“நான் சொல்கிறேன், மாயாவதியின் முகத்தில் பணத்தை விட்டெறிந்து சொல்லுங்கள் - நீங்கள் கற்பழிக்கப்பட்டால், நான் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்'' - என்று காங்கிரஸ் கட்சியின் உத்திரப் பிரதேச மாநிலத் தலைவர் ரீட்டா பகுகுணா, பொதுக் கூட்டமொன்றில் ("தி இந்து', 17.7.09) பேசியிருக்கிறார். உத்திரப் பிரதேசத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் இம்மாநிலம்தான் முதலிடம் வகிக்கிறது. 2002 இல் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமையில் 1,331 வழக்குகள் பாலியல் வன்முறை தொடர்பானவை. 2009 இல் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தேசிய பெண்கள் ஆணையத்திற்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக 8,200 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் 50 சதவிகித புகார்கள் (4,600) உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கின்றன.

இந்நிலையில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தலித் பெண்களுக்கு முதல்வர் மாயாவதி, 25 ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக அளித்ததையொட்டி, ரீட்டா இந்தளவுக்கு திமிராகப் பேசியிருக்கிறார். இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்ற தலித் அல்லாத ஒரு முதல்வரைப் பற்றி ஒரு தலித், இப்படிப் பேசிவிட்டு உயிர் வாழ்ந்துவிட முடியுமா? ஆனால் ஒரு தலித் முதலமைச்சராகவே இருந்தால்கூட, அவருக்கு எதிராக இவ்வளவு வக்கிரமாகப் பேசிவிட்டு, இரண்டே நாட்களில் பிணையிலும் வர முடிகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எந்தளவுக்கு இன்றியமையாத ஒன்று என்பதற்கு இந்நிகழ்வே சான்று.

“பாலியல் வல்லுறவுக்கும் படுகொலைக்கும் ஆட்பட்ட பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு (நிதி), அவர்களுடைய பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக இருக்கிறது'' என்று முதல்வர் மாயாவதி 16.7.2009 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். மேலும், இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற காவல் துறை அதிகாரிகள் (சட்டம் ஒழுங்கு ஆய்வு) மாநாட்டில், தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை நிகழ்ந்தால், அன்றே அவர்களுக்கு நீதி கிடைக்குமாறு செய்தாக வேண்டும் என்றும், நேரடியாக டி.ஜி.பி. அந்தப் பகுதிக்குச் சென்று, அன்றே அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்தும், ஒவ்வொரு மாநில அரசும் இது தொடர்பான வழக்குகளில் எந்தளவுக்கு அலட்சியத்துடன் செயல்படுகின்றன என்பது குறித்தும் ஆராய்வதாக-இந்த அரசியல் விவாதம் மாறியிருக்க வேண்டும். இதற்கு மாறாக, ரீட்டா பகுகுணா வீட்டின் ஒரு பகுதி தீக்கிரையாக்கப்பட்டதுதான் நாடு முழுவதும் விவாதமாகியிருக்கிறது. அவர் வீடு எரிக்கப்பட்டதற்கு (வன்முறை) அவருடைய பேச்சுதான் காரணம். ஆனால் ஆதிக்க சாதியினர் வன்முறையையும் தூண்டிவிட்டு, பிறகு அவர்களே தங்களை வன்முறைக்கு பலியானவர்களாகவும் சித்தரித்துக் கொள்கிறார்கள். அதற்கு ஊடகங்களும் பெருமளவில் துணை நிற்கின்றன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக காவல் துறை நடந்து கொள்வதுபோல, வன்கொடுமை பேச்சால் பாதிக்கப்பட்ட முதல்வருக்கு எதிராகத்தான் ஊடகங்கள் நடந்து கொள்கின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு வாரமும்-13 தலித்துகள் கொல்லப்படுகின்றனர்; 5 தலித் வீடுகள் அல்லது உடைமைகள் எரிக்கப்படுகின்றன; 6 தலித்துகள் கடத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும்-3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுகின்றனர்; 11 தலித்துகள் அடிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித் மக்களுக்கு எதிரான ஒரு குற்றம் நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் தலித்துகளுக்கு எதிராக 27 வன்கொடுமைகள் நிகழ்கின்றன. இந்தியா எப்படி ஒரு கொலைகார நாடாக இருக்கிறது என்பதை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதும், இதைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதும்தான் இன்று நாம் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய பணி.

ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? தலித்துகளை உளவியல் ரீதியாக பெருமைப்படுத்தும் புத்தர்-அம்பேத்கர்-ரமாபாய் அம்பேத்கர்-கான்ஷிராம் ஆகியோருக்கு ஓர் ஆயிரம் கோடி ரூபாயில் நிறுவப்படும் நினைவகங்களுக்கும் சிலைகளுக்கும் சட்டப்படி ஓர் அரசு செலவழிப்பதுதான் விவாதமாக்கப்படுகிறது. அறுபது ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக சித்தரித்து, இதுபோன்ற நினைவிடங்கள் எங்கேனும் அமைக்கப்பட்டிருக்கிறதா? இவற்றுக்கு செலவிடப்பட்டிருக்கும் தொகை, "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் அறுநூறில் ஒரு பங்குதான் என்பதை காங்கிரஸ்காரர்களும், அதை நம்பிக் கொண்டு அவதூறு பரப்பும் சாதிய இந்து சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It