நமது மாகாண சமதர்ம மகாநாடானது 4 தேதி ஞாயிரன்று மன்னார்குடியில் சிறப்பாக நடந்தது. மகாநாட்டுக்கு சமதர்ம தோழர் எம். சிங்காரவேலு அவர்கள் தலைமை வகிப்பதாக இருந்தும் திரேக அசௌக்கியத்தினால் அவர் வர முடியாமல் போனதினால் 3 தேதியன்று மகாநாடு நடைபெறவில்லை. ஆனால் அன்று மகாநாட்டுக் கொட்டகையில் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வந்திருந்த இரண்டாயிரத்துக்கதிகமான பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு பொதுக் கூட்டம் நடந்தேறியது.
4 தேதியன்று மகாநாட்டுக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. வரவேற்புத் தலைவர் தோழர் எம். தருமலிங்கம் அவர்களின் வரவேற்புத் தலைவர் பிரசங்கம் நடந்ததும், தோழர் எஸ்.ராமநாதன் எம்.ஏ.பி.எல்., அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். முன், தலைமை வகிக்கவிருந்த தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ.பி.எல்., அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அச்சடித்திருந்த அக்கிராசனப் பிரசங்கத்தைத் தோழர் எஸ். இராமநாதன் அவர்கள் வாசித்தார். அக்கிராசனர் முன்னுரைக்குப் பின் மகாநாட்டுத் தீர்மானங்களைத் தயாரிப்பதற்கு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப்பட்டது. பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை விஷயாலோசனை கமிட்டிக் கூட்டம் தோழர் எஸ். ராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில் முதலில் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது நமது ஈரோடு சமதர்ம வேலைத் திட்டத் தீர்மானமாகும்.தோழர் எஸ். ராமநாதன் அவர்கள் வழக்கம்போல் வேலைத் திட்டத்தை எதிர்த்தார். இரண்டொரு தோழர்கள் அவர் கூறியதற்கு ஆதரவு காட்டினார்கள். நீண்ட விவாதத்திற்குப் பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்தது.
மாலையில் மகாநாட்டுக்குத் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சகல தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மாகாண மகாநாட்டுக்குப் போதுமான விளம்பரம் இல்லாவிட்டாலும் பல ஜில்லாக்களிலிருந்தும் 200, 300க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் ஜில்லாவின் பல பாகங்களிலிருந்தும் 500, 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் விஜயஞ் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சமதர்ம வேலைத் திட்டமானது தயாரிக்கப்பட்ட ஓறாண்டு முடிவுக்குள் மாகாணச் சமதர்ம மகாநாட்டைக் கூட்டி வேலைத்திட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற முன்வந்த மன்னார்குடி வரவேற்பு கமிட்டியைப் பாராட்டுகிறோம்.
சமதர்மத் திட்டமோ, லட்சியமோ பயனற்றது என்றும் அத்தீர்மானங்கள் ஒழுங்குப்படி அமைக்கப்படவில்லையென்றும் வீண் புகார் கூறுகிறவர்களுக்குத் தலைவர் எம். சிங்காரவேலு அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த தலைமை பிரசங்கமானது தக்கப் பதிலளிக்கப் போதுமானதாகும்.
அறியாமையாலோ, பொறாமையாலோ, பயத்தினாலோ இவைகள் ஒன்றுமில்லை என்றால் சுயநலத்தாலோ நமது திட்டத்தைப் பற்றி வீண் புகார் சொல்லும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் தலைவரின் பிரசங்கமானது தக்க பதிலை எடுத்துக் கூறுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சமதர்ம திட்டம் ஒன்றினாலல்லது வேறு எத்திட்டத்தாலும் ஒரு காது ஒடிந்த ஊசி அளவு கூட இந்நாட்டு ஏழை மக்களுக்கு பலன் இல்லை என்பதற்கு தலைவரின் நீண்ட பிரசங்கமே போதுமானதாகும்.
வரவேற்பு கழகத் தலைவர் தோழர் தர்மலிங்கம் அவர்களைப் பற்றி தஞ்சை ஜில்லா வாசிகள் நன்கறிவார்கள். அந்த ஜில்லா அரசியல் பார்ப்பனர்களால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகியும் தமது கொள்கையில் விடாப் பிடியாக உறுதியுடன் நிற்குமவரின் பிரசங்கம் வேறொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.
மன்னார்குடியில் வரவேற்புக் கமிட்டியார் எதிர்பார்த்ததைவிட ஏராளமான பிரதிநிதிகள் விஜயம் செய்தும் சகலருக்கும் தக்க விதம் சௌகரியங்கள் அமைத்துக் கொடுத்த வரவேற்புக் கழகத் தலைவர் எம். தர்மலிங்கமவர்களைப் பாறாட்டுவது போல் காரியதரிசிகளையும் பாறாட்டுகிறோம். மகாநாட்டுத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டவர்களின் தலைவர்களாக உள்ளவர்களில் தோழர் இராமையாவையும் சொங்கண்ணாவையும் பாறாட்டுகிறோம்.
நமது தலைவர் சிறை புகுந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு தாலுகா மகாநாடுகளும் ஒரு மாகாண மகாநாடும் நடந்ததொன்றே நமதியக்கமானது தலைவருடன் மறையும் என்ற பொய் பிரசாரக்காரர்களுக்கு தக்க பதிலாக இருக்குமென்று நம்புகிறோம்.
தமிழ் நாடெங்குமுள்ள நமது தோழர்களும் சங்கங்களும் மாகாண மகாநாட்டின் தீர்மானங்களை கவனித்து அநுஷ்டானத்தில் கொண்டு வர முயல ஆசைப்படுகிறோம்.
(புரட்சி தலையங்கம் 11.03.1934)