சென்ற வாரத்தில் தஞ்சையில் கூடிய பன்னிரண்டாவது பார்ப்பன ரல்லாதார் மகாநாட்டில் நடந்த மானக்கேடானக் காரியங்களைக் கேட்ட எந்த பார்ப்பனரல்லாதாரும், பார்த்த எந்தப் பார்ப்பனரல்லாதாரும், வெட்கமடைந்து தலையைத் தொங்க விட்டுக் கொள்ளாமலிருக்க முடியாது. தேசத்தின் நன்மைக்காக உழைக்கின்றோம் என்றும், சமூகத்தின் நன்மைக்காக உழைக் கின்றோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும், பணக்காரக் கூட்டத்தாரும் ஆகிய பார்ப்பனரல்லாதார்களே சாதாரண முரட்டு, அறிவற்ற காலிகளைப்போல் ஒருவரோடு ஒருவர் மோசமாக நடந்து கொண்ட நடத்தையை நினைக்கும் போது உண்மை பார்ப்பனரல்லாதார் இரத்தம் கொதிக்காமலிராது.

பார்ப்பனரல்லாதார் கட்சியை எப்படியேனும் குழி தோண்டி புதைத்துவிட வேண்டுமென்று வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த பார்ப்பனர்களும், பார்ப்பனக் கூலிகளும் சந்தோசப் பட்டுத் தலைகால் தெரியாமல் கூத்தாடவும், பார்ப்பனரல்லாதாரின் சமூக நலத்தைப் போதிய அளவு கவனிக்கா விட்டாலும் ஏதோ பார்ப்பனரல்லா தாரின் நன்மைக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொண்டாவது ஒரு கட்சி இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர்களின் நெஞ்சந் துடிக்கவும் ஆன காரியங்கள் நடந்ததைப் பற்றி நினைக்கும் பார்ப்பன ரல்லாதார் எவரும் ஆத்திரமடையாமலிருக்க முடியாது.periyar and mr radhaராஜாக்களும், மந்திரிகளும், ஜமீன்தாரர்களும், ஜில்லாபோர்டு தலைவர்களும், தாலூகா போர்டு தலைவர்களும், முனிசிபல் தலைவர்களும், சட்டசபை உறுப்பினர்களும், வியாபாரிகளும், பணக்காரர்களும், நிலச்சுவான்தார்களுமாகிய பார்ப்பனரல்லாதார்கள் ஒன்று கூடிய ஒரு மகாநாடு குழப்பத்தில் நடந்ததென்றால் இதைவிடப் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு அழியாத, வெட்கங்கெட்ட வசை மொழி வேறு என்ன தான் வேண்டும்? மேலே கூறிய பெரிய மனிதர்களென்று சொல்லக்கூடிய பார்ப்பனரல்லாதார்களே ஒரு மகா நாட்டைச் சமாதானத்தோடு நடத்த யோக்கியதை இல்லாமற் போய் விட்டார் கள் என்றால், “பார்ப்பனரல்லாதார்க்கு மூளையில்லை, திறமையில்லை” என்று நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டிருக்கும், பார்ப்பனர் களுக்குத் தகுந்த பதில் கூறப் பார்ப்பனரல்லாதார்க்கு வாயுண்டா என்று தான் கேட்கின்றோம்.

தஞ்சை மகாநாட்டில் எந்த கட்சியினர் செய்தது சரி, எந்த கட்சியினர் செய்தது தப்பு என்பதைப்பற்றி நாம் ஒன்றும் கூற விரும்பவில்லை. ஆனால் எந்தக் கட்சியினராயிருந்தாலும், கூட்டத்தை கலைப்பதற்கென்றும், மகா நாடு நடைபெற வொட்டாமல் சத்தம் போடுவதற்கென்றுமே ஒரு கூட்டத்தை மகா நாட்டுப் பிரதிநிதிகளாக்கிக் கொண்டு வந்ததை விட வெறுக்கத் தகுந்ததும், கண்டிக்கத் தகுந்ததுமான காரியம் வேறில்லை. அதிலும் சத்தம் போடு என்றால் சத்தம் போடவும், பேசாமலிரு என்றால் பேசாமலிருக்கவும் ஆன மக்களையும், வேறு அறிவோ, படிப்போ ஒன்றுமில்லாத மக்களையும் பிரதி நிதியாக அழைத்துக் கொண்டு வந்திருந்ததாகச் சொல்லப்படும் விஷயம் இன்னும் கேவலமாகும்.

அன்றியும், ஜஸ்டிஸ் கட்சியைத் தொலைக்க வேண்டும் என்னும் எண்ணமுடைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியில் பிளவு உண்டாக்கி அதை அதிகாரப் பதவியிலிருந்து வீழ்த்தி, அவ்வதிகாரத்தைத் தாங்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கமுடைய இதர கட்சியினரும் மகாநாட்டுக்குப் பிரதிநிதிகள் என்ற பெயருடன் வந்திருந்தது வியப்பைத் தரக்கூடிய செய்தியாகும். இத்தகைய பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு மகாநாடு எப்படி ஒழுங்காக நடக்க முடியுமென்றுதான் கேட்கிறோம். இம்மாதிரியான மக்களை மகா நாட்டுக்குப் பிரதிநிதிகளாக அழைத்து வந்தவர்களும், அழைத்துவர உதவி செய்தவர்களும், அவர்களைப் பிரதிநிதிகளாக ஒப்புக் கொண்டு அனுமதித் தவர்களும் யாராயிருந்தாலும் சரி அவர்கள் செய்கை மிகவும் கண்டிக்கக் கூடியதும், இகழக்கூடியதும் பரிகசிக்கக் கூடியதும் ஆகுமென்றே நாம் கூறுவோம்.

உண்மையிலேயே ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரும், பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கும், தேச மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்களாயிருந்தால் அவர்களுக்குள் இத்தகைய குழப்பமும், கலகமும், காலித்தனமும் நடந்திருக்க இடமே ஏற்பட்டிருக்காது. இதற்கு மாறாகக் கட்சித் தலைவர்கள் கட்சியின் பெயரால் பட்டம் பதவிகளைப் பெற்று சுயலாபம் பெறுவதில் பிடிவாத முடைய வர்களாகவும், இவ் விஷயத்தில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காத வர்களாகவும் இருந்த காரணத்தால் தான் இவ்வாறான கலகம் நேர்ந்தது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால் மந்திரி உத்தியோகத்தின் பொருட்டு தான் மகாநாட்டில் இம்மாதிரியான மானக்கேடு சம்பவித்தது என்று சொல்லி விடலாம். இதன் பொருட்டே ஒவ்வொருவரும் கூலிக்கு ஆள் பிடித்து பிரதிநிதிகளாகப் பலரைக் கொண்டு வர நேர்ந்தது என்பதிலும் சிறிதும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

நெல்லூர் மகாநாட்டுக்குப் பின் சென்ற மூன்று ஆண்டுகளாக மகா நாடு கூடாமல், இருந்ததே அக்கட்சித் தலைவர்களுக்குக் கட்சி முன்னேற் றத்திற் கவலை இருக்கிறதா? அல்லது தங்களுடைய சுயநல முன்னேற்றத்தில் கவலையிருக்கிறதா? என்பதைக் காட்டுவதற்குப் போதுமானதாகும்.

அன்றியும் தற்காலத்தில் அக்கட்சியில் உள்ளவர்களில் பலர் சுயநலத்தை உத்தேசித்துக் கட்சியின் அடிப்படையான கொள்கையையே மாற்றிக் கட்சியையே கொலை செய்யச் சில வருஷங்களாக முயன்று கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பார்ப்பனரல்லாத சமூகக் கொலைகாரர் களும் தஞ்சை மகாநாடு கலகத்தில் முடிந்ததற்கு ஒரு வகையில் காரண கர்த்தாக்களாவார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அதாவது பார்ப்பன ரல்லாதார் கட்சியை ஆரம்பித்த ஆதிகர்த்தர்களாகிய திரு. டி. எம். நாயர், அவர்களும், சர். பி. தியாகராயர் அவர்களும் பார்ப்பனர்களால் மிதியுண்டு, தாழ்த்தப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாதார் சமூகத்தை அரசியல் துறையிலும் சமுதாய முன்னேற்றத் துறையிலும், சமவுரிமையடையும்படி செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே கட்சியை ஆரம்பித்தார்கள்.

அக் காலத்தில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டு தேச நன்மைக்கென்றோ, ஏழைகளின் நன்மைக்கென்றோ ஆரம்பித்த எந்த இயக்கங்களும் சங்கங்களும் கடைசியில் பார்ப்பனர்களின் சுயநலத்திற்கே உபயோகப்படும் படி பார்ப்பனர்கள் செய்து வந்த தந்திரமாகிய அயோக்கியத்தனத்தை ஜஸ்டிஸ் கட்சி ஸ்தாபகர்கள் நன்றாய் அறிந்திருந்தார்கள். ஆகையினால் பார்ப்பனரல்லாதார் கட்சியானது அழியாமல் நிலைத்து நின்று பார்ப்பன ரல்லாதார் சமூகத்திற்குச் சிறிதளவாவது நன்மை செய்ய வேண்டுமானால் அக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற திட்டத்தை அமைத்து வைத்தார்கள். இனியும் பார்ப்பனரல்லாதார் கட்சி சாவாமல் உயிரோடு இருக்க வேண்டுமானால், கட்சி ஸ்தாபகர்களின் நோக்கத்தையும் திட்டத்தையும் கொலை செய்யாமல் இருக்க வேண்டியதே பார்ப்பனரல்லாதார் கடமையாகும்.

தஞ்சை மகாநாட்டிலோ ஒரு கூட்டம், கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்ப்பதாகத் தீர்மானித்து விடவேண்டும் என்பதற்காக வெகு கஷ்டப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால் தஞ்சை மகாநாட்டின் பெரும் பாலான பிரதி நிதிகள் பார்ப்பனரைக் கட்சியில் சேர்ப்பதற்கு எதிரான மனப் பான்மை யுடையவர்களாக இருந்தார்களென்ற விஷயம் பார்ப்பனரைச் சேர்க்கும் எண்ணமுடைய கூட்டத்தார்க்குத் தெரியும். ஆகையால் இவர்களும் மகாநாடு சரியாக நடைபெறாமல் போவதற்கு வெளிப்படையாக இல்லா விட்டாலும், மறைமுகமாகப் பல யோக்கிய மற்ற செயல்களைச் செய்து வந்தார்களென்று சொல்லப்படும் விஷயத்தையும் எளிதில் மறுக்க முடியாது.

அடுத்தபடியாகத் தலைவர் தேர்தல் விஷயமும் கலகத்திற்கு ஒரு முக்கியமான காரணமாகி விட்டது. தலைவர் தேர்தல் விஷயமும் தற்கால மந்திரிகளின் உத்தியோக விஷயத்தில் மாறுதலை உண்டாக்குமோ என்ற பயம், மந்திரிகளிடத்திலும், மந்திரிகளின் பாதந்தாங்கிகளிடத்திலும் குடி கொண்டிருந்த காரணமே கலகத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப் படுகின்றது. சில மாதங்களாக மந்திரிகளுக்குள் ஒற்றுமையில்லாதிருந்த விஷயமும், தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாக சபையில் மந்திரிகளின் மேல் நம்பிக்கை இல்லை என்னும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுப் பிறகு சமாதான விஷயமும், தஞ்சை மகா நாட்டுக்கு வந்த தலைவர்கள் இரு கட்சியினராக ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே ஆள்பிடித்துக் கொண்டு வந்த விஷயமும், மந்திரிகளின் உத்தியோக விஷயமே கலகத்திற்கு முக்கிய காரணம் என்பதை நன்றாய் விளக்கிக் காட்டுகின்றன.

 ஆகவே ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்கள், சுயநலத்தை முன்னிட்டு யோக்கியப்பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தினால், பார்ப்பன ரல்லாதார் சமூகத்திற்கு நீங்காத பழியுண்டாகும் படி மகாநாடு குழப்பத்தில் நடந்து, தலைவர் பிரசங்கத்தோடு ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றது. இனி, ஒத்தி வைக்கப்பட்ட மகாநாட்டை நாள் கடத்தாமல், அந்தத் தஞ்சையிலேயே நடத்திக் கட்சியைக் கொலை செய்யாமல் கட்சியின் முன்னேற்றத்திற்கான வழிகளைக் காண்பார்களாயின் அப்பொழுது தான் இப்பொழுது ஏற்பட்டுள்ள அவமானத்திற்கு ஓரளவு பரிகாரம் தேடியதாகும் என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு மகாநாட்டை மீண்டும் நடத்த ஆரம்பிக்கும் பொழுது, தற்போது மகாநாடு குழப்பத்தோடு முடிந்ததற்குக் காரணமான தலைவர் தேர்தல் பிரச்சினைத் தகராறும், பார்ப்பனரை சேர்க்கும் பிரச்சினைத் தகராறும் முதலில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. ஆகையால், எவ்வித கலகமும் நடப்பதற்கு இடமில்லாத ஏற்பாடுகளுடன் மகாநாட்டை ஒழுங்காக நடத்து வதில் கட்சித் தலைவர்கள் பெரிதும் கவனம் செலுத்த வேண்டியது அவசி யமாகும்.

இச்சமயத்தில் நாம் மேற்கூறிய தலைவர் தேர்தல், பார்ப்பனரைச் சேர்த்தல் ஆகிய இரண்டு விஷயங்களைப் பற்றி கட்சியின் அபிவிருத்தியின் பொருட்டு நமது அபிப்பிராயத்தை கூறி விட விரும்புகிறோம். கட்சித் தலைவர் யார் வருவதாக இருந்தாலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை; கட்சித் தலைவர் விஷயத்தில் ஆந்திரர், தமிழர். ஜமீன்தார், ஜமீன்தார் அல்லாதவர், நாயுடு, முதலியார் முதலிய வகுப்புத் துவேஷங்களை கிளப்பி விடுவது வடிகட்டின முட்டாள் தனமும், பொறுப்பற்றத் தன்மையும் என்றே நாம் கூறுவோம். யாராயிருந்தாலும் கட்சியின் அபிவிருத்தியில் நோக்கமுடையவர்களாகவும், எதிர்கட்சிக்காரர்களை சமாதானம் பண்ணவேண்டும் என்னும் எண்ணத்துடன் கட்சிக் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர்களாயும், சுயநலத்தை கருதாதவர்களாயும் கட்சியின் அடிப்படை நோக்கமாகிய சமுதாயச் சீர்திருத்தம் அரசியல் முன்னேற்றம் இரண்டையும் ஒருங்கே நிறைவேற்றக் கூடியவர்களாயும் இருத்தல் வேண்டும். இத்தகைய ஒருவரை தேர்ந்தேடுத்தாலொழிய ஜஸ்டிஸ் கட்சி நிலைத்து நிற்காது என்பதை நாம் மிகவும் உறுதியோடும் உண்மையோடும் அறிவிக்கின்றோம்.

அடுத்தப்படி பார்ப்பனரைச் சேர்க்கும் விஷயத்தில் கட்சியினர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாதக் கட்சி என்றும் அரசியல் கட்சியல்ல வென்றும், தேசத்தின் பிரதிநிதித்துவம் பொருந்திய கட்சியல்ல வென்றும் கூறுகின்றார்களென்று சொல்லிக் கொண்டு கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்க முயற்சிப்பது கட்சியைக் கொலை செய்து விட்டுத் தாம் தேசாபிமானப்பட்டம் பெறுவதற் கும் எதிரிகளாகிய பார்ப்பனர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் செய்யப்படும் சூழ்ச்சியேயாகும். இவ்வாறு கூறுகின்றவர்களின் புத்தியில் பார்ப்பனர்களின் வகுப்புவாதமும், சுயநலமும் இன்னும் ஒழியவில்லை என்னும் விஷயம் படவில்லையா என்று கேட்கிறோம்.

இது வரையிலும் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கின்ற எந்த இயக்கமாயினும், எந்தச் சங்கமாயினும், தாழ்த்தப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் நிலையை உயர்த்தச் சிறிதளவாவது உதவி செய்திருக்கின்றனவா? என்பதை நன்றாய் யோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம். இப்பொழுதுள்ள ஜஸ்டிஸ் கட்சியானது எவ்வளவுதான் பார்ப்பனர்களின் வசை மொழிகளுக்கு உட் பட்டிருந்தாலும் உண்மையில் தேச மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி யென்பதை தேச மக்கள் ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாக மூன்று முறை தேசமக்களின் ஆதரவைப் பெற்று அதிகமான உறுப்பினர்கள் சட்டசபைக் கும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இக்கட்சி அரசாங்கத்தாராலும் ஒரு அரசியல் கட்சியென அங்கீகரிக்கப்பட்டு அதிகாரப் பதவியிலும் இருந்து வந்திருக்கின்றது. இப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே பார்ப்பனரைச் சேர்க்காத காரணத்தால் கட்சியின் எந்த காரியம் தடைபட்டு விட்டது என்று கேட்கின்றோம்.

ஒருக்கால் இனி கூடப்போகும் மகாநாட்டில் பார்ப்பனர்களையும் கட்சியில் சேர்ப்பதென்று தீர்மானிப்பார்களாயின் அப்பொழுதே கட்சியின் ஆயுட்காலம் முடிந்து விட்டது. திரு. டி. எம். நாயர் அவர்களாலும், சர். தியாகராயராலும் , பனகால் அரசராலும் தோற்றி வளர்க்கப்பட்ட கட்சியை அவர்களுக்குப் பின் வந்த சுயநலங் கொண்ட தலைவர்கள் கொலை செய்தார்கள் என்ற பழியை ஏற்காமல் போக முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

இவ்வாறு பார்ப்பனர்களையும் கட்சியில் சேர்க்கப்பட்டுக் கட்சியும் குழி தோண்டி புதைக்கப்பட்டு அழியக் கூடிய காலம் வந்தாலும் அதனால் பார்ப்பனரல்லாதார் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாகப்போய் விடாது என்று நாம் நிச்சயமாக நம்புகின்றோம். மீண்டும் பழய கொள்கையையுடைய அதாவது பார்ப்பனர் சம்பந்த மில்லாததும் சமுதாய சீர்திருத்தக் கொள்கை யையும் அரசியல் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சுத்தமான பார்ப்பனரல்லாதார் கட்சி தோன்றாமல் போகாது என்பதும், தற்போதுள்ள ஜஸ்டிஸ் கட்சியை கொலை செய்வதற்கு முனைந்து நிற்கும் துரோகிகளைப் பொது வாழ்விலிருந்து விரட்ட அவர்கள் பின்வாங்க மாட்டார்கள் என்பதும் நிச்சயம் என்று உறுதியாகக் கூறுகின்றோம்.

ஆகையால் தற்போதுள்ள ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பொறுப்பாளிகள் உண்மையிலேயே பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தைக் கருதக் கூடியவர்களாயிருந்தால் பார்ப்பனரல்லாத சமூகத்தாரால் சமூகத் துரோகிகள் என்ற பழியைச் சுமக்க மனமில்லாதவர்களாயிருந்தால் சுயநலமின்றிக் கட்சியின் முன்னேற்றத்தின் விருப்பமுடையவர்களாயிருந்தால் திரு. டி. எம். நாயர் காலத்திலும், சர். தியாகராயர் காலத்திலும், பனக்கால் அரசர் காலத்திலும் இருந்த உண்மையான பார்ப்பனரல்லாதார் கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 16.10.1932)

Pin It