‘உணவு பற்றாக்குறையால் மனித நாகரிகம் வீழ்ந்துவிடுமா?’ என்ற கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பினால் நகைப்பார்கள். இன்றோ, அது நடந்துவிடுமோ என்ற அச்சத்துடன்தான் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். 2008-ம் ஆண்டு உலகம் ‘பட்டினிச் சுனாமி’ என்ற பெரும் தாக்குதலாலேயே விழித்தெழுந்தது. இதுவரை இல்லாத நெருக்கடியும், விலையேற்றமும் உலகில் கொந்தளிப்பை உருவாக்கியது. உணவுவிலைப் பட்டியல் தயாரிக்கப்பட்ட 1845ம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலகமக்கள் இதுவரை சந்தித்தது இல்லை.

2005 முதல் உணவு தானியங்களின் விலை 75 சதவீதம் உணர்ந்திருந்தாலும், சில அத்தியாவசியப் பொருட்களான அரிசி உட்பட 150 சதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்கு 2008-ம் ஆண்டு மட்டும் 12.5 கோடி மக்கள் தள்ளப்பட்டனர். 2007-ல் 84.8 கோடியாக இருந்த பட்டினியாளர்கள் 2008-ல் 92.3 கோடியாக உயர்ந்தனர். மேலும் 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்விளைவு உலகில் உணவுக்கான சண்டைகள் (Food wars) தீவிரமடைந்துள்ளன. ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானா முதல் பிலிப்பைன்ஸ் வரை 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுக் கலவரங்கள், சூறையாடல்கள் நடைபெற்றுள்ளன. மேலும் சில நாடுகளில் பெரும் எழுச்சியான ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில சின்னஞ்சிறு நாடுகளில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளது.

இந்த உணவு நெருக்கடிக்கும், விலையேற்றத்திற்கும் காரணம் என்ன? தேவைக்கும், அளிப்புக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி முக்கிய காரணம் அல்ல. பெட்ரோல் விலை 40 டாலரிலிருந்து 150 டாலர் வரையில் ஏறுவதும், பிறகு 40 டாலர் வரை இறங்குவதும் சந்தையில் அளிப்புக்கும், தேவைக்கும் (Supply vs demand) உள்ள முரண்பாடு தீர்மானிப்பது இல்லை என்பது தெளிவாகும். 1950ம் ஆண்டு உலக உணவு உற்பத்தி 60.31 லட்சம் டன்களாகும். அன்றைய மக்கள் தொகை 200.54 கோடியாகும். 2007ம் ஆண்டு உலக உணவு உற்பத்தி அளவு 207.60 கோடியாகும். இக்காலத்தில் மக்கள் தொகை 2.6 மடங்கு உயர்ந்துள்ளது. உணவு தானிய உற்பத்தி 3.3 மடங்கு உயர்ந்துள்ளது. சராசரியாக ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 314 கிலோ உணவு கிடைக்கவேண்டும். ஆனால் வளர்ந்த அமெரிக்காவில் 1042 கிலோவும், ஆப்பிரிக்காவில் 162 கிலோவும்தான் கிடைக்கிறது. எனவே இந்த 2007-2008ல் ஏற்பட்ட நெருக்கடி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட அதுவும் வளர்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும்.

கட்டமைப்பு சீரமைப்பின் சீரழிவு:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால், உலக வங்கியும், சர்வதேச நிதிநிறுவனமும் சுமார் 90 நாடுகள் மீது கட்டமைப்பு சீரமைப்பு (Structural Adjustment) திட்டத்தை திணித்தன. இதை அமுலாக்கிய அனைத்து நாடுகளிலும் இந்த உணவு நெருக்கடி தற்போது தீவிரமாகியுள்ளது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக உலகவர்த்தக அமைப்பு 1995-ல் உருவாகி, வளரும் நாடுகளின் வணிகம் மற்றும் விவசாயத்தின் மீது தாக்குதல் தொடுத்தன. தொடர்ச்சியாக அடுத்த சில ஆண்டுகளில் விவசாய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட திட்டங்களின் சாராம்சம், விவசாயத்தில் பொது முதலீட்டைக் குறைப்பது, தாராளமயம், தனியார்மயக் கொள்கை மூலமாக விவசாய வணிகத்திலும் உணவு சந்தையிலும், பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்கும் வகையில் கடைபிடிக்கப்பட்ட வணிகக்கட்டுப்பாடுகள், உற்பத்திக் கட்டுப்பாடு, மற்றும் அரசு கொள்முதல் ஆகியவை விவசாய ஒப்பந்தம் மூலம் தளர்த்துவது.

விவசாயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு தாராளமாக அனுமதி அளிக்கப்பட்டன. இதன் விளைவாக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் சந்தைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. சந்தைகளே விவசாய உற்பத்தியை தீர்மானிக்கும் இடமாகவும் மாறியது. பெரும் நிறுவனங்கள் இந்த இடத்தை அபகரித்து கொள்ளை லாபங்களை ஈட்ட ஆரம்பித்தன. இந்த உலகமய பின்னணியில் ஒரு விவசாயி நிலைமாற்றம் குறித்து திருமிகு வந்தனா சிவா அவர்களின் கூற்று கவனிக்கத்தக்கது "ஒரு விவசாயி சமூக,பண்பாடு மற்றும் பெருளாதார ரீதியில் தான் ஒரு உற்பத்தியாளன் என்ற அடையாளத்தை இழந்து நிலபிரபுக்கள், வட்டிக்கடைகாரர் மூலமாக சந்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடம் விதை, உரம் ஆகிய இடுபொருட்களை வாங்கும் நுகர்வாளனாக மாறிவிட்டான்" என்பதுதான் கட்டமைப்பு சீரமைப்பின் விளைவு. இக்கொள்கைதான் நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும் அடிப்படைக் காரணம்.

பெரும் நிறுவனங்களின் லாபவேட்டைகள் :

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக்கொண்டு உணவு விலையை ஏற்ற ஆரம்பித்தன. இந ்நிறுவனங்கள் விவசாய சந்தைகளையும், உணவு உற்பத்தியையும் இணைத்து விலை நிர்ணயிப்பதில் வெற்றி கண்டன. தாராளமயம், தனியார்மயத்தால் உணவு சுழற்சியை உலகமயமாக்கியதாலும், உணவு உற்பத்தி கட்டமைப்பை மாற்றியதாலும் இவர்களுக்கு இது சாத்தியமானது. 2007ம் ஆண்டு கார்கில்(cargills)கம்பெனி விவசாய வணிகத்தில் 36 சதம் லாபம் ஈட்டியுள்ளது. ஏடிஎம்(ADM) 67 சதவீதமும், பங்கி(Bunges) 49 சதவீதமும் லாபமடைந்துள்ளனர். 2008ம் ஆண்டு முதல் மூன்றுமாதத்தில் கார்கில் கம்பெனியின் மொத்த வருமானம் 86 சதம் உயர்ந்துள்ளது. ஏடிஎம் நிறுவனத்தின் மொத்தலாபம் 55 சதமும், பங்கி கம்பெனியின் மொத்த லாபம் 189 சதமும் உயர்ந்துள்ளது. உரக் கம்பெனிகளில் 2007ல் பொட்டாஷ் கார்ப்பொரஷன் 72 சதம் லாபமும், மொசைக் (Mosaics) 141 சதம் லாபமும் ஈட்டியுள்ளனர். 2008 முதல் மூன்று மாதம் மட்டும் பொட்டாஷ் கார்ப்பொரேஷன் நிகர வருமானம் 186 சதம் அதிகரித்துள்ளது. மொசைக் உர நிறுவனத்தின் நிகர வருமானம் 1200 சதம் அதிகரித்துள்ளது. விதைகள் மற்றும் விவசாய வேதிப்பொருட்கள் நிறுவனங்களான மன்சோட்டா(Mansanto) 44 சதமும், டூபான்ட் 19 சதமும், சைன்ஜென்டா(Syngenta) 28 சதமும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த விலையேற்றங்கள் எதுவும் சிறுவிவசாயிகளுக்கு எந்தவிதமான பலனையும் தரவில்லை. காரணம் இன்றைய உணவு வர்த்தக சட்டத்தை இயற்றுவதும், சந்தையை கட்டுபடுத்துவதும், நிதி கட்டுப்பாட்டை மேற்கொள்வதும் இப்பெரும் நிறுவனங்கள்தான். எனவே இதன் பலன் விவசாயிகளுக்கு கிடைக்காது.

மேலும் விவசாயத்தை தொழில்மயமாக்குவது ஒருபுறம் (Capitalist Industrilised Agriculture) நடைபெறுகிறது. இதன் தாக்கமாக உணவுப்பொருட்களை சர்வதேசமயமாக்கி மையப்படுத்தி செயல்படுத்தும் போக்கு விலையுயர்வுக்கு முக்கிய காரணமாகும். "சராசரியாக இன்றைய உணவு வகைகள் சமையல் ஆவதற்கு முன்பு 1300 மைல் பயணம் செய்கிறது. பழங்களையும், காய்கறிகளையும் குளிரவைத்து, மெழுகு தடவி, வர்ணம் பூசி, பிரகாசிக்கச் செய்து, நறுமணம் கமழும் முறையில் பெட்டிக்குள் அடைத்து கப்பலேற்றுவது வரை பணிகள் தொடர்கின்றது. இந்த நடவடிக்கை அனைத்தும் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளின் தரத்தை உயர்த்துவதில்லை. மாறாக நீண்டதூர விநியோகத்திற்கும் அதன் அலமாரி வாழ்வுக்குமே இந்த நடவடிக்கை உதவுகிறது" என்று டேனியல் இம்மோப் கூறுகின்றார். இந்த முதலாளித்துவ தொழில்மய விவசாயம், உற்பத்திக்கும், உண்பதற்கும் இடையிலான பணிகளுக்காக ஒரு கலோரி எரிசக்தி உணவை பெறுவதற்கு 10 கலோரி எரிசக்தியை செலவிடுகின்றது. எனவே, இந்த விலையேற்றம், வளர்ந்த நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும், இவர்களால் இவர்களுக்கு இவர்களே ஏழைநாட்டு மக்களிடமிருந்து சூறையாடிய லாப வேட்டையாகும்.

முதலில் ஏற்றுமதி அடுத்து உணவு:

எப்பொழுதெல்லாம் உணவு தானியங்கள் வணிகமயமானதோ அப்பொழுதெல்லாம் பட்டினிச்சாவுகள் அரங்கேறி உள்ளன. இந்தியாவில் பிரிட்டிஷ் வருகையையொட்டி ஏற்பட்ட போக்குவரத்து, தகவல் தொடர்புமுறைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. உணவுப்பொருட்களின் ஏற்றுமதிக்காக இந்திய விவாசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர். 1875 முதல் 1900வரை இந்தியாவின் 1.20கோடி முதல் 2.90 கோடிவரை மக்கள் பட்டினியால் மடிந்தனர். இக்காலத்தில்தான் இந்தியாவின் தானிய ஏற்றுமதி 30 லட்சம் டன்னிலிருந்து 100 லட்சம் டன்னாக உயர்ந்தது. 1840ம் ஆண்டு அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைகிழங்கு பஞ்சமும், 1943ல் வங்கப்பஞ்சமும் இதே வகையைச் சேர்ந்ததுதான்.

தற்போது இந்தியாவில் உணவுதானிய பொருட்கள் வணிகமயமாகி தற்கொலை எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது. "இந்தியா உட்பட வளரும் நாடுகள் வணிகப்பயிர்களை ஏற்றுமதி செய்துவிட்டு, வடக்கு நாடுகளில் உபரியாக உள்ள உணவு தானியங்களையும், பால்பொருட்களையும் இறக்குமதி செய்து கொள்ளலாம்" என்று வளர்ந்த நாடுகள் வற்புறுத்துகின்றனர். இதற்கேற்ற முறையில் உணவுதானிய கொள்முதல் செய்வதை அரசு கைவிடவேண்டும் என்று அறிவுரை வழங்கினர். இதை பல நாடுகள் அமுலாக்கியதால் இன்று கடும் உணவு நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாடு முதன்முதலான கட்டமைப்பு சீரமைப்புக் கொள்கையை அமுல்படுத்திய நாடு. உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி நாடாக இருந்தது. இன்று அந்த நாடு அரிசி மற்றும் இதர உணவு தானியங்களை நிரந்தரமாக இறக்குமதி செய்யும் நாடாக மாறிவிட்டது. அந்நாட்டு நிலங்கள் வணிகப்பயிர்களாலும், அந்நிய பெருநிறுவனங்களுக்கு எத்தனால் தயாரிக்க வாடகைக்கு விடப்பட்டும் விவசாயம் சீரழிந்துள்ளது.

மெக்சிக்கோ சோளத்தை முதன்முதலாக விளைவித்த நாடு. பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தநாடு. உலகவங்கி, IMF அமெரிக்க கொள்கைகளை தீவிரமாக அமலாக்கியதால் இப்போது சோளத்தை இறக்குமதி செய்துதான் வாழமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 25 சதவீதம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்துதான் வாழ்கின்றனர். 1996 முதல் 2000 வரை ஆப்பிரிக்க நாடுகள் கோதுமை இறக்குமதியை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியா, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து, வியட்நாம், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய 11 நாடுகள் தானிய உற்பத்தியில் 40 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றனர். இந்நாடுகளில் கடந்த 13 ஆண்டுகளில் அதாவது, 1989-91 முதல் 2003-04வரை இவை 1.1 சதவீதம் மட்டுமே ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு மாறாக வணிகப்பயிர்கள் உற்பத்தி இக்காலத்தில் 10 மடங்கு அதிகமாக இந்நாடுகளில் விளைந்துள்ளது. இதற்கான நிலப்பரப்பும், முதலீடும் திருப்பிவிடப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக உணவு தானியத்தை வணிகப்பயிர்கள் கபளீகரம் செய்ய ஆரம்பித்துள்ளன.

இந்த வணிகப்பயிர் ஏற்றமதியால் அந்நிய செலாவணி அதிகமாக கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. மேற்கண்ட நாடுகள் ஏற்றுமதிகளை இக்காலத்தில் இரு மடங்காக உயர்த்தியபோதும் அந்நிய செலாவணி உயரவில்லை. பணவீக்கமும், வளர்ந்த நாடுகளின் நாணய சூழ்ச்சியும்தான் இதற்குக் காரணமாக அமைந்தன. பலநாடுகள் பணப்பயிர் ஏற்றுமதியால் அந்நிய செலாவணி கிடைக்கும் என்று விவசாய முறையை மாற்றி அமைத்து உணவு நெருக்கடியில் சிக்கிக்கொண்டனர். பொருளதார அறிஞர் உஸ்த்தவ் பட்நாயக் கூறுவதுபோல் "காலனித்துவ இந்திய விவசாயிகள் இங்கிலாந்திற்கு கோதுமையை கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாக கிடந்தனர். நவீன இந்திய விவசாயிகள் மேலைநாட்டினருக்கு ஊறுகாய்க்கான வெள்ளரியையும், ரோசாப்பூவையும் பயிரிட்டு ஏற்றுமதி செய்துவிட்டு பற்றாக்குறை உணவை எடுத்துக்கொள்கின்றனர்" என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரச் சந்தை, சுதந்திர வர்த்தகம்:

இதுகாலம் வரை வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து உணவு தானியங்கள் விலக்கிவைக்கப்பட்ட சகாப்தத்தை 1986ல் புன்டா டெல்லில் நடைபெற்ற உருகுவே சுற்று பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவந்தது. அதைத்தொடர்ந்து 1994,1995-களிலும் ஒப்பந்தமான விவசாய ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பு இந்த சுதந்திர சந்தை கொள்கைகள் தீவிரமாக்கின. இதன் உச்சகட்டமாக 1996ல் உலக உணவு மாநாடு ரோமில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழில்வள நாடுகள் உணவுப் பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அதிலும் சுதந்திர வர்த்தகம் அவசியம் என வலியுறுத்தின. அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து இதை ஏற்கவைத்தது.

"உணவுப் பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அடிப்படை என்பதை நாங்கள் ஏற்கிறோம். எங்களது உற்பத்தியாளர்களும், நுகர்வாளர்களும் பொருளாதார ரீதியில் பலமடைய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தும் வகையில் நாங்கள் உணவு வர்த்தகத்தையும் இதர வர்த்தக கொள்கைகளையும் கடைபிடிப்போம்" என்று ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். உணவுப் பாதுகாப்பிற்காக கூடிய மாநாடு அதற்கான தீர்மானத்தை இயற்றியதுடன், உணவு நெருக்கடிக்கும், விலையேற்றத்திற்குமான வழிவகையும் துரதிர்ஷ்டவசமாக உருவாக்கிவிட்டது. எனவே உணவு பாதுகாப்பிற்கான உள்நாட்டில் இருந்த தடைகளும், நாடுகளுக்கு இடையேயான தடைகளும் உடனடியாக நீக்கப்பட்டன.

இன்றைய உணவு சந்தையை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள்தான் கட்டுப்படுத்தகின்றன. இவர்களின் இளைய கூட்டாளிகளாக ஆஸ்திரேலியா, அர்ஜன்டைனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளின் பெரும் நிறுவனங்கள் இச்சந்தைகளில் கோலோச்சுகின்றன. மேற்கண்ட நாடுகள் இருவகைளில் உலக சந்தையை கைப்பற்றுகின்றன. ஒன்று உணவுதானியங்களுக்கு கூடுதலான மானியங்கள் கொடுப்பது மூலம் ஏழைநாடுகளை போட்டியிலிருந்து வெளியேற்றுகின்றனர். இரண்டாவது தொழில்மயமான இறைச்சி உற்பத்தி முறையால் சுதந்திரமான மற்றும் சிறுஉற்பத்தியாளர்கள் அழியும் நிலையை உருவாகிவிடுகின்றன.

அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு மாட்டிறைச்சிக்கு கூடுதல் மானியம் வழங்கி உலக சந்தைக்கு கொண்டுவந்ததால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இறைச்சி வணிகம் துடைத்தெறியப்பட்டது. இதே காரணத்திற்காக இங்குள்ள பருத்தி உற்பத்தியாளர்களின் சாகுபடி வீழ்ந்து, பருத்தி விவசாயத்திலிருந்து பலர் விரட்டப்பட்டனர். அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் நாடுகளின் அதிகமானிய உதவியுடன் ஏற்றுமதி செய்ததால் கானா நாட்டின் 90 சதமும், செனகல் நாட்டில் 70 சதவீதம் கோழிப்பண்ணை தொழில் அழிந்தது.

இறைச்சி உணவு தயாரிப்பில் தொழில்மய முறைகளை பெறும் நிறுவனங்கள் புகுத்துகின்றனர். இதற்கான கால்நடை வளர்ப்பு இதர வசதிகளை அருகாமையில் ஏற்படுத்திக்கொள்கின்றனர். அமெரிக்காவில் உள்ள நான்கு பெரும்நிறுவனங்கள் 2005-ம் ஆண்டில் மாட்டிறைச்சியை 83.5 சதவீதம் கட்டுப்படுத்தின. டைசன்(Tyson) நிறுவனம் ஒருநாளைக்கு 36000 மாடுகளை வெட்டுகின்றது. இதேபோல் கார்கில் 28300 மாடுகளையும், ஸ்விப்ட் அண்ட் கோ 16759 மாடுகளையும், நேஷனல் பீப் பேக்கர்ஸ் 13000 மாடுகளையும் வெட்டுகின்றனர். பன்றி இறைச்சியில் ஸ்மித்பீல்ட் ஏகபோகமாக உள்ளது. ஒருநாளைக்கு 102900 தலைகளை வெட்டுகின்றது. இதனுடன் டைசன், கார்கில், ஸ்விப்ட் சேர்ந்து 64 சதவீதம் சந்தையை கட்டுப்படுத்துகின்றன. இதனால் அமெரிக்காவிலேயே சிறிய இறைச்சி உற்பத்தியாளர்கள் சந்தையிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர்.

ஸ்மித்பீல்ட் என்ற அமெரிக்க நிறுவனம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தனது திட்டத்தை விரிவுபடுத்தியது. அங்கு பெரும் இறைச்சி உற்பத்தியில் ஈடுபட்டதால் ருமேனிய நாட்டின் 90 சதமும், போலந்து நாட்டின் 56 சதமும் பன்றி, மாடு, கோழி உற்பத்தியாளர்கள் தொழிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். இந்த ஸ்மித்பீல்ட் நிறுவனம் போலந்து அரசிடமிருந்து ஏற்றுமதி மானியத்தை பெற்றுக்கொண்டு பன்றிக்கறிகளை லைபீரியா, கினியா, ஐவரிகோஸ்ட் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளூர்விலையைவிட சரிபாதி குறைத்து கொடுக்கிறது. இதனால் அந்நாட்டு தொழில்கள் படுத்துவிட்டன. இந்த சுதந்திர வணிகத்தால் 90ம் ஆண்டுகளில் மெக்சிகோ விவசாயிகள் 1.5 கோடிபேர்கள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். "இந்த சுதந்திர வணிகத்தால் கடந்த பல ஆண்டுகளில் மூன்று கோடி விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர்".

இந்த உலக சந்தையில் வளரும் நாடுகள் சமமாக போட்டியிடமுடியுமா? அனைத்து வளரும் நாடுகளிலும் பெரும் நிறுவனங்கள் சூப்பர்மார்க்கெட் மூலமாக ஊடுருவி வருகின்றன. உலகில் சூப்பர் மார்க்கெட் மூலம் விற்பனையாகும் பலசரக்குகளில் 50 சதவீதத்தை ஐந்து நிறுவனங்கள் வைத்துள்ளன . இதில் வால்மார்ட் பிரதானமானது. உலக சில்லறை வர்த்தகத்தை பத்து கம்பெனிகள் கையில் வைத்துள்ளன. அதிலும் குறிப்பாக வால்மார்ட், குரேகர்(KROGER) பிரெஞ்சு கம்பெனி கேர்போர்(Carrefour) பிரிட்டிஸ் கம்பெனி டெஸ்கோ ஆதிக்கம் அதிகம். உலகில் உள்ள விதைகளில் 47 சதவீத விதைகளின் உரிமைகளை மன்சேட்டா, டுபான்ட், சைசென்டா கம்பெனிகளுக்கு சொந்தமானது.

2007ம் ஆண்டு நெஸ்ட்லே உணவு கம்பெனியில் லாபம் 9.7 பில்லியன் டாலர் ஆகும். இது 65 ஏழைநாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம். 2009 ஜனவரி 31 முடிய வால்மார்ட் கம்பெனியின் லாபம் 13.3 பில்லியன்(1 பில்லியன் 100 கோடி) டாலர் லாபம். இது 88 ஏழைநாடுகளின்,(உலகில் சரிபாதி நாடுகள்) மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம். இந்த உலக சந்தையில் ஏழைநாடுகள் எப்படி போட்டியிடமுடியும்? வளர்ந்த நாடுகளும், அதன் ஏகபோக நிறுவனங்களும், வளரும் நாடுகளின் சந்தையை கைப்பற்றி கொள்ளை லாபமடித்து, உணவு நெருக்கடியையும், விலையேற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதே காலத்தில் நீண்ட காலத்தின் அடிப்படையில் வளரும் நாடுகளின் உணவு முறையை தங்களது உற்பத்திகளை உண்ணும் உணவு பழக்கத்திற்கு மாற்றி அமைத்திடும் பணிகளையும் இந்நாடுகள் திட்டமிட்டு செய்கின்றன.

(தொடரும்...)

- ஏ.பாக்கியம் 

Pin It