"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?''
கடந்த இரு மாதங்களில் மட்டுமே தலித் மக்களுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற சுருக்கமான தீண்டாமைப் பட்டியல் இதோ :
திண்டுக்கல் மாவட்டம் பெருமாமலையில் உள்ள வட்டாட்சியர், பொன்னம்மாள் (34) என்ற தலித் பெண்ணை கடப்பாறையால் தலையில் தாக்கியிருக்கிறார்; அடுக்கம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், அவரது புடவையை பொது இடத்தில் உருவியிருக்கிறார் ("தி இந்து', 29.10.07)
பொள்ளாச்சி மாவட்டம் கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியர் பழனிச்சாமி, தலித் மாணவர்களை "மைனஸ்' (–) என்றும், பிற சாதி மாணவர்களை "பிளஸ்' (+) என்றும்தான் அழைப்பாராம். அப்பள்ளியில் உள்ள வேறு இரு ஆசிரியர்களும் தலித் பெண்களிடம் முறைகேடாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆதித்தமிழர் பேரவை, பெரியார் தி.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 1.11.07)
திருவண்ணாமலை மாவட்டம்-செல்லங்குப்பம் கிராமத்தில் தலித்துகள் மீது வன்னியர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வீடுகளை தீ வைத்து எரித்துள்ளனர். இதைக் கண்டித்து 30.10.07 அன்று "விழுதுகள்' அமைப்பு, அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம், அருந்ததி மக்கள் கட்சி, தலித் மக்கள் மன்றம் ஆகியவை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றன.
நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள பராசக்தி வழிபாட்டு மன்றத்தில் 16.10.2007 அன்று நடைபெற்ற பூசைக்குப் பிறகு பொங்கல் வாங்க உள்ளே நுழைந்த சிறுமியை சாதிப் பெயரைச் சொல்லி அறைந்திருக்கிறான் ஒரு சிறுவன். இக்கொடுமைக்கு நியாயம் கேட்கச் சென்ற தாய் வரதமணியையும் சாதி இந்துக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். 29.10.2007 அன்று குமாரபாளையத்தில் சாதி வன்கொடுமைகளைக் கண்டித்து பல்வேறு இயக்கங்களை ஒன்றிணைத்த- ‘ஆதிக்க சாதிவெறி வன்கொடுமைகளுக்கு எதிரான கூட்டியக்கம்' மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே நரூரில் உள்ள கோயிலில் வழிபடச் சென்ற அருந்ததியர் சமூகப் பெண்களை, சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் (‘தீக்கதிர்', 15.10.07)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தீபாவளியன்று ஒரு தலித் இளைஞன் நாய் மீது அடித்த கல் தவறி கருப்பையா என்பவர் வீட்டில் விழுந்துவிட்டது. இதனால் எழுந்த தகராறில் 150 சாதி இந்துக்கள் தலித்துகளின் வீடுகளை அடித்து நொறுக்கி அதில் 20 தலித்துகள் படுகாயமடைந்தனர் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 10.11.07)
மதுரை சமயநல்லூரில் ஊருக்கு சாலை போடச் சொன்னதற்காக சுரேஷ்குமார் என்ற வழக்குரைஞரை உருட்டுக்கட்டையால் அடித்து கட்டாயப்படுத்தி வாயில் மலத்தைத் திணித்திருக்கின்றனர் ("குமுதம் ரிப்போர்ட்டர்', 11.10.07)
விழுப்புரம் மாவட்டம் வெள்ளையாம்பட்டு கிராமத்தில் தலித்துகளை பால் பூத்துகளிலும் ரேஷன் கடைகளிலும் பள்ளிகளிலும் அனுமதிப்பதில்லை. இப்பஞ்சாயத்து தலைவர் இளங்கோவன் தலித் என்பதால், ஒரு சாதி இந்து வீட்டில் நடைபெற்ற சாவுக்கு சென்று (20.9.07) மாலையிடுவதற்குகூட அவரை அனுமதிக்கவில்லை ("தி இந்து', 21.9.07)
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருவந்தா கிராமத்தில் அக்டோபர் 10 அன்று அடிமைத் தொழில் செய்ய மறுத்ததற்காக அய்ந்து தலித்துகளை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அருந்ததியர் அமைப்புகள் இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.
தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க, பெருமளவு முயற்சிகளை சீரிய முறையில் மேற்கொண்டாலும், தலித் மக்களை இந்துக்களாக இருக்க அனுமதித்துக் கொண்டே-அவர்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளை மட்டும் போக்கி விடலாம் என்பது, வழுக்கு மரத்தில் ஏறுவதற்கு ஒப்பானதாகும். தீண்டாமைக்கு மூல காரணமான இந்து மதத்தில் இருந்து அம்மக்களை வெளியேற்றத் துணியாத வரை, வன்கொடுமைகளைத் தடுக்க முடியாது.
யார் தமிழன்?
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கற்பா இயற்றியதற்கு, தமது உடம்பில் ஓடும் தமிழ் ரத்தம்தான் காரணம் என்றார் தமிழக முதல்வர். உடனே "நானும் தமிழச்சிதான்' என்றார் ஜெயலலிதா! தந்தை பெரியார் "திராவிடர்' என்ற அடையாளத்தை முதன்மைப்படுத்தியதற்குக் காரணமே-பார்ப்பனர்கள் "தமிழர்' என்ற அடையாளத்துடன் எளிதில் ‘நம்மவர்'களாகி விடுவர் என்பதால்தான். ஜெயலலிதா ஒருபோதும் தம்மை "திராவிடச்சி' என்று சொல்லிக் கொள்ள மாட்டார். ஆரியத்தின் ஆபத்தை நாம் நாள்தோறும் சந்தித்தாலும், பெரியார் சிந்தனைக்கு மாற்றாக சிந்திக்க பழக்கப் பட்டிருக்கிறோம். அந்தக் காலமாக இருந்தாலும், இந்தக் காலமாக இருந்தாலும் - பார்ப்பனியம் ஒரே மாதிரிதான் இயங்குகிறது. இது, நாம் நன்கு கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
அடுத்து, "உலகத் தமிழர் பேரமைப்பு' தமது அய்ந்தாவது ஆண்டு நிறைவு தமிழர் தொழில் வணிகச் சிறப்பு மாநாட்டில், உலகப் பெருந்தமிழர் விருதை பொள்ளாச்சி நா. மகாலிங்கத்திற்கு அளித்துள்ளது. இதை அந்த அரங்கத்திலேயே ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நீலவேந்தனும், கோவை கு. ராமகிருட்டிணனும் கண்டித்து, வெளிநடப்பும் செய்திருக்கின்றனர். நா. மகாலிங்கம் ஆர்.எஸ்.எஸ்.காரர்; தமது கல்லூரி வளாகத்திலேயே "ஷாகா' பயிற்சி அளிப்பவர் (அதாவது, குஜராத் கொடூரங்களுக்கு காரணமானவர்களை இங்கு வளர்த்தெடுப்பவர்); சாதியவாதி; உழைக்கும் மக்களைச் சுரண்டி கல்வியையும் வணிகமாக்குபவர்; அனைத்திற்கும் மேலாக செம்மொழியாம் தமிழ் மொழிக்கு எதிராக சமஸ்கிருதத்தை ஆராதிப்பவர். இத்தகைய எதிர்மறையான ஒரு நபர்தான் பெருந்தமிழரா? ஒரு வாதத்திற்காகக் கேட்கிறோம் : உலகத் தமிழர்களில் அதுவும் சிங்களப் பேரினவாத அமைச்சரவையில் நீண்ட நாள் "திறம்பட'ப் பங்கேற்று, உலகின் பல நாடுகளுக்குத் தூதுவராகவும் சென்று ‘சிறப்புற' பணியாற்றிய தமிழன் லட்சுமண் கதிர்காமருக்கு பெருந்தமிழர் விருதை (Posthumous) அளித்தால், அதை "உலகத் தமிழர் பேரமைப்பு' ஏற்குமா?
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்குப் பிரதிநிதித்துவம்
தமிழ் நாட்டில் தலித்துகளுக்குரிய இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு விவாதம் கூர்மை அடைந்து வருகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் ம.மதிவண்ணனின் நூல் 12.11.07 அன்று கோவையில் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஒரு முக்கியப் பகுதியை மேற்கோள் காட்டுவது, இன்றைய சூழலில் மிகப் பொருத்தமாக இருக்கும் : "விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கையின் (2006) 18 ஆம் பக்கத்திலுள்ள தாழ்த்தப்பட்டோரில் சாதிவாரி இடஒதுக்கீடு என்னும் தலைப்பிலான வாக்குறுதி இது : "தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் பறையர், பள்ளர், அருந்ததியர் என்னும் மூன்று பெரும் பிரிவினர் தமிழகத்தில் உள்ளனர்.
இவர்களில் அருந்ததியர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் மக்கள் தொகைக்கேற்ற அளவில் உரிய பங்கினைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையை மாற்றிட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனித்தனியான மக்கள் தொகை அடிப்படையில், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே ஏற்ற வழியாகும். அப்போதுதான் அருந்ததியர் வகுப்பினரும் சமூக நீதியைப் பெற முடியும். எனவே, தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை சாதிவாரி அடிப்படையில் நடைமுறைப்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் பாடாற்றும்.''
இவை தவிரவும், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும், அரங்க. குணசேகரன் போன்றவர்களும் உள் ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகின்றனர். ஆந்திராவைப் போலன்றி உள்ஒதுக்கீடு கோரிக்கைக்கு தலித்துகளிடம் பெருவாரியான ஆதரவே இருக்கிறது. செ.கு. தமிழரசன் போன்றவர்கள் மிகச் சிறுபான்மையான விதிவிலக்குகள். "பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை' அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை ஆதரித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளிடமும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற தேசிய கட்சிகளிடமும் இக்கோரிக்கை குறித்து எவ்விதமான எதிர்வினையும் இல்லை என்பதையும் இங்கு மனங்கொள்ள வேண்டும். சமூக நீதியை வலியுறுத்துகிற சனநாயக சக்திகள், இவ்விஷயத்தில் அழுத்தம் தருவதன் மூலம் ஆக்கப்பூர்வமான மாற்றம் நிகழ வேண்டும்.''