தை மேற்கு இந்தியாவில் பல இடங்களில் படைத்தவர்கள் சிந்துவெளி நாகரிகத்தினர்.

ஒரு நகர நாகரீகம் வர வேண்டும் என்றால்; அந்த நகர நாகரிகம் உருவாவதற்கு பல தொழில்கள் தேவைப் படுகின்றன. ஒரு நகர நாகரிகத்தில்தான் பல விதமான உலோகங் கள் பயன்படுத்தப் படும்.

தங்கம், வெள்ளி, இரும்பு, தாமிரம், செம்பு, ஈயம் போன்ற பல உலோ கங்களை சிந்துவெளியினர் பயன்படுத்தினர். ஒரு உறுதியான குடியிருப்பை உருவாக்கியிருக் கிறார்கள். நாடோடி நாகரிகமாக இருப்பது நகர நாகரிகம் இல்லை. உறுதியான குடியிருப்பைக் கொண்டதே நகர நாகரிகம்.

ஏன் ஒரு நகரம் உருவாக்கப்படுகிறதென்றால் உற்பத்தியில் உபரி ஏற்படுகின்றபோது அந்த உற்பத்தி உபரியின் மூலமாக, உபரி வணிகப் பொருளாக மாற்றப்படுகின்றது. உற்பத்தியை யும், வணிகத்தையும் சீரமைப்பதற்காக ஒரு அரசியல் அமைப்பு முறை அல்லது பாதுகாப்பு தேவைப்படுகின்றது.

எனவே பொருளாதார நடவடிக்கைகளில், அறவியல் தொழில் நுட்பத்தில் முன்னேறிய சமூகம் மட்டும் தான் ஒரு நகர நாகரிகத்தை அமைக்க முடியும். சிந்து சமவெளி நாகரிகம் புதிய கற்காலத்தில் தொடங்கி, செம்பு காலத்தில் வளர்ந்து அது வெண்கல காலத்தில் முடிவடைகிறது.

ஏறக்குறைய 2500 ஆண்டு களுக்கு மேலாக அந்த நாகரிகம் இருந்தது. ஒன்றிரண்டு அல்ல ஏறக்குறைய 500 நகரங்களின் தடயங்கள் கிடைத்துள்ளன. நகரகத்தில் தான் குயவர், நெசவாளர், கொல்லர், தச்சர் பொன்ற பல தொழில் பிரிவினர் ஒன்றுகூட முடியும்.

தொழில் பிரிவினர் ஒன்றாக இணைத்து தங்களது தொழில்களை செவ்வனே செய்ய முடியும். அங்கே அவர்களுக்குரிய பாதுகாப்பு இருக்கும். பண்டமாற்று செய்வதற்கான வகை இருக்கும்.

நாகரிகத்தின் வளர்ச்சியாக வருவது தான் பல்வேறு தொழில் பிரிவுகள். நாடோடி களாக இருப்பவர்களுக்கு தொழில் பிரிவுகள் கிடையாது. ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு புல்வெளிகளை தேடிச் செல்பவர் களுக்கு தொழில் பிரிவுகள் உருவாகாது.

தொழில் பிரிவுகளெல்லாம் இங்கே ஜாதிகளாக எப்படி திரிக்கப்படுகின்றன?  உலகத்தில் உள்ள அனைத்து நாகரிகங்களிலும் தொழில் பிரிவுகள் உள்ளன. எகிப்து, சுமேரியா, பாரசீகம், கிரேக்கம், சீனா ஆகிய இடங்களிலும் தொழில் பிரிவுகள் இருந்தன. நாகரிகங்கள், நகரங்கள் இருக்கின்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக தொழிற் பிரிவுகள் உருவாகும்.

வசதிக்காக குழுக்களாக அமைந்து அவர்கள் உற்பத்திகளை செய்வார்கள், பண்டமாற்று முறை நடைபெறும், நாணயம் வரும் இவைகளுக் கெல்லாம் பாதுகாப்பை ஆட்சி முறை செய்து கொள்ளும். இவைதான் நாகரிகம் என்பது. இந்த நாகரிகங்கள் ஆரியர்களிடம் இல்லாமல் போனது ஏன் எதற்காக எப்படி? என்பதை வினா எழுப்பியவர் சற்று சிந்திக்க வேண்டும்.

தொழிற் பிரிவுகள் இருந்தன என்பது நாகரிகத்தின் அறிகுறி. ரிக் வேத கால ஆரியர்களிடம் தொழிற்பிரிவுகள் இல்லை என்றால் அவர்கள் நாகரிக வளர்ச்சி அடையவில்லை என்பதுதான் பொருள். சிந்துவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது திராவிடர்கள் நாகரிகத்தில் சிறந்தவர்கள்.

ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தவர்கள் பின்பு படையெடுப்பாளர்களாக மாறிய ஆரியர்கள் நாகரிகத்திற்கு முந்தைய நிலையிலே இருந்தார்கள். தொழிற் பிரிவுகள் இருந்தன என்பது குறை அல்ல. ஒரு முற்போக்கான சமூகத்தின் வெளிப்பாடு அது. ஆனால் சிந்துவெளி நாகரிக தொழிற் பிரிவுகளை ஜாதிகள் என்று எந்த அடிப் படையில் கூறுகிறார்கள்?

சிந்துவெளியில், ஹரப்பா மொகஞ்சதாரோவில் பலவிதமான கட்டிடங்கள் இருந்தன. தானியக் கிடங்குகள், பல தூண்களை கொண்ட மண்டபங்கள், குளியல் குளங்கள் ஆகியவையோடு அடுக்கு வீடுகள் (Row houses) இருந்தன. ஒரு கட்டிடத்தில் பல பிரிவுகளை உருவாக்கி ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு குடியிருப்பாக இருந்தன. அந்த குடியிருப்புகளில் இரண்டு அறைகள் இருந்தன. பொதுக் குளியலறை, தனிக் குளியலறை என இரண்டும் இருந்தன.

இந்த அடுக்கு வீடுகளை பார்த்த பார்ப்பன ஆய்வாளர்கள், ‘இது தீண்டத்தகாத சேரிகள்’ என்று கூறினார்கள். செங்கற்களால் ஆன கூரை வேய்ந்த வீடுகள்கூட தற்போதுள்ள தலித் களுக்கு கிடைப்பதில்லை.

தொழிலாளர் குடியிருப்பில் குறைந்தபட்ச வசதிகளைக் கொண்டிருந்த சிந்துவெளி நாகரிகம், கூடாரங்களில் இருந்த ஆரியர்களை விட மேம்பட்டதா அல்லவா ? ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலில் குறிப்பிட்ட காலத்தில், ஆரியர்கள் கூடாரங்களில் வசித்ததாக  குறிப் பிடப்பட்டுள்ளது.

கூடாரங்களில் வசித்தார்கள், ஆனால் நிலையாக வசிக்கவில்லை அந்த கலையும் தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே ஜாதி என்பது எங்கே வருகிறது? தொழிற் பிரிவுகளெல்லாம் ஜாதிகள் என்பதை நீங்கள் எப்படி நிறுவ முடியும் ?

எகிப்தில் தொழிற்பிரிவுகள் இருந்தன ஜாதிகள் இருந்ததா ? மெசபடோமியாவில் தொழிற்பிரிவுகள் இருந்தன; ஜாதிகள் இருந்ததா? இந்தியாவில் மட்டும் தொழிற் பிரிவுகள் இருந்தால் அது ஜாதியாகத்தான் இருக்கும் என்று எப்படி கூறுகிறீர்கள்? திராவிடர்களிடம் தொழிற்பிரிவுகள் இருந்தன. ஏனென்றால் மேம்பட்ட நாகரிகத்தையும், தொழில்நுட்பத்தையும் கொண்டவர்கள்.

ஜாதி என்பது எப்போது வரும்? செய்கின்ற தொழில் பிறப்பின் அடிப்படையில் வருகின்ற போதும், அந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லாதவாறு சமூக, சமயத் தடைகள் இருக்கின்ற போதும், சமூக உறவுகளே தடைகளாக மாறுகின்ற போதும் ஜாதிகள் வருகின்றன. அப்படி இருந்ததற்கான ஒரு ஆதாரத்தையாவது இவர்கள் வைத்திருக் கின்றார்களா? எனவே ஜாதிகள் உருவானதை அசுரர்கள் மீது திணிப்பது விசமத்தனமான கருத்து.

அசுரர்களின் இலக்கியங்கள், கல்வெட்டுகள், ரிக் வேத காலத்தில் அசுரர்களின் சமூக முறை இப்படி எதையும் குறிப்பிடா மலேயே அசுரர்கள் மீது பழியைப் போடுகிறார்கள். பெண்களை அடிமைகளைப் போல அடிமை வியாபாரம் செய்ததாகக் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான நாகரிகத்தில் அடிமை முறை இருந்துள்ளன.

இன்னும் சொல்லப் போனால் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் பொருளாதாரமே அடிமை முறையினால் தான் இருந்தது. அமெரிக்காவிலும் கருப்பின மக்களை அடிமைப்படுத்திதான் இருந்தது. அதை உடைப்பதற்காகத்தான் இங்கிலாந்து ‘அடிமை ஒழிப்புச் சட்டத்தைக்’ கொண்டு வந்தது. உலகெங்கிலும் அடிமை ஒழிப்புப் பற்றி இயக்கம் தொடங்கப்பட்டது.

அடிமை முறையே இல்லையென்று கூறவில்லை. ஆனால் உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை. இருந்திருக்கலாம். ஆனால் ஆரியர் களிடத்தில் அடிமைத்தனம் இல்லை சுதந்திரத்தை விரும்பினார்கள் என்பது எப்படி சரியாகும்? நாடோடியாக சிறிய சிறிய குழுக்களாக சென்றவர்களிடத்தில் என்ன அடிமை முறை இருக்கும்? அடிமைத்தன்மை என்பது எங்கு வரும்? நிலையான சமூகக் கட்டமைப்பு, பொருளாதார கட்டமைப்பு இருக்கின்றபோது தான் அடிமைத்தனம் வரும்.

ஆடு, மாடு மேய்ப்பவனுக்கு  இருக்கின்ற சொத்துக்களே ஆடு, மாடு தானே. அடிமை முறை அவனுக்கு தேவைப்படவில்லை. ஆனால் ஆரியர்கள் அடிமைத்தனத்தையே வெறுத் தார்கள் என்பது சரியானது அல்ல.

(தொடரும்)

- பேராசிரியர் கருணானந்தம்