வழக்கம் போலவே இவ்வருடமும் நமது மாகாண சட்டசபையின் முன் இவ்வாண்டின் 34, 35 வருட வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. சட்ட சபையிலுள்ள எதிர் கக்ஷிகளின் பிரசங்கிகளும், அதிகாரத்திலுள்ள கக்ஷியின் அங்கத்தினர்களில் அதிர்ப்தியுற்றோர்களென்போர் சகலரும் வரவு செலவு திட்டத்தைப் பற்றி பேசித் தீர்த்தார்கள். மூன்று நாள் இதற்காக வென்றே ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கத்தினர்களின் அபிப்பிராயங்களறிதல், ஆலோசனைகளை கேட்டல் என்கின்ற முறையில்தான் எதிர் கக்ஷியினர் விவாதங்களுக்கு இடமும் நேரமும் ஒதுக்கப்படுவது வழக்கம். இம்மாமூல் சடங்கிற்கு பின்போ மாகாண சர்க்கார் நடைமுறை முக்கிய உருப்பினர்களான நிர்வாகக் கமிட்டி மெம்பர்கள், அதாவது மந்திரிகள், லா மெம்பர், ஹோம் மெம்பர், பொக்கிஷ மெம்பர் என்ற ஆறு கனவான்களும் முதல் இரண்டு தினங்களிலும், நடந்த பிரசங்கத்தைத் தோற்கடித்து விடக் கூடிய மாதிரியில், ஏன் இன்னும் அதிகமாகக் கூடவே பேசினார்கள். இத்துடன் இவ்வருட வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதில் நமது வாசகர்களுக்கு விசேஷ கவனம் செல்ல வேண்டுமென்பது அவசியமல்ல. அப்படியாயினும் இதை மேல் வாரியாகவேனும் கவனியாது நாம் இருந்து விடுவதற்கில்லை. நமது மாகாண கல்வி மந்திரியான திவான் பகதூர் கனம் எஸ். குமாரசாமி (ரெட்டியார்) அவர்கள் தனது இலாகா சம்பந்தமாக சகோதர அங்கத்தினர்கள் செய்த உபன்னியாசங்கட்கு அபிப்பிராயங்கட்கு பதில் சொல்லும் முறையில் முதலில் (தமது) இலாகாவைப் பற்றி அங்கத்தினர்கள் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்பதை எடுத்துக்காட்டி வேடிக்கையாக அல்ல சகோதர அங்கத்தினர்கள் நிலவரி விஷயமாக விசேஷ ஊக்கம் காட்டப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் எடுத்துரைத்திருக்கிறார். கல்வி சம்பந்தமாகவும், தமிழ் வளர்ச்சி சம்பந்தமாகவும் ஏதேனும் புது வாக்குறுதிகள், நோக்கங்கள் எடுத்துரைக்கக் கூடுமென்று எதிர்பார்த்தோர் பெரிதும் ஏமாற்றமடைந்தார்கள் என்று சொன்ன போதிலும், கனம் எஸ்.குமாரசாமி அவர்களின் சமாதானப் பிரசங்கத்தின் முற்பகுதியில் பெரும்பாகம் இந்நாட்டுப் பக்திமான்களுக்கு செலவிடப்பட்டதைக் கண்டு திடுக்கிட்டுப் போனோம். இன்று பல வருடங்களாக நமது மாகாணத்தில் ஆரம்பக் கல்வியைச் சீர்திருத்தி அமைக்கப் பல முயற்சிகள் செய்யப்பட்டதில் மிஸ்டர் சாம்பியன் அவர்களின் ஆரம்பக் கல்வித் திட்டம் மிக முக்கியமானதாகும். இத்திட்டத்தில் சில மாறுதலை நாம் விரும்புவது உண்டெனினும், இத்திட்டம் முழுதும் அலக்ஷியப்படுத்தக் கூடியது அல்லது நிறுத்தி வைக்க வேண்டியது என்று சொல்ல எவரும் துணியார். ஆனால் கனம் கல்வி மந்திரியவர்கள் "சாம்பியன் திட்டமானது இன்னும் ஸ்தல ஸ்தாபனங்களில் அபிப்பிராயம் கேட்பதிலேயே இருக்கிறது. இது கிடைத்த பின்னரே கவர்ன்மெண்டார் முடிவு செய்வதாக இருக்கின்றனர்" என்று கூறிவிட்டார்.இப்பதிலானது ஆரம்பக் கல்வியைப் பற்றியும், மிஸ்டர் சாம்பியன் திட்டத்தினால் சீர்திருத்த முறையில் அறிவாளிகளாக வெளிவரும் இளைஞர்களையுடையதாக எதிர்காலம் இருக்க முடியுமா? என்பதில் நம்பிக்கை வைத்த நம்மை ஏமாறச் செய்து விட்டது.
மிஸ்டர் சாம்பியன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்பக் கல்வித் திட்டத்தை அத்திட்டம் வெளியான தினத்திலேயே கண்டனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இக்கண்டனம் ரோமாபுரியைக் கூட எட்டியது எனலாம். இக்கண்டனம் செய்த ஒரு கூட்டத்தாரின் சௌகரியத்துக்காக ஓர் உயரிய திட்டத்தைக் கைவிடுவது தவறு என்பதுடன் அத்திட்டம் தயாரிக்க முதலில் இடமளித்த எந்திரத்தையும், அத்திட்டம் தயாரிக்கப்பட்ட காலத்தில், அதில் சாக்ஷியம் கொடுத்த எண்ணற்ற பொறுப்பேற்றவர்களின் முயற்சியையும் அலக்ஷியப்படுத்துவதுபோல் கூட கனம் மந்திரியவர்கள் சமாதானம் இருக்கிறது என்பதையும் நாம் எடுத்துக்காட்டாமல் இருப்பதற்கில்லை.
இந்நாட்டில் உள்ள ஜனசமூகம் என்றால் அது ஒரு சில வைதீகர்களையோ, அவர்களைப் பாராட்டி வரவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவர்களையோ குறிப்பிடுவதல்ல. எதிர்த்தவர்களான அறிவிற் பெரியோர்கள் சொல்லும் காரணங்கள்தான் என்ன? சுருக்கமாக சொன்னால் எக்காரணத்தினாலோ, எடுத்ததற்கெல்லாம் கண்டனம் செய்வதற்காக இப்போது இம்மாகாணத்தில் சிலர் கிளம்பி இருக்கிறார்கள். இவர்களின் செல்வாக்கு, கூட்டுறவு ஆகியவைகளுக்காக பயந்து நமது மாகாண கல்வி மந்திரியவர்கள் தமது காலத்திலேயே இத்திட்டத்திலுள்ள உயரிய முறைகள் பலதை இல்லாவிட்டாலும், சிலதையாவது, செய்யாமல் போகப் போவதில்லை யானாலும் இச்சமயத்தில் இதை எடுத்துக் காட்டாமலிருக்க முடியவில்லை.
சாம்பியன் திட்டம் அமுலுக்கு வரக்கூடாது என்று கண்டித்தும் சர்க்காரை மிறட்டியும் இதுவரையில் வெளிவந்த சகல செய்திகளையும் நாம் பார்த்தோம். அதில் அறிவின் வளர்ச்சிக்கு, ஜனசமூக வாழ்க்கையின் நன்மைக்கு, முரணானதாகவோ, புறம்பானதாகவோ, எதுவும் திட்டத்தில் இருப்பதாக எடுத்துக் காட்டுவதான கண்டனம் இல்லை. இந்நாட்டு எல்லா மக்களும் தங்களை ஆதரிப்பதாக பிரமாண்டமான பொய் மூட்டை மீதே கண்டனக் கோட்டைகள் கட்டப்பட்டிருக்கிறது. இதற்காகவா நமது கனம் கல்வி மந்திரியவர்கள் மலைக்கப் போகிறார்கள்? இதைவிடத் திடுக்கிடக் கூடிய பல கண்டனங்கள் தோன்றிய போதெல்லாம் சமாளித்த மந்திரியாரிடம் நமக்கு நம்பிக்கை இல்லாமலில்லை. வீண்கூச்சல் எதற்கு என்று அலக்ஷியமாக பிரஸ்தாப பதில் கூறப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் தன் கடமையைத் திறம்படச் செய்ய கனம் மந்திரியவர்கள் தவறாது இருப்பாராக.
கண்டனக்காரர்கள் சொல்லும் காரணங்களில் பிர்மாண்டமான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. இன்று கல்விக்காக செலவிடப்படும் பணத்தைவிட மூன்று மடங்கு பணச்செலவாகும் என்பது.
பணச்செலவு அதிகமென்பதில் இவர்கள் விடும் கண்ணீர் வாஸ்தவமானால் தங்கள் தர்ம ஸ்தாபனங்களுக்கு என்று வருடா வருடம் வாங்கும் இலக்ஷக்கணக்கான ரூபாயிலிருந்து சிறிது குறைத்து இக்கல்வித் திட்டத்துக்குப் போட்டுவிடப் போகிறார்களா? என்று பார்த்தால் அது இன்று நடக்கக் கூடியதல்ல என்பதுடன் கண்டனக்காரர்கள் தங்கள் மதப்பிரசாரத்துக்கு எதையும் கையாளும் தந்திர முறையிலேயே முதலில் பணச் செலவு என்ற பேரால் கண்டனம் என்றார்கள் என்று சொல்லலாம்.
2. பிறப்பினால் உயர்வு தாழ்வு, மதத்தினால் உள்ள வித்தியாசம், மதத்தினால் உள்ள சலுகை இவைகளுக்கு தீங்கிழைப்பதாக இருக்கிறதாம்.
இவர்கள் சொல்லும் "தீங்கிழைப்பதாக இருக்கிறது" என்பவைகள் எத்தனை இலக்ஷம் ஏழை எளியச் சிறுவர்கள் ஆரம்பக் கல்வியைப் பெற முடியாது தடுக்கிறது என்பதையும், கல்விக்காகக் கொடுக்கப்படும் பணம் அவர்கள் பேரால் சர்க்காரால் தாறாளமாக செலவிடப்பட்ட போதிலும் அவை முழுதும் அவர்களுக்குப் போகவே மிஸ்டர் சாம்பியன் திட்டம் உதவி செய்யத் தூண்டுகிறது என்பதிலும், இவர்கள் காட்டும் கண்டனம் நியாயமுடையதாக இருக்க இயலுமா?
3. ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் ஆண், பெண் இருபாலரும் ஒன்றாகப் படிப்பது தவறு.
நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர்களில் இருவர்கள் மிஸ்டர் சாம்பியன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தும், பின்பும் இம்முறையை ஆதரித்து இருக்கிறார்கள் என்றும் இதற்காக மந்திரிகளை மகாஜனங்கள் பாராட்டியிருக்கிறார்கள் என்றும் சொல்வதுடன் ஒரு முதன்மந்திரியார் ஆரம்பக் கல்விச் சாலைகளில் மட்டுமல்ல உயர்தர பட்டம் பெறும் சர்வகலா சாலைகளிலும் இம்முறை கையாளப் படவேண்டும் என்றும் இன்றுள்ள முறை மாறி, புது முறையில் படிப்பும், பள்ளியும் பாடமும் வருகிற காலத்தில் உபாத்தினிகளாகவே சகலரும் நிறைந்திருக்க வேண்டும் என்றும் கூட சொல்லியிருப்பதை மட்டும் இங்கு ஞாபகமூட்டுகிறோம்.
இன்றுள்ள கிறிஸ்துவ கலா சாலையில் முக்கிய வகுப்புகளிலும், வைத்திய கலா சாலையில் பல வகுப்புகளிலும், நகரங்களில் பெண்கள் ஹைஸ்கூல்கள் இல்லாத இடங்களிலும், கிராமங்களில் பெண் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களிலும் கிராமங்களிலுள்ள கிறிஸ்துவ பாடசாலைகளுக்குச் சென்றால் பெண்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற பயமுள்ள இடங்களிலுமுள்ள கல்விச் சாலைகளில் பெண்கள் சிறுமிகள் சென்று கல்வி கற்று வருகிறார்களா? இல்லையா? என்று மட்டும் வினவுகிறோம்.
4. ஜனக்குறைவால் ஒரு மதத்தார் தற்காலம் ஒரு சிறிய பாடசாலையை ஸ்தாபித்து, பின்னர் ஜனங்கள் அதிகரிக்கும்போது பாட சாலையை மென்மேலும் விருத்தியாக்க மேல் வகுப்புகளுக்குச் சர்க்கார் அங்கீகாரம் கிடைக்க இடமில்லை என்பது.
இதில் பள்ளிக் கூடங்கள் ஏற்படுவது என்பது மக்களின் கல்விக் குறையை நிரப்புவதற்காகவா? அல்லது ஜனக்குறைவாக உள்ள மதக்காரர்கள் பள்ளிக்கூடம் வைத்து அது மூலியமாக மதத்தை வளர்க்க பள்ளிக் கூடங்களா?
எம்மதம் குறைய ஆரம்பிக்கிறதோ அவர்கள் பணத்தைக் கொண்டே குறைவுபட்ட எண்ணிக்கையுள்ள மதம் பெருக வேண்டுமென்ற எண்ணமா? தனி முறையில் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள பல சிறு மதப்பிரசார ஆரம்பக் கல்விச் சாலைகளில் மதமாறுதல், அதனால் குழப்பம், கலகம் உண்டாவதாலும், கிராமங்களிலிருப்போர் பயந்து பள்ளிக்கு சிறுவர்களை அனுப்ப மறுக்கிறார்கள் என்ற குறையை நிவர்த்திக்கவே சாம்பியன் திட்டமானது புது மாறுதலை செய்ய ஏற்பட்டது.
முன் சொன்ன நொண்டிக் காரணங்களைக் காட்டி மிரட்டும் மதக் கிறுக்கர்களின் கண்டனத்தை பொறுட்படுத்தாது, விரைவில் ஆரம்பக் கல்வி முறையில் தங்கள் கடமையைச் செய்ய மாகாண கல்வி இயந்திரம் தயங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். ஸ்தல ஸ்தாபனங்கள் மீது பழியைப் போட்டு அதன் மறைவில் எவரும் மறைய ஆசைப்படுவது நியாயமாகாது. மதக் கிறுக்கர்களின் கண்டனத்தை மட்டும் சர்க்கார் பெரிதுபடுத்தினதாக பொது ஜனங்கள் உணர்ந்தால் அவர்களும் தங்கள் கண்டனங்களைச் சர்க்காருக்கு எடுத்துச் சொல்லி சர்க்கார் கடமையைச் செய்தொழிக்குமாறு சர்க்காரை கேட்டுக்கொள்ள பொது ஜனங்களுக்குத் தெரியுமேயாயினும் சர்க்கார் அது வரையில் இதை வளரவிடக்கூடாதென்றும் எடுத்ததற்கெல்லாம் மதமிருப்பதாகக் கூறும் பரிதாபத்துக்குறியவர்களிடம் கோபம் கொள்ளாமலும் அவர்கள் கண்டனத்தைக் கண்டு அஞ்சாமலும், தாங்கள் நியமித்த கமிட்டி, தாங்கள் விரும்பிய அறிக்கை இவைகளுக்காக செலவான பணம், இவைகள் அத்தனையையும் அலட்சியப்படுத்திய வைதீகர்களிடம் அலட்சியத்தைக் காட்டி ஆரம்பக் கல்வி திட்டத்தில் சர்க்கார் தங்கள் கடமையைச் செய்ய தவறாதென்ற எண்ணம் எங்கும் உண்டாகச் செய்ய கேட்டுக்கொள்ளுகிறோம்.
(புரட்சி தலையங்கம் 04.03.1934)