இந்தியாவில் நிலப்பிரபுத்துவ ஆட்சிக் காலங்களிலும், ஆங்கிலேய ஆட்சிக் காலங்களிலும் மிகப்பெரிய அளவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் இறந்து போய் உள்ளனர். குறிப்பாக கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட வங்காளிகளை பலி வாங்கியது. இந்திய விடுதலைக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியில் 1951, 1966, 1970, 1971 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் இந்திய மக்களை பரவலாக பாதித்தது. இந்நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமல்ல, தற்போதைய உலகமயச் சூழலில் பஞ்சமும் உலகமயமாகி வருகிறது.
ஏகாதிபத்தியவாதிகளின் மிதமிஞ்சிய நுகர்வுப் போக்கும் அபரிமிதமான இயந்திரத் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி முறைகளினால் உலக அளவில் பருவ நிலைகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு மிக அதிகபட்சமான கரியமில வாயுவை வெளியேற்றுவதன் வாயிலாக ஒரு பக்கம் அதிக வெள்ளமும், மறு பக்கம் வறட்சியும் ஏற்படுகின்றன. உலக வெப்பம் அதிகரிக்கும் என்பதால் உலகின் மிக உயர்ந்த பனி மலைகளான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, யூரல், ஆண்டிஸ் மலைகளின் பனி மிக அதிக அளவில் உருகி கங்கை, பிரம்மபுத்திரா, சிந்துநதி, யூரல்நதி அமோன் நதிகளில் முதலில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு படிப்படியாக இடைவெளியில் வறண்டு போகும் அபாயம் உள்ளது.
உலகின் மிக முக்கிய உணவு உற்பத்தி தளங்களாக உள்ள வட அமெரிக்காவின் வான்கூலூர் நதி, தென் அமெரிக்காவின் அமேசான் நதி, ஆப்பிரிக்காவின் நைல் நதி, ஐரோப்பாவின் ரைன் நதி, ரஷ்யாவின் யூரல் ஆறு, தோன் நதி, மாஸ்கோ நதி பாரசீகத்தின் யூப்ரடிஸ், டைகரிஸ் நதிகள் சீனாவின் மஞ்சள் நதி, மியான்மரின் ரங்கூன் நதி, இந்தியாவின் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, நர்மதை, மகாநதி, கோதாவரி, காவிரி இத்தாலியின் ஆறுகள் உகாண்டா ஆறு, பிரிட்டனின் தேம்ஸ் நதி படுகைகளில் நடைபெற்று வரும் மிகப்பெரிய அளவிலான உலக மக்களுக்கு உணவு அளித்து வரும் விவசாய சமவெளி பிரதேசங்களில் உலக சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்புகளால் ஆற்றின் நீர் வளம் படிப்படியாக குறைந்து இறுதியில் வறண்டு விடும் அபாயம் உள்ளதால், விவசாயம் நசிந்து, உணவு உற்பத்தி சுத்தமாக மறைந்து போகும் அபாயம் உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் தென்வட துருவங்களில் உள்ள பெருமளவு பனிப்பாறைகள் அதிகரித்து வரும் உலக வெப்பத்தால் உருகுவதால் கடற்கரையோர சமவெளி பிரதேசங்கள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது. இவ்வகையான விளைவுகளால் நாற்பது ஆண்டு காலத்திற்குள் நெல், கோதுமை, பார்லி உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்து உலக மக்கள் அனைவரும் ஒரு மாபெரும் உணவு நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்பது தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி வெகுவாக குறைந்து போனது மட்டும் உணவுப் பற்றாக்குறைக்கு காரணம் அல்ல. அமெரிக்கா போன்ற நாடுகள் தன் நாட்டின் எரிசக்தி தேவைகளுக்கு இனியும் மத்திய கிழக்கு நாடுகளை நம்பி இருக்க முடியாது என்ற காரணத்தால் தனது அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை நிறைவு செய்ய தனது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியத்தைக் கொண்டு மிக ரகசியமாக பயோ டீசலை தயாரிக்க ஆரம்பித்து விட்டது. இதற்காக 2008ஆம் ஆண்டு தனது நாட்டின் நாற்பது சதம் தானியத்தை செலவழித்தது. 2009 ஆம் ஆண்டு அறுபது சதம் உணவு தானியத்தை செலவழித்தது. இத்தானியங்களைக் கொண்டு ஓட்டு மொத்த ஆப்பிரிக்க மக்கள் அனைவருக்கும் உணவை உத்தரவாதப்படுத்த முடியும். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தன்நலம் அதனை இவ்வாறு யோசிக்கவோ, செயல்படவோ விடாது என்பதை கடந்த காலம் நமக்கு காட்டியுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் பயோ டீசலை தயாரிக்க முற்பட்டுள்ளன. இதனால் மனித இனத்தின் உயிரியல் தேவையான உணவுப் பொருட்கள் வணிகமயமாகும் ஆபத்து அதாவது, பென்சில், பேனா, கார் போன்ற வியாபாரத்தில் லாபம் பார்க்கக் கூடிய ஒரு பொருளாக மாறிவிடும் அபாயம் தற்போது ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி வாங்கி உண்ண முடியாத நிலைமைக்கு அவர்களை கொண்டு சேர்த்துவிடும். ஏற்கனவே உலக அளவில் 300 கோடி மக்கள் ஊட்டச்சத்து உணவு பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வரும் போது, ஏகாதிபத்தியவாதிகளின் பயோ, டீசல் தயாரிப்பு மேன்மேலும் உலக மக்களை பஞ்சத்திலும் பட்டினியிலும் தள்ளிவிடும்.
தற்போது மிகப்பெரும் பூகம்பத்தால் இரண்டு லட்சம் பேர்களை சாவு கொடுத்து சுமார் இருபது லட்சம் மக்களை வீடற்றவர்களாக ஆக்கியதோடு, உணவுக்கான அரசு வழங்கும் உணவு நிவாரண முகாம்களில் ஹைத்தி மக்களுக்கு போதுமான உணவு கிடைக்காததால் அம்மக்கள் களிமண்ணை உண்டு வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டனர் என்பது வேதனையானது. (இப்பூகம்பத்தை அமெரிக்கா தனது அதிநவீன ரகசியமான அணு குண்டைவிட சக்தி வாய்ந்த வெடி குண்டான பாதர் ஆப் பாம், மூலம் ஏற்படுத்தி உள்ளது என ரஷிய கப்பற்படை தளபதி குற்றம் சாட்டி உள்ளார் என்பது தனியாக எழுதப்பட வேண்டிய விஷயம்) களிமண்ணை தின்பது அம்மக்களுக்கு உகந்ததல்ல என தெரிந்து இருந்தாலும் வேறு வழி இன்மையால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஹைத்தி மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதில் அந்த அவல நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு லாபம் அடையமுடியும் என ஏகாதிபத்திய நிறுவனங்கள் கணக்கிட்டுக் கொண்டிருப்பதன் மூலம் அவைகள் மக்களின் நலனில் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
உணவு தானியங்களான அரிசி, கோதுமையை உற்பத்தி செய்து வருகின்ற நாடுகளான இந்தியா, வங்காளம், மியான்மர், வியத்நாம், சீனா, இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, உக்ரைன், உகாண்டா ஆகியவற்றில் கடந்த ஆண்டு உணவு உற்பத்தி வெகுவாக குறைந்து போனது தற்செயலான விஷயம் அல்ல. வெள்ளம், வறட்சி பனிப்பொழிவு ஆகியவை காரணமென்றாலும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய சரியான அளவில் திட்டமிடாததாலும், லாபம் தரக்கூடிய பணப்பயிர்களுக்கு மாறும் படி பன்னாட்டு விதை கம்பனிகள் நிர்பந்தித்து வருவதுமே இதற்கு பிரதானக் காரணம் எனலாம். சீனாவின் வடக்கு பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய பனிப்புயலால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்பட்டு அந்நாடு பெரும் அளவில் தன்னுடைய உணவு தேவைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அந்நாடு ஆளாகி உள்ளது.
இந்தியாவில் 2008_2009 இல் 23 கோடி டன் உணவு தானிய உற்பத்தி என்பதிலிருந்து 2009_2010 இல் 18 கோடி டன்னாக குறைந்து போயிருக்கிறது என அரசு சாரா நிறுவனங்களின் புள்ளிவிவரம் நமக்கு தெரிவிக்கிறது. மேலும், இவ்வாறு உணவு உற்பத்தி குறைந்து கொண்டே சென்று 2015 இல் 15 கோடி டன்னாக குறையும் போது நாம் உணவு தேவைக்காக அயல் நாட்டை எதிர் பார்க்க வேண்டிய நிலைமை உருவாகும் என எச்சரிக்கின்றன.
300 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யக் கூடிய சக்தி இந்தியாவிற்கு இருக்கின்ற நிலைமையில் ஆளும் இந்திய அரசின் விவசாயக் கொள்கைகளால் இந்தியாவிற்கு மற்றைய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இன்று வரை விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை தராமல் இருப்பதும், விவசாயம் செய்வது கட்டுப்படி ஆகாத நிலைமையில் விவசாயிகள் உதிரி தொழிலாளிகளாக நகர்புறங்களுக்கு இடம் பெயர்வதும் இன்னொரு பக்கம் விளை நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பொருள் உற்பத்தி குறைந்து கொண்டே வருவதற்கு பிரதானக் காரணமாக உள்ளன. கூடுதலாக 18 கோடி ஹெக்டேர் நிலங்களுக்கு ஆற்றுப் பாசன வசதி செய்யக் கூடிய வாய்ப்பை நாம் பெற்று இருந்தாலும் அரசு அதனை செயல்படுத்துவதில் தொடர்ந்து காலம் தாழ்த்தியே வருவதால் உணவு உற்பத்தி அதிகரிப்பது தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலைகளில் தான் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலே இந்திய மக்கள் அனைவருக்கும் உணவு உத்தரவாத சட்டத்தை வெகு விரைவில் காங்கிரஸ் அரசு கொண்டு வரும் என அறிவித்தார். ஏப்ரல் முதல் வாரத்தில் இன்னும் மூன்று வார காலத்திற்கு பின் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார். உலக அளவில் வியட்நாம், சீனா, வடகொரியா, பிரேசில், ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் மட்டுமே தன் மக்களுக்கு உணவு உத்தரவாதத்தை இன்று வரை அளித்து வருகின்றன. இந்நாடுகளில் உணவு பொருட்கள் அனைத்தும் வெகு மலிவான விலையில் மக்கள் வாங்கக் கூடிய நிலைமையை உருவாக்கியதோடு உணவுப் பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க அந்நாடுகள் தயங்குவதில்லை. ஆனால், இந்தியாவின் நிலைமை தலைகீழாக உள்ளது. 50,000 டன் உணவு தானியக் கையிருப்பு ஒவ்வொரு தனிமனிதனும் வைத்துக் கொள்ளலாம் என சட்டதிருத்தம் கொண்டு வந்துவிட்ட பிறகு அனைவருக்கும் உணவு உத்தரவார சட்டம் எவ்வாறு அமலாக்க முடியும்?.
பொது வினியோக திட்டத்தின் போதாமையும் அதில் நடக்கின்ற ஊழல்களும் ரிலையன்ஸ், டாடா போன்ற பதுக்கல் பேர் வழிகளுக்கு சட்டப்பூர்வ ஊகபேர வாணிபத்தின் மூலம் உணவு தானியத்தின் விலை பன்மடங்கு அதிகரித்து ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கி உண்ண முடியாத நிலைமை அதிகரித்து வருகிறது இந்தியாவில் 70 சதமான மக்கள் நாளன்றுக்கு சுமார் இருபது ரூபாய் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருவதாக இந்திய மனிதவள மேம்பாடு துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலைமையில் அவர்கள் ஒரு நாளைக்கு தேவையான 2400 கலோரி வெப்பம் தரக்கூடிய உணவு பொருட்களை தற்போது உணவு பொருட்களின் விலைவாசியில் வாங்கி உண்ண முடியுமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நிதி அமைச்சகத்திடம் பதில் இல்லை ஆனால் நிதி அமைச்சர் ப்ரிக் நாடுகள் உதவியோடும் இந்நாடுகளில் உள்ள நடை முறைகளை பின்பற்றியும் இந்தியாவில் அனைவருக்கும் உணவு உத்தரவாதத்தைக் கொண்டு வருவோம் என கூறுகிறார். ஆனால் உண்மை நிலைமை வேறாக இருக்கிறது. இந்தியாவில் 50 கோடிப்பேர் மாதம் ஒன்றுக்கு 447 ரூபாய்க்கு வாழ்க்கையை ஒட்ட வேண்டி இருப்பதை டெண்டுல்கர் அறிக்கை கூறுகிறது. தற்போது உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு இந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
1991க்கும் 2001க்கும் இடையில் 80 லட்சம் விவசாயிகள் விவசாயம் செய்வதையே நிறுத்தி விட்டனர் கடந்த ஐந்து ஆண்டுகளில் கோதுமை பயிரிடும் நிலத்தின் அளவு 2.70 கோடி லட்சம் ஹெக்டேர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் ஹெக்டேர் வீதம் என குறைந்து கொண்டே வருகிறது. நெல் சாகுபடி நிலத்தின் அளவு பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து வருகிறது 2050 வாக்கில் இந்திய மக்கள் தொகை 180 கோடிக்கு மேலாக இருக்கும் பட்சத்தில் உணவு உற்பத்தியும் அரசின் செயல்பாடுகளும் நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பளவை 60 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 114 மில்லியன் ஹெக்டேராக அதிகரிக்கும் போது தான் அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை இந்திய அரசால் உறுதி செய்யமுடியும் அதிகபட்ச உணவு உற்பத்தி என்கிற சவால் மண்ணையும் மனிதர்களையும் மலடாகச் செய்யும் வேதியியல் பூச்சி கொல்லி மருந்துகள் ரசாயன உரங்கள் தொழில் நுட்ப காலத்தில் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் உலை வைக்கும் நவீன மரபணு மாற்று பயிர் வகைகள் இவ்வகையில் சுற்றுப்புற சூழல் கெடாமல் நீரின் வளத்தை மேம்படுத்தி மண்ணின் வளத்தை பாதுகாத்து விவசாய நிலத்தின் எல்லையை அதிகரித்து விவசாய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை நம்முன் உள்ளது. இத்தகைய சவால்களை தாண்டி வர இந்திய அரசிடம் எந்த விதமான திட்டமும் தொலைநோக்கும் இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.
சுகாதாரம், மருத்துவம் சுத்தமான குடிநீர், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவைகளை இணைக்கும் போது தான் முழுமையான உணவு உத்தரவாதம் என்பது உலகளாவிய நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 5 கோடி பேர் போலியாவில் பாதிக்கபட்டும் 3 கோடி பேர் மலேரியாவில் தாக்குண்டும் ஊட்டச்சத்து இன்மையில் இளம் மகளிர் பேறுகாலத்தின் போதும் கருச்சிதைவின் போதும் ஆண்டுக்கு நான்கு கோடி பேர் இறந்த போதும் 70 சதமான மக்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்காமல் இருப்பதும் இந்திய அரசின் கொள்கை மற்றும் மெத்தனமும் காரணமாக இருக்கையில் இவைகளைக் களைய அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கப் போகிறது என நிதி அமைச்சர் தன் அறிவிப்பில் கூறாதது ஏன்? நமது ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஆறு மாதகால உணவு தானியம் என்பது உணவு தேவையான 6 கோடி டன் உணவு தானியம் என்பது அரசின் பொது வினியோக உணவு கிடங்குகளில் இல்லை என்பது ஆறுகோடி டன் உணவு தானியத்தை சேமிக்க அரசுக்கு இன்னும் ஐந்து மாதகால அவகாசம் தேவைப்படும் என்பதும் இந்த ஐந்து மாத காலத்திற்குள் கையிருப்பை 6 கோடி டன்னாக அரசால் அதிகரிக்க முடியுமா? இக்காலத்தில் வெள்ளமோ வறட்சியோ ஏற்படாமல் இருக்குமா? இச்சூழலில் இவையெல்லாம் நடக்க வாய்பில்லை
பொது வினியோக திட்டத்தை வலுவானதாக சிறப்பானதாக செயல்பட வைப்பதோடு அனைத்து உணவு பொருட்களுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறதா என உறுதியாக அறிந்து கொள்ள கிராம அளவிலும் நகர அளவிலும் பொதுமக்களைக் கொண்ட கண்காணிப்பு குழு எற்படுத்தி அதன் மூலம் ஊழலை ஒழிக்க அவர்களுக்கு அதிகாரம் அளித்தால் தான் பொது வினியோகத் துறையை சிறப்பான முறையில் செயல்பட வைக்க முடியும். உணவு உற்பத்தியை அதிகரிக்க நவீன விஞ்ஞானத்தை நம்பாமல் இந்திய மக்களின் மரபார்ந்த விவசாய முறைகளைக் கொண்டு விவசாய உற்பத்தியை அதிகரிப்பதோடு விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை தீர்மானிக்கும் போதுதான் போதுமான உணவு உற்பத்தியை நாம் எட்ட முடியும் மேலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதும் விவசாயிகளுக்கு நீண்ட வளமுள்ளதாக்க முடியும். மேலும் தனிநபர் 50,000 டன் உணவு தானிய கையிருப்பு வைத்துக் கொள்ளலாம் என்கின்ற சட்டத்தை நீக்குவதோடு ஊக வாணிபத்தை தடுத்து நிறுத்துவது அவசியம். இவை இல்லாமல் உணவுப் பொருட்கள் வாணிபத்தில பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதன் மூலம் தான் அனைவருக்கும் உணவு உத்தரவாதத்தை நாம் அளிக்க முடியும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
- ஆர்.இரவி