தமிழகத்தில் முதன்முதலாக கோயிலில் ஓதுவாராக, ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் தலித் பெண். எனவே இரட்டிப்பு மகிழ்ச்சி. அவரது பெயர் அங்கயற்கண்ணி. வயது 24. திருச்சி உறையூரிலுள்ள பஞ்சவர்ணா சாமி கோயிலில் இவரை இந்து அறநிலையத் துறை ஓதுவாராக நியமித்துள்ளது. திருச்சியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அங்கயற்கண்ணி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஓதுவாராக பயிற்சி பெற்றவர்.
இந்து அறநிலையத் துறையில் எந்தப் பதவியிலும் பெண்களை நியமிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு தேர்வாணையம் பின்பற்றி வந்த பழமை வாதத்தை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடையைத் தகர்த்து எறிந்தது. வாதாடி வழக்கை வெற்றி பெற வைத்தவர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் துரைசாமி. அநத வெற்றி பூத்துக் குலுங்குவதைப் பார்க்கும்போது, பெரியார் திராவிடர் கழகம் பெருமையடைகிறது.
கழகம் தொடர்ந்த நடவடிக்கையால் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட பெண்கள் அறநிலையத் துறை அதிகாரிகள் ஆகியுள்ளனர். இப்போது ஒரு தலித் பெண் - முதன்முதலாக ஓதுவாராகியுள்ளார். அறங்காவலர் குழுக்களில் பெண்களையும் உறுப்பினராக்க - தமிழக சட்டசபையில் தீர்மானமும் வந்திருக்கிறது.
அர்ச்சகர் சட்டம் : கலைஞர் விளக்கம்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தீர்மானத்தில், உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக வழக்கமும் வழங்கலும் (Cusoms and usages) என்ற பகுதி நீக்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, பெரியார் முழக்கம், கடந்த இதழில் மக்களுக்கு ஏற்படும் அய்யங்களை எழுப்பியிருந்தது. கடந்த 27 ஆம் தேதி செய்தியாளர்கள், முதல்வர் கலைஞரிடம் இது குறித்துக் கேட்டதற்கு அவர் விளக்க மளித்துள்ளார்.
“எந்தச் சாதியினரும் அர்ச்சர் ஆகலாம் என்ற பிரிவு - சட்டத்தில் அப்படியே இருக்கிறது. ‘Cusoms and usages’ என்பதற்கு விரோதமாக செய்வதாகக் கூறப்பட்டது. அதைச் சொல்லி அதற்கு உச்சநீதிமன்றத்தில் தடை கொடுத்தார்கள். நாம் பொதுவாக பழக்க வழக்கத்துக்கு விரோதமாக நடத்துவதில்லை அல்லவா? பொதுவாக திருமணம் என்றால் சுயமரியாதை திருமணம் என்றால்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் நடத்துகிறோமே தவிர, வழக்கத்துக்கு விரோதமாக நடத்துவதில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்துக்கு அரசு தரப் போகும் விளக்கம், இந்த திசையில்தான் இருக்கும் என்பதை முதல்வர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ஆனாலும் பார்ப்பன உச்சநீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குஷ்புவுக்கு எதிர்ப்பு சரியா?
பெரியார் திரைப்படத்தில் - அன்னை மணியம்மையார் வேடத்தில் குஷ்பு நடிக்கலாமா என்று சிலர் கேள்வி எழுப்பு கிறார்கள். சட்டமன்றத்திலும் பா.ம.க. உறுப்பினர் நமது அன்புக்குரிய சகோதரர் வேல் முருகன் இதை எழுப்ப, அமைச்சர் பரிதி இளம் வழுதி, “நடிப்பைப் பாருங்கள்; நடிகையைப் பார்க்காதீர்கள்” என்று பதில் சொல்லியிருக்கிறார். அதுவே சரியான பதில்! பெண்கள் மீது மட்டும் சுமத்தப்படும் கற்பு கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியவர் பெரியார். ஆனால், ஒரு சில தமிழ்த் தேசியவாதிகள், பெண்ணடிமை பார்வையில் கற்புக்கரசர்களாக வீரம் பேசுகிறார்கள். அது அவர்கள் கருத்தாக இருக்கட்டும். அதைப் பெரியார் மீது திணிக்க வேண்டியதில்லை!
நடிகைகளை வைத்து கதை செய்வதற்கு ஏதாவது கிடைக்காதா என்று தேடித் திரியும் ‘பரபரப்பு’ வார ஏடுகள் - இதை வைத்து மீண்டும் ‘குஷ்பு’வை அட்டைப் படமாக்கி வர்த்தகத்தைத் துவக்கி விட்டன.