(குறிப்பு: 1927இல் எம்.சி.ராஜா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலினை சென்னை, சேத்துப்பட்டு “அம்பேத்கர் சிந்தனைக் கூடம்” “ஒடுக்கப்பட்ட இந்துக்கள்” என்னும் பெயரில் தமிழாக்கித் தன் மூன்றாவது வெளியீடாக 1952இல் கொண்டு வந்தது. அந்நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பக்கங்களின் தொகுப்புதான் இந்த ஆவணக் கட்டுரை.
எம்.சி.ராஜா அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின்போது அம்பேத்கருக்கு இணையாகப் புகழ்பெற்றிருந்த அகில இந்தியத் தலித் தலைவராவார். அக்காலத்தில் தலித் மக்களின் தீராத துயரங்களையும் இன்றியமையாத் தேவைகளையும் முன்வைத்து அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்ட தலித் தலைவர்கள் தமிழகத்தில்தான் மிகுதியாகக் காணப்பட்டார்கள். அவர்களில், அயோத்திதாசரின் பங்கு தனித்துவமானது. தலித் வரலாற்றுத் திரித்தலைத் திருத்தி எழுதும் நோக்கமுடையது. தலித் கருத்தியல் தளத்தில் செயல்பட்ட பௌத்த சிந்தனையாளராகவும் வரலாற்றுப் புனைவியலை நேர் செய்து மீள்கட்டமைக்கிறவராகவும் தொன்ம வழக்கியலினூடாக நவீன அரசியலைக் கட்டுடைக்கிறவராகவும் விளங்கிய இதழியலாளர்.
மற்ற தலைவர்கள் யாவரும் அரசியல் பங்கேற்பாளர்களாய்ச் செயல்பட்டவர்கள். முதுபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா, மீனாம்பாள், சிவராஜ், ஜே.சிவசண்முகம் பிள்ளை போன்ற அனைவருமே, அம்பேத்கரைப் போலவே தங்கள் மக்கள் நலன் கருதி காங்கிரஸ் கட்சியுடன் மல்லுக்கு நின்றவர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோவெனில் அவர்கள் அனைவரையுமே ஏதோ ஒருவகையில், தகுந்த சந்தர்ப்பத்தில் தனது சாதியம் போர்த்திய செயல்தந்திரத்தோடு வெகு சாமர்த்தியமாகத் தன் செல்வாக்குக்குப் பயன்படுத்திக் கொண்டது. அவர்களும் பயன்பட்டனர். கவிந்தழுத்தும் சாதியச் சமூகத்தில் தம் மக்கள் நலன் பேண அப்படித்தான் செயல்பட்டாக வேண்டியிருந்தது.
எம்.சி.ராஜா அவர்களைப்பற்றி எனக்கொரு மனக்குறை இருந்தது. இரட்டை வாக்குரிமை கோரிக்கையின் ஆகப்பெரும் சிக்கலான தருணத்தில் அம்பேத்கரைத் தனிமைப்படுத்தி விட்டார் என்னும் மனக்குறை அது. எல்லார் வாழ்விலும் இதுபோன்ற முரண்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இடறத்தான் செய்கின்றன. பொதுமனிதனின் “நாம்உணர்வு” அவனுக்குள்ளிருக்கும் தனிமனித “நான் உணர்வால்” தட்டழிந்து போவதை வரலாறு நெடுகிலும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். “நானுக்கும்” “நாமுக்கும்” ஒட்டுறவற்ற வார்ப்பமைதி சாத்தியமில்லாத வரை அதன்பொருட்டுத் தீவிரமாகக் குறைபட்டுக் கொள்வதில் ஆவதொன்றுமில்லை. எம்.சி.ராஜா அவர்கள் அடுத்த சந்தர்ப்பத்திலேயே அம்பேத்கருடன் இணைந்து கொண்டார் என்பதுதான் அவருக்கான பலம்; தம் மக்களுக்காக அவர் வாழ்ந்த வாழ்வின் தகர்க்க முடியாத நிலைப்பாடு.
இந்த நூலுக்கு “விளக்கமும் வேண்டுகோளும்” என்னும் பெயரில் பொன்னோவியம் அவர்கள் ஒரு பக்கம் எழுதியுள்ளார். அதில் அவர் இவ்வாறு சொல்கிறார்: “தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் தன் வாழ்நாள் முழுதும் மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அரசியல், சமுதாயக் குறிப்பேடுகள் நன்கு உணர்த்துகின்றன. அவர் வெள்ளையர் ஆட்சியைத் தாக்கியும், அன்றைய தேசியக் காங்கிரசைப் பழித்துக் கூறியும், நீதிக் கட்சியை இழித்துச் சாடியும் இருக்கிறார். -ஏன்? ஆதிதிராவிடர்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்.”
இது முற்றும் உண்மை. குறிப்பாக நீதிக்கட்சியை அவர் சாடியுள்ளதை வெளிச்சப்படுத்துவதற்காகவே இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது. இதிலும்கூட சாடலின் ஒரு பகுதி மட்டும்தான் இடம் பெறுகிறது. தலித்துகளை எதிர்கொண்டதில் காங்கிரஸ் கட்சியைவிட நீதிக்கட்சி சற்றுத் “தேவலை” என்றொரு கருத்து எனக்கிருந்தது. அது இந்த நூலின் மூலம் தகர்ந்து போய்விட்டது. அவர்கள் ஏதேனும் செய்திருந்தால் அது சட்டத்துக்குட்பட்டும் தவிர்க்க முடியாத சூழலிலும் வேறு வழியில்லாமல் செய்த துரும்பளவுதானே தவிர சமதர்ம சமுதாயம் காணும் தன்னெழுச்சியால் அல்ல. எந்தக் கட்சிக்காரனாயிருந்தாலும் சாதி இந்துக்களின் கோணல் பார்வையால்தான் தலித்துகள் அளக்கப்படுகிறார்கள்; நிறுக்கப்படுகிறார்கள்; முகக்கப்படுகிறார்கள்; விமர்சிக்கப்படுகிறார்கள். நீதிக்கட்சிக்காரர்களும் அந்த சாதிக்கட்சிக்காரர்கள்தாம் அல்லவா? அதிலும் நாமமும் தலைப்பாகையும் அணிந்த மிட்டா மிராசுகளின் சங்கமத் திரள் அல்லவா? பார்ப்பனர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கும்போது தவிர்க்க முடியாமல் சிந்திச் சிதறியவைதான் தலித்துகளுக்கான பங்காயிருந்தன.
தலித்துகள் அவலம் பற்றியும் தலித்தல்லாதவர்களின் மூர்க்கம் பற்றியும் சென்ற நூற்றாண்டுத் தலித் தலைவர்கள் குரல் கொடுத்ததை விடவும் அதிகமாக யாரும் சாதித்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. இந்த தலித் யுகத்தில் அவர்கள் ஊதிப்பெருக்கிய ஊழிநெருப்பை எரிமலைக் குழம்பாக்கி வழியவிடுவதொன்றே அடுத்த கட்ட வளர்ச்சியாயிருக்கும்.
முடிந்தால் இதுபோன்ற நூல்களை மீண்டும் வெளிக்கொணர்வது தலித் தன்மான உணர்வுக்குக் காப்புக் கவசமாயிருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.
- கவிதாசரண்)
“தாழ்த்தப்பட்ட வகுப்பினர்” என்ற சொல்லை “பிற்பட்ட வகுப்பினர்” என்பதோடு வைத்துக் குழப்பக்கூடாது. பிற்பட்ட வகுப்பினர் கல்வியில் மட்டும் பின்னடைந்தவர்கள். ஆனால் சமயம், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவைகளில் உண்மையிலேயே உயர்ந்திருப்பவர்கள்.
மாறாக, “தீண்டாத வகுப்பினர்” என்று கூறப்பட்டு, கல்வி, பொருளாதாரம், சமுதாயம் ஆகியவைகளில் பின்தங்கியுள்ள சமுதாயத்தினர்தான் “தாழ்த்தப்பட்ட வகுப்பினர்” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இம்மக்கள் சாதி இந்துக்களின் பன்னெடுங்கால மிகுந்த கட்டுப்பாடான கொடுமைகளாலும், சமுதாய அழுத்தல் போன்ற புறக்கணிப்பாலும் தாழ்த்தியே வைக்கப்பட்டு வந்துள்ளனர். உயர்சாதிக்காரர்கள் என்போர் நெடுங்காலமாக நடத்திவரும் கட்டுப்பாடான கொடுமைகளின் விளைவுதான் பழங்குடி மக்களின் இன்றைய இழிநிலைக்குக் காரணமாகும்.
இவ்வாறு ஓர் இனம் இருப்பது என்பது இந்தியாவுக்கு மட்டும் ஓர் புதுமையானது அல்ல என்று சில சமயங்களில் வாதாடப்படுகிறது. சாதி பாகுபாடு-தன்மை, இந்தியாவில் அது செயல்படுகின்ற சூழ்நிலை போன்று வேறெங்குமில்லை. மற்ற நாடுகளில் பத்தில் ஒரு பகுதியினரின் தாழ்ந்த நிலைக்கு முக்கியமாகப் பொருளாதாரக் காரணங்களைத்தான் கூறவேண்டும். ஆனால் இம்மாநிலத்தில் அழுத்தப்பட்டிருக்கும் ஆறில் ஒரு பகுதியினரின் அல்லது ஆதிதிராவிடர்களின், ஆதி ஆந்திரர்களின் மற்றும் பிறரின் இழிநிலைக்கு, நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இவர்களுக்கு எதிராக இயங்கிவரும் சமய சமுதாய செயல்முறைகள்தான் காரணமாகும்.
இந்தியாவுக்கு மட்டும் தனித்தன்மை, இவ்வாறான இழி நிலையிலுள்ள ஓர் சமுதாயம் இருப்பதில் அடங்கியிருக்கவில்லை; ஆனால் அதைவிட மிகுதியாக, பழங்குடி மக்களை முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடுவதற்காக - அதிகாரம், செல்வாக்கு இவைகளை உரிமையின்றி கைப்பற்றிக் கொண்டவர்கள், நிரந்தரமாகக் கையாளும் முறையில்தான் தனித்தன்மையே அடங்கியிருக்கிறது. எப்படி இவர்களெல்லாம் தீண்டாதவர்களாக, நெருங்கினால் தீட்டினை ஏற்படச் செய்பவர்களாக மதிக்கப்படுகிறார்கள் என்பதில் சமூக ஊழியர்கள் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்.
நீர் குதிரையைத் தொடலாம். நாயைத் தட்டிக் கொடுக்கலாம். பூனையைத் தடவிவிடலாம். ஆனால், பழங்குடிமகனை நீ தொடக் கூசுகிறாய். நீங்கள் உங்களுடைய வீடுகளில் பசுக்களையும் நாய்களையும் வளர்க்கலாம். உங்களின் பாவங்களுக்குப் பிராயசித்தமாக நீங்கள் பசுக்களின் சிறுநீரைக் குடிக்கலாம், அவைகளின் சாணங்களைக்கூட விழுங்கலாம்; ஆனால் நீங்கள் ஒரு பழங்குடிமகனை அணுகக்கூடாது! சோன்னரெட் என்பவரின் “கிழக்கிந்தியத் தீவுகளுக்குக் கடற்பயணம்” என்ற நூலில் கீழ்க்காணும் வாசகத்தைக் காணலாம்.
......ஒரு இந்தியன் ஆதிதிராவிடனுடன் பேசும்போது அவப்பேருடையவனான ஆதிதிராவிடன் தன்னுடைய கையால் வாயை மூடிய வண்ணம் பொத்திக் கொள்ள வேண்டும் என்பதினைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவனுடைய மூச்சு விடும் காற்றினால் இந்தியனின் தூய்மை கெட்டுவிடும். நெடுஞ்சாலைகளில் சந்திக்க நேர்ந்தால், உடனே ஆதிதிராவிடன் ஒதுங்கி நின்று மற்றவர்(சாதி இந்து) போக வழி விட வேண்டும். ஆதிதிராவிடன் தொட்டுவிட்டால் (சாதி இந்து) குளிப்பதன் மூலம் தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
..............................
மனிதனை மனிதன் மனிதத் தன்மையற்று நடத்தும் போக்கு கணக்கற்ற ஆயிரக்கணக்கானவர்களைத் துயருறச் செய்கிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த அவலநிலை தொடர்ந்து வர இருக்கிறதோ?
மனிதனுக்குரிய உணர்வுகள் - எதிர்காலத்தில் அறியாமை அடிமைத்தன்மை துயர்தோய்ந்த வாழ்க்கையில் உழன்று தாங்களே முன்னேற்றமடைய - அல்லது உயர்த்திக்கொள்ள - எந்த வித பேரவா கொண்டாலும் அவ்வாறு எண்ணுவதே பாவம் என்று கட்டாயப்படுத்துவது போன்ற தவறுகளைச் செய்து ஒரு சமுதாயத்தை அழிக்கும் பெரும்பிழை வேறு இருக்க முடியாது. கோடிக்கணக்கான ஏதுமறியா ஆதிதிராவிட பழங்குடி மக்கள், ஒவ்வொரு நாளும் வதைக்கப்படுகிறார்கள். வெறுப்புணர்ச்சியுடன் இழிந்த மிருகங்களைவிடக் கேவலமாக, காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்படுகிறார்கள். பசிக் கொடுமை, நிர்வாணக்கோலம், வாழ்க்கையில் ஊக்கமற்ற போக்கு, கேவலமான குடிசைகளில் வாழும் கோரம், நெடுங்காலக் கொடுமைகளினால் வந்தடைந்திருக்கும் கெஞ்சல் போக்கு - அடிக்கடி ஏற்படும் பசிக் கொடுமை களிலிருந்து விடுபட எது கிடைத்தாலும் உண்ணுகின்ற நிர்பந்தம் - நிராதரவாக விடப்பட்ட அவலநிலை போன்ற முற்றிலும் துயர் நிரம்பிய இழிந்த, சக்தியற்ற நிலையில் பழங்குடிமக்கள் இருக்கிறார்கள். இது இந்த நாட்டைச் சேர்ந்த ஒரு மாபெரும் பழி இல்லையா?
இந்தியாவின் சமூக ஒதுக்கம் செய்யப்பட்டவர்களின் சமுதாய நிலை மிகவும் துயரம் நிறைந்ததொன்றாகும். நூற்றுக்கணக்கான நீண்ட ஆண்டுகளாக நடந்துவரும் கொடுமைகளின் விளைவாக, அவர்களிடமிருந்து ஆண்மை அத்தனையும் அற்றுப் போகச் செய்துவிட்டனர். சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் தன்னுடைய மனிதத் தன்மையின் விடுதலையை அல்லது சாதாரண குடிமகனுக்குரிய முக்கியமான உரிமைகளை வற்புறுத்த முற்பட்டவுடன், சட்டத்தை மீறி தான்தோன்றித்தனமான கொடுமை மிகுந்த செயல்கள் ஓராயிரம் உருவங்களெடுத்து அவனைத் தொடர்ந்து சென்று தாக்குகின்றன. மேலும், பழைய நிலைமைக்குத் தள்ளப்பட்டு இன்னும் படுமோசமான நிலைக்கு அவன் உள்ளாக்கப்படுகிறானே ஒழிய, தான் எடுத்த முயற்சிக்கு முன்னேற்றம் எதுவும் அடைவதில்லை. கல்வியறிவற்று சமுதாயத்தின் அடித்தளத்தில் அழுத்தப் பட்டிருப்பதனால், அவனை சுற்றிலுமுள்ள சாதி இந்துக்கள் ஈவு இரக்கமின்றி கொள்ளையடிக்கிறார்கள்.
தற்போது, தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் தங்களுடைய வலிமையற்ற தன்மையை உணர்கிறார்கள். ஆதிதிராவிட பழங்குடி மக்கள் தங்களுடைய பண்டைய மரபுரிமை பரிக்கப்பட்டதை மிக அதிகமாக உணர்கிறார்கள்.
சாதி இந்துக்களின் ஓரவஞ்சனை, குறுகிய இனப்பற்று, குருட்டுத்தன்மை, சாதிச்செருக்கு, கொடுங்கோன்மை ஆகியவைகள்தான் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் பட்டினிக்கும் அறியாமைக்கும் காரணம் என்பதை ஆதி திராவிட மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.
ஆதிதிராவிடர் இந்த மண்ணில் பிறந்தவர்கள். செருக்குக் கொண்ட இந்து சகோதரர்களுடன் சரிநிகர் உரிமைகளை - சிறப்புரிமைகளை - நுகரும் குடியுரிமையாளர்கள் தாங்கள் என்பதையும் பழங்குடி மக்கள் உணருகிறார்கள்.
வெள்ளையரின் வருகைக்கு முன்னாலிருந்த இந்திய அரசர்களின் ஆட்சியின்கீழ் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் நிலையுடன் இன்றைய அவர்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வணக்கமான நன்றியுடன் கூடிய உணர்ச்சிதான் முதன்மையாக நிற்கிறது. ஆங்கிலேயரின் வருகையுடன் ஆதிதிராவிடர்களின் அடிமைத்தளை அறுபட ஆரம்பமாயிற்று. அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடையத்தான் ஆரம்பமாகியிருக்கிறதே தவிர முழுமையாக பூர்த்தியாகவில்லை. சிலர் அந்நிய ஆங்கிலேயரைப் பற்றி வெறுப்புடன் பேசுவதை நாம் கேட்கிறோம். ஆனால், இந்த கல்வி, பொருளாதார முன்னேற்றம், தனி மனிதன் உரிமை ஆகியவை சிறிதளவாவது எய்தியமைக்குக் காரணம்
அந்நியர்கள்தான் என்பதற்கு, இந்த மக்கள் அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டாமா? அதை விடுத்து, சாதி வெறி, தன்னலம் கொண்ட சாதிஇந்து- ஒப்புக்காக ஒரே மரபினம் என்று கூறிக்கொண்டு நப்பாசையும் பேராசையுங் கொண்டு தாழ்த்தப்பட்டோரின் உழைப்பை உறிஞ்சி, உழைப் பிற்கேற்ற ஊதியம் தராமல் மிகவும் சொற்ப கூலி கொடுக்கும் - சாதி இந்துவுக்காக பழங்குடி மக்கள் எப்படி கடமைப்பட்டவர்களாக இருக்க முடியும்?......................
ஆதிதிராவிடர்களின் அன்றைய பெருமைகளைச் சொல்ல வேண்டுவதில்லை.ஆனால் அவர்களுடைய பழைய மாண்புகளை அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்கள் எனக் கூறத்தான் வேண்டும்.இந்த நாட்டில் ஆதிகாலத்தில் இருந்த முதல் மனிதர்கள் இவர்கள்தான் என்று கூறிக்கொள்வதில் இவர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.1
.................................
சாதி அமைப்பு பற்றி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இங்கு நோக்குவோம். நான்கு சாதிகள் படிப்படியாக நாளா வட்டத்தில் பற்பல துணைச்சாதிகளாக உருவெடுத்தன. சாண்டிராகோட்டிஸ் காலத்தில் ஏழு இந்து சாதிகள்தான் இருந்தன என்று கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ் குறிப்பிடுகிறார். அவையாவன:
1. தத்துவ மேதைகள் 2. விவசாயிகள் 3. இடையர்- வேட்டையாடுவோர் 4. தொழிலாளர்-வணிகர்,தட்டுமுட்டு சாமான்கள் விற்பனையாளர் 5. போரிடுவோர் 6. மேற்பார்வையாளர்கள் 7. வரி கணிப்பாளர்கள், அரசுக்கு ஆலோசனை கூறுவோர்.
அன்று அடிமைத்தனம் இல்லை. முதலில் இருந்த நான்கு சாதிகள் அல்லது அதற்குப் பிறகு தோன்றிய ஏழு சாதிகளுக்குப் பதிலாக இப்போது 2,400 பெரிய சாதிகளும் பிரிவுகளும் தோன்றியிருக்கின்றன. தென்னிந்தியாவில் ஐம்பது வகை இனங்களும் தேசியங்களும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்தியாவில் சாதியானது சக்தி வாய்ந்த ஒரு இயக்கமாக விளங்குகிறது. தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை எங்கும் எப்போதும் ராட்சதத் தன்மை பெற்ற சாதி விளையாடாத இடமோ நேரமோ இல்லை.
மனிதனை மனிதன் வெறுக்கும் நிலை சாதியினால் உண்டாகிறது. இந்துக்களின் ஒவ்வொரு அசைவும் சாதியால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் அது மக்களின் உடலை பலவீனப்படுத்துவதல்லாமல் தேசத்தில் ஏழ்மை நிலையை உண்டாக்குகிறது. வேற்றுமைக்கும் வெறுப்புக்கும் வித்தாக அமைகிறது. மக்களினத்தைக் கொடுமை நிறைந்த மிருகங்களாக மாற்றுகிறது. அல்லல் படும் ஒருவனைப் பார்த்து மற்றொருவன் மனம் இரங்கா வண்ணம் அவனுடைய இதயத்தைக் கல்லாக்கிவிடுகிது. இந்த வகையில் ஒருசிலர் மட்டும் பெருமையோடும், திமிரோடும், இறுமாப்போடும் உலவிவர முடிகிறது.
தமிழ் மாவட்டங்களில் - பறையர், பள்ளர், வள்ளுவர் என்றும், கிழக்குக் கரையிலுள்ள தெலுங்கு மாவட்டங்களில் - மாலா, மாதிகா என்றும், மேற்குக் கரையில் செருமார், ஹோலியர் என்றும் கீழ்ச்சாதி மக்களென்றும் அழைக்கப்படுகின்றனர். தீண்டாத எல்லா வகுப்பினரையும் “பறையர்” எனப் பொதுவாக அழைப்பது மரபு. “பறையர்” என்ற வார்த்தை முதன் முதலாக, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாங்குடி கிழார்2 என்ற புலவரால் கையாளப்பட்டிருக்கிறது. பழங்கால கல்வெட்டுகளிலோ3 பண்டையத் தமிழ் இலக்கியங்களிலோ இந்த வார்த்ததை காணப்படவில்லை.
.........................
மேளத்தைக் குறிக்கும் “பறா” அல்லது “பறை” என்ற வார்த்தையிலிருந்து விரிந்துபட்டதே “பறையர்” என்ற சொல். மேளம் அல்லது பறை என்ற வாத்தியத்தை பயன்படுத்திய காரணத்தால் அவர்கள் பறையர்கள் போலும்!
பறை என்ற வார்த்தை4 மேளத்தை குறிக்கும் சொல்லாக, தமிழ் மலையாள மொழிகளைத் தவிர்த்து வேறெந்த திராவிட மொழிகளிலும் காணப்படவில்லை. பறையர் என்போர் மேளம் கொட்டுபவர் என்றால், இந்தியாவில் மேளம் கொட்டுபவர் எல்லோரும் பறையர் என்ற வார்த்தையால் அழைக்கப்பட வேண்டும் அன்றோ? ஆனால், இத்தொழில் புரிவோர் கன்னட நாட்டில் ஹோலியர் என்றும் தெலுங்கு தேசத்தில் மாலவாடு என்றும் அல்லவா அழைக்கப்படுகிறார்கள்!
இப்போதெல்லாம் பறையர் என்று சொல்லப்படுவோர் பறையடிப்பதில்லை. திருவிழாக்களிலும், திருமணங்களிலும் தவுல், மேளம் முதகயவற்றை வாசிப்பவர்களை அம்பட்டர்கள் என அழைக்கிறார்கள். இவர்கள் நாவிதர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்நாவிதர்கள் சூத்திர வகுப்பைச் சார்ந்தவர்கள். பறையர் என்போர் உண்மையிலேயே நிலச்சுவான்தார்கள். நாளாவட்டத்தில் அவர்களிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு5 ஆரியரிடம் சேர்ப்பிக்கப்பட்டன. இவ்வாறாக, நிலத்துக்கு உரிமையானவர்கள் காலப்போக்கில் அந்நிலத்தில் வேலை செய்யும் கூலிகளாக மாற்றப்பட்டார்கள்.
............................
சாதி இந்துக்கள் இவர்களை வெகுகாலமாக பறையர் என்றே அழைத்து வந்தார்கள். இப்பெயர் எப்படி வந்ததாக இருப்பினும், சாதி இந்துவின் நாவிகருந்து “பறையர்” என்ற வார்த்தை வெளிப்பட்டது என்றால், அதற்கு கீழ்த்தரமான வெறுக்கத்தக்க பொருள்தான் தொனிக்கிறது. தூய்மை, மதிப்பு மிக்கது போன்ற வார்த்தைகளின் எதிர்ப்பதங்கள்தான் இவ்வார்த்தைக்கு இந்நாட்களில் பொருள். தன்மான உணர்ச்சியின் காரணமாக ஆதிதிராவிட மக்கள் பறையர் என்ற பதத்தை வெறுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சாதி இந்துக்களில் சிலர், ஐந்தாவது வருணத்தைக் குறிக்கும் “பஞ்சமர்” என்ற பெயரை உபயோகிக்கலாம் என அபிப்பிராயப்பட்டனர். எப்படியாவது தாங்கள் பறையர் என்று அழைக்கப்படாமலிருந்தால் போதும் என்ற எண்ணத்தில், பஞ்சமர் என்ற பெயரை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் தன்மான உணர்ச்சி வளர வளர, பஞ்சமர் என்ற பெயர் எந்தவித தீய நோக்கோடு சூட்டப்பட்டிருக்கிறது என்பதை இவர்கள் உணர ஆரம்பித்தார்கள். பொதுவாக நான்கு வருணங்களே உள்ள சமுதாயத்தில், பஞ்சமர் அல்லது ஐந்தாவது வருணத்தை அல்லது சாதியை ஏற்படுத்துவது - அவர்களைக் கீழ்மக்களாகக் கருத வேண்டும் என்ற காரணத்துக்காகவே!
தென்னிந்தியாவின் முதல் குடிமக்கள் என்ற பொருள் தொனிக்கும்படியாக ஒரு பெயர் தங்களுக்கு இருத்தல் அவசியம் என உணர்ந்த மக்கள், மிக மோசமான சாதிமுறைக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை எனக் கண்டார்கள். பூர்வீக மக்கள் என்பது தெளிவாகத் தெரியும்படியாக ஒரு பெயர் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பினார்கள். “யூரேஷியர்” என்ற சுட்டுப் பெயரை விரும்பாத யூரேஷிய இன மக்கள், தங்களை “ஆங்கிலோ-இந்தியர்” என அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். சூத்திரர் என்று கூறிக் கொள்ளப் பிடிக்காத பிராமணரல்லாத சாதி இந்துக்கள், தங்களை “திராவிடர்கள்” என்று அழைத்துக் கொண்டார்கள்.
முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன் அதாவது (1895இல்) தங்கள் இனத்துக்கு ஒரு பெயர் சூட்டிக்கொள்ள விரும்பிய இம்மக்கள், “திராவிடர்” என்று பெயர் மாற்றிக்கொண்ட சூத்திரர்களிடமிருந்து தாங்கள் தனிப்பட்டவர்கள் என்பதை விளக்கும் வகையில் “ஆதிதிராவிடர்” என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
.......................................
ஆதிதிராவிட சமுதாயம் ஒரு காலத்தில் மிக்க செல்வாக்கோடும் பெரும் புகழோடும் வாழ்ந்து வந்தது என்ற உண்மையை மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. அச்சமுதாயம் சொந்த அரசாங்கத்தையும் நீதி மன்றங்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்தைந்து பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு பஞ்சாயத்து என்ற பெயரில் செயல்புரிந்து வந்தார்கள். இந்தவித பஞ்சாயத்துக்கு மூத்தோர்கள் குழு என்று பெயர். ஐந்து பேர்கள் தலைமை வகிக்க கூட்டப்படும் நீதி மன்றமே பஞ்சாயத்து ஆகும். இந்த ஐந்து பேர்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர்தான் நாட்டாண்மைக்காரர். இச்செயல் முறைகளை கிராமங்களிலே இன்றும் நாம் காணுகிறோம். கிராமங்களில் தோன்றும் தீர்த்து வைக்கக்கூடிய வழக்குகளை, இந்தப் பஞ்சாயத்து போற்றத் தகுந்த முறையில் தீர்த்து வைக்கிறது.
ஆதிதிராவிடரில் ஒரு பகுதியான வள்ளுவர்கள்,6 பல்லவ மன்னர்களின் மத குருக்களாக, பிராமணர் வருவதற்கு முன்னும், வந்த பிறகு சிலகாலம் வரைக்கும் விளங்கினார்கள்.
“இத்தனி உவச்சன் ஸ்ரீவல்லுவம் பூவணவன் நியமம் ஆறாளிட்டு உவச்சப்பணி செய்பவன்”
என்று 9ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் காணப்படுவதாக சர். ஹெரால்டு ஸ்டூவர்ட், 1891ஆம் ஆண்டு வெளியிட்ட மக்கள் தொகை பற்றிய அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.
.......................................................................................................................
ஒருகாலத்தில் உன்னதமாகவும் உயர்ந்த நிலையிலும் இருந்த இனம் அவலநிலைக்கு ஆளாகிவிட்டது. ஆங்கிலேய அமைப்பு ஓரளவு இவர்களை காக்கவந்தது. எனினும் இன்னும் ஆதிதிராவிட மக்களை பொதுக்கிணறு, குளம் இவைகளில் அனுமதிப்பது கிடையாது. மேலும் பொது நிதியினின்றும் இயங்கும் பள்ளி, கல்லூரி இவைகளில் இவர்களுக்கு இடமில்லை. இவர்கள் பாமரர்கள் என்றும் தற்குறிகள் என்றும் பழிக்கப்படுகிறார்கள். ஆண்டவர் தரிசனத்திற்கும் அறுகதையற்றவர்களாம். ஆலயங்களின் கதவுகள் இவர்களுக்கு திறக்கப்படுவதில்லை. பொதுச் சாலைகளில் செல்வதற்கும், சவங்களை புதைப்பதற்கும் மற்ற இனத்தினரின் தயவையே எப்போதும் நம்பி வாழும் நிலையிலிருக்கிறார்கள்.... சாதி இந்துக்கள் ஆதிதிராவிடர்கள்பால் இத்தகைய கொடும்பாவ போக்கினை கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இவர்கள் நிலைமை சற்று மாறி இருக்கிறது.
மனுவின் நீதி நூலுக்கு மேட்டுக்குடியினர் உகந்த வகையில் கல்லறை கட்டினார்களா? எல்லா நடைமுறைக் காரியங்களுக்கும் அது இறந்துபட்டதாக இருந்தாலும் மீண்டும் அது அமுலுக்கு கொண்டு வரப்படாமலா போய்விடும்? ஆயிரம் ஆண்டுகள் ஆண்ட முஸ்லீம் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆண்ட ஆட்சிக்காலத்திலும் நம்மால் சாதிக் கொடுமையை ஒழிக்க முடிந்ததா? மாறாக சாதிவெறி தலைத்தூக்கி ஆடுகிறது. சாதிவெறி மக்கள்பால் கொண்ட வெறிப் பிடியைத் தளர்த்தி வருகிறது என்று சொல்லப்பட்டாலும் தனி மனிதனுக்கு உண்டான சுதந்திரத்தை, உரிமையைத் தாழ்த்தப்பட்டவருக்கு அளிக்க சாதி இந்துக்கள் மறுக்கிறார்கள். சட்டமும் இச்செயலை அனுமதிக்கிறது. இதற்கேற்ப நீதிமன்றமும் இதனை ஆமோதிக்கிறது. தேசிய வளர்ச்சிக்குத் தனி மனித உரிமை ஓர் முக்கிய அம்சமாகும்.
சமூகத்திலுள்ள முரண்பாடுகள் சீர் செய்யப்படாத வரையில் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடாது. அரசியல் சுதந்திரம், அரசியல் சமத்துவம், அரசியல் சகோதரத்துவம் பெற விரும்பும் மக்களுக்கு, முதகல் சமூக சுதந்திரம், சமூக சமத்துவம், சமூக சகோதரத்துவம் முதகயவற்றை வலியுறுத்த வேண்டும்.
உயர் வகுப்பினர் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சக தோழர்களுக்கு ஆற்றவேண்டிய அரும்பணி அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் இருக்கின்றன; ஆனால், அவர்களோ மாறாக உங்களுடைய தேவைகள் என்ன? நீங்கள் ஏன் திருப்தி அடையவில்லை என ஏளனமாகவும் கேலியாகவும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன? நாங்களும் உங்களைப்போல மனித இனம்தானே. எங்களைப் போன்று நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்ற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்டகாலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள். உங்களைச் சுரண்டினால்-நீங்கள் அறிவுப் பசியால் வாடினால்-பள்ளி, நடைபாதை, பொது இடம், கிணறு, கோயில் போன்ற பொதுநல வாய்ப்புகள் இழக்கப்பட்டால், நாள்தோறும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானால் நீங்கள் என்ன விரும்புவீர்கள்! நாங்கள் கற்களோ பாறைகளோ அல்ல. எங்களுக்கும் ஆசாபாசங்களும், தேசப் பெருமையுனூடே பேரும் புகழும் அடைய வேண்டும் என்ற உணர்ச்சிகளும் இருக்காதா? நாங்கள் எத்தனை துன்பங்களையும், கொடுமைகளையும், சுரண்டல்களையும், அவமானத்தையும், அல்லல்களையும் அனுபவிப்பது!
எங்கள் தேச அபிமானத்தை சிதைத்திருக்கிறீர்கள். அவமதிப்புகளை அளவில்லாமல் எங்கள்மீது குவித்து எங்கள் தன்மானமே அழியுமளவுக்கு ஆக்கிவிடிருக்கிறீர்கள். அரசியல் துறையிலும், பொருளாதாரத்திலும் நாங்கள் அழிந்தே போகுமளவுக்கு எங்களை அல்லல்களுக்கு உட்படுத்தி அலைக் கழித்திருக்கிறீர்கள். முதலில் நாங்கள் சுதந்திரம் அடையவேண்டும். நாங்கள் மனிதராக வாழவேண்டும். மனித உரிமையும் எங்களுக்கு வேண்டும். இதுவே நாங்கள் வேண்டுவதெல்லாம். யாருடைய பரிவோ, பரோபகாரமோ எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் பெற விரும்புவது சமூக முன்னேற்றம், அரசியல் எழுச்சி, பொருளாதார உயர்வு.
ஏழை எளியவர்க்கு சேவை செய்வது சிறந்தது. அவர்கள் கடவுளரின் பிள்ளைகள். அவர்களை புறக்கணிக்கக் கூடாது. இயேசும், கிருஷ்ணனும், வாமனும் அரண்மனைகளிலே பிறந்தார்களில்லை.
இயேசு வளங்கொழிக்கும் கேப்பர்னாம்பெத்ஸிடயா நகரங்களிலா பிறந்தார்? கலீலியாவிலுள்ள இழிந்த குடியானவனோடு இருந்தார். அவர் செல்வர்களையும் சீமான்களையும்விட பாவிகளையும் பாமரர்களையுமே நாடினார். நைந்துபோன ஆடைகள் சிறிய பாவச் செயல்களைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால் ஆடம்பர ஆடை அணிகள் பெரும் பாவச் செயல்களை மூடிமறைக்கின்றன. மற்றவர்கள் செய்யும் குற்றமெல்லாம் குற்றமாக எண்ணாமல் ஏதோ ஒரு சமாதானம் கூறி மறைக்கப்படுகிறது. ஆனால் ஒதுக்கப்பட்டவர் செய்யும் சிறு காரியமானாலும் அவையெல்லாம் பெரிதாக்கப்படுகின்றன. இருப்பினும் ஆதிதிராவிட உள்ளம் எதையும் தாங்கும் உரம் பெற்றதாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்தில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட இனம் என்று ஒன்று இருக்கின்றவரையில் முழு பொறுப்புள்ள அரசாங்கத்தை அளிப்பதோ, ஆட்சி சீரமைப்புக்கு அடிகோலுவதோ மிகப் பெரியதோர் தவறை வகய வரவழைப்பதைக் காட்டுமேயன்றி வேறென்ன!
............................
இந்துக்களைப் போன்று ஆதிதிராவிடர்களும் இந்த நாட்டு மக்களில்லையா? அவர்கள் வாழ்க்கைத் தரம் கேவலமாக இருப்பதால் மேட்டுக்குடிகளின் வெறுப்பிற்கும் ஏளனத்திற்கும் ஆளாக வேண்டுமா? ஆதிதிராவிடர்கள் அசுத்தமாகவும் அறியாதவர்களாகவும் இருப்பதற்கு சாதி இந்துக்களன்றோ காரணமாவார்கள். தாழ்த்தப்பட்டோர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் என்றால் இவர்கள் உழைப்பை உறிஞ்சி வயிற்றுக்கும் போதாத ஊதியத்தை கொடுத்த அந்த மேட்டுக்குடி சாதி இந்துக்களே பொறுப்பாளிகள் - குடிகாரர்களாக இருக்கிறார்கள் என்றால் சாதி இந்துக்கள் அவர்களைத் தீய வழிகளில் நடத்திய காரணத்தினால் அல்லவா? - வாழ இடமில்லாமல் வாடுகிறார்கள் என்றால் மேட்டுக்குடிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்காததாலல்லவா?
அயல்நாட்டினரும் மற்றவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்த்துக் கூறும் குறைகள் என்னவெனில் அவர்கள் மிகவும் அசுத்தமானவர்கள் என்பதே. தூய்மையைப் பற்றி சொல்லப்போனால் தாழ்த்தப்பட்டவர்களில் பலர் உயர்சாதி என அழைப்பவர்களைவிட அதிகமாகத் தூய்மையுடையவர்கள் எனக் காட்டலாம். இயற்கை எல்லோருக்கும் ஈந்த தூய நீரைத் தாங்களே உடமையாக்கிக் கொண்டு இவர்களுக்கு தூய்மையற்ற நீரை அனுபவிக்கவிட்டால் இவர்கள் எவ்வாறு தூய்மையாக இருக்கமுடியும்?
தவறு யாருடையது? தாழ்த்தப்பட்டோர்களுக்கு குடிக்க - குளிக்க - நீர் கொடுக்காமல் இவர்களை தூய்மையற்றவர்கள் என்று மட்டும் கூறத் துணிவு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்க நல்ல நீர், இருக்க இடவசதியற்று அசுத்தத்திலே உழல்வதால் நோய் நொடிகளுக்கு ஆளாகிறார்கள். இதற்கு யார் காரணம்? இத்தனை கொடும் பாவச் செயல்களுக்கெல்லாம் சாதி இந்துக்களே காரணம். இந்த வாழமுடியாத நிலைமை மாற்றி அமைக்கப்படுமா? இந்தியா உரிமை பெறுகின்ற நேரத்தில் இந்த நிலைமை மாறும் என்று கூறிய காலமொன்று இருந்தது. அந்த நேரத்தை நெருங்கி விட்டோமா? இப்படிப்பட்ட வெட்கக்கேடான நிலைமை ஒன்று நாட்டில் ஒருகாலத்தில் இருந்ததே என்று சாதி இந்துக்கள் நினைத்துப் பார்க்கும் காலம் எப்போது வரும்! சாதி இந்துக்களுடைய நாட்டுப் பற்றும் மதக் கோட்பாடுகளும் அவர்கள் நீண்ட காலமாக செய்து வரும் தவற்றை நீக்காவிட்டாலும் - நல்ல எண்ணமுள்ளவர்களையும், தரும சிந்தனையாளர்களையும், நற்காரியங்களில் நாட்டமுள்ளவர்களையும் இப்போது வேண்டிக்கொள்வது - தாழ்த்தப்பட்டோர்களின் சமூக முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் சுதந்திரத்திற்கும் தீவிரமாக உழைக்க முன்வரவேண்டும் என்பதே! அப்போதுதான் இந்தியாவின் முன்னேற்றம் உறுதியாக்கப்படும்.
ஆனால் இதுவரை மனித சுபாவம் இருந்து வந்திருக்கிறதே எவ்வாறு - ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக இந்துக்கள் மனப்பூர்வமாக உழைப்பார்கள் என்றோ அல்லது முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்வார்கள் என்றோ எதிர்பார்ப்பது அவ்வளவு அறிவுடைமையாகாது.
................................
1923ஆம் ஆண்டு ஜூலை 21, 22ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த இரண்டாவது தென்னிந்திய ஆதிதிராவிட பேரவையில் நான் ஆற்றிய தலைமையுரையிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். அந்த மேற்கோள், சட்டமன்றத்தில் அன்று அதிகாரத்தைப் பற்றி ஆண்ட சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை, பல உண்மை
நிகழ்ச்சிகளோடும் புள்ளி விவரங்களோடும் உங்களைத் தெளிவுபடுத்தும்:
“திருத்தி அமைக்கப்பட்ட இச்சட்ட மன்றத்தில் நீதிக்கட்சி உறுப்பினர் பெருவாரியாக இருந்தும் நீதிக்காக இம்மன்றம் என்ன செய்தது? இக்கட்சி பதவியில் அமர்ந்த ஓராண்டு காலத்துக்குள் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தில் ஒரு லட்சம் ரூபாயை வெட்டியது. இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் குன்றிவிட்டது; பறிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிக்கட்சித் தோழர்கள் தாழ்த்தப்பட்டோர் நலத் துறைகளை மூடிவிட்டனர். அத்துறைகளில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் எல்லோரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இக்கொடிய செயலால் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் முடமாக்கப்பட்டது. அந்த நிலையில் ஆதிதிராவிட ஏழை மக்களின் நிலைமையை சிந்திக்க வேண்டுகிறேன். நல்லகாலமாக நீதிக்கட்சியின் பதவிக்காலம் இரண்டாண்டோடு முடிந்துவிட்டது. கடவுள் நம்மைக் காப்பாற்றினார். சாதி இந்துக்கள் நம்மீது பிறவிப் பகை கொண்டிருக்கிறார்கள்.
...............................................
“இப்போது அதிகாரத்திலிருக்கிற கட்சி நம்முடைய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல நன்மைகளைச் செய்தது என்று நான் கேள்விப்பட்டபோது வியப்பில் ஆழ்ந்துபோனேன். ஆதிதிராவிடர்களின் செலவிற்காக சில மானியங்களையும் ஒதுக்குகின்றது என்று சில அரசியல்வாதிகள் என்னிடம கூறினர். இது அவர்கள் பெருந்தன்மையால் வந்தது என்பதா அல்லது பெருந்தன்மையற்ற ஒருசில தனியார் வினையென்பதா என்று எனக்கே புரியவில்லை. ஒருவர் தன்னை ஒரு தாழ்த்தப்பட்டவன் என்றும் தாழ்த்தப்பட்டவரின் பிரதிநிதி என்றும் கூறிக்கொண்டு, அரசாங்கம் நமக்காக செய்வதாகக் காட்டும் பல காரியங்களின் புள்ளி விவரங்களையும், பல திட்டங்களையும் பொது மக்களிடையே பேசி அவற்றை அம்மக்கள் புரிந்துகொள்ள அரும்பாடுபடுகிறார்.
“இதே சூழ்ச்சிக் கொள்கையை மக்கள் முன் வைத்துத்தான் கபட நாடகமாடி நீதிக்கட்சிக்காரர்கள் ஆட்சிக்கு வந்தனர். நமக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நம் நலனுக்காகையாலும் முறை, துறை என்று காணப்படும் வரவு செலவு புள்ளி விவரங்கள் யாவும் உண்மையானவை அல்ல;பொய்யே. மேலும் உண்மையாகக் கூறப்போனால் “ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்” ஆட்சியாளரிடம் கேட்ட செலவுப் புள்ளிகளைத்தான் நமக்காக செலவிடப்படுவதாய் வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையில் அந்த புள்ளிவிவரப்படி இவர்கள் நமக்குச் செலவிடவில்லை. தனது கட்சி தாழ்த்தப்பட்டோருக்குச் செலவிடும் புள்ளிவிவர நகலில், அதன் பெருந்தன்மைகளைக் கூறும் அறிக்கையில் இவையாவும் உன்மையென உறுதிப்படுத்த நம் இனத்தைச் சேர்ந்த ஒருவரை கையொப்பமிடச் செய்வது ஒரு பெருத்த சூழ்ச்சியேயாகும்.
தங்களுடைய செயல்களைத் திரித்துக் கூறும் நீதிக்கட்சியின் வர்க்க புத்திக்கும், அநீதிக்கும், உண்மைகளை மறைத்துப் போக செயலுக்காக ஆதிதிராவிடரை துணைக்கு அழைக்கும் போக்கிற்கும் “அரசியல் சூழ்ச்சி” என்றுதான் பெயர்.
.......................
தென்னிந்தியாவில் அரசியல் சீர்திருத்தம் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்ப நிலையிலேயே சீர்திருத்தத்தின் பேரால் பிராமணர் அல்லாத சாதி இந்துக்கள் பல நகராண்மைக் கழக மன்றங்களிலும் இடம்பெற்று, தங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் பாதுக்காப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு செய்யும் செயல்களைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. அவர்களின் நயவஞ்சகச் செயல்களால் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் தடைபடுகிறது. உழைப்பாளர் மிகுந்துள்ள தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் அவ்வுழைப்பாளரின் முதுகெலும்பு ஆவர். இந்த முதுகெலும்பு சாதி இந்துக்களால் ஒடிக்கப்படுகிறது; அதன் நம்பிக்கைகளும், ஞானமும் தேய்வுபடுகின்றன. இதனால்தான் இந்தியாவிலுள்ள தலைவர்கள், எளியோர்- தாழ்த்தப்பட்டோர் உரிமைகளையும் நலன்களையும் காப்பார்கள் என்று நம்பவே கூடாது என்று அயல்நாட்டார் மிக உண்மையாக அன்றே கூறினர்.
ஆங்கிலேயன் ஓர் அந்நியன். இந்தியாவை இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆண்டாலும் இங்குள்ள இந்தியரின் உள்ளக் கிடக்கையை உள்ளபடி அறியமாட்டான். ஆனால், நாம் ஒருவரை ஒருவர் ஆழமாக அறிவோம். அவன் ஐரோப்பாவைச் சேர்ந்தவன். ஆனால் இந்தியாவையும் ஆளுபவன். தன் நாட்டில் ''பொதுமக்கள் கருத்து” என்பதனைத்தான் உளமாற அறிவான். அதுவே அந்நாட்டு மக்களின் கருத்து என்பதை அவனால் நன்கு உணர முடிகிறது. தன்னுடைய கருத்துக்கும், கோட்பாடுக்கும், கடமைக்கும் - தன் நாட்டிற்கும் - தன் மக்களுக்கும் உள்ள தொடர்பினை ஆழமாக ஆனாலும் உண்மையாக அறிவான். அதே சொல்லான ''பொது மக்கள் கருத்து” என்பதை ஒருசில இந்திய அரசியில்வாதிகளின் கூச்சல்களிலிருந்து அவன் அறியும்போது, இக்கூச்சலின் பிரதிபலிப்பே இந்தியாவில் உள்ள ''பொதுமக்கள் கருத்து” என்று கொள்வானேயானால் அது பிழையாகும்.
ஆனால் அவன் இந்த அரசியல்வாதிகளின் வேடத்தை நம்பி விடுகிறான். சாணிக் குப்பையைக் கிளறிக் கொழுத்த அந்த கோழிகள் கையில் முக்கியமான அரசியல் துறைகளை ஒப்படைக்கிறான். இந்த அரசியல்வாதிகள் தங்களை ''பொது மனிதர்கள்” என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள். ஆம். இவர்கள் ''பொது மகளிர்கள்” போலவே வாழ்கிறார்கள். இவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த ஐக்கியமுமில்லை.
.............................................
''இந்தியர் மயம்” ஆக்குதல் என்பது அரசாங்கத்தையே இந்தியப் பண்பாடாக்குதல் என்பதோ அல்லது பிரிட்டானியர் பண்பாட்டை வடிகட்டி இந்தியப் பண்பாட்டிற்கு ஒத்துவரச் செய்தல் என்பதோ முடியாத காரியம். பிரிட்டானியர் அமைத்துள்ள அரசியல் அமைப்பு முறை நிலைத்திருக்க வேண்டும். நீதி, உரிமை, முன்னேற்றம், போன்ற சொற்களின் உயர்ந்த கோட்பாடுகளை இன்று இந்த நாட்டில் நடமாடவிட்டிருப்பது பிரிட்டானியர்களே ஆவர். இந்தியர் சாதி வெறியர்கள். இவர்களின் பொறுப்பில் பெரிய பதவிகள் வரும்போது சாதீய கண்ணோட்டத்தில்தான் நடப்பார்கள். இதனால் திறமையற்ற நிலைமை ஏற்பட்டு நிர்வாகம் கெடும். ஆங்கிலேயன் ஓர் அந்நியன். ஆனால் சாதிவெறி அவனிடமில்லை. எனவே நிர்வாகத்தில் எந்தக் காரியத்திலும் திறமையாகவும், பாரபட்சமின்றியும் அவன் நடந்து கொள்கிறான்.
..... நிர்வாகத்தை திடீரென இந்திய மயமாக்க முனைவது கூடாது. இதை நிதானமாக தாழ்த்தப்பட்டோர் நலம் கெடாதபடி செய்யவேண்டும். இந்த நாட்டில் சாதி இருக்கின்றவரை ஆங்கிலேய ஆட்சிமுறை தேவைதான் அல்லது அவர்களின் சேவையாவது தேவைதான். 1924ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வெகங்டன் பிரபுவின் பிரிவு உபசாரத்தின் போது தாழ்த்தப்பட்டோர் தந்த உபசார இதழிகருந்து சில வரிகளைக் கூற விரும்புகிறேன். ''தகைமைச் சான்றோரே, தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறோம். தாங்கள் இங்கிலாந்து சென்றவுடன் ''தாழ்த்தப்பட்ட இந்தியா” தங்களின் நலன்களைக் காக்கும் அறங்காவலர்களாக பிரிட்டானியரைக் கருதுகின்றனர் என்று கூறுங்கள்.
உயர்குலத்தானே ஆளத் தகுதியுடையவன் என்ற சாதிய அடிப்படை இந்நாட்டிலிருக்கின்றவரை, உழைப்பாளர்களை ஒடுக்கி வைத்திருக்கின்றவரை, பழக்குடிகளின் நலம் பாதிக்காதபடி கண்காணிக்கவும், கட்டுதிட்டம் செய்யவும், ஒத்துபோகக் கூடிய ஆட்சி இங்குத் தேவை...............
''இந்தியர் மயம்” ஆக்கப்படவேண்டுமென்ற கூச்சல் திடீரென பலம்பெற்று வெற்றியும் கண்டுவிட்டால் தாழ்த்தப்பட்ட நாங்களெல்லாம் நாதியற்று எங்கள் பூண்டே இல்லாது மறைய நேரிடும்.”
தாழ்த்தப்பட்டோருக்கு மிகமிகத் தேவையான பொருள் கல்வியேயாகும். அக்கல்வியும் உரிமை எனும் கல்வியாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட கல்வியால்தான் ஆதிதிராவிடர் மனிதர்களாக தலைநிமிர்ந்து நடக்க முடியும். கல்வி ஒன்றுதான் இவர்களைப் பற்றியுள்ள எல்லா பிணிகளையும் போக்கவல்ல சகலரோக நிவாரணியாகும். ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும்கூட கட்டாயக் கல்வி தேவையா? அதுவும் ஒரு குறிபிட்ட இனத்து ஆண், பெண்களுக்குத் தேவையா என்று விவாதிப்பது இன்றைய நிலைக்கு ஒவ்வாத வாதமாகும். கல்வி ஒன்றுதான் தாழ்த்தப்பட்டோரை ஒளிவீசும்படியும், மேலும் தூய்மையடையும் படியும், மகிழ்ச்சி கொள்ளும்படியும் செய்யும். அன்றுதான் அவர்களின் உழைப்பு அவர்களுக்கே பயன்பட்டு இனிக்கும். கல்வி நலனை அடையத் தாழ்த்தப்பட்டோர் பேராவல் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுடைய தாங்க முடியாத ஏழ்மை அதற்குத் தடையாக நிற்கிறது. தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகளுக்குக் கட்டாயக் கல்வித் திட்டம் தேவை. அவர்களுக்கு மதிய உணவும் வயிறாற வழங்க வேண்டும், அதோடு அப்பிள்ளைகளின், சிறு கூலியால் வயிறு வளர்த்த பெற்றோருக்கு ஒருவித நிதி (போனஸ்) உதவியும் அரசாங்கம் செய்யவேண்டும்.
தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகள் கட்டாயம் எப்பாடு பட்டாகிலும் கல்வியின் பயனை அடையவேண்டும். அவர்களுக்கு எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுத்து திசை காட்டும் கருவியற்ற கப்பல்போன்ற வாழ்க்கைக் கடலிலே தத்தளிக்க விட்டு விடக்கூடாது. அன்றாட உணவை அவர்கள் தேடிக்கொள்ளும் வகையில் அவர்களுக்குக் கல்வியறிவும் கைத்தொழிலும் கற்பிக்க வேண்டும். கல்விக் கூடங்களில் கல்வியோடு ஒரு கைத்தொழில் பயிற்சித் திட்டத்தையும் கட்டாயமாக இணைக்க வேண்டும். இத்தகைய திட்டம் இன்று அரசாங்கத்தால் ஒருசில இடங்களில் ஏற்படுத்தப் பட்டிருந்தாலும் இது தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகைக்கு மிகமிக போதாததே.
அரசாங்கம் இதை அக்கரையோடு ஏற்படுத்தவுமில்லை. ஏதோ ஒருசில கருணையுள்ளம் கொண்ட வெள்ளையர் அரசியல் சீர்திருத்தம் இங்கு தொடங்குவதற்கு முன்பே தாங்களே முன்வந்து ஆரம்பித்தார்கள். 1923ஆம் ஆண்டில் உள்துறை சட்டமன்றத்தில் ஆதி திராவிடப் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளங்களை அதிகரிக்க வேண்டு மென்று நான் ஓர் தீர்மானத்தைக் கொண்டுவந்தேன். அன்று கல்வி அமைச்சராக இருந்தவர் ஒருசாதி இந்து. அவர் “ஏழ்மை என்பது ஆதிதிராவிடருக்கு மட்டும்தான் உள்ள தனி சொத்தல்ல, மற்ற வகுப்பாரிலும் ஏழைகள் இருக்கின்றனர்” என்று கூறி என் தீர்மானத்தை எதிர்த்தார். 1923 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கல்வி அமைச்சரின் போக்கு பற்றி மனம்விட்டு இப்படிப் பேசினேன்:
7”ஆதிதிராவிடக் குழந்தைகளின் உபகாரச் சம்பளம் சம்பந்தமாக நேற்றைய தினம் உபகாரச் சம்பளத்தையும், எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்று கோரி நான் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய கல்வி அமைச்சர் அவர்களின் போக்கைக் கண்டிக்கிறேன். ஏழ்மை என்பது தாழ்த்தப்பட்டோரின் ஏகபோக சொத்தல்ல, பிராமண பிள்ளைகளில்கூட ஏழைகளிருக்கின்றனர் என்று அவர் கூறினார். இந்த உண்மைகளை எங்கே எப்பொழுது அவர் கண்டுபிடித்தார் என்று நான் வியப்படைகிறேன்.
மற்ற வகுப்பாரில் ஏழ்மை இருந்தாலும் தீண்டாமை இல்லை. உதாரணமாக பிராமணரிடத்தில் முதலியார்களும், முதலியார்களிடத்தில் பிராமணர்களும் பழகலாம், பணியாற்றலாம். இவ்வாறே எல்லா வகுப்பினரும் கலந்து கொள்ளலாம்; இது கல்வி பொருளாதாரங்களில் சரளமான புழக்கத்தை ஏற்படுத்தி முன்னேற வழிகோலும். ஆனால் தாழ்த்தப்பட்டோர் தீண்டாமையின் காரணமாக எவரிடமும் சென்று பணியாற்ற முடியாததோடு கல்வி, பொருளாதாரத் துறைகளில் பிறரால் ஒடுக்கப்பட்டு பின்தங்கி விடுகின்றனர். எனவே, ஆதிதிராவிடருக்கு தனித்தொரு சலுகைகள் எல்லாத் துறைகளிலும் வழங்க நியாயமிருக்கிறது.
................................
அவர் இதை அமைச்சராவதற்கு முன்பே கண்டாரா? அல்லது அமைச்சரான பிறகு கண்டுபிடித்தாரா? பிராமணப் பிள்ளைகள் ஏழைகளென்றால் ஏன் பிராமணர் அல்லாதார் தலைவராகிய இவர் பிராமண மாணவர்களுக்காகப் பாடுபடக் கூடாது?
தாழ்த்தப்பட்ட மாணவர்களோடு மற்ற மாணவர்களும் ஏழ்மையில் உழலுகிறார்கள் என்றால் இவரும் இவருடைய கட்சியாரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஏன் சலுகைகள் வழங்குகின்றனர்? தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஏழ்மைக்கும் மற்ற சாதி மாணவர்களின் ஏழ்மைக்கும் இவர் வேறுபாடு இல்லை என்று எண்ணுகிறாரா? தாழ்த்தப்பட்டோரின் ஏழ்மைக்குக் காரணம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மேட்டுக் குடியினர் கையாண்ட ஒடுக்குமுறைச் சதிதான் என்பதனை அவர் உணர்கிறாரா? மற்றவர்கள் பல தனிப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும்போது நமக்கு இந்த சலுகையாவது தேவை என்று கேட்பது நமது நேர்மையான கோரிக்கையாக ஆகாதா? அவர் இந்த அடிப்படையான அரசியல் பாடத்தை மறந்து விட்டிருந்தால் தற்போது அரசாங்கம் வெளியிட்டுள்ள ஜி. ஓ. 239 எண் உத்தரவை அவருக்குப் படித்துக் காட்டுகிறேன்.
அந்த உத்தரவு கூறுவதாவது:
“இந்தக் குழு தனிப்பட்ட சலுகைகள் சில வகுப்பாருக்கு இன்றியமையாதவை என்று நினைக்கிறது; இதன்படி ஆதிதிராவிட வகுப்பாரைப் பொறுத்தமட்டில் தேவையான உணவு வசதியும் சம்பள வசதியும் செய்து தரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்நிலைக்கு அவர்கள் ஏழைகளாக இருக்கக் காரணம் இந்நாட்டின் விசித்திரமான சாதிப் பழக்க வழக்கங்களும் செயல்களுமேயாகும். அதின்றி இந்த வகுப்பார் பரம்பரை பரம்பரையாகப் பெற்றுவரும் பிறப்பு குறைபாடன்று. இந்த நோக்கத்தோடு பார்க்கும் போது தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி வழங்குதல் என்பது இந்த தேசத்தின் கடமையாகும். எனவே, பொதுப் பணத்தை இவர்களின் முன்னேற்றத்திற்கு எல்லா வகைகளிலும் செலவிடுதல் சாலப் பொருந்தும்”.
''நேற்று கல்வி அமைச்சர் பேசிய பேச்சு என்றுமே நான் கேட்ட றியாத கருணைமிக்க பேச்சாகும். இது இந்த அவையின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் உதடுகளிலிருந்து வெடித்தது. ''பின்தங்கிய வகுப்பார்” என்று அழைக்கப்படுவோரின் ஏழ்மையை எனக்கு மாண்மிகு அமைச்சர் சுட்டிக்காட்டினார். எப்பொழுதெல்லாம் நான் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பற்றிக் கேட்கிறேனோ அப்பொதெல்லாம் பின்தங்கிய வகுப்பாரை முன் வைத்து எனது கோரிக்கையை நிராகரித்து விடுகிறார்கள். பின்தங்கிய வதுப்பார் என்போர் யாவர்? அவர்களை தாழ்த்தப்பட்டோரினின்று எவ்வாறு வேறுபடுத்தி அறிவது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவர்களெல்லாம் மேல்சாதி இந்துக்கள் என்றே எண்ணுகிறேன். இந்த பின்தங்கிய சாதி இந்து வகுப்பிலிருந்து வந்த குறைந்தது இரண்டு அமைச்சர்கள் இச்சபையில் இருக்கிறார்கள்”.
சாதி இந்து அமைச்சர்கள் இவ்வாறு நம்மை நடத்துவார்கள் என்று ''சீர்திருத்தம்” இங்கு கொண்டுவருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் எதிர்பார்த்ததுதான். இம்மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அமைப்பாகத் திகழ்ந்த சென்னை ''ஆதிதிராவிட மகாஜன சபா”வை 1918இல் இந்திய அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரும் முன் சில ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது ஆதிதிராவிட மகாஜனசபை கீழ்க்கண்டவாறு தன் எண்ணங்களை வலியுறுத்திற்று:
''இந்தச் சீர்திருத்த சட்டத்தைப் பற்றி எங்களுடைய உள்ளக்கிடக்கையைப் பொதுப்படையாக உணர்த்த விரும்புகிறேன். இன்றைய மக்களின் கருத்தோட்டம் - சமூகநீதியின் மேம்பாடு இந்நாளில் நடந்து கொண்டிருக்கும் காலக்கட்டம்-தாறுமாறாக வேறுபட்டிருக்கும் எண்ணற்ற சமூக வகுப்புக்கிடையே இன்று மேலோங்கி நிற்கும் மனப்போக்கு-ஆகிய இவைகளைக் கருத்திற் கொண்டு அணுகும்போது இந்நாட்டில் இரட்டை ஆட்சி8 முறை அமைவதை நாங்கள் கட்டோடு வெறுக்கின்றோம். எந்த ஒரு நிர்வாகத்தையும் இப்பொழுது மக்களாட்சிக் கட்டுக்குள் மாற்றப்படுவதை ஆதிதிராவிட மக்களாகிய நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். குறிப்பாகவும், சிறப்பாகவும் கல்வித் துறை மக்கள் பிரதிநிதிகளாகிய அமைச்சர்களின் ஆளுமைக்கு உட்படுத்துவதை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த அமைச்சர்கள் தங்களுடைய சமூகத்தாரின் நலன்களைப் பேணிக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர். அவர்கள் எங்களை என்றென்றும் அவர்கள் பின் கை கட்டிச் செல்லும் அடிமைக் கூட்டமாகவே தயார்படுத்துவர்.”
பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் ஆதிதிராவிட மாணவ மணிகளுக்குப் போதுமான கல்வி மானியமும், தாராளக் கட்டணக் குறைப்பும் வழங்கப்பட வேண்டும். இம்மாநிலமெங்கும் ஆங்காங்கே இப்பிள்ளைகளுக்காகப் பற்பல விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.
ஒடுக்கப் பெற்ற ஆதிதிராவிட பிள்ளைகளைக் கல்விக் கூடங்களுக்கு அனுப்பி விட்டால் எதிர்காலத்தில் மேட்டுக்குடியினர் இடும் குற்றேவலுக்கு, கூகக் கூட்டம் கிடைக்காமல் போய்விடும் என்றும், நசுக்கப்பட்ட இந்த நந்த குலப்பிள்ளைகள் நாளை நாலும் தெரிந்த பெரிய மனிதர்களாகிவிடுவர் என்றும் சிலர் அஞ்சுகின்றனர். நான் கேட்கிறேன்; ஏன் அவர்கள் அங்ஙனம் மாறக்கூடாது? அவர்களும் இம்மண்ணின் மைந்தர்கள் இல்லையா? அவர்களும் சாதி இந்துக்கள்போல் சரிநிகர் உரிமை பெற்ற இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா?
வீதியிலே கூவித்திரியும் விறகு வெட்டியாய்-குடத்திலே நீர் சுமந்து செல்லும் கூலிகளாய் அவர்கள் ஆண்டாண்டு நிரந்தரமாக இருக்க வேண்டுமா? இந்த சாதி இந்துக்கள் என்றென்றும் அவர்களை அதட்டிக் கோலோச்சும் கோமான்களாக இருக்க வேண்டுமா? எப்படி ஒரு முழு சுழற்சிதான் ஒரு சுற்று ஆகுமோ அப்படியே ஒரே சீரான சமூக முன்னேற்றமே ஆரோக்கியமான மேம்பாடாகும். எனவே இப்பிள்ளைகளின் கல்வி நாட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு நிர்வாகத் துறையில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். சாதிக் கொடுமையின் கோரப் பிடியிலிருந்து இன்னும் விடுபடாத சமுதாயமும் - சமூகப் பண்பாட்டை மதக் கோட்பாடுகளாகத் தவறாகக் குழப்பிக் கொள்ளும் மனப்போக்கும் மலிந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவே அரசுத் துறைகளில் பங்கேற்பது இந்நாட்டின் நலனுக்குப் பெருங்கேடாகும். இந்து-முஸ்லீம் ஒற்றுமை பற்றிப் பேசுவது சாலச் சிறந்ததுதான்; இந்துக்களோடு தோளோடு தோள் சேரவில்லை என்று மகமதியரைப் பழிப்பது மிகமிக எளிது. ஊருக்கு உபதேசம் அப்புறம் இருக்கட்டும்! முதலில் உம் உடம்பைப் பாரும்! இந்துக்களிடையே ஒற்றுமை இல்லை எனின் இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் காணுவது எங்ஙனம்?
நிர்வாகத்துறையில் நீதித் துலாக்கோல் சமனாக செயல்பட வேண்டுமாயின் சமுதாயத்தின் எல்லாப் பிரிவினருக்கும் அங்கு பிரதிநிதித்துவம் வேண்டும். வாயிருந்தும் ஊமையாய் உழலும் ஆதிதிராவிட மக்களுக்கு இது மிகவும் அவசர அவசியமாகும். மேட்டுக் குடியினராக இருக்கும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தங்கள் குரல்களுக்கு சமூக அரங்குகளிலுள்ள செல்வாக்கையும் - நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றலையும்-ஆளவந்தாரின் மோகனப் புன்னகையையும், வசீகரிக்கும் தங்கள் திறத்தையும் மற்றோர் வகுப்பாருக்கு எதிராகத் திருப்பிவிட இயலும் என்பது நாடறிந்த உண்மையாகும்.
அரசுத் துறைகளை அலங்கரிப்போருக்கு திங்கள் தோறும் ஊதியம் மட்டும் போய்ச் சேரவில்லை. அரசு அதிகாரமும் - நிர்வாக கீர்த்தியும் - அரசியல் செல்வாக்கும் கூடவே கைமாறுகின்றன.
அரசுத் துறைகளில் ஆதிதிராவிட மக்கள் பங்கேற்பின், ஒடுக்கப்பட்ட சமூகத்தாரின் கோரிக்கைகள் உடனுக்குடன் கனிவுடன் கவனிக்கப்படும். கிள்ளுக்கீரையாக ஆதிதிராவிடர்களை மற்றவர் கருதும் மனப்பான்மையும் அச்சத்தால் மாறும்.
அரசுத்துறையில் ஆதிதிராவிடர்கள், இடம் பெறுவதானது ஒடுக்கப்பட்டோர்பால் மற்றவர் கொண்டிருக்கும் தீண்டாமை போன்ற பேதைமைக் கருத்துகளை விரட்டியடிக்கும் மந்திரச் சக்தியாகச் செயல்படும். தீண்டாமை-தீட்டு என்ற பைசாசங்களைத் திருவாளர் காந்தியின் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் விரட்டியடிக்கப் போவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களை அரசுத்துறையில் கணிசமான அளவில் பங்கேற்கச் செய்வதின் மூலமும்-நிர்வாக இயந்திரத்தை இயக்கிச் செல்லும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு வழங்குவது மூலமுந்தான் சமூகத்தில் அவர்களது மதிப்பை உயர்த்த முடியும். அரசுத்துறைகளில் மேற் கீழ் இரு மட்டங்களிலும் சேர்ந்து 63 விழுக்காடு பிராமணர் அல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குறைந்தது 30 விழுக்காடு தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். அரசுத் துறைப் பணி பற்றிய அறிவிப்பில் கோரப்பட்டிருக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியே எங்களுக்கும் போதுமானதாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஆதிதிராவிட மக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்டிருக்கும் கொடூர அநீதிகளைக் கருத்திற்கொண்டு நோக்குவோமாயின் வரும் கால்நூற்றாண்டிற்கு அரசுத்துறைப் பதவிகள் அனைத்தும் அவர்களுக்கே ஒதுக்கினாலும் அது மிகக் குறைந்த பரிகாரமேயாகும்.
ஆண்டுகள் பலவாக கொடுமையால் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள் உள்ளம் அதனால் ஓரளவு நிம்மதியடையலாம். ஆதிதிராவிட மக்களும் மற்ற சமூகத்தாரும் பொறுப்பாட்சிக் குறிக்கோளை நோக்கி கைபிணைத்து நடை பயிலும் காலம் ஒன்று அதற்குப் பின்வரும். அன்றே மகிழ்ச்சி ஒளிவிடும் - மனைகளைப் பெற்ற ஒரே குடும்பமாக இந்தியா மாறும்.
எங்களுடைய கோரிக்கைகள், அத்தியாவசியங்கள், தேவைகள் பலவகைப்பட்டவை; எண்ணிறந்தவை. நூற்றுக்கணக்கான கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பண்ணிப்பண்ணி வலியுறுத்தப் பெற்றவை. இந்நாட்டிகருக்கும் மேல்சாதி சகோதரர்கள் நாங்களும் அவர்களைப்போன்ற சரிநிகர் மனிதர்கள்தான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விழைகிறோம்.
முடியரசர்களாயும், பேரரசர்களாயும், மதியூக அமைச்சர்களாயும் இருந்த ஆதிதிராவிடரான நாங்கள் அன்று தாய்நாட்டிற்குள் நுழைந்த ஆரியப் பகைவனை வாள் கொண்டு எதிர்த்தோம். ஆனால் தோல்வி கண்டோம். தோல்வி கண்டும் துவளாமல்-மற்றைய கோழையர் கூட்டம் போலல்லாது- மாற்றானின் நாகரிகத்தைத் தழுவ மறுத்து நின்ற எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் கொடுமை உலக வரலாறு காணாத ஒன்று; நிரந்தரமான ஒன்று.1 அந்தக் கொடுங்கோன்மையின் கோரம் அன்றிகருந்து இன்றைய சந்ததி வரையில் நிரந்தரமாயும் சற்றும் குறையாமலும் தொடர்கிறது. ரோமாபுரியை ஆக்கிரமித்த காட்டுமிராண்டிகள் கட்டவிழ்த்துவிட்ட வெறியாட்டமும்- நெதர்லாந்தில் மாறுபட்ட மதக் கொள்கையாளர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும்- நீரோ மன்னனின் அள்ளித் தெளித்த அட்டூழியங்களும்-டேமர்னினும் செங்கிஸ்கானும் இழைத்த கொடுங்கோன்மையும் இங்கு சாதியின் பேரால் எங்களுக்கிழைத்த அநீதிகளோடு ஒப்புவமை காணுங்கால் அவைகள் யாவும் குறுகி- சிறுத்து- வெளுத்துப் போய்விடும்.
வின்டர்டன் கோமகன் குறிப்பிடுகையில், “தாழ்த்தப்பட்ட வகுப்பு” என்ற பெயரால் ஒரு சமூகம் நீடித்திருக்கும் வரையில் இந்தியன் எவனும் மற்றுமோர் சீர்திருத்தத் தவணைக்கு சுத்தமாக அருகதையற்றவன் என்று தெற்றென விளக்கி இருக்கிறார்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று உள்ளவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் எங்கள் சமூக நலனில் அக்கறை காட்டி, எங்கள் முன்னேற்றத்திற்கு ஆவன செய்வர் என்று நம்புகிறோம். அவ்வாறு அவர்கள் செயல்பட்டு, ஆட்சிப் பொறுப்பினை மற்ற சாதி இந்துக்களிடம் வழங்கி செல்லுங்கால் இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமைத் தளையில் ஆட்பட்டு விடுபட்ட ஆயிரக்கணக்கான ஆதிதிராவிட மக்களின் ஒட்டுமொத்த ஆசிகளையும் சுமந்து செல்லக் கூடும்.
“எப்பொழுதும் எனக்குத் தோல்வி இல்லை; ஏனெனில் என்றும் நான் முயற்சியை இழக்கப் போவதில்லை.”
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஒடுக்கப்பட்ட இந்துக்கள்
- விவரங்கள்
- எம்.சி.ராஜா
- பிரிவு: கவிதாசரண் - டிசம்பர் 2006