தலைவரவர்களே! தோழர்களே!!

விருதுநகர் மகாநாடானது ஒரு குறிப்பிடத் தகுந்த மகாநாடாகும். 1926ம் வருஷம் ஜஸ்டிஸ் கட்சியானது மாகாண சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தோழர் எம்.டி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் முயற்சியால் மதுரையில் மகாநாடு கூட்டி மக்களுக்கு உற்சாகமூட்டியது போல் இப்போது இந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி "தோல்வி அடைந்த சமயத்தில் தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் முயற்சியால் விருதுநகரில் மகாநாடு கூட்டி மக்களுக்கு" உற்சாகமளித்ததாகும்.periyar karunanidhi and veeramani 6181926ல் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தது என்று சொன்னாலும் அதன் பயனாய் பெற்ற உற்சாகத்தால் இழந்துவிட்ட மந்திரிசபையைக் கைப்பற்றியதோடு மாத்திரமல்லாமல் கேபிநட் (அரசாங்க கவுன்சில் மெம்பர் ஸ்தானங்கள்) சபையையும் கைப்பற்றிவிட்டது. அதுபோலவே இந்திய சட்டசபை ஸ்தானங்களை இழந்ததின் பயனால் பெற்ற ஊக்கமானது இந்திய அரசாங்க மந்திரி சபையிலும் ஆதிக்கம் செலுத்தத் தகுந்த சக்தியைப் பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.

நிற்க, இன்று காலை வரவேற்புக் கழகத் தலைவர் சொற்பொழிவிலும் எனக்கு வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்திலும் ஜஸ்டிஸ் கட்சியில் ஒழுங்கான கட்டுப்பாடு இல்லை என்றும், தலைவர்கள் என்பவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றும் அதற்கு வேண்டிய முயற்சிகள் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டது.

இதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. எப்படிப்பட்ட கட்சியிலும் இது இயற்கையேயாகும். அதுவும் செல்வாக்குப் பெற்று அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் இருந்து வரும் கக்ஷியில் கண்டிப்பாய் அபிப்பிராய பேதம், ஒற்றுமைக் குறைவு என்பது இல்லாமல் இருக்க முடியாது.

காங்கிரசில் உள்ள அபிப்பிராய பேதமும், ஒற்றுமைக் குறைவும் நம்மில் பலருக்குத் தெரியாது. ஏனென்றால் காங்கிரஸ்கார்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) அதை வெளியில் தெரியும்படியாகக் காட்டிக் கொள்ளுவதற்கு நேரமில்லை.

மற்றும் அவர்கள் தாங்களே ஏகபோகமாய் அனுபவித்த ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் இழந்துவிட்டோமே என்கின்ற கவலையின் பேரிலும் அவற்றை நம் மக்கள் (பார்ப்பனரல்லாதார்கள்) அனுபவிக்கிறார்களே என்கின்ற பொறாமையின் பேரிலும், வயிற்றெரிச்சல் கொண்டு ஆத்திரத்தோடு நம்மை எதிர்ப்பதையும் நம் இயக்கத்தை தோல்வியடையச் செய்து அழிப்பதிலுமே அவர்களுடைய முழுக் கவலையும் நோக்கமும் பிரசாரமும் இருந்து வருவதால் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளவோ, அதை வெளியில் காட்டிக் கொள்ளவோ அவசியமும் நேரமும் இல்லை.

காங்கிரசுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு அதன் பயனாய் ஏதாவது ஒரு பதவியோ, அதிகாரமோ அடையத்தக்க யோக்கியதை அவர்களுக்கு வந்துவிடுமானால் அப்போது பாருங்கள் அவர்களுக்குள் ஏற்படும் கலகங்களையும், ஒற்றுமைக் குறைவையும். அதில் உள்ள ஆட்கள் சில சமயங்களில் பதவி கிடைக்கவில்லை என்று கலகம் செய்து கொண்டு வந்து நம்மோடு சேர்வதாகக்கூட வந்து கெஞ்சவில்லையா.

ஜஸ்டிஸ் கட்சியும்கூட அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இழந்துவிடக் கூடுமானால் அப்பொழுது உலகில் உள்ள எல்லாக் கட்சிகளையும்விட கட்டுப்பாடாகவும், ஒற்றுமையாகவும் பாடுபடும் என்பதோடு, உலகுக்கே ஒற்றுமைக்கு வழிகாட்டியாகக்கூட இருக்கும் என்று சொல்லலாம்.

ஆகவே அரசியல் முறையின் காரணமாகவும், ஜஸ்டிஸ் கட்சியின் உண்மைக் கொள்கையின் காரணமாகவும் அது செல்வாக்குப் பெற்று ஆதிக்கத்துக்கு வந்து அதிகாரம், பதவி வகிக்க நேரிட்டதில் ஏமாற்றமடைந் தவர்களால் முணுமுணுப்போ, அதிருப்தியோ காட்ட முடியாமல் இருக்கு மென்று யார்தான் எதிர்பார்க்ககூடும்? ஜஸ்டிஸ் கட்சியார் யெல்லோரும் துறவிகள் என்றோ ஆசைப் பற்று அற்ற ஞானிகள் என்றோ கருத முடியுமா?

நாளைய தினம் காங்கிரசுக்கு பதவி வகிக்கும் யோக்கியதை ஏற்பட்டு விட்டால் தோழர்கள் சத்தியமூர்த்தியும், ராஜகோபாலாச்சாரியாரும் குடுமியைப் பிடித்துக் கொள்வதை நேரில் பார்க்கலாம். அவர்களுக்குள் இருக்கும் அபிப்பிராயபேதமும், அசூயையும் ஒருவரைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயமும் உள்ளது உள்ளபடி எழுத அகராதியில் வார்த்தைகள் கிடையாது.

ஆதலால் கட்சியில் தலைவர்கள் அபிப்பிராய பேதத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கொள்கைகளை ஒழுக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் முக்கிய கவலையும் கடமையுமாகும்.

ஜஸ்டிஸ் கட்சியார் அனுபவிக்கும் பதவி, சம்பளம் இவற்றைப் பற்றியே அதன் எதிரிகள் இன்று அதிகமாகக் கூப்பாடு போடுகிறார்கள்.

இன்றைய பதவிகளும், சம்பளங்களும், ஜஸ்டிஸ் கட்சியார் உண்டாக்கிக் கொண்டவைகள் அல்ல. காங்கிரசானது (பார்ப்பனர்கள்) இப்பதவிகள் தங்களுக்கே கிடைக்கும் என்கின்ற எண்ணத்தின் மீது 40 வருஷகாலமாய் "ஏழை மக்களுக்கு" ஆக பாடுபட்டு தேசாபிமானத்தின் பேராலும், தேசபக்தியின் பேராலும் ஏற்படுத்தின பதவியையும், சம்பளத்தையும் தான் இன் நாட்டு மக்கள் (பார்ப்பனரல்லாதார்) அனுபவிக்கிறார்களே ஒழிய வேறில்லை. இந்தப்படி பார்ப்பனப் பத்திரிகைகளே எழுதுகின்றன.

அன்றியும் இவை காங்கிரஸ்காரர்களால் வெறுத்துத் தள்ளிவிட்ட ஸ்தானங்களும் அல்ல. அவர்களும் அடைய இன்று ஆகாயத்துக்கும், பூமிக்குமாக தாளம் போடும் ஸ்தானங்களே ஒழிய மற்றபடி "தேசத் துரோகிகளுக்கு" ஆக ஒதுக்கப்பட்டதல்ல.

இந்த ஸ்தானங்களுக்குப் பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் நாக்கில் தண்ணீர் ஊறும்படி நடத்துகிறார்கள் என்பதற்கு உங்களுக்கு உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்லுகிறேன்.

அதாவது நமது பார்ப்பனர்கள் இந்திய சட்டசபைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும்போது ஈரோட்டில் ஒரு கூட்டத்தில் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் "ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கவர்னராகவும், நான் சீப் செக்கரட்டரியாகவும் மற்றவர் மந்திரிகளாகவும் வரப்போகின்றோம்" என்று சொன்னதின் அருத்தம் என்ன என்று பாருங்கள். சத்தியமூர்த்தி அவர்களின் மனதில் பல காலமாய் ஊறிக் கிடக்கும் அபிப்ராயம் அவரை அறியாமல் வெளியாயிற்று என்று தானே சொல்ல வேண்டும். பக்கத்தில் இருந்த ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தனக்கு வேண்டாமென்றாவது தான் வரப்போவதில்லை என்றாவது சொன்னாரா?

ஆகவே உத்தியோகப் பொறாமையால் ஆத்திரத்தில் உளறுவதை நாம் கவனிக்க வேண்டியதில்லை.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு அரசியல் துறையில் மற்ற மாகாணங் களையெல்லாம் விட நம் மாகாணம் முற்போக்கடைந்திருப்பதோடு சமூகத் துறையில் எந்த மாகாணமும் நினைப்பதற்குக்கூட தைரியப்படாத பெருங்காரியங்களைச் சாதித்திருக்கின்றது என்பதை உணருங்கள். அதற்கு உதாரணம் வேண்டுமானால் சமூகத் துறையில் கடுகளவு முற்போக்குக்கும் இடம் கொடுக்காதவர்களான பிறவி எதிரிகளாய் இருக்கும் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைவதும், தூற்றுவதும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவதுமான காரியங்களே போதுமானதாகும்.

ஒருவனுடைய யோக்யதையை தெரியவேண்டுமானால், அவனுடைய சினேகிதனைப் பாருங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் நான் வேறு விதமாகச் சொல்லுகிறேன்.

"ஒருவனுடைய யோக்யதையைப் பார்க்க வேண்டுமானால் அவனுடைய விரோதியைப் பாருங்கள்" என்று சொல்லுகிறேன். ஏனெனில் நல்லவர்களுடன் சினேகமாக இருப்பது சுலபமான காரியம். அதனால் எவனும் வீரனாகிவிட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும், உண்மையான தொண்டனுமாவான்.

ஆகவே இன்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் தூக்கத்திலும், வாழ்விலும், கல்வியிலும், ஜபத்திலும், தபத்திலும், வேள்வியிலும், யாகங்களிலும் இடைவிடாமல் கோரும் காரியம் என்ன என்று பாருங்கள். "ஜஸ்டிஸ் கட்சி ஒழிய வேண்டும், பொப்பிலி ராஜா ஒழிய வேண்டும், சுயமரியாதை கட்சி ஒழிய வேண்டும்" என்பது போன்ற எண்ணம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன். உலகிலே காங்கிரஸ் கொள்கைக்கு முரணானது பிற்போக்கானது என்று காங்கிரஸ்காரர்களால் சொல்லப்படுகிற கட்சிகள் பல இருந்தும், அதாவது முஸ்லிம் கட்சி, கிறிஸ்தவர் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள் கட்சி, மிதவாதிகள் கட்சி, இன்னும் பல வகுப்புவாதக் கட்சிகள் இருந்தும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவங்கள் பெற்றும் இருக்க அவைகளையெல்லாம் விட்டுவிட்டு நம் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் வெட்டிப் புதைக்க வேண்டும் என்று ஆசைப் படுவதின் அர்த்தம் என்ன என்று பாருங்கள்.

சென்ற வாரத்தில் தோழர் பிரகாசம் பந்துலு ஒரு கூட்டத்தில் எவ்வளவு தைரியமாய் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார் பாருங்கள்.

"ஜஸ்டிஸ் கட்சியாரைவிட ஆங்கிலேயர்களும், ஆங்கிலேய ஆட்சியும் மேலானது" என்று சொன்னாரே அதன் அபிப்பிராயம் என்ன? ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியால் இந்த இருநூறு வருஷகாலமாய் செய்யாததையும் செய்ய முடியாததையும் ஜஸ்டிஸ் கட்சியார் செய்து விட்டார்கள் என்று தானே அருத்தம்.

அது என்ன என்பதை தோழர் பிரகாசம் அவர்களே அடுத்த வரியில் சொல்லிவிட்டார். அதாவது ஜஸ்டிஸ் கட்சியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஆதலால் அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். பல ஜாதி வகுப்புகள் இருக்கிற (இருந்தே தீர வேண்டும் என்று காந்தியார் முதல், பல மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் வற்புருத்துகிற) நாட்டில் ஒரு அரசியல் கட்சியார் ஆதிக்கத்துக்கு வந்ததின் காரணமாக பல ஜாதி வகுப்புகளுக்கும் அரசியலில் சிறிதாவது பிரதிநிதித்துவம் ஏற்படும்படி செய்ததற்காக அக்கட்சியைத் தேசத் துரோகக் கட்சியென்றும், ஒழிக்கப்பட வேண்டிய கட்சியென்றும் (இன்று எல்லாத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால்) சொல்லுவார் களானால் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும், பார்த்துக் கொண்டும் இருக்கிற ஒருவன் உண்மையாகவோ, யோக்கியனாகவோ இந்த தேச மக்களிடம் பற்றுக் கொண்டவனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே ஜஸ்டிஸ் கட்சியார் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ள மாபெரும் எதிரிகளான பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் சூட்சிகளையும் வென்று எல்லா ஜாதி வகுப்பு மக்களுக்கும் அரசியலில் பிரதிநிதித்துவம் பெற மார்க்கம் செய்து விட்டார்கள் என்றால் இது ஒரு பெரிய சமூகப் புரட்சியா அல்லவா என்று கேட்கின்றேன்.

ஜஸ்டிஸ் கட்சியார் பெரிய உத்தியோகம் பார்க்கிறார்கள், பெரிய பதவி அனுபவிக்கிறார்கள் என்று பொறாமைபடும் பார்ப்பனரல்லாத பொருப்பற்ற அறிவிலிகள் இதற்கென்ன பதில் சொல்லுகிறார்கள் என்று கேட்கின்றேன்.

அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்துவிட்டால் பிறகு அரசியல் அதிகாரத்துக்கும், பதவிக்கும் யார் வருவார்கள் யார் வரக்கூடும் என்று கேட்கின்றேன்.

ஜஸ்டிஸ் கட்சியை வைகின்றவர்களுக்கு வெகுசுலபத்தில் நமது பார்ப்பனர்கள் தேசாபிமானப் பட்டம் கொடுத்து விடுவதால் அப்பட்டத்துக்கு ஆசைப்பட்ட சோம்பேரிகளுக்கு இது அவசியமாய்ப் போய்விட்டது.

இந்திய நாட்டு சமூகக் கொடுமைகள் நீங்கும் வரை ஜஸ்டிஸ் கட்சி இருந்து தான் ஆக வேண்டும். அக்கட்சியாருக்கு பதவி, பட்டம், அதிகாரம் ஆகியவை வரும்படி செய்து தானாக வேண்டும்.

அதன் தலைவர்களின் நடத்தைப் பிசகு இருந்தால், நாணையக் குறைவு இருந்தால் தனிப்பட்ட நபர்களை வெளிப்படுத்துவதோ, புத்தி கற்பிப்பதோ தப்பாய்விடாது.

ஆனால் கட்சியைப் பற்றி கொள்கையைப் பற்றி குறை கூறுவது எதிரிக்கு உளவாய் இருப்பது போன்ற இழிகுணமேயாகும்.

தீர்மானங்கள்

இம்மகாநாட்டில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக் கிறோம். எல்லா தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டதாகும்.

இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்ற நானும் மற்றும் சிலரும் ஆசைக் கொண்டிருந்தோமானாலும் மந்திரிகள் முன்னிலையில் அதாவது அத்தீர்மானங்களில் பெரும்பான்மையானவைகளை நிறைவேற்றி வைக்கும் பொருப்புகளை உடையவர்கள் முன்னிலையில் அவர்களது சம்மதம் பெற்று நிறைவேற்ற சந்தர்ப்பம் இருந்தபடியால் அவர்களால் நிறைவேற்ற முடியாதென்றதும் ஒரே அடியாய் அதிக கஷ்டத்துக்கும் எதிரிகளாகிய பார்ப்பனர்களின் கூப்பாட்டிற்கும் இடமில்லாமல் இருக்க வேண்டுமென்றதுமான பல தீர்மானங்கள் நிறுத்திக் கொள்ளப்பட்டன. ஆனாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சாமன்யமானவைகள் அல்ல. அவை அமுலுக்கு வரும் என்றே நம்பி இருக்கிறேன்.

காங்கிரஸ்காரர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கும், ஜஸ்டிஸ் காரர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கும் பொருப்பு விஷயத்தில் அதிக வித்தியாசம் உண்டு.

காங்கிரஸ்காரர்கள் எதையும் எழுதி கூட்டத்தில் நிறைவேற்றி வைக்கலாம். ஏனெனில் அவர்கள் சுலபத்தில் பதவிக்கு வரப்போவதில்லை என்பது அவர்களுக்கே தெரியும். தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டால், ஏன் நடத்திக் கொடுக்கவில்லை என்று கேழ்ப்பதற்கு அங்கு யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிடலாம்.

ஆனால் ஜஸ்டிஸ்காரருக்கு பொருப்பு இருக்கிறது. அவர்கள் பதவியில் இருக்கிறார்கள் தீர்மானங்களை ஏன் நடத்திக் கொடுக்கவில்லை என்று யாரும் கேழ்ப்பார்கள். பொருப்பு இருக்கிறது, நாணையம் இருக்கிறது. ஆதலால் கடுதாசித் தீர்மானம் தானே என்று கருதி எதையும் செய்துவிட முடியாது என்பதோடு போதிய பலமில்லாத கட்சியாய் இருப்பதால் பல பேருடைய லட்சியங்களையும் கவனிக்க வேண்டி யிருப்பதால் "இப்போதைக்கு இவ்வளவு போதும்" என்று தலைவரும், மற்ற மந்திரிகளும் சொன்னதை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஸ்தல ஸ்தாபனங்களிலும், ஸ்தல ஸ்தாபன பள்ளிக்கூடங் களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை உடனே ஏற்படுத்துவ தாகவும், ஏற்கனவே அதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் முதல் மந்திரியார் வாக்குக் கொடுத்துத் தெரிவித்ததால் அத்தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொண்டேன்.

இதற்காக நாம் எல்லோரும் பிரத்தியேகமாக முதல் மந்திரியை பாராட்ட வேண்டும்.

மற்றும் 4வது வகுப்பு வரை பள்ளிக்கூட உபாத்தியார் வேலைக்குப் பெண்களை நியமிக்க வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தையும் கல்வி மந்திரியார் ஏற்கனவே அந்தப்படி செய்திருப்பதாகவும், அதை அமுலுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்ததின் பேரில் அதை வாப்பீசு வாங்கிக் கொண்டேன். இதற்காகவும் கல்வி மந்திரியாரைப் பாராட்ட வேண்டும்.

மற்றபடி நான் ஜஸ்டிஸ் கக்ஷி வேலைத் திட்டமாக இருக்க வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாட்டில் ஆஜர்படுத்திய தீர்மானங்கள் சில வாசகத் திருத்தங்களுடன் தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றது.

அவைகள் அபிப்பிராயபேதமின்றி நிறைவேறப்பட சில வாசகத் திருத்தங்கள் செய்திருக்கிறது என்றாலும் அதன் தத்துவங்கள் எதுவும் அசைக்கப்படவில்லை.

ஆகவே இனி மந்திரிகளின் பொருப்பு சிறிது கஷ்டமானது என்பதையும், அவர்கள் வாக்குக் கொடுத்தபடி இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இவர்கள் ஆதிக்கத்திற்குள் உள்ளவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக ஒரு விஷயம் சொல்லுகின்றேன். கோவாப்பரேட்டிவ் ஸ்தாபனங்களுக்கும், முனிசிபாலிட்டிகளுக்கும், ஜில்லா போர்டுக்கும் அதிகமான சுதந்திரம் கொடுத்து சர்க்கார் உத்தியோகஸ்தர்களை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஜில்லா போர்டை எடுத்துவிடும்படி மகாநாட்டுத் தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனால் முதல் மந்திரியார் கனம் பொப்பிலிராஜா தனக்கு அது இருப்பதில் ஆட்சேபணை இல்லை என்றும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொண்டு இருப்பதாகவும் கட்சி அங்கத்தினர்கள் வேண்டாம் என்றால் தான் கட்டாயப்படுத்த போவதில்லை என்றும் சொன்னார்.

ஆனால் முனிசிபாலிட்டிக்கு கமிஷனர்கள் போட்டதாலேயே கட்சி மெம்பர்கள் பலர் கோவித்துக் கொண்டதாகவும், ஜில்லா போர்டுக்குக் கமிஷனர்கள் போட்டால் இன்னும் பலர் கோபத்துக்கு கட்சி ஆளாக வேண்டிவரும் என்றும் இதனால் கொஞ்சநஞ்சம் செய்யக் கூடியதும் கெட்டுப் போகும் என்றும் மகாநாட்டுத் தலைவர் தெரிவித்தார். ஆதலால் அந்த வார்த்தை நீக்கப்பட்டு விட்டதே ஒழிய வேறில்லை. கட்சித்தலைவர் பொப்பிலி ராஜா அவர்கள் ஒரு சர்வாதிகாரியாய் இருக்கத் தகுந்தவர். அவருக்கு ஸ்டாலினைப் போலவும் கமால்பாஷாவைப் போலும் அனேக முற்போக்கான அவசியமான காரியங்களை செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அவரைச் சுற்றியும் சமயோசிதவாசிகள் காவல் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் அதிகமாக ஒன்றும் அவர்களால் செய்ய முடியவில்லை. என்றாலும் முனிசிபாலிடிக்கு கமிஷனர் போட்டதின் பயனாய் எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன.

இன்னும் அனேக நன்மைகள் ஏற்பட வசதிகள் உண்டு. ஆனால் நாணையமும், துணிவும், கண்ணியமும் உள்ள கமிஷனர்களைப் போட்டால் முனிசிபாலிட்டிகளுக்கு 100க்கு 50 பர்சென்ட் பண லாபமும் நல்ல நீதியும் ஏற்படுமென்று உறுதியாய்ச் சொல்லுவேன். ஆனால் சில முனிசிபாலிட்டிகளுக்கு ரிவினியு இலாக்காவில் நாணையக் குறைவானவர் என்று சந்தேகிக்கப்பட்ட ஆளுகளைப் போட்டு கமிஷனர் ஸ்தானத்துக்கு பங்கம் வரும்படி செய்திருக்கிறார்கள்.

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலருக்கு ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அதற்குக் காரணம் சிலருக்கு தேசீயம், தேசாபிமான சுயராஜ்யம் என்கின்ற கற்பனை (அர்த்தமற்ற) வார்த்தைகளில் உள்ள மயக்கமும், சிலருக்கு மந்திரிமார்களின் ஆடம்பர வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதும், அது பணக்காரர் இயக்கம் என்பதும், சிலருக்கு மந்திரிகள் சுயமரியாதை இயக்கத்தை லட்சியம் செய்யவில்லை என்பதும், சிலருக்கு ஜஸ்டிஸ் கட்சியை வைவது ஒரு நாகரீகமாய்விட்டதும் இப்படிப் பல காரணங்கள் உண்டு. இவைகள் எல்லாம் இயற்கைதான். கால தேச வர்த்தமானத்தில் எந்தக் கட்சிக்கும் இம்மாதிரி அப்பிராயபேதக்காரர்கள் இருந்தே இருப்பார்கள். இவற்றையெல்லாம் லட்சியம் செய்தால் குதிரையும், தகப்பனும், மகனும் என்கின்ற கதையாகத்தான் முடியும்.

இவர்கள் வேறு எந்தக் கட்சியை ஆதரிக்கக் கூடும் என்பது எனக்கு விளங்கவில்லை.

சுயமரியாதை அறிக்கை

சுயமரியாதை இயக்க விஷயமாக சமீபத்தில் வெளியான அறிக்கையைப் பற்றி சிலர் முணுமுணுத்ததாகத் தெரிய வந்தது.

அவ்வறிக்கையில் எந்த வாசகத்தைப் பற்றி குறை கூறுகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. அதில் முக்கியமாய் காணப்படுவ தெல்லாம் நாம் ஒத்துழையாமைக்காரர் அல்லவென்றும், சட்டத்தை மீறுகிறவர்கள் அல்ல என்றும், சமாதானத்துக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் அல்லவென்றும் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் நமது சமுதாய இயலில் ஜாதி மதக் குறைகளையும் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் கண்டிப்பதும் ஒழிப்பதும் என்றும் பொருளாதாரத் துறையில் சமதர்ம முறையை அனுஷ்டிப்பதென்றும் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

இன்றைய நிலையில் இதற்கு மேல் வேலை செய்ய வேண்டுமென்று கருதுகிறவர்கள் நன்றாய்ச் செய்யட்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை நமது இயக்கத்துக்கு இன்று இது போதும் என்று கருதுகின்றேன்.

இதைக் காங்கிரஸ்காரர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? தென்னாட்டுப் பார்ப்பனர், காங்கிரஸ்காரராவது ஒப்புக் கொள்ளுகின்றார்களா? என்று கேட்கின்றேன்.

வீணாக எதிரிகளின் பேச்சைக் கேட்டு கூப்பாடு போடுவதில் யாதொரு பயனும் விளையப் போவதில்லை. மற்றபடி ஏதாவதொரு குறைகூறி விட்டு ஓடிப்போக நினைக்கும் சோம்பேறிகளின் போலி வீரர்களின் கூப்பாட்டிற்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை.

ஆதலால் ஏதாவது உண்மையான தொண்டு செய்ய வேண்டுமென்று இருப்பவர்களுக்கு இது போதும். இந்த அபிப்பிராயத்திற்கு மாறுபட்டவர்கள் அவர்கள் இஷ்டப்படி நடக்க உரிமையுடையவர்களே தவிர நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டியவர்கள் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(குறிப்பு: 30.03.1935, 31.03.1935 இருநாள்கள் விருதுநகரில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட முதலாவது ஜஸ்டிஸ் மாநாட்டில் 30.03.1935 இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 07.04.1935)