கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ் இலக்கியத்தில் ஏரெழுபது என்ற பாடல் தொகுப்பு உள்ளது. கவிச் சக்கரவர்த்தி கம்பன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. உழவுத் தொழிலின் சிறப்பைச் சொல்வதாகும். “ஏர் நடக்குமெனில் புகழ்சால் இயல், இசை, நாடகம் நடக்கும், பார் நடக்கும், படை நடக்கும். பசி நடக்க மாட்டேதே.’’

உழவுத் தொழில் தடையின்றி வளர்ச்சியாக இருந்தால், முப்பெரும் கலைகளும் நாடெங்கும் விழாக்கோலமாக நடைபெறும். மக்கள் பார்த்து மகிழ்வார்கள். அரசும் படைகளும், நிர்வாகமும் சிறப்பாக நடந்துவரும். பசியின்றி மக்கள் வேதனைப்பட மாட்டார்கள்’’ என்று கூறுகிறது.
உழுங்கலப்பை ஊற்றாணி யுளதாயின் உலகு நிலை குலையாதே! கலப்பையையும் ஏர் காலையும் இணைக்கும் உறுப்பான ஆணியின் பெயர் ஊற்றாணி. அந்த ஊற்றாணி தேயாமல், துருப்பிடிக்காமல் இறுக்கமாக இருந்தால், உழவு சீராக நடக்கும்; அரசு நிர்வாகமும் சீர் குலையாமல் நிலைத்து நீடிக்கும் என்பதாகும்.

‘உழுவார் உலகத்தாருக்கு ஆணி’ என்பது திருக்குறள்; கலப்பையின் ஊற்றாணியும், உலக மக்களின் வாழ்வுக்கு உணவளிக்கும் அச்சாணியுமான உழவுத் தொழில் சுதந்திர இந்தியாவின் கடந்த பத்தாண்டுகளாக பின்னடைவு ஏற்பட்டுவருகிறது. இதன் விளைவாக வளர்ந்த மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரம், கேரளா போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைச் சாவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1,50,000த்தையும் தாண்டிவிட்டது. மூன்று மணி நேரத்துக்கு ஒரு விவசாயி விகிதம் தற்கொலை செய்து மடிகிறார்கள். சென்னை ஆய்வாளர் பேராசிரியர் நாகராஜன், மகாராஷ்டிரம் விவசாயிகளின் கல்லறையாகவும் இடுகாடாகவும் மாறிவருவதாகக் குறிப்பிடுகிறார். பத்திரிகையாளர் திரு.சாய்நாத் விவசாயத்தின் வீழ்ச்சியைப் பல்வேறு ஆதாரங்களோடு விளக்கி வருகிறார்.

விடுதலை இந்தியாவில், 10 ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான தயாரிப்புகளும் முன் குறிப்புகளும் வெளியாகி வருகின்றன.

2 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து புதிய நீர் தேக்கங்கள் கட்டப்பட்டன. புனல், அனல் மின்சார உற்பத்தி நிலையங்கள், காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அணுமின் நிலையங்களும் இயங்கி வருகின்றன. ‘பசுமைப் புரட்சி’ என்ற பேராலும் வலுவான பிரச்சாரம் செய்யப்பட்டது. குறு, சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நில உடைமையாளர்கள் வரை அனைவரும் வேளாண்மை உற்பத்தியில் ஊக்கமாக உழைத்து வந்தார்கள். உற்பத்தியும் பெருகியது; ஓரளவு தன்னிறைவும் பெற்றோம்.

கடந்த பத்தாண்டுகளில் வேளாண்மை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு வருகிறது. ஓரிரு ஆண்டுகள் வறட்சி மட்டும் காரணமல்ல; இதே காலத்தில்தான் 6 கோடி டன் உணவு தானியம் அரசுக் கிடங்குகளில் பூச்சி அரித்துத் தேங்கிக் கிடந்தன. அதே நேரத்தில் உழைக்கும் மக்களுக்கு நபருக்கு 450 கிராம் அளவுதான் குடும்ப அட்டைகளுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டன.

உச்சநீதி மன்றத்தின் ஆணையில் உணவு இருப்பு இருக்கும் போது மக்கள் வறுமையில் வாடிவிடக் கூடாது என்று அறிவுறுத்தியது.
ஆனால், இரண்டாண்டுகளுக்கு முன்னால் கோதுமை, சர்க்கரை மற்றும் உணவு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பொருள்கள் அதிகப் பணம் கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டன. நம் நாட்டில் உற்பத்திப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க மறுத்து வரும் மத்திய அரசு, வெளிநாட்டு இறக்குமதிக்கு, இந்தியச் சந்தை விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்தது. இறக்குமதி யாகும் குவிண்டால் கோதுமைக்கு ரூ. 1200 கொடுத்தது.

உலகமயமாக்கல் ஒப்பந்த விதியின்படி, இந்திய விவசாயிகளுக்கு உரமானியம் மற்றும் வட்டிக்குறைவு கொடுக்கக் கூடாதென்று அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளின் ஆலோசனைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்தது; ஆனால், உள்நாட்டில் மாடாய் உழைக்கும் விவசாயிகளின் துன்ப துயரங்களைத் துடைக்க மறுத்துவருகிறது. அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியின் நிர்வாகிகளைப் போலவே, சுதந்திர இந்தியக் குடியரசுச் சட்டத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும், ஏழைகளைப் பார்க்கக் கூசும் சுகவாசிகளாகவும், கேளாக்காதினர்களாகவும் இருக்கிறார்கள். குறைகளை மறைக்கப் பார்க்கிறார்களே தவிர, நீக்குவதற்கான முயற்சியில்லை.

மராட்டிய மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக். இவரிடம் விவசாயிகள் தற்கொலை பற்றி கேட்ட நிருபர்களிடம், தற்கொலை செய்வது கிரிமினல் குற்றச் சட்டப்படி 309ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதன்படி வழக்குப் பதிவுசெய்ய வேண்டாமென்று அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகச் சொன்னாராம். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். உணவு கேட்டுச் சென்ற மக்களிடம் பிரெஞ்சு மன்னன் பதினான்கான் லூயி கேலி பேசியது போலுள்ளது.

விவசாயிகள் தற்கொலைச் சாவு எண்ணிக்கை 1,50,000. இதில் பெண்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை, சாகுபடியாளர்களும் பட்டியலில் இல்லை. ஏனென்றால், அவர்கள் விவசாயிகளாக இருந்தாலும் அவர்களின் பெயரில் நிலப்பட்டா இல்லை. கணவன், மனைவி, மகன் ஆகிய மூவரும் இறந்தாலும், பட்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கணவன் பெயர்தான் தற்கொலைச் சாவு மரணப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடிகளால் விவசாயிகளின் தற்கொலைச் சாவு எனும் கோரச் சம்பவம் மக்களிடம் மறைக்கப்படுகிறது.

 தற்கொலைக்குக் காரணம் கிராமப்புற மக்கள் வேலை செய்யாமல் பட்டினி கிடந்து சாகவில்லை. மாறாக, நிலத்தில் புழுதியடித்து, உழுது, விதைத்துக் கண்மணி போல் பயிரைக் காத்து வளர்த்தார்கள்; நோய் நொடி வராமல் உரமும், பூச்சி மருந்துகளும் தெளித்துப் பாதுகாத்தார்கள்; அறுத்துக் களத்துக்கு வந்த பின்னர் பருத்திக்கும் விலையில்லை; மற்ற நவ தானியங்களுக்கும் விலை இல்லை, கரும்புக்கும் விலையில்லை; நெல்லுக்கும் விலையில்லை, உற்பத்தி செலவுக்குக் கூட தேறவில்லை. கூட்டுறவுக் கடனைத் திரும்பக் கொடுக்க வழியில்லை, லேவாதேவி கடும் வட்டிக்காரர்களிடமிருந்து தப்பிக்க வழியுமில்லை.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கையில், அறுவடை முடிந்தால் கடனை அடைக்கலாம், மகளின் கல்யாணம் முடிக்கலாம், ஊர் விழாக்கள், நன்மை தீமைகளின் சடங்குகளுக்கான சம்பிரதாயச் செலவுகளை ஈடுகட்டலாமென்ற கையளவுக் கனவுகூட நிறைவேறாத வேதனையில் தற்கொலை செய்து மாண்டு வருகிறார்கள்.

இது இந்தியா முழுதும் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான பிரச்சினை. அண்மையில் மத்திய அரசு கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.800ம் ஊக்கத் தொகை ரூ. 200ம், மொத்தம் ரூ.1000 நிர்ணயித்திருக்கிறது. கோதுமையை விட உற்பத்திச் செலவு அதிகமாகும் நெல்லுக்கு ரூ. 645+100 என்று மட்டும் நிர்ணயித்திருப்பதை நெல் உற்பத்தி செய்யும் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம் விவசாயிகளுக்கு பாதகமாகவுள்ளது. கரும்புக்கும் கட்டுப்படியான விலையில்லை, தமிழகத்திலும் விவசாயிகள் சங்க அமைப்புகள் கூட்டாகப் போராடி வருகிறார்கள்.

மராட்டியம், ஆந்திரா, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களோடு நிற்பதில்லை, கடன் தொல்லையினால் ஏற்படும் “உளச்சல் நோய்’’ நாடெங்கும் பரவி வருகிறது; விரக்தி நிலை எரிமலை போல் வெடித்து வருகிறது; சுனாமி எனும் ஆழிப் பேரலைபோல் சுருட்டி அடித்துவிடுகிறது. மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் தற்கொலைச் சாவு இறுதி எச்சரிக்கையாகும். 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, செங்கோட்டையில் அசோகச் சக்கரம் பொறித்த தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

“பல ஆண்டுகளுக்கு முன்னால் கால விதியோடு ஒரு உடன்பாடு செய்திருந்தோம்; (Trust with Destiny) இப்போது புதிய காலம் பிறந்திருக்கிறது. உலகெங்கும் துயில் கொண்டிருக்கும் வேளையில் நடுநிசியில் இந்தியா விழித்துக் கொண்டு உள்ளது. கடந்த காலத்தில் எடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் புதிய விடியல் ஏற்பட்டுள்ளது.’’

“பருவம் தவறினால் விவசாயம் செய்யமுடியாது. இந்திய மக்களின் துயரமும் கண்ணீரும் தொடர்கிற வரை நமது சபதமும் முடிவு பெறாது’’ என்று புதிய இந்தியாவின் சிற்பி முதல் பிரதமர் நேரு உறுதி கொண்டார். இந்தியாவின் தன் சார்பு நிலை உறுதிப்படுத்த வேண்டும். நேருவின் உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும்:

“6 லட்சம் கிராமங்களில் தான் இந்தியாவின் ஆன்மா குடிகொண்டிருக்கிறது’’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார்; எழுபது விழுக்காடு மக்களாகிய இந்திய கிராம மக்களும் அழிந்துவிடாமல் வாழ்வளிக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது.